“உனக்கு நான் ஒன்னு சொல்லவா?”
“சொல்லவான்னு கேட்குறதுக்கு பதிலா நேரடியாவே சொல்லிறலாம்னு
தான எப்பவும் சொல்லுவேன், இப்பிடி சஸ்பென்ஸ் வச்சு இழுக்குறது மட்டும் எப்பவும் பிடிக்கிறதில்ல”
“சிலத இப்பிடி
சொல்லவா கேட்கவான்னு சொல்றது எதுக்குன்னா, ஒரு லெசென்ஸ்
மாதிரி, உனக்கு பிடிக்காதத சொல்லப்போறேன்னு ஒரு குறிப்பு மாதிரி”
“பாரு, மறுபடியும் இழுக்குற. என்னவா
இருக்குமோன்னு என்னய டென்சன் படுத்துற பாரு.. சொல்லு”
“ஏன் இவ்ளோ பதட்டம்..என்னவா
இருக்கும்னு பதட்டமா..இல்ல.. அதுவா இதுவான்னு குழப்பத்துல வர்ற பயமா?”
“ அம்மா
தாயே, மொதல்ல என்ன விசயம்னு சொல்லு”
“இந்த அம்மா
தாயேவயும் நீ பெண்கள்னாலே
இப்பிடித்தான்னு ஏதாவாது
சொல்லும்போதுதான் சொல்றன்னு ஒனக்கு சொல்லனும்னு தோணும், ஆனா சொன்னதில்ல”
“ஓஹ்.. சரி தேவை இல்லாத எதையும் இப்ப பேசவேணாம். நான் உன்
ஆளு.. நீ என் ..அப்பிடி சொன்னா பிடிக்காது. சரி, நான் உன்
காதலன். நீ என் லவ்வர்..வேற எதுவும் இப்ப என் மனசுல இல்லை.. சொல்லு
டியர்”
“ம்ம்..சரி..அதாவது
எப்ப நமக்குள்ள பிடிக்காத டாப்பிக் பேசுறமாதிரி சூழல் வந்தாலும் நீ இந்த கோபிகிருஷ்ணன், இலக்கியம்னு
உன்ன ஒரு படி மேலன்னு காட்டிக்க சம்பந்தம் இல்லாம பேசி, அதுல தெளிவா
உன்னோட ஆம்பள மனம் பத்தி இப்பிடி அப்பிடினு யாரோ ஏதோ எழுதின மாதிரி உன்னோட. கருத்த
ரொம்ப கருத்தா பேசி முடிச்சிர்ற”
“ நல்லது தான.
நான் படிச்சத,
தெரிஞ்சத உனக்கு சொல்லி என்னோட நிலமைய விளக்குறேன். என்னோட
உணர்வுகள சரியான வாதத்தோட முன் வைக்கிறேன்..அவ்ளோதான”
“ஆனா எல்லாருக்கும் எல்லாமும் ஒரே மாதிரியோ சரியாவோ படாதுல்ல”
“அதாவது, நீ இப்ப கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, ஜிம்முக்கு
போகப்போற மறுபடியும், அதான”
“ ஆமா. ஆனா போனதடவ
நீ பண்ண மாதிரி பண்றதா இருந்தா..”
“இருந்தா.. ?”
“பாறேன். இது நீ
அப்போ சண்டைல, எங்கிட்ட குடுத்தயே.. அந்த ஜிம்..முழுக்க
முழுக்க லேடிஸ் மட்டுமே இருக்குற எடம்”
“இன்ஸ்டெக்ட்டர் ஆம்பளயா இருப்பானுங்க”
“இல்..ல்ல..இல்ல.. நல்லா கேட்டுட்டேன். ஒன்லி
லேடிஸ் தான், தண்ணி எடுத்து குடுக்குற ஆள் கூட”
“அப்ப ஓக்கே..
ஆனா இப்பவும் சொல்றேன், நீ பெர்ஃபெக்ட்டா
இருக்க.. எதுக்கு இப்போ ஜிம்?”
“எப்பவும் அப்பிடியே இருக்க.. ஆன உண்மையான
ரீசன், மனசு ரிலாக்ஸ்ட்டா இருக்க, போன தடவ
போனப்ப அவ்ளோ நிம்மதியா, ஃப்ரியா இருந்த ஃபீல்.. ஆனா நீ ..ச்ச அதப்பத்தி
பேசவே வெறுப்பா இருக்கு”
“இல்ல, பேசலாம். பேசித் தீராத பிரச்சனைன்னு இந்த ஒலகத்துல எதுவுமே இல்லைங்குறது
தான் ரஷ்யன் லிட்ரேச்சர்ல மெயினா சொல்றது”
“அதுல பேசக்கூட ஒன்னும் இல்லைங்குறது தான் எனக்குத் தெரிஞ்சது. ரொம்ப
சில்லியா.. கோவப்படாத..
