Homeகட்டுரைகள்சினிமாசித்திரச் சிதைவும் சமநிலைகளின் சரிகளும் - கார்கி

சித்திரச் சிதைவும் சமநிலைகளின் சரிகளும் – கார்கி

 ”நார்மல் ஜட்ஜா இருந்தா இந்நேரம் இந்த கேஸ்க்கு தீர்ப்பு சொல்லிருப்பாங்க”

அரசுத்தரப்பு வழக்கறிஞராக வரும் கவிதாலயா கிருஷ்ணன் சொல்லும் வசனம் இது. நீதிபதி, திருநங்கை என்பதால் இப்படியான ஒரு வாக்கியத்தை அந்தப் பாத்திரம் எரிச்சலும் நக்கலும் கலந்து சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கும்.

அதன்பிறகு வரும் காட்சியில், சினிமாவின் சமன்பாடுகள் படி ஒரு நாயகன் பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நீதிபதி அற்புதமான பதிலடி கொடுப்பார்.

இந்தக் காட்சியின் விரிவான வார்ப்புதான் இப்படம்.

ஒன்று இப்படி அல்லது அப்படி எனும் நிலை அற்ற, ஒன்றுடன், ஒருவருடன் நாம் சமரசம் ஏதும் இன்றி வாழ்ந்திட முடியுமா என்பதைக் கேள்வியாக முன்வைத்து, மனதை சமநிலையில் வைத்திருந்தால் முடியும் என்பதை விடையாகத் தந்த படம், கார்கி.

நாட்டில் தொடர்ந்து, தகுந்த இடைவெளியில் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த மற்றுமொரு படம்.

ஆனால் பல தளங்களில் இந்தத் திரைப்படம் கவர்ந்தது. குறிப்பாக கலை நேர்த்தியும், பாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும்.

இந்தக் கதையின் களம் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில்,

வன்முறைகளிலேயே கொடூரமான ஒன்று எனில், அது சிறுவயதினர் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைதான். ஏனையவை தழும்பாகி நிற்கலாம். ஆனால் இவை, மரணம் வரை துரத்தும் வல்லமை கொண்டவை. சக மனிதர்கள் மீது வெறுப்பும் கலவியின் மீது அருவருப்பும் பயமும் ஏற்பட்டு, நாட்களை நகர்த்துவது பெரும்பாடு என்பது போல் ஆக்கிவிடக்கூடியவை, இவ்வகை வன்முறைகள்.

குறிப்பாக, அப்படி நிகழ்ந்த பொழுதில் நுகர்ந்த வாசமோ, தட்டுப்பட்ட வண்ணமோ, கேட்கப்பட்ட பாடலோ ஏதோ ஒன்றின் மூலம் அது மனதில் தங்கி, மீண்டும் அவற்றைக் கடக்க நேரிடும் ஒவ்வொரு முறையும் அவ்வலியின் அழுத்தம் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடும்.

சாய்பல்லவிக்கு, மஞ்சள் நிறத்தின் மீதான ஒவ்வாமையும் பதற்றமும் அப்படியான ஒன்று என்பதை மிக நேர்த்தியான கலையின் மூலம் , Schindler’s List படத்தில் வரும் கருப்பு-வெள்ளைக் காட்சியில் சிகப்பு நிற உடை அணிந்த சிறுமி நிற்கும் சட்டகத்தை நினைவூட்டும் விதமான தாக்கத்தில் ஏற்படுத்தி இருந்தார், இயக்குநர்.

இறுதிக்காட்சியில் மஞ்சள் வண்ண வளையல்களை ஏற்றுக்கொள்வதில் முழுமை அடைகிறது அப்பாத்திரம். 

வீழ்ந்த ஒருவருக்குத்தான் வீழ்ந்து கொண்டிருப்பவரின் வலி தெரியும் எனும் ஒற்றைப்புள்ளிதான் இத்திரைக்கதை. 

ஓர் அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் சிறுமி மீது ஐந்து ஆண்கள் வன்முறையில் ஈடுபட, அதில் ஒருவராக நாயகியின் தந்தையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். ஊடகங்கள் அக் குடும்பத்தின் மீது செலுத்தும்  ’ஊடக- வன்முறையையுக்’ கடந்து, பொதுப்புத்தி சமூகத்தின் திடீர் புனிதர்களின் அருவருப்பைச் சகித்துக்கொண்டு, எப்படி தன் தந்தையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறாள் என்பதே கதை.

இதுபோன்ற திரைக்கதையில், உடன் நிற்கும் சின்னச் சின்ன பாத்திரங்கள் நேர்த்தியாக கையாளப்பட்டால்தான் சுவாரஸ்யமாய் பார்க்க முடியும். இதில் அது மிகக் கச்சிதமாய் அமையப்பெற்றிருந்தது.

அம்மாவின் பாத்திரம், அவ்வளவு நல்ல மாப்பிள்ளைதான், ஏற்றுக்கொள்ளப்பட்டவன் தான், தன்மகளை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் இளைஞன் தான் என்றாலும்,  “கார்கி, பசங்க வெயிட் பண்றாங்க பாரு”, என மகளை விரட்டும் விதம்.

காளி வெங்கட்டின் இயல்பான நடிப்பு, இயல்பல்லாத அந்தப் பாத்திரத்தை நாம் விரும்பும்படி செய்கிறது. திருநங்கை நீதிபதி, அவருக்குப் பின்னால் நிற்கும் பாத்திரம் என அனைவரும் எங்குமே தம் அளவை மீறாதது, நேர்த்தி. 

குறிப்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக, சரவணின் நடிப்பு. மிகச்சில இடத்தில் மிகையாகப் பட்டாலும், அந்த மிகையுணர்ச்சியும் நியாயமாய் எழும் எனத் தோன்றியவிதாய்த்தான் இருந்தது.  “அவ என்னைய அப்பாவாப் பாக்கல இப்ப ஆம்பளையாத்தான் பாக்குறா” எனும் இடத்தில் மகாநதி கமல் தென்படுவாரோ எனப் பார்த்தால், அதன் சாயலே இல்லாமல், அற்புதமாய் நடித்திருந்தார். 

நடனம் மூலம் நம்மைக் கவர்ந்த சாய்பல்லவி, அப்படியான நடனங்கள் ஏதுமற்ற ஒரு பாத்திரத்தை ஏற்று, நிறைவாகச் செய்திருக்கிறார், உடை நேர்த்தி உட்பட. மிகத்துல்லியமான முகபாவனைகள். இறுதிக்காட்சியை நோக்கிய அழுத்தத்தைக் கூட்ட, படம் நெடுகவே சுமந்திருக்கிறார். 

இன்னதுதான் என்று ஒன்றைப்பற்றி அறியும் பொழுது முதலில் நிகழ்வது அது குறித்தான அதுவரை இருந்த சித்திரச்சிதைவு. அது கொடுக்கும் அதிர்வை கடக்க சரியான தரப்பின் பக்கம் நின்றால் போதும் என்பதை நல்ல படைப்பின் மூலம் செல்லி இருக்கிறார்,  இயக்குநர், கெளதம் இராமச்சந்திரன். வாழ்க.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி