*2008ல் எழுதப்பட்ட குறுநாவல்
அத்தியாயம் 1
காற்றைக்
கிழித்துக்கொண்டு பறந்தது மாறவர்மனின் குதிரை.அதன் குளம்படி எழுப்பிய சத்தத்தைக்
கேட்டு சாலையோர சிற்றுயிரிகள் புதருக்குள் பதுங்கிக்கொண்டன..மாறவர்மனின் கரிய
சுருண்ட கேசம் பின்னோக்கி பரந்த தோள்களைத்தழுவி பறந்த விதம் குதிரையின்
வேகத்திற்கு கட்டியம் கூறியது. இருள்சூழ்ந்த அந்த பாதையில் சீறிக்கொண்டிருக்கும் குதிரையின்
மீது அமர்ந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருக்கும் மாறவர்மனின் நினைவுகளில் ஒருகணம்
தன் தந்தையின் முகம் மின்னலென வந்து மறைந்தது..
மாறவர்மன்.. மதுரநாட்டின்
இளவரசன்.. தினவெடுத்த தோள்கள். அதில் அலையலையாய் சுருண்டகேசம்.வேல்களை ஒத்த
விழிகள்.. ராஜவம்சத்து நிறம்.. புறமுதுகிட்டதில்லை என்பதற்கான வீரத்தழும்புகள்
தாங்கிய விரிந்த மார்பு. அவன் வீதிஉலா சென்றால் மண் நோக்கும் பெண்டிர் எல்லாம்
அவன் கண் நோக்கியே செல்வர்.
நிலவொளியின்
மங்கலான வெளிச்சத்தில் சென்று கொண்டிருந்த குதிரையின் வேகத்தை சற்று குறைத்து
சுற்றும் முற்றும் பார்த்தான்.. கிர்ர்ர் என்ற இரவுபூச்சிகளின் சத்தமும் கீச் கீச்
என்று பறவைகளின் அகவலும் தாண்டி அங்கே நிசப்தம் நிலவியது.. குதிரையை ஒரு மரத்தின்
அருகே நிறுத்திவிட்டு ஒரே தாவலில் அந்த மரத்தின் பின்பக்கம் சென்றான்.. முனையில்
கூராகவளைந்த தங்க பூன் வைத்த உடைவாளை இடது கையால் தொட்டுக்கொண்டே மண்டியிருந்த
புதரின் ஒருபக்கத்தை தள்ளினான்.. அங்கே… அந்த மந்தமான நிலவொளியிலும்
பட்டுத்துணியினாலான மூட்டை இருப்பதை பார்க்க முடிந்தது.. அதை வெளியே எடுத்து
அதிலிருந்த ஓலைச்சுவடியின் வரிகளில் கண்களைப் பதியவிட்டான்..
“இளவரசே.. திட்டப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது..
இன்னும் இரண்டு அமாவாசைகளில் திட்டம் முழுமைபெறும்.. அதுவரை பொறுமை காக்க. வாழ்க
நின்கொடை.. வாழ்க மதுரநாடு”
மறுபடியும்
ஒருமுறை படித்துவிட்டு பின் அதை உடைவாளுக்கு அருகில் சொருகிக்கொண்டான்.. தன்னை
நோக்கி தலையை ஆட்டிக்கொண்டிருந்த குதிரையின் முகத்தை பாசமாய் தடவிக்கொண்டே
நினைவுகளை பின் நோக்கி படர விட்டான்..
அரண்மனை..
மன்னரின் ஆலோசனைக் கூடம்.. கவலையான முகத்தில் மந்திரியுடன் தளபதியும்
அமர்ந்திருந்தார். மன்னர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.
பக்கத்தில் மாறவர்மன். மெளனத்தை தளபதி உடைத்தார்.
“அரசே.. இன்னும் ஏன் யோசனை.. ஆணை இடுங்கள். வீரர்களின்
வாள்கள் விருந்திற்கு காத்திருக்கின்றன.இத்தனை நாள் நட்பு பாரட்டிய அண்டை
நாட்டரசன் வீரசேனன் மதிகெட்டு போர்முரசு கொட்டியிருக்கிறான். சாவை வா வா
என்றழைக்கும் அவனுக்கு அதை வழங்கவிடுங்கள் அரசே”..
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?”
“அரசே.. இத்தனை நாட்கள் நட்புபாரட்டியவன், நம் பலம் நன்கறிந்தவன், இருந்தும் நம்மை
சீண்டுகிறான் என்றால் இதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறதரசே”..
“நானும் அப்படித்தான் மந்திரியாரே நினைக்கிறேன்.திடீரென்று
இப்படி ஒரு ஓலை.இதை இப்படியே விடவும் முடியாது.”
“அப்பா.. இந்த ஓலை அவனுக்கு உலை.. நான் தலைமையேற்று
செல்கிறேன்.. ஆணையிடுங்கள்.. களத்தில் விளையாடி வெகு நாட்களாகின்றன..”
“இளவரசே.. சரியாகச் சொன்னீர்கள் “
என்று தளபதி கூறிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு ஈட்டி தாங்கிய
சேவகன் வாயிலின் உத்தரவிற்கு காத்திருந்துவிட்டு கண்ணசைவு கிடைத்ததும் உள்ளே
வந்தான்.
“அரசே.. தங்களைக் காண அண்டை நாட்டு வீரர்கள் இருவர்
வந்துள்ளார்கள்”
“வரச்சொல்..உடைவாட்களை பறிமுதல் செய்துவிட்டு அனுப்பு”
“உத்தரவு அரசே!”
அவன் பின்
நோக்கியே சற்று தூரம் சென்று பின் இருவரோடு வந்தான்.
முறுக்கிய
மீசையில் தெரிந்தது அவர்களின் முரட்டு வீரம். தினவெடுத்த தோள்களில் எதற்கும்
தயார் என்ற எண்ணம் தெறித்தது.
அவர்கள் வந்து
கொண்டிருக்கும் பொழுதே தளபதி இளவரசிடம் இருந்த உடைவாளை உருவி அவர்களை
நோக்கி சுழட்டிக் காட்டினான்.. “சாபாஷ் தளபதியாரே”.. என்ற மாறவர்மனையும்
அவன் அருகில் இருந்த மன்னரையும் பார்த்து தளபதி சிரித்தான்.. வந்த வீரர்கள்
சிரித்தார்கள்.. மந்திரி சிரித்தார்.. மறுபடியும் தளபதி சத்தமாக
சிரித்தான்..
“ஹா ஹா..மன்னா.. இவர்கள் என் ஆணைக்கு இணங்கும் வீரர்கள்..
இன்று முதல் இது என் நாடு.. மந்திரிதான் ராஜ குரு.. எப்படி மந்திரியாரே..”
என்றவாரே கைகளைத்தட்டினான்.. அவன் உத்தரவிற்கு காத்திருந்த வீரர்களிடம்”இழுத்துச்
செல்லுங்கள்” நான் சொல்லும் வரை பாதாளச்சிறையில் அடையுங்கள் இவர்களை..
என்று முழங்கி விட்டு.. “மந்திரியாரே வாருங்கள் நிறைய வேலை இருக்கிறது.”.
என்று சிம்மாசனம் நோக்கி நடந்தான்
*
அத்தியாயம் 2
தன்
நினைவிகளினின்றும், நித்திரையினின்றும் கலைந்தான் மாறவர்மன். பொழுது
பொலபொலவென விடிந்துகொண்டிருந்தது..
கீழ்வானம் சூரியனை பிரசவித்துக்கொண்டிருந்தால் சிதறிய
ரத்தம் போல் செவ்வானமாய் சிவந்திருந்தது..
“மாறா.. விழி, எழு.. துரோகிகளை
தூக்கிலிடும்வரை உணர்வுகளுக்கில்லை உறக்கம்”.. என்ற உள்மன உந்துதலில்..
எழுந்தான்.. குதிரை எழுந்தது..அமர்ந்தான்..பறந்தது... குளம்படி சத்தம்
காற்றைக்கிழிக்கத் தொடங்கியது..
இளம் காலைச்
சூரியனின் இதமான சூட்டில் சாலையின் இருமருங்கிலும் இருந்த பூக்களிள் பனித்துளிகள்
முத்துக்கள் போல் தெரிந்தது.. பச்சைப்பசேலென இருந்த வயல்வெளிகளினின்று வந்த வாசம்
மாறவர்மனின் மூக்கைத்துளைத்தது. கையில் கலப்பையுடனும் வாய் ஓயாத பேச்சுடனும்
குடியானவர்கள் சிறு சிறு குழுக்களாக சென்றுகொண்டிருந்தார்கள்.
மாறவர்மனின் குதிரைக்கு சற்று முன்னால்… நல்ல பலாமர
கட்டையில் நன்கு பதப்படுத்திய பரங்கிக்காயை கொண்டு செய்த வீணையையொத்த
பின்னழகில், கரு நாகமும் சாரையும் பின்னிக்கொண்டு கலவியில்
ஆடுவதைப்போன்ற பின்னல்சடை சரசரக்க கையில் குவளையுடன்
சென்றுகொண்டிருந்தாள்.
“மாறா பேசு” என்ற அவனின் உள்மன உந்துதலில் தன்னிச்சையாக
அவன் வாய் “சற்று நில்லுங்கள்” என அரற்றியது.குரல் கேட்ட திசை
நோக்கி திரும்பினாள் அந்த அணங்கு… நிற்க.. இங்கே அவளின் அழகை வர்ணிக்கவில்லை
என்றால் ஜென்மசாபல்யம் கிடைக்காது..
(ஓவியம் : கித்தான் @vidhaanam )
மூன்றாம் பிறையை
திருப்பி வைத்தது போன்ற நுதல். அதனின்று காதுமடல் வரை புள்ளியென இருந்த ரோமம்.
சிறிய தேங்காயை உடைத்து அதன் இருபகுதியிலும் பனிபடர்ந்த கருந்திராட்சைகள்
இரண்டை வைத்தால் எப்படி அந்த இளவெண் நிற தேங்காயில் திராட்சைகள் இருந்த இடத்திலேயே
உருண்டு நிற்குமோ அப்படி இருந்தது அவளின் விழிகள். சீரான சாலையின் எதிர்பாரத
இறக்கத்துடன் இருந்தது போன்ற செதுக்கிய நாசி, அதன் கீழ், அதரம்.. அது இதர பெண்களின் அதரம் போன்றல்லாமல் மதுரமான
அதரமாக இருந்தது.அதில் தொக்கி நிற்கும் புன்னகை அதரத்தின் இதழ்களில் கசிந்தது.
சங்கு கழுத்திற்கு
கீழ் கச்சையில் கட்டி சந்தனத்தை கடத்துகிறாளோ என்று ஐயப்பட வைக்கும் தனங்கள்..அதன்
பாரம் தாங்குமோ பாவம் என்ற வினவ வைக்கும் இடை.. அதிலிருந்த மேகலை அவள் வனப்பைக்
கூட்டியது.
“எதற்கு அழைத்தீர்கள்?”
“மிகுந்த தாகமாக இருக்கிறது.. சற்று தாகசாந்தி செய்துகொள்ள
உதவுங்கள்”
“ஏன், அருகில் ஓடும் ஆற்றின் சலசலப்பு கேட்டவில்லையா?”
“உன் கால்கொலுசொலியின் ஜல் ஜல் தவிர வேறொன்றும்
செவிக்கெட்டவில்லை பெண்ணே..”
“ஏதேது.. உடைவாளையும் முறுக்கு மீசையையும் பார்த்தால் வீரர்
போலத்தெரிகிறது.. ஆனால் கவிஞர் போன்று பேசுகிறீர்களே.. வாய்ச்சொல்லில் வீரரா?”
“அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். என் தாகத்திற்கு இன்னும் வழி
சொல்ல வில்லையே?”
“ம். இப்படி வாருங்கள்.. “
அந்த கொடியிடையில் இருக்கும் குவளை சற்று
சாய்ந்தது… மாறவர்மனின் கிரீடம் சூட்டப்பட வேண்டிய சிரம் அவள் அசைவிற்கொப்ப தாழ்ந்தது… சாம்ராஜ்யங்கள் தாழ்வதும் வேல்விழி அசைகளால்தானே என்ற எண்ணம் அவன் மனதிற்குள் ஊடுபாவியது.