ஆனா, அப்பிடி எப்பிடி எம் மேல நம்பிக்கையே இல்லாம, அங்க போனா, எவனாவது
பேசுவான், அது இதுன்னு அந்த பத்து நாளும் டெய்லி சண்ட.. சண்டனு..ச்ச நரகம்
மாதிரி இருந்தது”
“ஓக்கே.. இப்ப நீ சொல்லும்போது கூட நான் சொன்னத அப்பிடியே சொன்னியே, அதுவே
சந்தோஷம். ஆமா நான் என்ன சொன்னேன்.. எவனாவது
பேச ட்ரை பண்ணுவான். வருவான். நிப்பான்னு தான் சொன்னேன்.. ஒருதடவ
கூட நீ பேசுவ, நீ நிப்ப, நீ சிரிப்பன்னு சொல்லல ”
“ஓஹ்.. ரொம்ப பெரிய விசயம் பாரு இது”
“நீ சொன்னாலும்
சொல்லாட்டியும் இது ரொம்ப பெரிய விசயம்தான். அதாவது
நாமளா ஒரு சூழல உருவாக்கிக் குடுக்க கூடாது, உனக்கு
பிடிக்காதுல்ல எவனாவது வந்து பேசினா..
ஆனா அந்த சூழல் அங்க உருவாக்குற இல்ல.. இதுவே.. ஆமாடா
எனக்கும் பிடிக்கும் நானும் பேசனும்னு இருக்கும்னு ஒரே ஒரு தடவ சொல்லு, நான் சத்தியமா
உன்ன தடுக்க மாட்டேன்”
“ஓஹ்”
“ஆமா.. உனக்கே பிடிச்சு நீ பேசுறது வேற.. ஆனா உனக்குப்
பிடிக்காம, நோ சொல்லத் தெரியாம போய் வேற வழியில்லாம வழியுறவனோட பேச வேண்டியது
தேவை இல்லையே”
“அது கரெக்ட் தான். வேற வழி
இல்லாம நிக்க வேண்டியது இருக்குதான்.
ஆனா நான் மேனேஜ் பண்ணமாட்டேன்னு ஏன் நினைக்கிற? ஏன் நம்பமாட்டேங்குற?”
“உம்மேல நம்பிக்கை இல்லாம இல்ல. ஆனா ஆம்பிளைங்கப்
பத்தி எனக்குத்தான தெரியும்”
“நீயும் அப்பிடியான்னு கேட்க மாட்டேன். ஆனா நான்
கரெக்ட்டா இருக்குறவரை எவன் எப்பிடி இருந்தா என்ன ஆகிறப்போகுதுங்குற கேள்விக்கு மட்டும்
மலுப்பாம பதில் சொல்லு போதும்”
“மலுப்பாம.. ஹூம்ம்.. அதாவது கொஞ்சம் கொஞ்சமா ஒரு சூழல்ல இருந்தா.. நாள்பட
நாள்பட ஒரு சின்ன சிரிப்பாவது சிரிக்கனும்”
“ம்ம்”
“அப்புறம் அது பேச்சு, அது இதுன்னு”
“அதாவது எம்மேல நம்பிக்கை இல்ல.. அதான கடைசியா”
“ப்ச்.. இல்ல.. அப்பிடி ஒரு சூழல உருவாக்குறது ஏன்.. அப்போ
நான் சரி இல்லயா.. இல்ல.. நான் மட்டுமே உலகம்னு லாம் எதுவும் இல்லையா?”
“நீயும் மத்தவனும் ஒன்னா? இல்ல உங்கிட்ட
பேசுற மாதிரிதான் எல்லார்ட்டயும் பேசிறுவேனா?”
“மறுபடியும்..
ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்டோம்ல்ல.. சூப்பர்.. அதாவது
நான் என்னால என் பொசசிவ கண்ட்ரோல் பண்ண முடில.. அதத்தாண்டி
எனக்கு இருக்குற அனுபவ அறிவுல, பாத்த கேள்விப்படுற விசயங்கள்ல என்ன நடக்கும்னு சொல்றேன்.. ஆனா நீ
எல்லார்ட்டயும் ஜாலியா அது என்ன..ஜோவியல்.. அப்பிடி இருக்கனும்னு ஆசைப்படுற.. நான் தடையா
இருக்க வேணாம்னு நினைக்கிறேன்”
“இதுதான் நீ..
ஏதாவது ஓப்பனா பேசினா, சரி நான்
போறேன்.. தடையா இல்லன்னு.. நீ மட்டுமா
இல்ல ஆம்பளைங்களே இப்பிடித்தானா?”
“என்ன சொல்லு..
அவ்ளோதான்..ஏன் எல்லாரையும் இழுக்குற?”
“நீ அப்பிடித்தான, ஒருத்தர்க்கு
எங்கயோ ஏதோ நடந்தா, பெண் மனம்,
பொண்ணுங்க அது இதுன்னு மொத்தமா ஜட்ஜ் பண்றியே”
“அம்மா தாயே,
நீ ஜிம் போ,
யூனிசெக்ஸ் ஜிம்முக்கே போ. நல்ல ட்ரெய்னர், நல்லா
உடம்பு ஏத்தி வச்சு, இதப்பத்தி தெரிஞ்ச ஆளா இருக்குறவனா பாத்து பெர்சனல் ட்ரெய்னரா
கூட வச்சுக்கோ.. நிம்மதியா இரு..
நான் இனிமே இதப்பத்திப் பேசல”
“போதும்.. நான் லேடிஸ் ஒன்லி ஜிம்க்குத்தான் போறேன்.. ஒருவேள
உனக்கு பாக்கனும்னா வந்து பாத்துக்க”
“ச்ச, ச்ச, அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. முடிஞ்சா
ஒருதடவ வீடியோ கால் பண்ணு”
“அதானப் பாத்தேன்..”
“சரி ரொம்ப நேரமா இவன் இங்கயே நிக்கிறான், பாவம்
நான் அவன் கூட கிளம்புறேன், வர நாலு நாள் ஆகும். போன் பண்ணிட்டே
இரு, சரியா”
“வீடியோ கால்,
ஜிம்ல ஆம்பளைங்க இல்லன்னு காட்டனும் அதான”
“சிரிக்காத,
இப்ப சொல்றேன் நீ வீடியோ கால் பண்ணா எடுக்கமாட்டேன்.. நான் ஒன்னும்
அவ்ளோ கீழ்மையானவன் இல்ல..உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நம்ம நல்லதுக்கு..”
“ப்ரோ வாங்க போலாம்.. அவங்க
நீங்க பேசுறது கேட்காத மாதிரியே போய்க்கிட்டு இருக்காங்க, நமக்கு
ட்ரெயுனுக்கு நேரமாச்சு”
“அதெல்லாம் டைம் இருக்கு.. வா”
“பாத்தீங்களா,
டைம் இருக்குன்னு சொல்லிட்டு இவ்ளோ வேகமா ஓட்டிட்டு வர்றீங்க.. டேஞ்சர்
ப்ரோ உங்க ட்ரைவ்”
“ஏறி படுத்தா தூக்கம்தான்.. என் ஆளுக்கு
ரெண்டு மெசேஜ தட்டிவிட்டு தூங்கினா காலைல ஊருதான்”
‘சாரிடி, ஆனா நான்
சொன்னத கன்ஸிடர் பண்ணதுக்கு தேங்க்ஸ்”
‘லூசு மாதிரி
மெசேஜ் அனுப்பாத, தேங்க்ஸ் வேற..
தூங்கு..’
குட்நைட் டியர்
குட் மார்னிங் டியர்
ஜிம்ல இருக்கேன்
குட்
குட்நைட் டியர்
குட்மார்னிங் டியர்
குட்நைட் டியர்..ஏன் ஒரு
மெசேஜும் இல்லடி இன்னிக்கு
ஏன் குட்நைட் குட்மார்னிங்
இல்ல இன்னிக்கு.. ஜிம்ல பிஸியா டயர்டா?
குட் நைட் டியர்
என்ன ஆச்சு..மூனு நாளா?
இருக்கியா?
“ப்ரோ என்ன திடீர்னு ஒருமாதிரி ரொம்ப டல்லா இருக்கீங்க?”
“ஒன்னுமில்ல..
இவ.. மெசேஜே இல்ல..
கால் பண்ணேன்..
எடுக்கல.. கால் நார்மலா எடுக்கமாட்டா வீட்ல இருந்தா.. ஆனா மெசேஜ்
பண்ணாம இருக்க மாட்டா..”
“விடுங்க ப்ரோ.
அவங்களுக்கும் ஒரு ஸ்பேஸ் வேணும்ல்ல”
“அட, அதானப் பார்த்தேன்.. மெசேஜ்
வந்துருச்சு.. அட, மூனு நாளைக்கு சேர்த்துவச்சு பெரிய மெசேஜா அனுப்பிட்டா.. சரி ப்ரோ
குட் நைட்”
“ஹோய்.. நல்லா இருக்கியா, சாரி நல்லா
இருக்கீங்களா? ஆக்ட்சுவலா உங்களோட பேச்சு, இதெல்லாம்
பிடிக்கலன்னு நினைச்சேன்.. ஆனா உண்மை என்னான்னா, எனக்கு
ஆம்பளைங்களே பிடிக்கலன்னு இந்த மூனு நாள்ல எனக்குப் புரியவச்சுட்டா தியா. ஆமா.. இது மாதிரி
ஒரு உலகம் எனக்குள்ள இருந்த சுவடே தெரியாம மனசுக்குள்ளயே பூட்டி வச்சிருந்துருக்கேன்
போல.. நல்லவேள.. லேடிஸ் ஒன்லி லேடிஸ் ஒன்லினு நீங்க இங்க அனுப்பினதுலதான்.. என்னோட
உன்னதமான தியாவ பாக்க முடிஞ்சது. அவளோட ஸ்பரிசம் தான் முழுமைன்னு உணர….”
“ப்ரோ ப்ரோ..
என்னாச்சு..
ஹலோ இங்க யாராவது ஹெல்ப்புக்கு வாங்களேன், தலசுத்தி
விழுந்துட்டாப்ள”.. “ ப்ரோ. ப்ரோ.”
*
நர்சிம்
2022