என்ன என்னவோ செய்துபார்த்தான், ஆனால்
பசியை ஒன்றுமே செய்யமுடியவில்லை அவனுக்கு.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
சாய்த்து, மிச்சம் இருந்த நீரையும் கவிழ்த்து பாட்டிலில் நிறைத்து, குடித்தான்.
‘தண்ணிக்கேன்லாம் டெய்லி
ரொட்டேசன் சார், நாளைக்கு காசு குடுக்காட்டி இனிமே போடவேணாம்னு ஓனர் சொல்லிட்டாரு’ – சட்டென
காதுகளில் ஒலித்தது காலையில் சொல்லிச் சொன்றது.
இந்தப் பகல் இன்னும் எவ்வளவு
நேரம்தான் இப்படி ஊர்ந்து ஊர்ந்து நகரும் என்று நினைத்தான். இந்த உலகிலேயே நீளமானது வேலை இல்லாதவனின் பகல் நேரம்தான்
என எங்கோ எப்போதோ படித்தது அவன் நினைவிற்கு வந்தது. இப்படி
எதை எதையோ நினைத்து பசிக்குப் போக்கு காட்டி, வயிற்றை
ஏமாற்றிக்கொண்டிருந்தான். ஆனால், மிக மெலிதாக சத்தம் கொடுத்தது அவனுக்கு மட்டும் கேட்டது. உள்ளே
இருந்து ஒரு குரல், பசியின் சத்தம் அது.
அந்த சத்தத்தை கொஞ்சமாய்
அடக்கி, மேலேறி வந்தது கீழிறிந்து வந்த தையல் சத்தம். கைப்பிடிச்
சுவரில் இன்னும் கைகளை நன்றாக ஊன்றிக்கொண்டு எட்டிப்பார்த்தான்.
கீழே “அடப்பு ஆறுமுகம்” தன்னுடைய சிறிய தையல் மிஷின் மேசையில் வைத்து, காம்பவுண்ட்
சுவரில் சாய்ந்து, தைத்துக்கொண்டிருந்தார். மரநிழல், அந்த இடம், எதிர்வெயில்
ஏறும்போது, மறைத்துக்கொள்ள தார்பாய் என அவருடைய தொழிற்சாலை பத்து ஆண்டுகளுக்கும்
மேலாக அங்கே இயங்கி வருகிறது. அவருடைய வாடிக்கையாளர்கள், இந்த காம்பவுண்டில்
இருக்கும் பேச்சிலர் ரூம் ஆட்களைத் தவிர,
அந்த தெருவில் இருக்கும் மற்ற அனைவரும்தான். ஏதேனும்
கிழிந்திருந்தால், ஏதேனும் சிறிய வேலைகள் என தையல் சம்பந்தமான வேலைகள் தான்
பிரதானம் என்றாலும், தெருவில் எப்போதும் நடக்கும் கட்டிட வேலைகளில் ஈடுபடும் வேற்று
ஊர்,மாநில தொழிலாளர்கள் அந்த மரநிழலில் கொஞ்சம் அமர்ந்து பேச்சுக்கொடுக்க
ஏதுவான இடம்.
அடப்பு ஆறுமுகம் என்ற பட்டப்பெயரை
வைத்தது இவனுடைய அறை நண்பன் குமார். இப்படி ஒரு பெயர் இருப்பது தையல்காரருக்குத் தெரியாது. தெரிந்தாலும்
தவறாக நினைக்க மாட்டார். ஏனெனில் ஒரு நாளைக்கு பத்துமுறையாவது இந்த ‘அடப்பு’ சொல்லை
சொல்லிச் சிரிப்பார்.
எப்போதும் நக்கலான குரலில்
சொல்லும் குமார் இன்று காலையில் கிளம்பும் போது, அவ்வளவு
வருத்தமான குரலில் சொன்னது நினைவிற்கு வந்தது.
“அவ்வளவு பழகியும் நம்மகிட்டயே அடப்ப போட்டானே இந்தாளு, நம்ம நிலம
தெரிஞ்சும்”
அவர் அப்படி செய்தது இவனுக்கும்
வருத்தம் தான்.
இந்த மாதத்தோடு கணக்கு வைத்தால்
அவனும் குமாரும் இந்த அறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வாடகை
கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகின்றன என்ற பின்னொட்டு நினைவும் உடன் வந்தது. அந்த நினைப்பை
மாற்ற பசியின் நினைப்பை வரவழைத்துக்கொண்டான்.
