தொலைக்காட்சியில் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும்போதெல்லாம் அந்த இறுதிக்காட்சியை நோக்கியே மனம் குவியும். மனம் பிறழ்ந்த நாயகன் தலையில் நங்நங்கென கொட்டிக்கொள்ளும் காட்சியைப் பார்க்கும்பொழுதே அழைப்பு வந்துவிடும் மருந்துக்கடை செந்தி அண்ணனிடம் இருந்து.
“நெனச்சேண்ணே கூப்புடுவன்னு”
“ப்ச், கண்றாவிடா இவனே, இன்னைக்கு மாதிரி இருக்குல்ல”
பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிக்கும். அப்படியே பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்திற்குள் புகும்.
லேத்துப்பட்டறை செல்வம். பள்ளியில் ஒன்றாகப்படித்தவன் குடும்ப சூழல் காரணமாக பாதியிலேயே தன் தந்தையோடு லேத்துபட்டறையில் சில்வர் பாலிஷ்போடும் வேலைக்குப் போய்விட்டவன். மாலையில் வேலை முடித்து வீட்டிற்குப் போகும்பொழுது, நானும் மற்ற நண்பர்களும் பொழுது போக்கிறாக அமர்ந்து இருக்கும் மருந்துக்கடையில் வந்து நிற்பான். கடையில் கூட்டம் இல்லையெனில் அரட்டைதான்.
கடையில் யாரேனும் வாடிக்கையாளர் இருந்தால் ஒரு சொல் கூட உதிர்க்கமாட்டான். வெட்கம். யார் முன்னரும் தனக்கு கையில் புண் என்றோ குறை என்றோ யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என நினைப்பான். எவ்வளவு வம்பிழுத்துப் பேசினாலும் அமைதியாக இருந்துவிட்டு அவர்கள் போனபிறகுதான் வாயைத் திறப்பான்.
அவன் முகத்தில் எப்போதும் குபுகுபுவென ஒரு சிரிப்பு இருக்கும். தினமும் கையில் தகரம் கிழித்துவிட்டது,கீறிவிட்டது என மருந்து வாங்கிக்கொண்டு,
“அப்பளம் மாப்ள” என்பான். ”
“அப்பளம் நொறுங்கிருச்சுய்யா” என செந்தி அண்ணன் அவனுடைய ற ள உச்சரிப்பை கேலி செய்வார்.
எதற்கும் சினமோ வருத்தமோ படாமல் அதே குபுகுபு சிரிப்போடு வள்ளேன் மாப்ள என தூக்குவாளியை ஆட்டிக்கொண்டே போவான். ளாக்கம்மா கையத்தட்டு பாடல் வேறு.
அன்றும் வழக்கம்போல் மாலை நேரத்தில் மருந்துக்கடையில் அமர்ந்திருந்தோம். ஆனால் லேத்து வரவில்லை. அப்போது அது எங்கள் கவனத்தில் வரவில்லை. சரியாக கடையை அடைக்கும் நேரம் பார்த்து அவனுடைய அப்பா எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தார். அவரைப் பார்க்கும்போதே ஏதோ அசம்பாவிதம் எனப் புரிந்தது.
“செல்வம் வந்தானாப்பா”
மூச்சு வாங்க அவர் கேட்க, இல்லை என நாங்கள் சொல்ல வாயெடுத்தும் வெறும் தலையாட்ட மட்டும் தான் முடிந்தது.
செந்தி அண்ணன் சட்டென அவருடைய தோளைப்பிடித்து கடைப் படிக்கட்டில் அமரவைத்து,
“என்னா ஆச்சு, அவென் என்ன சின்னப்பயலா, படத்துக்கு கிடத்துக்குப் போயிருப்பான்”
அவர் இல்லை எனபது போல் தலையை ஆட்டிக்கொண்டே நிமிர்ந்தார்.
“லேத்துல வேல பாக்குற பிள்ளக்கிட்ட அப்பிடி இப்பிடினு பழகிப்புட்டான் போல. எனக்கு ஆரம்பத்துலயே தெரியும். திடீர்னு வாட்சி என்னா உள்ள போட புது டவுசர் கலர் பனியண்டு தெச தப்புனான் அப்பவே அமட்டி இருக்கணும்”
அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். செந்தி அண்ணன் தன் அத்தனை வருட அனுபவத்தைக் காட்டினார். மெதுவாக என்னிடம்
“தெனைக்கும் வந்து நிப்பான்ல்ல, அந்தப்புள்ள கடையத் தாண்டுறவர நம்மள ஊறுகா ஆக்கிருக்கானய்யா”
நான் கவனிக்காதது போல் செல்வத்துடைய அப்பாவைப் பார்க்க,
“இன்னைக்கு திடுதிப்புன்னு ஏழெட்டு பேர் பட்டறைக்கு வந்து அவன அடிச்சு இழுத்துட்டுப் போனாகய்யா, நானும் பட்டறைலயே கெடந்தேன். ஆள் வரவே இல்ல. அந்தப்புள்ளையும் அழுதுகிட்டே போச்சு, ஆளக்காணம். இங்கன வந்துருப்பான்னு நெனச்சா”
நல்லவேளையாக பாண்டி,தன் வண்டியில் செல்வத்தை அழைத்து வந்து, எங்கள் முன் நிறுத்தினான். செல்வத்தின் கையிலும் முகத்திலும் காயங்கள்.
அதுவரை புலம்பிக்கொண்டிருந்த அவனுடைய அப்பா விருட்டென எழுந்து போய்விட்டார் அவனைப் பார்த்த மாத்திரத்தில்.
“என்னாடா செல்வம், எவெண்டா அது நம்ம ஊருக்குள்ள வந்து ஒன்னயக் கூட்டிப்போனது இப்பிடி?”
செந்தி அண்ணனின் சொற்கள் ஆர்வமும் கோவமும் கலந்தே வெளிப்பட்டன.
”அட ஒண்ணுமில்லண்ணே, பஞ்சு மில்லுல வேலபாத்துச்சுல்லா கலா, அத நாந்தான் பட்டறைல சேத்துவிட்டேன். நல்லபிள்ளண்ணே.. ப்ச், சொந்தத்துல யாளோ பாத்து சொல்லிட்டாய்ங்க போல”
குபுகுபுவென சிரித்தான். அதுதான் அவன் அப்படி சிரித்த கடைசிச் சிரிப்பு.
அதன் பிறகு கலா வேலைக்கு வரவில்லை என்று புலம்பியவன், கடைவாசலில் நின்று எத்தன நாள்னு பாத்துளுவோம் என கத்தத்துவங்கினான்.
கலாவின் வீட்டுப் பக்கம் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் போய் நிற்கிறான் என அந்தத் தெருவில் இருக்கும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தினமும் ஏதேனும் ஒரு சண்டை சச்சரவு அடி என எவ்வளவு சொல்லியும் கேட்டபாடில்லை.
கலாவுடன் வந்துகொண்டிருந்த பக்கத்துவீட்டுப் பெண், செல்வியை வழிமறித்து கலாவைப் பார்த்தே ஆகவேண்டும் இல்லையென்றால் என்ன செய்வேன் என்று தெரியாது என கத்திக்கொண்டே எதிரே இருந்த ஊர்ப்பொது நீர்த்தொட்டியின் படிகளில் ஏறிவிட்டான். இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்திருக்கிறான் என்பதும், தொட்டியில் ஏறி குதித்துவிடுவேன் என்று எச்சரித்திருக்கிறான் என்பதும் பின்னர் செல்வி சொல்லித்தான் தெரிந்தது எங்களுக்கு.
ஊரில் பாதிப்பேர் தொட்டி முன் கூடிவிட்டனர். செந்தியண்ணன் கடையை விட்டு வரமுடியாது என சொல்ல, நான் ஓடினேன்.
