அடடா, என் புகைப்படம் தாங்கிய ‘காணவில்லை’ விளம்பரம் வந்த செய்தித்தாள் மீண்டும் இன்று என் கண்ணில்பட்டுவிட்டது.
எங்கிருந்து சொன்னால் உங்களுக்குப் புரியும் என்று தெரியவில்லையே. ஒருவேளை அந்த அதிகாலை நாய்த்துரத்திலில் இருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கலாம். இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது என்று சொல்லலாம்தான். ஆனால் சிரிப்பல்லவா பொத்துக்கொண்டு வந்து தொலைக்கிறது ‘ என்னா ஓட்டம்’. அதுவும், அந்த பூட்ஸ்கள். என் எடையைவிட நூறு கிராமாவது அதிகம் இருக்கும். அடிப்பகுதியில் ஆணிகள் அடிக்கப்பட்ட NCC பூட்ஸ்.
நாயின் உறக்கத்தைக் கெடுத்து நிமிர்ந்து பார்க்க வைத்தது அந்த பூட்ஸ் ஆணிகள் எழுப்பிய வினோத க்ரீச் சத்தம் என்றாலும் அது சற்று சோம்பலாக நிமிர்ந்து பார்த்த மாத்திரத்தில் லப்பென்று என்னை நோக்கிப் பாய்ந்து கவ்வ எத்தனிக்கக் காரணமாய் அமைந்தது என்னவோ, கஞ்சி போட்டு விரைப்பாக இஸ்திரி செய்து, என் உடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்த உடுப்பு தான். என் சொந்த ஊரில் அதுவரை நான் பார்த்தே இராத சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் ராகுல் திராவிட் அடிக்கும் சிக்ஸர்கள் போல்தான் ஓடிய இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்திருக்கிறேன் என்பது அரை நொடியில் என்னை சமீபித்து, கடந்து எனக்கு முன்னர் நின்ற நாயைப் பார்த்ததும் உணர்ந்தேன்.
ஓடும் முயற்சியைக் கைவிட்டு, சரணடைந்துவிடலாம் என்று முடிவுக்கு நான் வந்தாலும் என் பூட்ஸ் விடுவதாயில்லை. லேசாக நடுங்கிக்கொண்டிருந்த கால்களின் நிமித்தம் லேசாக அசைக்க, அது க்ரீச் எனப் பட்டியக்கலைக் கிழிக்க, வந்ததே கோபம், நாய்க்கு. பின்னங்கால்களால் அமர்ந்து, கால்களால் நின்ற நிலையிலேயே அது என் உயரத்திற்கு இருப்பது போல் இருந்தது. அந்த நிலையிலேயே தலையை முன்னால் ஒரு முறை கொண்டுவந்து பின்னுக்கு இழுத்துக்கொண்டது. அதுமட்டுமே செய்தால் பயமேதுமில்லை. அந்த இடைப்பட்ட நொடியில் ஒரு சவுண்டு விட்டது பாருங்கள்.. இப்போது நினைத்தாலும் குலை நடுங்கத்தான் செய்கிறது.
விசயம் அதுவல்ல. நான் அந்த அதிகாலையில் அப்படி நாயின் முன்னர் செய்வதறியாது நின்று கொண்டிருக்க, கடித்தும் தொலையாமல் வழியும் விடாமல் சின்னஞ்சிறு உர்ர்களுடனும் அவ்வப்போது ஒரு முறைப்புடனும் என் முன்னர் இருந்த நாயிடம் இருந்து என்னைக்
காப்பாற்றுவதற்காகவே பிறவி எடுத்து வந்தது போல் வந்தாள், முத்துக்காமாட்சி அக்கா. கையில் வைத்திருந்த காலிக்குடத்தை நாயைப் பார்த்து ஓங்கிக்கொண்டே,
“ஏய் ராஜா..ச்சூப் போ..விடிஞ்சும் விடியாம கத்திக்கிட்டு” என சொன்னதும், அதுவரை பேரரசன் போல் நின்றிருந்த ராஜா, என்னை ‘சரி சரி போய்த் தொல’ என்பது போல் ஒரு துச்சப் பார்வை பார்த்து நகர, நான் க்ரீச்க்குப் பயந்து அடி எடுத்து வைக்காமல் நின்றிருந்தேன். அருகில் இருந்த குழாயடியில் குடத்தை வைத்துவிட்டு, தாவணியை சரிசெய்துகொண்டே,
“ஒன்னும் பண்ணாது போடா, போலிஸ் ட்ரெஸ்செல்லாம் போட்டுக்கிட்டு நாயப் பார்த்து அரண்டு நிக்குற?”
பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள். நமக்கு அறிவு வேண்டும் அல்லவா.. அதை அன்று உணரும் வயதில்லை என்பதையும் நீங்கள் அருள்கூர்ந்து உணரவேண்டும். அக்கா சொல்லிவிட்டாளே என சரெட்டென திரும்பி போலிஸ் போல் அடி எடுத்து வைத்தேன். மூன்றாவது அடியில் ஆணியின் சத்தம் செய்த மாயம், ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் தொடைப்பகுதியைக் கவ்வியது.
இதுவரையிலான என் வாழ்வின் உச்சபச்ச டெசிபலை நான் உபயோகித்துக் கத்தியது அந்த நொடியில்தான். முத்துக்காமாட்சியக்கா சடுதியில் செயல்பட்டு, நாயை விரட்டி, என்னைத் தன்பக்கமாய் இழுத்து குழாய் மேடையில் அமரவைத்தாள். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நாய் கடித்த இடத்தைப் பார்க்க, நல்ல வேளையாக அந்த NCC டவுசர் ரொம்பப் பெரியதாகவும் கஞ்சி போட்டு, தொடையில் இருந்து தகுந்த இடைவெளிவிட்டு, எதிரிகளை மன்னரிடம் நெருங்க விடாத அகழிபோல் அரண் அமைத்த காரணத்தினால் தப்பித்தது என் அந்தரங்கம்.
அக்கா அடித்த அடியில் ராஜா எங்கோ ஓடிவிட்டது. ஆனால் அங்கிருந்து அது எழுப்பிய வெற்றிக்களிப்பு, கொக்கரிப்பு இங்குவரை சன்னமாக கேட்டது. என் பிரமையாகவும் இருக்கலாம்.
“பல்லு கில்லு படலயேடா” என என் தொடைப்பகுதியில் கை வைத்துப் பார்க்க வந்தவளிடம் இருந்து நாணம் தடுக்க படக்கென விலகி, “இல்லக்கா, டவுசர்லதான்” என சமாளிக்க, “அட இருடா பார்ப்போம்” என அவள் விடுவதாயில்லை. அவள் நெருங்கினால்,
டவுசரை நான் லேசாக ஈரப்படுத்தியதையும் அறிந்துகொண்டுவிடுவாள். ஒரு நேரத்தில் எவ்வளவு அசிங்கங்களை எதிர்கொள்வது.
“இம்புட்டு வெள்ளன எங்கடா போரா இப்பிடி லூசு மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு”
வீட்டிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, அதுவரை பார்த்திருந்த அத்தனை விஜயகாந்த் படங்களின் கும்ஹே சத்தங்கள் சூழ நடந்து போய்க்கொண்டிருந்த என்னை ‘லூசுபோல்’ என்ற ஒற்றை வார்த்தையில் வீழ்த்தி, என் பதிலுக்கு வேறு காத்திருக்கிறாள். ராஜாவே பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
“NCC க்கா”
“எது?”
இவளுக்குப் புரியாது. அதைவிட முக்கியம், இந்த அவமானத்தில் இருந்து நகரவேண்டும். சர்வ நிச்சயமாய் ராஜா போன பஸ் ஸ்டாண்ட் திசைப்பக்கம் தலைவைக்க முடியாது. திரும்பிப் போனால் வீடு. நேற்று காலையில் இருந்து வீட்டினரை நான் படுத்திய பாட்டிற்கு இப்படி திரும்பி வீட்டிற்குப் போனால் கொன்றே விடுவார்கள். கஞ்சியைக் காச்ச சொல்லி பெரியக்காவின் உயிரை வாங்கி, காய்ந்துவிட்டதா எனப் பார்க்கச் சொல்லி பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அம்மாவின் உயிரை வாங்கி, காய்ந்தும் காயாத அந்தச் சாக்குத்துணி உடையை எடுத்துக்கொண்டு இஸ்திரிக்குப் போனால், மாதத்தின் முதல் செவ்வாயோ ஏதோ ஒன்று என காரணம் சொல்லி இஸ்திரி வண்டிகள் எல்லாம் காலியாகக் கிடக்க, ஓ வென திண்ணையில் அமர்ந்து அழ, பக்கத்துவீட்டு மூர்த்தி அண்ணன், அழைத்து தன் புத்தம் புதிய அயர்ன்பாக்ஸைக் கொண்டு உதவ முன்வர, “ம்ஹூம், இது பாலிஸ்டர் மட்டும்தாண்டா பண்ணும், உன்னோடது கஞ்சி போட்டதால முடியாது” என உதட்டைப் பிதுக்கி, மீண்டும் பதவிசாக உள்ளே வைத்துக்கொண்டார். மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வர, ரகு பெரிய மனது பண்ணி என்னை அவன் சைக்கிளில் வைத்து, இஸ்திரிக்காரரின் வீட்டிற்கே அழைத்துப்போய் ஒருவழியாக கெஞ்சிக் கூத்தாடி தேய்த்துக்கொண்டு வந்து ஒரு நீவு நீவி விட்டு, தலைமாட்டில் வைத்து நிம்மதியாகப் படுத்தேன். பட்டென விழிப்பு வந்து, பெல்ட்டிற்குப் பாலிஷ் போடவில்லை என்றால் சீனியர் கையை நுழைத்து ஒரு இழு இழுப்பான். விலா எலும்பு கபாளம் வரை கனெக்ஷன் ஆகி வலிக்கும் என நினைக்கும்போதே வலித்தது. எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க, ஒற்றைக்குரங்குபோல் திண்ணையில் அமர்து பாலிஷ் வைபவத்தை அரங்கேற்றி, முதல் பஸ் அதிகாலை 4:15, அதில் போனால்தான் 5:20 பரேடுக்கு போக முடியும் என்ற மகா உண்மையை உணர்ந்து மீண்டும் அம்மாவை சுரண்டி, எழுப்பி விடச் சொல்லி திட்டு வாங்கிப் படுத்து, எழுந்து, “தொர சுடு தண்ணிலதான் குளிப்பியே” என அக்காவிடம் திட்டுவாங்கிக்கொண்டு, இபப்டி நான் ஒருவன் NCCக்குப் போக அனைவரையும் படுத்தி எடுத்துவிட்டு, என்ன காரணம் சொல்லி என் புறமுதுகுப்படலத்தை நியாயம் செய்ய முடியும்?
“டேய்..ஒன்னயத்தாண்டா, போலிஸு, பயப்படாம போடா.. மொத பஸ் இந்நேரம் போயிருக்கும்”
இந்த ‘better late than never’சங்கதி NCCயைப் பொறுத்தவரை வேலைக்கு ஆகாது. அங்கு தாமதமாகப் போவதுதான் உலகமகா தவறு, வாத்து போல் தாவ விடுவார்கள். மைதானத்தைச் சுற்றி ஓட விடுவார்கள். எல்லாமும் கண்முன் வந்து போனது.
நடுநடுவே காதிற்குள் ராஜாவின் குறைப்புச் சத்தமும்.
தெரிந்த சாத்தான்களே மேல் என்பதை அறியாமலே, வீட்டிற்குப் போய்விடுவது என முடிவெடுத்து, அக்காவிடம், “யக்கா, நாய் தொறத்துனத யார்க்கிட்டயம் சொல்லாதக்கா..ப்ளீஸ்..ரகுப்பயகிட்ட நானே சொல்லிருவேன். ஆனா விஜிப் பிள்ளகிட்ட மட்டும் சொல்லிறாத”
அக்கா சுற்றும் முற்றும் பார்த்து, என் அருகே குனிந்து, என் பாம்ப்பாம் வைத்த தொப்பியைத் தட்டி, “இதெல்லாம் ஒன்னுமே இல்லடா..நீ போ..சொல்லமாட்டேன்.. நீயும் இங்க பார்த்தத சொல்லாத”
அதுவரை பயத்திலும் அவமானத்திலும் உழன்று கொண்டிருந்த என் மனமும் உடலும் பற்றுக்கம்பியைத் தேடும் பாகற்கொடிபோல் ஒரு சைக்கிளின் கேரியரை இறுகப் பற்றி இருந்ததை உணர்ந்தேன். அது, ஹேண்டில்பாரில் குஞ்சலங்கள் வைத்த, போக்ஸ்கம்பிகளில் மெல்லிய விளக்குகள் பதித்த வயர்கள் மின்னும் வித்தியாசமான சைக்கிள், செல்வகுமார் அண்ணனின் வாகனம். நான் உணரும்பொழுதே குழாய்மேடையின் பின்புறம் இருந்து வெளிப்பட்டார்.
முத்துக்காமாட்சி அக்கா வெகு இயல்பாக இருப்பது போல் “அது ஒண்னுமில்லடா, அடுத்த வாரம் தீவாளி வருதுல்ல, அக்கா சீட்டு பிடிச்சேன்ல்ல..உங்க அம்மாகூட ரெண்டு சீட்டு போட்டிருக்கு. சுவிட்டு, மிச்சரு, அதிரசம், வெடி பாக்கெட் எல்லாத்தையும் மதுரைக்குள்ள இருந்து எடுத்தாரனும்ல..அதான் பேசிக்கிட்டு இருந்தோம்”
இது எதைப் பற்றியும் கவலைப்படாதவார்போல் என் அருகில் வந்து, லேசாகத் தள்ளிவிட்டு சைக்கிள் சீட்டை ஒரு அடி அடித்து, என்னை ஏற இறங்கப் பார்த்து சிரித்துவிட்டு, ஏறிப் போய்விட்டார். அவரையும் ராஜா துரத்த வேண்டும் எனத் தோன்றியது.
”சரிக்கா. சொல்லல”
சற்று ஆசுவாசமடைந்தவள், என்னையும் கலகலப்பான சூழலுக்கு மாற்றும் விதத்தில்
“ஆமா எட்டாப்பு படிக்கும்போதே விஜிகிட்ட சொல்லாத, குஜிகிட்ட சொல்லதன்னு திரியுறயே..பெரிய ஹீரோ இவுரு, இந்த காலங்காத்தால க்ளாஸ் போகுறதல்லாம் எதுக்குடா?”
‘வேலைக்கு சேரும்போது NCCல இருந்தா 5 மார்க்கு எக்ஸ்ட்ரா தருவாங்களாம்டா, பரேடு முடிஞ்சதும் பொங்கலு சும்மா கும்ம்முனு இருக்கும்’ என்றெல்லாம் என்னைக் கட்டி இறக்கி, கடைசி நேரத்தில் அவன் மட்டும் சேராமல் தப்பித்துக்கொண்ட ரகு மீது அவ்வளவு கோவம் வந்தது. ஆனாலும் முத்துக்காமாட்சியக்காவின் அருகாமை வாசம், செல்வகுமார் அண்ணனின் சிகரெட் வாசம் கலந்து என் மீது படர்ந்தது பிடித்திருந்தது.
“நல்லாத் தாண்டா இருக்கு இந்த ட்ரெஸ்சு”
என்னிடம் ஸ்நேகம் பாராட்டும் பொருட்டு நெருங்கி வந்தாள். “நீ ஏங்க்கா எப்பவும் கோவமாவே இருக்க நாள் ஃபுல்லா”
என்னை தன்னருகே இழுத்து உச்சி முகர்ந்தவள் “அப்பிடி இருந்தாத்தாண்டா கெத்தா இருக்கும்”
அதன் பிறகு வந்த நான்கு நாட்களும் நானும் அக்காவும் ஏதோ நெடுநாள் பழகிய ஒரே வயதுத் தோழமைபோல் சேர்ந்தே இருந்தது இன்றளவும் எனக்கு குழப்பமான ஒன்று. குறிப்பாக, தீபாவளி அன்று படத்திற்கு அழைத்துப் போனாள்.
“உங்கூட போறேன்னு சொன்னதும் எங்கப்பா விட்டுட்டாருடா, பாரு நீ எவ்வளவு நல்ல பையன்னு” என சிரித்தாள்.
பாண்டியன். ரஜினி படம். தீபாவளி அன்று படத்திற்குப் போவது என்பதே திருவிழா போல். நானும் அக்காவும் பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பொழுதே எங்கிருந்தோ செல்வக் குமார் அண்ணன் வந்தார். நான் வீட்டில் அழுது அடம்பிடித்து வாங்கி இருந்த பேகி பேண்ட்டில் உலகம் வென்ற மனதோடு நடந்து கொண்டிருந்தேன். என்னோடுதான் நடந்து வந்தாள் அக்கா. ஆனால் அவர்கள் இருவரும் தனியாக நடந்தார்கள்.
மதுரையின் மொத்தக் கூட்டமும் அன்று அந்த தியேட்டரில் கூடி இருந்தது போல் ஒரு தோற்றம். கையில் ஜிகினா பளபளப்பு ஒட்டி, எங்கு பார்த்தாலும் ரசிகர்கள். நெற்றியின் இருபுறமும் லேசாக ஷேவிங் செய்து முடியை ரஜினி போலவே அமைத்திருந்தார்கள் பெரும்பான்மை அண்ணன்கள்.
அப்படி இப்படி என ஏதோ செய்து செல்வகுமாரண்ணன் டிக்கெட் வாங்கி வந்தார். என்னை ஓர் இடத்தில் அமரச்செய்து, கையில் சோளைக்கருதைக் கொடுத்துவிட்டு, படம் முடியும் வரை அங்கேயே இருக்கச் சொன்னார். அக்காவைப் பார்த்து தலை ஆட்டினேன். சிரித்தாள். அவள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். படம் போட்டதும் தியேட்டர் குதூகலத்தில் கத்தத் துவங்கியது. நான் சுற்றும் முற்றும் அக்காவைத் தேடினேன். ஜிகினா பறக்கப் பறக்க, முதல் முறை டவுனுக்குள் ரஜினி படம் அவ்வளாவு கூட்டத்தினூடே எனும் மிதப்பு என்னை கெத்தாக உணர்த்தியது.
படம் முடிந்து எல்லோரும் போய்விட்ட பிறகும் அக்கா வரவில்லை. திரைக்குக் கீழே ‘தீ’ வாளிகள் ஆட, எனக்குள் பயம் சூழத் துவங்கியது. தியேட்டரைக் கூட்டும் பெண்கள் அதட்ட, வெளியேறினேன்.
இருள் கவிழத் துவங்கி இருந்தது. தியேட்டரில் அடுத்தக் காட்சிக்கான கூட்டமும் சண்டைகளும் வெடிச்சத்தமும் என தீபாவளி திமிலோகப்பட்டது.
எனக்கு இன்னதென்று தெளிவாக எதுவும் விளங்காமல் ஆனால் பயம் மட்டும் முற்றாக பீடிக்கத் துவங்கியது.
அந்தத் தியேட்டரின் ஒவ்வொரு மூலையிலும் மீண்டும் மீண்டும் தேடினேன். நீண்டு இருந்த சைக்கிள் ஸ்டாண்டில் ஒவ்வொரு சைக்கிளாகத் தேடினேன். எங்குமே அவர்கள் இல்லை.
ஆம். அவர்கள் ஊரை விட்டு ஓடிவிட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ நானும் உடந்தை. இதில் என் தவறு என்ன இருக்கிறது என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் என் மனம் இல்லை. மனநிலை முழுக்க என்னை நம்பித்தான் முத்துக்காமாட்சியக்காவின் அப்பா அனுப்பி வைத்தார் என்ற சுமை மட்டுமே அழுத்திக்கொண்டிருந்தது. சுமை என்பது இப்போதைய வார்த்தை. அப்போது, அன்று அது பயம். மரண பயம். அப்பாவின், ‘ஏண்டா இப்பிடி பண்ண’ என்று பரிதாபமாகக் கேட்கும் கேள்வி கொண்டு வந்த பயம். முத்துக்காமாட்சியக்காவின் அப்பா அடிக்கக் கூடும் என்ற பயம். அவமானத்தின் மீதான பயம், என அத்தனையும் சேர்த்து என்னை பெரியார் பஸ்ஸ்டாண்ட்டின் பக்கவாட்டில் இருந்து ஜங்க்ஷனுக்குள் இட்டுச் சென்றது.
பள்ளியில் மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு, காலார நடந்து இந்த ஜங்ஷனுக்குள் புகுந்தோம் என்றால், சண்ட்ரிங்தான். லேசாக நகரும் இரயிலில் ஏறி, இஞ்சின் பொறுத்தப்பட்டு திரும்பும் வரை அதில் பயணிக்கும் விளையாட்டு எங்களுக்கு சண்ட்ரிங். அந்த ஜங்ஷன் இப்போது எனக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்திய இடமாகத் தோன்றியது. தீபாவளி எனும் மகிழ்ச்சி மொத்தமாய் வடிந்து விட்டிருந்தது.
எனக்காகவே வந்தது போல் எங்கிருந்தோ வந்த ஏதோ ஒரு இரயில் ஏறியவன் தான் நான். ஓடிப்போனவன் என்ற பட்டத்தோடு என் நாட்களை திருச்சி சென்னை என நகர்த்தி இருக்கிறேன். அப்போது என் கையில் கிடைத்த இந்த காணவில்லை விளம்பரத்தையும் கத்தரித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்தப் புகைப்படம் கூட NCC உடையில் வாயை சற்றே கோணலாக்கி சிரித்த எனக்கு மிகப் பிடித்த புகைப்படம்.
ஆறேழு மாதங்களுக்குப் பிறகு தாக்குப்பிடிக்கமுடியாமல் வீட்டிற்குப் போய் நின்ற நிகழ்வு, அன்றுதான் என் வீட்டினருக்கு தீபாவளி என்பது போல் என்னை உச்சி முகர்ந்து அள்ளி அணைத்துக் கொண்டாடியதையும் மறக்கவே முடியாது. அதுவொரு தனிக்கதை. பிறகு சொல்கிறேன். யாரும் எதுவும் என்னிடம் கேட்டுவிடக்கூடாது என்று நான் நினைத்ததை விட, வீட்டினரும் நண்பர்களும் வெகு கவனமாக இருந்தனர். எதுவும் கேட்கவில்லை. என்னை குழந்தைக்கு நகம் வெட்டும் இளம்தந்தையின் கவனத்தோடு பார்த்துக்கொண்டனர், அனைவரும்.
வீடு மாற்றும் வைபவத்தில் பழையன கழிதலின் பொருட்டு எடுத்து வைத்துக்கொண்டிருந்த கழிவுகளில் இருந்து மீண்டு எழுந்திருக்கிறது இந்த விளம்பரம். ஓடிப்போன நான் கிடைத்துவிட்டேன் என்ற விளம்பரம் எதுவும் அப்பா குடுத்ததாக நினைவில்லை. இந்த விளம்பரம் வந்த நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் தான் செல்வகுமார் அண்ணனும் முத்துக்காமாட்சி அக்காவும் ஓடிப்போயிருந்தனர். அவர்கள் குறித்த எந்த விளம்பரமோ செய்தியோ இந்த இருபது வருடங்களில் எங்குமே தட்டுப்படவில்லை, என்றே அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமும் அதையே சொல்லிக்கொள்கிறேன். ஆமாம் எனக்கும் அவர்களின் வாழ்விற்கும் எந்த சம்பந்தமும் இப்போதும் இல்லை.
என் காலடியில் தொடங்கி, வீடு முழுக்க அட்டைப் பெட்டிகளில் நேர்த்தியாக என் அத்தனை அழுக்கு, புதிது என பாரபட்சம் இல்லாமல் பெட்டி பெட்டிகளாக கட்டி வைத்திருக்கிறார்கள்.
குஞ்சலம் எல்லாம் நைந்து போய் மிக மிகப் பழையதாக இருக்கிறது என்று இந்த சைக்கிளை மட்டும் பேக் செய்ய மறுத்து விட்டார்கள் மூவர்ஸ் பேக்கர்ஸ் பணியாளர்கள்.
*
விகடன் தீபாவளிமலர்
2019.