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது
அவர்களின் வாழ்க்கை.
குமார் ஒரு வீட்டில் ஓட்டுநராக
இருந்தான். இவன் ஒரு சிறிய கம்பெனியில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலை.
கொரோனா தொற்று ஆரம்பத்தில்
இருந்த பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து, சம்பளம்
பாதியாக ஆனது இவனுக்கு. வேலையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தால் போதும் என்ற சலுகை. இவனுக்காவது
பாதி சம்பளம். குமாருக்கு மொத்தமாக வேலை போய்விட்டது. எவனும்
எங்கயும் போகக் கூடாது இதுல ட்ரைவர் எதுக்கு என்பது பதிலாக இருந்தது.
அப்படி இப்படி என கையிருப்பு, மோதிரம், இன்னும்
சில என ஓட்டி, இதோ அடுத்த மாதம் குமார் ஒரு கம்பெனியில் ஓட்டப்போகிறான். இவன் அதே
கம்பெனியில் அக்கவுண்ட்ஸில் வேலை.
இந்த வருட நிதியாண்டு முடித்து, புதிதாக
மீண்டும் துவங்கலாம் என்ற நம்பிக்கையில் சிலர் தொழிலைத் தொடங்குகிறார்கள். எல்லாம்
சரிதான், இந்த மாதம் முடிய இன்னும் முழுதாக எட்டு நாட்கள் இருக்கின்றன
என நினைக்கும்போதே மீண்டும் பசித்தது.
கடைசியாக சாப்பிட்டது எப்போது
என யோசித்தான். நேற்றுதானே,
இல்லை, இரண்டு நாட்களுக்கு முன், குமார்
எங்கிருந்தோ ஆர்டர் செய்து அதை அந்த ஸ்விகி காரன் வாசலில் வைத்துவிட்டுப் போயிருந்தான்.. ஆமாம்
அது முடிந்து கிட்டத்தட்ட எட்டு சாப்பாட்டுப் பொழுதுகள் சாப்பிடாமலே கழிந்துவிட்டன
என விரல் விட்டு எண்ணி ஊர்ஜிதம் செய்துகொண்டான்.
அந்த சாப்பாட்டு டெலிவரி
வேலைக்குப் போகலாம் என்றால் வண்டி வேண்டுமாம். வண்டி
இருந்தால் அதை விற்று இன்னும் ஆறுமாதம் சாப்பிட மாட்டோமா என்று குமார் சொன்னது நினைவிற்கு
வந்து சிரிக்க முற்பட்டான், வயிறு இழுத்துக்கொண்டது. பசிக்கும்
வயிறுக்கு சிரிப்பு ஒரு கேடா என்பது போல் இருந்தது அந்த இழுப்பு வலி.
கைப்பிடிச் சுவரில் வயிறை
நன்றாக அழுத்திக்கொண்டு எட்டிப்பார்த்தான் கீழே.
பசிக்கு இதமாக இருந்தது
அந்த கைப்பிடிச் சுவர் அழுத்தம்.
வழக்கம்போல கீழே ஜமா கூடி
இருந்தது.
வழக்கம்போல பலூன்காரர் சைக்கிள்
நிறைய பலூன்களை கட்டி மேல்நோக்கிப் பறக்கவிட்டுக்கொண்டு மெதுவாக சைக்கிளை உருட்டிக்கொண்டு
போனார்.
வழக்கம்போல, அடப்பு
ஆறுமுகம், “என்னா பலூனு,
இந்த சைக்கிள மாத்துய்யான்னா மாத்த மாட்டேங்குறயே.. மறுபடியும்
செயின் கழண்டுருச்சா, நீயும் இந்த ஓட்ட சைக்கிள வச்சே ஒப்போத்துறயேப்பா”
என சவுண்டு விட,
பலூன்காரர் வழக்கம்போல், “அட டைலர்
சார்” என சிரித்துக்கொண்டே கடந்து கொண்டிருந்தார்.
ஆறுமுகம் தைக்க ஏதும் இல்லை
என்பதால், தன் கண்ணாடியை கழட்டி மிஷின் அருகில் வைத்துவிட்டு, எதிரே
நின்றிருந்த பீகார் இளைஞனைப் பார்த்து
“வாடா வாடா தம்பி, நல்லவேள
எங்கடா டீ சைக்கிள் வர்ற நேரம் அடப்புக்கு ஆள் சிக்கலயேன்னு நினைச்சேன்.. வா வா”
“க்யா”
“ஒன்னும் இல்லடா, சாயா ச்ச்சாயா “
“ஆங்.. சாய்வாலா”
என அவன் கை காட்ட, அடடே டாக்டரே
வந்துவிட்டாரே போல் டீக்காரர் சைக்கிளை நிறுத்தினார்.
அடப்பு ஆறுமுகம் தனக்கு
வந்த டீயை பதறி, “மொதல்ல அவனுக்கு குடுய்யா, நீ ஒருத்தன், காசு குடுக்குறவனுக்குத்தான்
மொதல்ல குடுக்கனும்” என சொல்லி சிரித்து கண் அடித்தார்
டீக்காரர் சிரித்துக்கொண்டே, “நானும்
இத்தன வருசத்துல உங்கிட்ட பத்து ரூவா வாங்கிரலாம்னு பாக்குறேன், ரெண்டு
ரூவா வித்த காலத்துல இருந்து அடப்புலயே ஓட்றயேய்யா”
ஏன்ய்யா கத்துற என்பது போல்
பார்த்துவிட்டு அவனிடம் “அச்சா வா” என்றார்.
அவன் ஒன்றும் சொல்லாமல்
காசைக் கொடுத்துவிட்டு எதையோ எடுத்து கசக்கி, வாயில்
அதக்கிக்கொண்டு செங்கலைத் தூக்கப் போய்விட்டான்.
“டீல கொஞ்சம் ஏலக்காயப் போடுய்யா, காசு வாங்குறல்ல” என அடப்பு
கொஞ்சம் சத்தமாக சொல்லிவிட்டு கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அடியில் இருந்த துணியை
எடுத்து சுழற்றினார்.
“ஒரே ஒரு
வெள்ள சட்ட அதுலயும் இப்பிடி ஆகிருச்சு”
என குமார் தன் சீருடையின் கிழிசலைத் தைக்க கொடுத்திருந்தான்
போன வாரம்.
அவன் இல்லாத நேரம் அல்லது
இவனின் பொல்லாத நேரம், ஆறுமுகம் வந்து, சட்டையைத்
தைத்துவிட்டதாகவும், எப்படி தையலே தெரியாதாபடி தன் திறமை என பேசிவிட்டு, காசு கேட்க, அப்போதும்
குமார் சொன்னது நினைவிற்கு வந்தது.. “என்னா பழகுனாலும் காசு இல்லாம நல்லாத் தைப்பான் அந்தாளு.. போடா போ”
கடைசி 200 ரூபாய்த்
தாள் ஒன்று தான் இருந்தது. இந்த ரூபாய் நோட்டுகள் மாற்றியதில் யாருக்கு நல்லது நடந்ததோ
இல்லையோ இவ்வளவு பெரிய தீங்கு இந்த அன்றாடங்காட்சிகளுக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது
என நினைக்கும்போது மிக மிக அதிகமாக பசியில் வயிறு வலிக்கத் துவங்கியது. அழுகை
வரும் அளவிற்கு. அந்த பசியின் இயலாமை கீழே சிரித்துக்கொண்டிருக்கும் ஆறுமுகம்
மேல் கோவமாய் மாறியது.
குமார் இன்று காலையில் சொன்ன
சொற்கள் அழுகையை வரவழைத்தது.
“ஏண்டா, இருவது ரூவாய்க்கு 200 ரூவா நோட்ட
குடுப்பியா? அதுவும் அந்தாளுகிட்ட. அடப்பப்
போட்டு போட்டே வாழ்க்கைய ஓட்டுறான்.. நல்லா மிச்சம் தருவான்..நீயெல்லாம்
கணக்குப்பிள்ள வேற”
“இல்ல குமாரு..
உடனே சில்ற மாத்தித் தர்றேன்னு சொன்னாரு.எனக்கு
என்ன தெரியும் கடைய மூடிட்டு போய்ருவான்னு..”.
“கடைய மூடல,
நம்ம இல்லாதப்ப மட்டும் வந்து நொட்டுறான்.. ப்ச்..”
அதேபோல் இன்று எதேச்சையாக
மதியம் எட்டிப்பார்த்தால், கீழே இருக்கிறார். பசிக்கிறது, இருக்கிறான்
என்றே நினைத்தான்.
பசி கொடுத்த தைரியத்தில், இன்னும்
கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு படபடவென படி இறங்கிப் போனான்.
“நாக்கைப் பிடுங்குவது போல் கேட்க வேண்டும். குமார்
எப்படிக் கேப்பானோ அப்படி கேட்க வேண்டும், அல்லது
எங்க கிட்டயே அடப்ப போட்டல்ல” என்றாவது கேட்க வேண்டும்.
எவ்வளவோ ஒத்திகை பார்த்துக்கொண்டு
கீழே இறங்கினாலும்,
அங்கே ஹவுஸ் ஓனர் பெண் நின்று
ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
இவனைப் பார்த்ததும் சிரிப்பு
எல்லாம் சட்டென மறைந்து கடுகடுவென போனது முகம்.
“ஆறு மாசமா கண்ல படலயேடா ரெண்டு பேரும்”
பசியில் அவனுக்கு வார்த்தையே
வரவில்லை.
அருகில் சாக்கடையை சுத்தம்
செய்துகொண்டிருந்தார்கள். அந்த வாடையும் பசியும் சேர்ந்து புரட்டியது வயிறை.
“இல்..லக்கா”
என ஏதோ சொல்லநினைத்து அதைவிட
முக்கியமாய் தையல்காரர் பக்கமே தலைவைக்காமல் எதிர் திசையில் நடக்கத் துவங்கினான்.
பசியில் வெய்யிலில் நடந்தால்
மயக்கம் வரும் என்ற கண்டுபிடிப்பை உறுதி செய்வது போல் இருந்தது மனமும் உடலும்.
பசியும்,இவ்வளவு
பெரிய ஆளாய் வளர்ந்தும் இப்படி இருக்கிறோமே என்ற இயலாமையும் ஆத்திரமாய் மாற ஆறுமுகம் சட்டையைப் பிடிப்பது என முடிவெடுத்து
திரும்பினான்
நல்லவேளையாக ஹவுஸ் ஓனர்
பெண் போய்விட்டிருந்தார்..
அடப்பு ஆறுமுகம் இவனைப்பார்த்துக்கொண்டே
விசிலில் “அடி ராக்கமா கையத்தட்டு பாடலை விசிலில் பாடிக்கொண்டே சிரித்தார்.
அருகில் போய் நின்றதும்
ஒரு டிபன் கேரியரை எடுத்து வைத்தார்.
“இந்தாங்கப்பா..
இதத் தின்னுங்க.. நேத்தோ
முந்தாநேத்தோ எவனோ வண்டில வந்து இத்துனூண்டு பொட்டலத்தக் குடுத்துட்டு குமார் குமார்ன்னான், நீங்க
ரெண்டு பேரும் இல்ல.. 100 ஓவாய வாங்கிட்டுப் போய்ட்டான்..உன் ரூம்
வாசல்ல வச்சிருந்தேனே..மிச்ச நூறு ரூவாய அண்ணென் அடப்ப போட்டேன் சரியா..”
நினைவு வந்தவராய்,
“வவுத்துக்கும் பத்தாது காசுக்கும் கேடுன்னு சம்சாரத்துக்கிட்ட
சொன்னேன்.. ஒங்களுக்கும் குடுத்துவிட்டா… இனி ஒருவேள
நம்ம வீட்டு சோத்த தின்னுங்கப்பா..பத்தோ இருவதோ குடுத்தா அண்ணனுக்கு பீடாக்கட அடப்புக்கு ஆச்சுல்ல”
விசிலை தொடர்ந்தார். வைக்கிற
வாணம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு நேராக..
வெகுநேரமாக மிஷினை வைத்துப்
போரடி, அந்த சாக்கடை அடைப்பை எடுத்துவிட்டிருந்தார் கார்ப்பரேஷன்
காரர். குபுகுபுவென அடித்துக்கொண்டு போனது, சாக்கடை
நீர்.
கேரியரில் இருந்து வந்த
சாப்பாட்டு வாசமே அவன் பசியை போக்கி இருந்தது.
*
நர்சிம்
2022