ஓடும் வரை நம்பிக்கை இருந்தது. எப்படியாவது பேசி கீழே இறங்கச் செய்துவிடலாம் என. ஆனால் நான் போய் நிற்கும்போதே, கலா காதல் கத்தரிக்காய் அது இதுவென கத்திக்கொண்டே குதித்துவிட்டான். அதுவரை கூடி இருந்த கூட்டம் அவன் கீழே விழ வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டது. விழுந்தவனின் பின்னந்தலையில் அடிபட்டு, பார்க்காத வைத்தியமில்லை. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பான். திடீரென கத்திக்கொண்டே ஓடுவான். அவன் பின்னால் சிறுவர்கள் விரட்டிக்கொண்டு ஓடுவது முதலில் அதிர்ச்சியாகவும் பின்னர் அது ஒரு வழக்கமான அன்றாடங்களில் ஒன்று என்பதுபோலவும் ஆகிவிட்டன.
காதல் அப்படி ஒருவனை பைத்தியநிலைக்கு ஆளாக்குமா? ஊரார் முன் தன் சுயமரியாதையை விட்டு அப்படி வெளிப்படுத்த வைக்குமா? என்பதெல்லாம் அப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தவை. பின்னர் பார்த்த இந்தக் காதல் திரைப்படம், படித்த புதினங்கள் என பெரும்பான்மை படைப்புகளில் இந்தக் காதல்தான், அதன் ஆழங்கள் தான். ஒருவர் மீதான காதலும் பிடித்தமும் காமமும் எல்லையைக் கடக்கும்போது இப்படி மடலேறிவிடுகிறார்கள் என உணரும் பக்குவமும் வந்துவிட்டது.
மடலேறுதல் என்ற சொற்பதம் சங்கப்பாடல்களில் ஒரு வருத்தமான நிகழ்வாகச் சொல்லலாம். காதலில் தோல்வி எனும் விரக்தியை அடைந்த தலைவன், தன் உடலெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு, எருக்கம்பூக்களை சூடிக்கொண்டு, பனை மரத்தின் மடல்களை குதிரை போல் பாவித்து அதில் வலம்வருவதுபோல் ஊருக்குள் தன் தலைவியின் பெயரை உரக்கச்சொல்லிக்கொண்டே போக ஊரார் முன் அவமானப்பட நேரிடும் செய்கை அது.
அதனால் தான் தோழியிடல் மடல் ஏறப்போவதாக சொல்லும்பொழுதே அப்படி செய்யவேண்டாம் என தோழிகள் பெரும்பாலும் தடுத்து காதலியை சந்திக்க உதவ முற்படுவார்கள். அதை மடல் விலக்கு என்கிறது இலக்கியம்..
செல்வி சங்ககாலத்தோழியாக இருந்திருந்தால், செல்வத்திடம் மடல் விலக்கு செய்திருக்கக் கூடும்.
அப்படியான மடலேறுதல் குறித்த குறுந்தொகைப் பாடலின் விளக்கம் மேற்சொன்ன சம்பவம் போல் விரிகிறது.
மா என குதிரையையும் குறிப்பிடுவார்கள். பனை மடலைக் குதிரையாக பாவித்து, கூம்பி குவிந்த யாரும் அணிய விரும்பாத எருக்கம் பூக்களை சூடிக்கொண்டு நான் மடல் ஏறத் தயாராகிவிட்டேன் என அவளிடம் போய் சொல், என் காதல் முற்றிவிட்டது என அவளுக்குப் புரியட்டும் என தோழியிடம் மடல் கூற்றாக சொல்லி அனுப்புகிறான், தலைவன்.
காதலும் அது சார்ந்த மனச்சிடுக்குகளும் கவலைகளும், முற்றிய பைத்திய நிலையும் இன்று நேற்றல்ல, காலதிகாலங்களாக நிகழ்ந்து கொண்டே இருப்பவை என்பதற்கான சாட்சிகளே இப்படியான சங்கப்பாடல்கள் போலும்.
பாடல் :
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
-பேரெயின் முறுவலார்.
குறுந்தொகை : 17
செல்வம் போலவே இந்தப் பாடலாசிரிரும் சிரித்துக்கொண்டே இருந்திருப்பார் போல. வியப்பான ஒற்றுமை.
மூவாதஉயர்தமிழ்