ஓவியன்

கீழே அப்பாவின் குரல் கேட்டது. சத்தமாக. எப்போதுமே சத்தமாகத்தான் இருக்கும். இம்முறை சற்றுக் கூடுதலான சத்தம். பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன். பாவம் இம்முறை காளிதாஸ்க்குத் திட்டு விழுந்து கொண்டிருந்தது.

“எத்தன தடவ சொல்லிருக்கேன். கத்திக்கிட்டே வராதீங்கடான்னு. அப்பிடி என்ன தலபோற அவசரம்?”

காளி பதற்றமாக மேலே பார்த்தான். நான் வா என்பது போல் கையைக் காட்ட, அவன் மீண்டும் அப்பாவைப் பார்த்தான். அவன் பார்ப்பதைப் பார்த்த அப்பா, வெளியே தலையை நீட்டி வளைந்து மேலே பார்த்தார்.

“மஹாராஜா உப்பரிகைல இருந்து கூப்புடுறாரோ..”

காளி விடுவிடுவென படியேறி மேலே வந்தான்.

 “ஏண்டா சத்தமில்லாம மேல வரவேண்டியது தான.”

 “சந்தனமாரி வந்துருக்கான் டா”

கண்ணாடியில் மீசையின் பிசிறை வெட்டும் மும்முரத்தில் இருந்த என் முகம் மாறியதை நானேப் பார்த்தேன். திடுக்கிட்டுத் திரும்பினேன்.

காளி தலையாட்டினான்.

“சரி வா, போவம்”

“இல்லடா நாம இப்ப அங்குட்டுப் போறது சரியா வருமா?”

எதுவும் சொல்லாமல் கையை மட்டும் அவன் முகத்திற்கு நேரே நீட்டினேன். புரிந்து கொண்டான். புறப்பட்டோம்.

சந்தனமாரி, எங்களை விட இரண்டு மூன்று செட் மூத்தவன். காதலித்தான் என்ற காரணத்திற்காக அடித்தார்கள். அடித்தார்கள் என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிடமுடியாதபடி கட்டி வைத்து அடித்தார்கள். அதுவரை எங்களுக்கு எல்லாம் தெரியாத பல விசயங்கள் எங்களின் மண்டைக்குள் புகுத்தப்பட்டது. சாதி என்றால் என்னவென்று அறியத்தந்தார்கள் ஊர்க்காரர்கள்.

இந்த ஊருக்கு இனிமே வரவே மாட்டேன் மாப்ள என  என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு சந்தனமாரி தீர்க்கமாகச் சொல்லும்போது அவன் குரல் உடைந்து அழுகை வெளிப்பட்டதும் இரயில் புறப்படும் வரை நின்று கொண்டே இருந்த அந்த இரவும் கடந்து நான்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்று போல் இருக்கிறது.

                               சந்தனமாரி, அற்புதமான ஓவியன். அதாவது சுவர் ஓவியங்கள், வாசகங்கள் எழுதுவதில் கைதேர்ந்தவன். ஆம். கை தேர்ந்தவன் என்ற சொற்பதம் மிகச்சரியாகப் பொருந்தும் கைக்குச் சொந்தமானவன். அவனுடைய அப்பா, கட்சி வாசகங்கள், தேர்தலுக்கு முன்னர் அம்புக்குறி போட்டு Full dmk, full admk என்று சுவர்களை பதிந்து வைத்துக்கொண்டு, யார் பணம் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கு வாக்கு கேட்டு சுவர் விளம்பரம் எழுதி, சின்னத்தை வரைந்து கொடுப்பார். பிறகு சின்னங்களுக்கு அச்சு தகரங்கள் வந்தன. அதை வைத்து ஒரே இழுப்பாக இழுத்து சுவரை நிறைத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் சந்தனமாரி வரைந்து கொண்டே இருப்பான். அனேகமாக அவன் முதன் முதலில் வரைந்து பார்த்தது என்னைத்தான் என்று நினைக்கிறேன். காளியும் தன்னைத்தான் முதலில் வரைந்தான் என்பான். நாங்கள் பள்ளி முடித்து கல்லூரிக்குப் போகும்பொழுது, அவன் தன் தந்தையோடு முழுநேரமாக அதில் இறங்கிவிட்டான்..