“தாகம் தீர்ந்ததா கவிஞரே..?”
“ம்ம்.. தாகம் தீர்ந்தது அழகே! நான் சற்று அவசர காரியமாக மைய மண்டபம்
போய்க்கொண்டிருக்கிறேன்..”
அதுவரை
மலர்ந்திருந்த அவள் முகம் “மைய மண்டபம்” என்ற வார்த்தையைக் கேட்டவுடன்
இருண்டது..
“மைய மண்டபமா? அங்கு ஏன்
செல்கிறீர்கள்? பாழடைந்த அந்த கோட்டைக்குள் உங்களுக்கு என்ன வேலை? நீங்கள் யார்?”
“நான் உன்னை மறுபடியும் சந்திக்கவேண்டும்.. அப்பொழுது அத்தனை
வினாக்களுக்கும் விடையளிக்கிறேன்.இப்பொழுது விடைபெறுகிறேன்..”
அவள் கண்களில்
ஏக்கமும் ஏமாற்றத்தையும் ஒரு கணம் தீர்க்கமாய் பார்த்த மாறவர்மன் “மீண்டும்
வருகின்ற பெளர்ணமி அன்று காலை இங்கே உனக்காக வருவேன் காத்திரு பெண்ணே”
என்றான்.
அவள் இரண்டடி
வைப்பதற்குள் அவன் குதிரை புயலாய் பறந்து மறைந்தது.
அத்தியாயம்-3
மைய மண்டபம்..
முட்புதர்களின் நடுவே இருந்தது. காய்ந்த கருவேல மரங்களும் மஞ்ச நெத்தி
மரங்களின் அடர்த்தியும் அந்த பகல் பொழுதையும் மீறி இருள் கவ்வச்
செய்திருந்தது. குதிரையை இருத்திவிட்டு சற்று வளைந்து இருந்த மரக்கிளையை பலமாக
அசைத்தான். அந்த சமிக்ஞைக்காக காத்திருந்தது போலவே புதரினின்று மூன்று உருவம்
வெளியே வந்தன. நல்ல வாளிப்பான அந்த மூன்று இளைஞர்களும் மாறவர்மனின்
உற்ற தோழர்கள்.
“வாருங்கள் இளவரசே.. ஏன் தாமதம்?”
“அதை பிறகு சொல்கிறேன்.. உள்ளே சென்று ஆலோசிப்பது உத்தமம்.”
“ஆம். வாருங்கள் “என்ற இமயன் தன் கால்களுக்கு
கீழே வைத்திருந்த கருவேல மரக்கட்டை ஒன்றில் துணியைச்சுற்றி தீப்பந்தம் தயாரித்தான்.அதன்
வெளிச்சம் இருளை அகற்றி அவர்களுக்கு வழி காட்டியது.குகை போன்ற குறுகலான
பாதையின் ஊடே தீப்பந்த ஒளியில் சருகுகள் சரசரக்க அந்த எட்டு கால்களும்
முன்னேறின.அவர்களின் கண்களின் வெறி தீப்பந்தத்தை விட அதிகமாய் கொழுந்து
விட்டு கனன்றுகொண்டிருந்தது.
***
அதேவேளை– அரண்மணையில்
“தளபதியாரே..”
“என்ன மந்திரியாரே.. நான் இப்பொழுது மன்னன் என்பதை உங்கள்
மதிக்குள் ஏற்றிக்கொள்ளுங்கள்.இன்னொருமுறை தளபதி என்று விளித்தால் தலை தப்பாது..”
“மன்னியுங்கள் மன்னா.. மாறவர்மனின் இருப்பிடம் பற்றி
ஒரு தகவலும் நம் ஒற்றர்களுக்கு எட்டவில்லை..”