பேருந்தில் நாங்கள் கல்லூரிக்குப் போகும் நாட்களில் பெரும்பாலும் ஜெயவிலாஸ் பாலம் அல்லது ஏ வி பாலத்தின் சுவர்களில் அவன் பெயிண்ட் டப்பாவோடு அமர்ந்திருப்பதைப் பார்ப்போம்.

எனக்கும் காளிக்கும் ஓர் அற்புதமான அனுபவம் என்னவெனில் எங்களுக்கு இரண்டு மூன்று டாப்படிக்கும் இடங்கள் அமைந்தது தான். அதாவது எங்கள் தெருவின் முக்கில் ரகு, குமார் என நண்பர்களோடு சைக்கிள் கடையில் அமர்வோம். அங்கு ஜமா சேரவில்லை எனில் அய்யனார் கம்மா புளியமர ஜமாவிற்குப் போய்விடுவோம் அங்கு கொத்தன், செந்தில் சஞ்சீவி தவுடன் என ஆட்கள், மாடுகளைப் பற்றியும் ஜல்லிக்கட்டு பற்றியும் என பொழுது போகும். அங்கும் ஒன்றும் சரியாகப்படவில்லையெனில் நேராக ஊருக்கு வெளியே லோடுமேன்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் சிமெண்ட் தரைக்கூடத்தில் உக்காந்துவிடுவோம். சந்தனமாரி அங்குதான் ஓய்வெடுப்பான்.

மூன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நண்பர்கள் குழு என நானும் காளியும் நேரம் போதாமல் நாட்களோடு ஓடிக்கொண்டிருந்தோம்.

சந்தனமாரியின் விரல்கள் சற்று நீளமாக அதுவே தூரிகை போன்று இருக்கும். நளினமாக கைவிரல்களை அசைத்து அவன் கோடுகள் போடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

மூன்று மாணவிகளை எரித்துவிட்டார்கள் என அனைத்து கல்லூரிமாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நாளில் கல்லூரி விடுமுறை அறிவித்தவுடன் நானும் காளியும் நேராக சந்தனமாரி இருந்த பாலத்திற்குப் போனோம்.

அதுதான் முதல் முறை. அருகில் இருந்து அவன் எழுதுவதை, வரைவதைப் பார்ப்பது. சொல்லப்போனால், நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. இரண்டு கோடுகள் கண்ணுக்குத் தெரியாதவண்ணம் இழுத்துக்கொள்வது. எங்கோ ஆரம்பித்து வளைத்து எதிலோ தொடுவது. அது என்ன எழுத்து என்று அவன் முடிக்கும் வரை நமக்குப் புரியாமல் இருப்பது. ஒன்றுக்கு ஒன்று தொடாமல் நிறுத்துவது. ஒரு எழுத்திற்குள் இன்னொரு எழுத்து சங்கிலி போல் கோர்த்துக்கொண்டு போவது என அட்டகாசம் செய்வான். மதுரை வெய்யில் மண்டைக்குள் ஏறிக்கொண்டிருப்பதையே மறந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தோம் எனில், புரிந்து கொள்ளலாம் அவன் கை நேர்த்தியை.

அதன்பிறகு எப்போது விடுமுறை என்றாலும் சந்தனமாரியைத் தேடிச் செல்வது எனத் தொடங்கி சில நாட்கள் கட் அடித்துவிட்டு போவது என்பது வரை கிட்டத்தட்ட அந்த சுவர் எழுத்து, ஓவியங்களுக்கு அடிமையானோம். பன்மையில் சொல்கிறேன். ஆனால் நான் தான் அதிகமாக ஈர்க்கப்பட்டிருந்தேன். காளியை, என்னாடா சூப்பர்ல்ல என்னடா, செம இல்ல என்னடா என அத்தனை என்னடாக்களை அவனுக்குள் புகுத்தி அவனையும் இதற்குள் இழுத்துவந்திருந்தேன்.

சந்தனமாரி அதிகம் அதிர்ந்து கூட பேசமாட்டான். அவன் அதிகமாகக் கோவப்பட்டு பார்த்தது எனில் “கடவுள் முரளி வாழ்க- பெருமாள்” என கிட்டத்தட்ட எல்லா சுவர்களிலும் ஓரத்தில் கரித்துண்டால் கிறுக்கலாக எழுதப்பட்ட வாசகத்தைப் பார்த்துதான். “இந்தப்பெருமாள் மட்டும் கைல கெடச்சான்..அம்புட்டாதான்” என்பான். மற்றபடி, எதிர்வெயிலுக்கு கண்களைச் சுருக்கி சுருக்கி, அவன் முகம் அப்படியே சிரித்தபடியே இருக்கும் படி ஆகிவிட்டது.

யோசித்துப்பார்த்தால், நானும் காளியும் தான் சந்தனமாரியைத் தேடிப்போவோம். லோடுமேன் டாப்பிற்கோ மதுரைக்குள் வேலை நடக்கும் இடங்களுக்கோ. அவனாக எங்களைத் தேடி வந்ததே இல்லை.

“அடிக்கிற வெய்யில்ல நின்னு வேலையப்பாத்துட்டு, டாப்புக்கு வேற வருவானாடா பாவம்” என்ற காளியின் கூற்று ஏற்புடையதாக இருந்தாலும் நல்லா வரையுறான்னு திமிர்டா அவனுக்கு என்ற என் பதிலில் மாற்றம் இருந்ததில்லை எனக்கு.

ஜங்ஷனுக்கு எதிரில் இருந்த பிரேமா விலாஸில் அல்வாவைத் தின்றுவிட்டு தங்கரீகலில் படம் பார்க்கலாமா என யோசித்துக்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில், கையெல்லாம் பெயிண்ட்டாக அங்கு எதிர்திசை சாலையில் நின்றுகொண்டிருந்த சந்தனமாரியை டேய் டேய் என உற்சாகம் மேலிடக் கத்தி அழைத்தவன் நான் தான். தினமும் பார்க்கும் நண்பன் என்றாலும் எங்காவது இப்படி எதிர்பாராத இடத்தில் பார்த்தால் ஏன் இவ்வளவு உற்சாகம் வருகிறது எனப்புரியவில்லை.

அவனும் அதே மலர்ச்சியுடன் கடக்கும் வாகனங்களுக்கு வழி விட்டு பொறுமையாக் கடந்து வந்தான்.

அவன் வருவதற்கு முன்னரே அவனுக்காக நூறுகிராம் ஆர்டர் செய்ந்திருந்தேன். வந்தவுடனே சுடச்சுட அவன் கையில் திணித்தேன், அல்வா தாங்கிய இலையை.

முகர்ந்து பார்த்து மூச்சை உள்ளிழுத்தான். பிறகு ஒரே இழுப்பில் முடித்து இலையைத் தூக்கி எறிந்தான்.

“மிக்சரு மாப்ள?” என்று சொல்லிக்கொண்டே காளி அவன் மிக்ஸரை நீட்ட வேண்டாம் என மறுத்துவிட்டான்.

“அல்வா டேஸ்ட் இருக்கட்டும்ய்யா வாய்க்குள்ள கொஞ்சம் ஜெண்டு காரம் சாப்டுவம்”

எங்களை நோக்கி வந்தது அந்தக்குரல். அல்வாவைப் போன்றே இருந்தது என்றும் சொல்லலாம்.

“காளி”

மூவரும் திரும்பிப்பார்த்தோம்.

காளியின் பெரியம்மா மகள், பொற்கிழி நின்றிருந்தாள் அவள் தோழிகளுடன்.