“இத்தனை வீரர்களிலிருந்தும் அவனைத்த தப்ப விட்டது எவ்வளவு
பெரிய தவறு என்பது தெரிகிறதா..அவனின் வீரம் நம் மொத்த திட்டத்தையும்
தகர்த்துவிடும். ஒருமுறை அவனோடு வேட்டைக்கு சென்ற சமயத்தில் எங்கள் மீது பாய்ந்த
வந்த காட்டு எருதை ஒரே வீச்சில் அதன் நெற்றியை பிளந்தவன்.. பயம் என்பதை சற்றும்
அறியாத வீரன்.அவன் நம் கைகளுக்கு கிடைக்கும் வரை நெருப்புக் கோட்டைக்குள்
அமர்ந்திருப்பது போன்றதுதான் நம் நிலை. “
“மன்னர் மன்னா.. ஒரு நற்செய்தி”… என்று கூறிக்கொண்டே
ஒற்றர் தலைவன் உள்ளே நுழைந்தான்…
“வாருங்கள் மதிவதணரே.. முதலில் செய்தியை கூறுங்கள்.. அது
நற்செய்திதானா என்பதை நான் கூறுகிறேன்..”
“மன்னா,..நம் அரண்மனைக்கு
அருகில் ஒரு இளைஞன் ஐயப்படும்படியான தோற்றத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான்.
அவனை விசாரிக்கும் பொழுது கவனித்ததில் அவன் கையிலும் மாறவர்மனின் கையில் இருப்பது
போன்றே புலியின் சின்னம் பதித்துள்ளான் மன்னா..”
“நற்செய்திதான் மதிவதணரே.. இழுத்துவாருங்கள் அவனை..”
“கைகள் பின்னுக்கு கட்டப்பட்ட நிலையில் திமிரிய மார்புடன்
ஒரு இளைஞன் அங்கு அழைத்து வரப்பட்டான்.”
சிம்மாசனத்தில்
அமர்ந்திருந்த,மன்னராகிவிட்ட தளபதியின் இருபக்கமும் அமைச்சர்களும்,தளபதிகளும் அமர்ந்திருந்தனர்.. நடுவில் அந்த இளைஞன்..
“சொல், எங்கிருக்கிறான்
மாறவர்மன்.. உன் பெயர் என்ன?”
“இளஞ்செழியன் எனது பெயர். மாறவர்மனைத்தேடியே இங்கு
வந்தேன்”
“பொய்யுரைத்தால் பொல்லாதவனாகிவிடுவேன் இளஞ்செழியா..
எங்கிருக்கிறான் அந்த துரோகி.. சொல்..”
“ஹா ஹா ஹா.. துரோகி.. மாறவர்மன் துரோகி.. நன்றாக
இருக்கிறது.. துரோகத்தின் உறைவிடம் துரோகத்தைப்பற்றி பேசுகிறது.. மாறவர்மன்
துரோகி.. ஹா ஹா..”
சிம்மாசனத்தில்
இருந்து எழுந்து வந்து…
“ம்ம்..உன் வார்த்தைகளைப்பார்த்தால் நீ மாறவர்மனின்
வலதுகரமாக செயல்படுகிறாய் என்பது தெரிகிறது.. இன்று என் சிறுத்தைக்குட்டி கொஞ்சி
விளையாட உன் தலைதான் என்று நினைக்கிறேன்..”
பேச்சினூடே
இளஞ்செழியனின் இடப்பக்கம் அமர்திருந்த ஒரு முதிய அமைச்சரை கவனித்தான் தளபதிக்கு
ஐயமேற்படாதவாறு..
அந்த அமைச்சர்..
விரல்களை மடக்குவதுபோல் பாவனை செய்து பின் தன் சிரத்தை தாழ்த்திக்காட்டினார்..
அந்த சங்கேத
மொழியை புரிந்துகொண்டு ஆமோதிப்பவனாய் சமிக்ஞை செய்த இளஞ்செழியன்..
“மன்னா.. நம்புங்கள்.. நான் மாறவர்மனைத்தேடித்தான் வந்தேன்..
நீங்கள் செய்த துரோகத்தை கேள்விப்பட்டு அப்படி பேசிவிட்டேன்.. மன்னித்தருள
வேண்டும்..மாறவர்மன் இங்கில்லை என்றால் எங்கிருப்பான் என்று என்னால் யூகிக்க
முடியும்.. ஆனால் உறுதியாக கூறமுடியாது மன்னர்மன்னா..”
என்ன
இளஞ்செழியா.. என் வாளின் நெருக்கத்தில் பயந்துவிட்டாயா..ஹா ஹா.. எப்படியோ..
மாறவர்மன் எங்கு இருப்பான் என்று தெரிந்தால் போதும்.. பிறகு யோசிக்கிறேன் உன்னை மன்னிப்பதா
இல்லை மரணிப்பதா என்று.. யாரங்கே..”
கட்டளைக்கு
காத்திருந்த ஈட்டியேந்திய இரு வீரர்கள் அருகில் வந்தார்கள்..
“மதிவாணரே.. இவனை அழைத்துச்செல்லுங்கள்.. இவன் கூறும்
தகவல்படி வீரர்களை அவ்விடத்திற்கு அனுப்பி மாறவர்மனை சிறைபிடியுங்கள்..”
“உத்தரவு மன்னா..”
**
அதேவேளையில்…மையமண்டபம்
…
என்ன இளவரசே..
திட்டம் குறித்த உங்கள் கருத்து..
“வேலவா.. நல்ல திட்டம்தான்.. செயலாற்றும்பொழுதுதான் மிகுந்த
கவனம் தேவை.. நீண்ட நேரம் இங்கிருப்பது ஆபத்து.. வரும் பெளர்ணமி அந்தியில் இங்கே
வந்துவிடுங்கள்.. “
“அப்படியே ஆகட்டும் இளவரசே.. “
அவர்கள் வெளியே வந்துகொண்டிருக்கும் பொழுது..
மைய மண்டபத்தின்
வாயிலில் எழுந்த சத்தத்தைக் கேட்ட மாறவர்மன் மற்றவர்களை கை அமர்த்தி
நிதானிக்கச்சொன்னான்.. கவனமாக சத்தம் வந்த திசை நோக்கி காதுகளை தீட்டிக்கேட்டதில்
அங்கிருந்த ஏதோ ஒரு விலங்கின் சத்தம் அது என்பதை உறுதிபடித்திக்கொண்டு
மண்டபத்தினின்றும் வெளி வந்தார்கள்…
“இளவரசே.. ஜெயம் நமதே”.. என்ற வீரணனின் தோளை
அணைத்து விடைபெற்ற மாறவர்மன் புரவியேறி புழுதி கிளப்பி
அதில் மறைந்து போனான்
அத்தியாயம் 4
மதுரநாடு… தென் இந்தியாவின் நடுவில் மகுடம் சூட்டியது போன்ற
மாதம் மும்மாரி பெய்யும் செழிந்த தேசம். எறும்புகள் எல்லாம் எருதுகள் போலவும்
எருதுகள் எல்லாம் யானைகள் போலவும் வலம்வரும் வளம்மிக்க நாடு.குடிமக்களின் மனம்
அதைவிட பெரிதாய் திகழும் திவ்ய தேசம்.. காரணம்..அரசன் வீரவர்ம குலசேகர
தொண்டைமான்.மாறவர்மனின் தந்தை.. வீரத்திருமகன்..கிரீடம் தரித்தவன்.. கர்வம்
தவிர்த்தவன்.தான் பெற்ற சிங்க குட்டி விளையாட சிறுத்தை குட்டி வளர்த்தவன்.
அப்படிப்பட்ட
அரசனைத்தான் அண்டைநாட்டு கூட்டுச்சதியுடன் சிறைபிடித்தான் தளபதி
வீரவிக்ரமசேனன்.மன்னரின் வலதுகரமாக செயல்பட்டவன்.. சிறந்த போர்வீரன்.மதிநுட்பம்
வாய்க்கப்பெற்றவன்.அந்த மதிநுட்பமே அவனை தவறான வழியில் இட்டுச்சென்றது
என்பவர்களும் உண்டு. அவனின் இத்திட்டத்திற்கு உதவிய செங்கோடவடுவூரான் என்ற
அமைச்சர் அரசரின் நெருக்கமான அமைச்சர்களில் ஒருவன்.