எனக்கு அவள் என்றால் பிடிக்கும், அந்தப் பெயர் மிகப்பிடிக்கும். பெயருக்காகப் பிடிக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். ஆடாமல் அசங்காமல் நின்று பொலியும் சுடர் போல் இருப்பாள். காளிக்கு அக்கா என்பதால் அக்காவாகிப்போய்த்தொலைந்துவிட்டாள் எனக்கும்.

காளி கொஞ்சம் சங்கடமாக நெளிந்தான். அவன் போவதற்குள் பொற்கிழி புடைசூழ எங்களுக்கு அருகில் வந்துவிட்டிருந்தார்கள்.

“ஏண்டா, இதான் புக்கு வாங்க வந்த லட்சணமா?” அவள் சொன்னதும் தோழிகள் ஒருமுறை குலுங்கி குனிந்து சிரித்தார்கள், சினிமாத் தோழிகள் போலவே, கண்றாவியாக.

மீசையைத் தீற்றலாக மைபோல வைத்திருந்த எங்களை விட்டு அவள் பார்வை, கருகருவென விளைந்து நின்ற சந்தனமாரியின் பக்கம் திரும்பியது.

“இது..” என இழுத்தாள்.

“நம்மூருதான், ஃப்ரெண்டு சந்தனமாரி”

“ஓ, ஊருக்குள்ள பாத்ததே இல்லயே உங்கள, நான் காளியோட அக்கா பொற்கிழி, இவங்க என் ஃப்ரெண்ட்ஸ்”

அவள் பொற்கிழி என்று சொன்னதும் சந்தனமாரியின் கைவிரல்கள் காற்றில் பாவி, பொற்கிழி என எழுதிக்காட்டின.

“பொற்கிழி, வரைஞ்சா கங்கா இருக்கும்”

மீண்டும் ஒருமுறை கையில் தூரிகை இருப்பதுபோல் பாவித்து மேலும் கீழுமகா கையை ஆட்டினான் சந்தனமாரி.

அவளுக்குப் புரியவைக்கும் எண்ணத்தில் என்றும் சொல்ல லாம் அல்லது அவளுடன் பேசவேண்டும் என்ற நோக்கமாகவும் கொள்ளலாம், விளக்கத் துவங்கினேன்.

“வரைவான்க்கா, செம்மயா, சுவத்துல, பலகைலலாம்” சொல்லிக்கொண்டே எதிர்திசையில் பாதியாக எழுதிவைத்திருந்த வாசகங்களை காட்டினேன். கருப்பு வண்ணங்களில் அடர்த்தியாக இரண்டு மூன்று கோடுகளாக பாதிப்பாதி எழுத்துகள் அழகாக தெரிந்தன.

“அட, செம”

என்றாள். அவளுடைய தலைமுடி, ஜிமிக்கி துப்பட்டா எல்லாமே அதனதன் இடத்தில் அதன்பாட்டில் இருந்தன. ஆனால் முறையே தலைமுடி, ஜிமிக்கி துப்பட்டா என ஒவ்வொன்றாக சரிசெய்தாள், சிரித்தாள். இவ்வளவும் அந்த அட செம என்ற இரண்டு சொற்களுக்கு இடைப்பட்ட நொடிகளில் செய்திருந்தாள்.

எதிரே, சந்தனமாரியின் தந்தை, “டேலேய்” என குரல் கொடுக்க, சரி என்பதுபோல் தலையாட்டித் திரும்பி ஓட எத்தனித்தவன் ஒருமுறை திரும்பி பொற்கிழியைப் பார்த்தான். நாங்கள் பார்த்தோம்.

அவ்வளவுதான் எனக்கும் காளிக்கும் தெரியும். அந்த சந்திப்புதான் நாங்கள் அறிந்து நடந்தது. அதன்பிறகு ஒருமுறை காளியைத் தேடி காளியின் வீட்டிற்கு சந்தனமாரி வந்தான் என்பதை காளியே என்னிடம் அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் நினைவுகூர்ந்தான். முதலிலேயே காளி இதை என்னிடம் சொல்லி இருந்தால் கணித்திருப்பேன்.

அந்த அல்வா சந்திப்பில் இருந்து இரண்டு மூன்று மாதங்கள் இருக்கும். திடீரென ஒருநாள் இதுபோலத்தான் காளி ஓடிவந்தான், கத்திக்கொண்டே.

“க்காலி, வேலையக்காட்டிட்டாண்டா”

காளி அன்று ஒரு சகோதரனாக மட்டுமே நடந்துகொண்டான். நட்பு, நாங்கள் பேசும் சினிமாக் காட்சிகள், விஸ்தாரம் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டான்.

“அன்னிக்கே தெரியும்டா எனக்கு..ச்சை”

போன்ற உணர்ச்சிமிகுதியில் கெட்டவார்த்தைகளைக் கொட்டியபிறகு அவன் சொன்னவை எனக்குமே அதிர்ச்சியாகத்தன இருந்தது.

மேலமாசிவீதியில் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக சந்தனமாரி எழுதியும் வரைந்தும் கொடுத்த பலகைதான் பேசுபொருள்.

அந்தப் பலகையில் இடம்பெற்றிருந்த ஓவியம், அச்சு அசல், பொற்கிழிதான். கோட்டோவியங்கள் போல் இல்லாமல் அச்சு அசலாக புகைப்படம் எடுத்தது போல் வரைந்து வைத்திருந்தான். ஊரில் இருந்து வேலைமெனக்கெட்டு இதைப் போய்ப் போய் வேறு பார்த்துவிட்டு வந்தார்கள். நான்கு ஐந்து நாட்களாக இந்த செய்திதான். பொற்கிழியின் அண்ணனும் மாமாவும் மதுரையின் ரெளடிகளில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை தங்கள் செல்வாக்கையும் சொந்தக்காரர்களின் ஆளுமைகளையும் இணைத்து, அந்த பலகையை அகற்றச் செய்ய எடுத்த முயற்சிகளே தனிக்கதையாக எழுதலாம். அவ்வளவு பெரிய விசயமாக அது நீண்டுகொண்டே போனது.

இந்தப் பிரச்சனை எதுவும் தெரியாமல், அந்த விளம்பரப்பலகை வேலையை முடித்த கையோடு சந்தனமாரி கேரளா போயிருந்தான். லோடுமேன்கள் ஏதோ பெரிய வேலை என அவனையும் அள்ளிப்போட்டு போயிருந்தார்கள்.

என்ன ஏதென்று கேட்காமலே சந்தனமாரியின் தந்தையை அடித்திருந்தார்கள் பொறிகிழியின் அண்ணன் வகையறாக்கள். இதில் மிக வருத்தமான விசயம் என்னவெனில் காளியும் அன்று அவன் பங்காளிகளோடு போய் நின்றதுதான்.

ஊருக்கு வெளியே இருந்த லோடுமேன் குடிலிலேயே சுற்றி சுற்றி வந்தார்கள், ஊர்க்காரர்கள்.

சந்தனமாரி வந்து இறங்கும்பொழுதே ஜல்லிக்கட்டில் பிடிமாடாகிப்போனபிறகும் பத்து பேர் சேர்ந்து அமுக்கி படுக்க வைப்பது போல் பாய்ந்து வீழ்த்தினார்கள்.

அங்கு நிற்கவே பிடிக்கவில்லை எனக்கு. ஆனால் எதுவும் செய்யமுடியாமல் காளியைத் தேடினேன்..

என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் சந்தனமாரியை இருபதுக்கும் மேற்ப்பட்டவர்கள் அடித்ததில் முகமெல்லாம் இரத்தம். அவன் கைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற தேவையற்ற பதற்றம் எனக்கு இருந்தது. கொடுமை என்னவெனில் காளியும் அந்தக் கூட்ட த்தோடு சேர்ந்து அடித்துக்கொண்டிருந்தது தான்.