இவர்களின்
துரோகத்தால் சிறைபிடிக்கப்படும் பொழுது
தப்பி வந்த இளவரசன் தான் மாறவர்மன்,இப்பொழுது புழுதி
பறக்க குதிரையேறி பறந்தவன்.
**
அரண்மனை..
முதலைகள்
மிதக்கும் அகழிகையைத்தாண்டி ஓங்கி எழுந்த மதில் சுவரின் உயரம் உக்கிரமாய்
தோற்றமளிக்கும். கதவுகளின் சிற்பங்கள் உயிர்த்து பேசும்.அதனடுத்து இருக்கும்
மணிமண்டபத்தின் கூரையில் பதித்து இருந்த வைரங்களின் மினுமினுப்பு கண்களைப்
பறிக்கும். தூண்களின் வழவழப்பு யானைத்தந்தங்களை ஒத்து இருக்கும்.மூவர் சேர்ந்து
அணைத்தால் மட்டுமே கரம் தொடவல்ல தூண்களின் நடுவில், வைரகூரையின் கீழ்
ஆசனம்.. அதில் பதித்திருந்த முத்துக்களும் பவளங்களும் மாணிக்க கற்களும் “நான்
அரசமரும் ஆசனம்.. சிம்மாசனம்” என்று கட்டியம் கூறுவது போலிருக்கும்.
நான்காவது தூணின்
நடுவில் இருக்கும் புலியின் சின்னம் பாயும் வண்ணம் பொறிக்கப்பட்டிருக்கும்.. மற்ற
தூண்களில் அந்த புலி அமர்திருக்கும்.. பாயும் புலி பொறித்த தூணின் அடித்தளம்தான்
அவசர காலத்தில் அரசர் பயன்படுத்தும் சுரங்க வழிப்பாதை அமைக்கபெற்ற தூண்.. இது
அரசர் மற்றும் வெகு சில அரண்மனை சிப்பந்திகளுக்கு மட்டுமே தெரிந்த வழி..
இந்த அரண்மனைதான்
இன்று தளபதி வீர விக்ரமனின் கைகளில்.
“யாரங்கே.. அழைத்து வாருங்கள் இளஞ்செழியனை..” என்ற
விக்ரமனின் உத்தரவு முடியும் முன்னரே இளனஞ்செழியன் அழைத்து வரப்பட்டான்..
“செழியா.. நன்றாக யோசித்துச் சொல்.. மாறவர்மன் எங்கு
இருப்பான்.. உன்வார்த்தைகளை நம்பி உன்னை நான் இன்னும் ஒன்றும் செய்யாமல்
இருக்கிறேன்.. சொல்..”
“மன்னா.. நம் நாட்டில் வழுவூர் என்ற கிராமம் உள்ளது..
தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. அங்குதான் நாங்கள் சந்திப்போம்..”
“அப்படியா.. மதிவாணரே.. அப்படி ஒரு கிராமம் உள்ளதா?? எங்கிருக்கிறது??”
ஒற்றர் தலைவன்
மதிவாணன் சற்று யோசித்து..”ஆம் மன்னா.. தென்கிழக்கு திசையில் முப்பது கல்
தொலைவில் உள்ளது மன்னா..”
“மன்னா.. ஒரு யோசனை.. தவறாக நினைக்கவில்லை என்றால்
சொல்கிறேன்..”
“சொல் இளஞ்செழியா..”
“வீரர்களை அங்கு அனுப்புதை விட தாங்களும் அங்கு செல்வது
ஒன்றே மாறவர்மனை பிடிக்க தகுந்த வழி.. மாறவர்மனின் வீரமும் விவேகமும் தாங்கள்
அறிந்ததே..அதை முறியடிக்கும் வீரம் உங்களைத்தவிர வேறு ஒருவருக்கு இருப்பதாய்
எண்ணுவதே சிறுபிள்ளைத்தனம்..”
“ம்ம்.. அப்படியா சொல்கிறாய்.. அதுவும் சரியான
வாதம்தான்..எப்பொழுது புறப்பாடு என்று சொல்கிறேன்.. தயாராய் இருங்கள்..செழியா
நீயும் தான்..”
“நானன்றியா.. உத்தரவு மன்னா..” என்று கூறிய செழியனின்
மனம் திட்டத்தின் முதல் படி வெற்றியில் முடிந்த மகிழ்ச்சியில் துள்ளியது..
முற்றத்தின் ஊடே தெரிந்த நிலாவும் சிரித்தது..
கிட்டத்திட்ட
முழுமையடைந்த நிலவை பார்த்துக்கொண்டிருந்த மாறவர்மனுக்கு திடுக்கென்று நினைவு
வந்தது. மறுநாள் பெளர்ணமி.. காலையில் அந்த அழகியை பார்க்கச் செல்ல
வேண்டும்.”அவள் பெயரைக் கூட கேட்கவில்லையே.. அவளா வரப் போகிறாள்” என்ற
ஐயம் ஏற்பட்ட கணத்திலேயே அவள் கண்கள் நினைவிற்கு வந்து, “நிச்சயம் வருவாள்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அவள் நினைவுகளை
அந்த இரவிற்கும் நிலவிற்கும் பரிமாறிக்கொண்டே உறங்க மறுத்த அவனது விழிகள்
விடியலுக்காக காத்திருந்தன.
அதிகாலை..
ஆற்று நீரின்
சலசலப்பை லயித்துக் கொண்டே காத்திருந்தாள் சொர்ணவள்ளி.. நீரின் சலசலப்பை விட
நெஞ்சின் படபடப்பை அதிகமாய் உணர்ந்தாள்..மனதின் குழப்பம் ஆற்று நீர்ச்சுழியை விட
அதிகமாய் சுழற்றியது..யாரோ ஒரு வழிப்போக்கனுக்காய் இப்படி காத்திருப்பதின் அபத்தம்
மூளை உணர்ந்தாலும் அவள் ஹ்ருதயம் அதை வென்றது.
அந்த அதிகாலை
இளஞ்சூரியனே குதிரையேறி வந்தது போல் தகதகவென வந்தான் மாறவர்மன்..
“என்ன பெண்ணழகே! வரமாட்டான் வாய்ச்சொல் வீரன் என்று
நினைத்திருப்பாயே?”
“அப்படி நினைத்திருந்தாள் வந்திருக்கமாட்டாள் இந்த
சொர்ணவள்ளி”!..
“சொர்ணவள்ளி.. சொரூப ராணி.. உன் தந்தை என்ன சிற்பியா?”
“வேடிக்கை பேச்சுக்கள் போதும்.. தாங்கள் யார்? அங்கு ஏன் அத்தனை அவசரமாய் சென்றீர்கள்?”
“ம்ம்.. சொல்கிறேன்.. அதற்கு முன்.. உன்னைப்பற்றி நான்
தெரிந்து கொள்ள வேண்டும்.”
“என்ன தெரிய வேண்டும்.? என் தந்தை ஒரு
வணிகர்,பெயர் வேலவர்.”
பெயரைக்கேட்டதும்
மலர்ந்தது மாறவர்மனின் முகமும் மனமும்..
“நல்லது வள்ளி.. கேள்.. நான் சொல்லப்போவதை நான் சொல்லும் வரை
யாரிடமும் சொல்லாதே.. உன் தந்தை உட்பட.. நான் தான் மாறவர்மன்.. இளவரசன்.. வீரவர்ம
குலசேகர தொண்டைமானின் வாரிசு.. இந் நாட்டை ஆளப்பிறந்தவன்..”
“இளவரசே” என்ற வள்ளியின் முகத்தில் பயமும் பதட்டமும்
படர்ந்தது..கண்களில் ஆச்சர்யம் குடிகொண்டது..
மாறவர்மன் தான்
வஞ்சிக்கப்பட்டதை கூறி முடிக்கும் பொழுது அவள் கரங்கள் தன்னிச்சையாய் அவன்
கரங்களோடு கோர்த்துக் கொண்டது.. சூரிய கிரணங்கள் பட்டு ஆற்று நீர் ஜொலித்தது..