லோடுமேன் ஆறுமுகம் மற்றும் மணி இருவரும் சேர்ந்து அத்தனைப் பெரிய கூட்டத்தை பிரித்து சந்தனமாரியை மீட்டார்கள்.

ஆறுமுகம் மிகவும் கோவத்துடன் ஆனால் தெளிவாக பேசினார் “டேலேய், பொட்டப்பிள்ள வெவகாரம்னு தான் பதிலுக்கு அடிக்காம இருக்கம். இப்பிடியே விட்ருங்க, இனிமேல்ட்டு வரமாட்டான். பதிலுக்கு அடிக்க ஆரம்பிச்சா அப்புறம் ஊருக்குள்ள வேறமாதிரி ஆகிப்போகும் பஞ்சாயத்துன்னு பாக்குறேன்”

அப்படி இப்படி என ஆளாளுக்குப் பேசி அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதன்பிறகு இரண்டு நாட்களாக சந்தனமாரியை எங்கு பார்த்தாலும் வம்பிழுத்து அடித்துக் கொண்டிருந்தது காளியின் பங்காளிக்கூட்டம்.

சந்தனமாரியின் அப்பா கெஞ்சிக்கேட்டுக்கொண்டதற்காக அவன் ஊரைவிட்டுக் கிளம்பினான். காளி வரவில்லை என்று சொல்லிவிட்டான். நான் தான் போய் வழி அனுப்பிவைத்தேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சேர்ந்து இருந்தோம், ஆனாலும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை இருவரும். கடைசியாக இனி வரமாட்டேன் என்றுமட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஜங்ஷனுக்கு வெளியே காளி வந்து நின்றிருந்தான்.

“போய்ட்டானாடா”

“மாப்ள, நீ பண்ணது தப்புடா, என்னா இருந்தாலும் ஒன்னுமண்ணாத்தனடா சுத்துனம், இத்தனைக்கும் என்னையவிட ஒங்கிட்டத்தான் ஒட்டுவான் ஓவரா”

காளி பதில் சொல்லவில்லை.

நடந்த கூத்தில், பொற்கிழியை நாடு கடத்தி விட்டார்கள். காளியின் அப்பா துபாயில் இருந்தார் என்பதால் விடுமுறைக்கு வந்தவர், அங்கு இருந்து படிப்பது தொடர்பாக அனைத்து திட்டங்களையும் தீட்டி செம்மையாக செய்திருந்தார்கள்.

என்னுடைய நகைச்சுவை உணர்வைக் காட்டும் பொருட்டு அவ்வப்பொழுது “துபாய்லதான் இருக்கா இல்ல மோகென் தங்கச்சி மாதிரி வவுத்துவலில செத்துருச்சுன்னு முடிச்சிவிட்டீங்களாடா” எனக் கேட்பேன். “வாயக்கழுவுடா யப்பா” என்பான்.

                           ந்த நான்கைந்து ஆண்டுகளில் ஆளே மாறி இருந்தான் சந்தனமாரி என்றெல்லாம் சொல்லிவிட முடியாதபடி அப்படியே இருந்தான். அதே சிரித்த முகம். இன்னமும் கருத்திருந்தான். அந்தக் கருமை கோயில் சிலையின் மெருகைப்போல் இருந்தது. என் கண்கள் அவன் விரல்களைத்தான் முதலில் தேடிப்பார்த்தன. அதே தூரிகைவிரல்கள்.

“என்னா மாரி”

“வாப்பா வாப்பா” என்றான். அதே குரல்.

 “படம்லாம் பாக்குறீங்கல்லடா. அத மொதோ வரைஞ்சிருவோம். அப்பிடியே அச்சலக்காவா வரைஞ்சு வரைஞ்சு வச்சு அப்புறமேட்டுக்குத்தான் அதே மாதிரி செட் போட்டு எடுப்பாங்க “

சினிமாவில் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்டில் ஸ்டோரி போர்ட் வரைவதில் நிபுணன் ஆகிவிட்டான் என்பதும் கிட்டத்தட்ட எல்லா வெற்றிப்படங்களிலும் ஈடுபட்டிருக்கான் என்றும் அவனோடு பேசியதில்  இருந்து தெரிந்து கொண்டோம். மகிழ்ச்சியும் மலர்ச்சியுமாக இருந்தது.

நான் தான் கேட்டேன்.

“மாரி, ஜாலியா ஃப்ரெண்ட்ஸா இருந்தம்ல, ஒத்த வார்த்த சொல்லிருக்கலாம்ல, அட காளிட்டயாச்சும்”

சந்தனமாரி சிரித்தான். வான் நோக்கி நிமிர்ந்து சிரித்தான்.

“என்னத்த சொல்லிருக்கனும்டா?”

“இல்..ல,,அன்னிக்கு அல்வா கடைல”

“அம்புட்டுத்தான். அன்னிக்கோட அதுக்கு அப்பறம் ஒருதடவ கூட அந்தப்பிள்ளைய பாத்ததே இல்லடா நானு. ஆனா அந்த மொகம் அப்பிடியே பச்சக்குனு ஒக்காந்துருச்சு போல. நானா வரையலடா தானா வரைஞ்சுக்கிச்சு”

எங்களுக்கு திக் என்று ஆனது.

காளிக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது போல. அவன் குரலில் ஒரு சிறிய உற்சாகம்

“என்னடா சொல்ற, அப்ப நீங்க ரெண்டு பேரும்..”

இல்லவே இல்லை என்பதுபோல் தலையை ஆட்டினான் சந்தனமாரி. ஆட்டும்பொழுது எங்களை அற்ப புழுபோல் பார்த்தன அவன் விழிகள்.

“அடப்பாவிகளா, என்னா என்னா கதகட்டிட்டாயங்ற மாரி, எந்நேரமும் கோரிப்பாளையத்துல நீ கெடந்த தாவும் காந்தி மியூசியத்துல ஒங்க ரெண்டுபேத்த பாத்ததாவும் அங்குட்டு திருப்பறங்குன்றத்துக்கு தூக்கிட்டு போனேன்னும்..ச்சை..”

“அதுனாலதான நீயும் அடிச்சிஅன்னிக்கு, பாத்தேன் காளி”

சந்தனமாரி கம்மிய குரலில் சொல்லிவிட்டு எங்களை ஏறெடுத்துப் பார்த்தான். குனிந்து கொண்டோம்.

“ஊராடா இதெல்லாம், சொந்தக்காரங்களோட ஒக்கார தெருவுக்குல்லயே ஒரு எடம், அந்தப் பக்கம் பயலுகன்னா கம்மா இங்குட்டுன்னா ஊருக்கு வெளில.. ஆனா மொத்தமா நாம எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்னு வேற”

மிகத் தெளிவாகப் புரிந்தது. மிகக் குழப்பமாக இருந்தது.

 “அத விடு, இதப்பாரு, அடுத்து இந்தப்படம் தான் இந்தியாவயே திரும்பிப் பாக்க வைக்கப்போகுது., வேற மாதிரி எடுத்துக்கிட்டு இருக்காய்ங்க”

என்று ஒரு பெரிய நோட்டைக் காட்டினான். அதுதான் ஸ்டோரி போர்ட் என்று காளியிடம் சொன்னேன்.

படக் காட்சிகள், காட்சியில் இடம்பெறும் பொருட்கள், கோணம் என வரையப்பட்டிருந்தன.

நாயகனின் முகம் தெரியும்படி இருந்த அனைத்துப் படங்களிலும் காளியின் முகத்தைத்தான் வரைந்திருந்தான் சந்தனமாரி.

 *

ஆனந்த விகடன்

அக்டோபர்’22

*

ஓவியங்கள் : பாலகிருஷ்ணன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி