HomeUncategorizedஇராட்டை

இராட்டை

 “ஏண்டா சீனி, காத்தாயி இங்குட்டு வந்துச்சா? நீ எதும் பாத்த?”

நாகம்மாளின் கேள்விக்கு சீனி உடனே இல்லை என்று தலையாட்டினாலும் அவன் முகம் சட்டெனக் குழப்பத்திற்குள் போனது.

எங்கோ பார்த்தோமோ என்பது போல் யோசித்தான். 

அவன் முகத்தைப் பார்த்த நாகம்மாள், “எங்கனயாச்சும் தட்டுப்பட்டா எப்பாடுபட்டாச்சும் கூட்டியாந்துருடா ஒனக்குப் புண்ணியமாப் போகும்”

புலம்பிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக ஓடினாள். 

சீனிக்கு சட்டென நினைவுவர, 

“நாகம்மா” எனக் கத்திக்கொண்டே வண்டியை எடுத்தான்.

அவன் முறுக்கி நான்காவது கியருக்குப் போவதற்குள் நாகம்மா மூன்று தெரு தாண்டி, கோயில் பக்கத்தில் இருந்த சந்திற்குள் நுழைந்துவிட்டாள்.

ஒருவர்  மட்டும் தான் அந்த சந்தில் நடக்கமுடியும். போகப்போக இருள் சூழ்ந்து பின்னர் வெளிச்சம் வந்து அடுத்த தெருவை இணைக்கும்.

நாகம்மாள் தானா என சந்தேகம் வந்தது. சாயம் போய்க்கொண்டிருந்த பாசி வண்ண சேலை வெளிச்சப் பகுதியில் தெரிய, சந்தின் முனையில் இருந்து கத்தினான்.

“நாகம்மா”

சட்டென திரும்ப முடியாத சந்து என்றாலும் நாகம்மாவின் மெலிந்த உடல் வாகு எந்த சிராய்ப்பும் இன்றி திரும்ப ஒத்துழைத்தது.

“மஞ்செ சேல கட்டிருந்துச்சா?”

அவ்வளவுதான். உடனே சீனையை நோக்கி சந்திற்குள் ஓடி வந்தாள். 

“பாத்துத்தா பாத்து வா, நாய்களே இங்கிட்டு போகாம சுத்திப் போகுதாம், நீ இப்பிடிப் புயலா நுழையுறயே”

சீனி சொன்ன எதுவும் காதில் வாங்காமல் அவன் முன் நின்ற நாகம்மாளுக்கு லேசாக மூச்சு வாங்கியது.

காலைல புல்லுக் கட்டத் தூக்கி சைக்கிள்ல கட்டிக்கிட்டு இருக்கும்போது, 76 வெரட்டிக்கிட்டுப் போனான். முன்னாடி ட்ரைவர் சீட்டுக்கு எதிர்த்து ஒக்காந்து இருந்துச்ச்சு. பஸ்சு ஜன்னல்ல முந்தான பறந்துச்சு. காத்தாயக்கா தான் அது, மஞ்ச சேலதான?”

நாகம்மாளுக்கு அழுகையும் ஆத்திரமும் சேர்ந்துகொண்டது.

“76ண்டா அப்ப காரியாபட்டிக்குத்தான் மறுபடியும் பஸ் ஏறிட்டாளா, எடுபட்டவ, எம்புட்டு சொன்னாலும்”

நாகம்மாளுக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை என்பதுபோல் அருகில் இருந்த குத்துக்கல்லில் அமர்ந்தாள்.

சீனி, தனக்கான வேலை முடிந்து விட்டது போன்ற தோரணையில் வண்டியைக் கிளப்பினான்.

கிளப்பியவன் பின்னல நின்றிருந்த என்னைப் பார்த்தான். 

“வாங்க பங்கு”

“சீனி, கரெக்ட்டா நாகம்மா வந்து ஒண்ட்ட கேட்கும் போது க்ராஸ் பண்ணேன். வண்டியத் திருப்பிட்டு வர்றதுக்குள்ள இங்க வந்துட்டீங்க, பின்னாலயே கத்திக்கிட்டு வர்றேன் கேட்டபாடில்ல”

என நான் சொல்லிக்கொண்டே, நாகம்மாள் அருகில் போய்,

“பெருங்குடிலயே எறங்கிருச்சு காத்தாயக்கா”

என்றதும் நாகம்மாள் முகத்தில் நிம்மதி பரவியது.

சீனிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் எல்லாம் இல்லை. இன்னும் அரை நொடி அங்கு நின்றாலும் பெருங்குடிக்கு போகவேண்டி வரும் எனத் தெரியும். 

“சரி பங்கு, கம்பெனில ஒரு சின்ன வேல இருக்கு” என நகர்ந்தான்.

வழக்கம்போல் எனக்குத்தான்  என்ன செய்வதென்று தெரியவில்லை. நின்றிருந்தேன். ரைஸ் மில் திறந்திருக்கிறதா எனப் பார்த்து வரச் சொல்லி இருந்தார் அப்பா. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தவணை முறையில் திட்டு விழும் என்று வரிகள் மாற்றி ஓடின. 

பள்ளிக்குப் போகும் நாட்களில் இதே சந்து வாசலில் இதே நாகம்மாவின் கையால் தினமும் சுய்யம் தின்ற நன்றிக்கடனுக்காக அங்கே நின்றிருந்தேன். அந்த சந்தின் பக்கவாட்டில் சாணியால் மொழுகி பளிச்சென தரையைத் தீட்டி, சிறிய அடுப்பு, அருகே பெரிய தாம்பாளம் போன்ற தட்டு அதில் இட்லி, பணியாரம்,சிய்யம் என சுடச்சுட விற்பனை சூடுபறக்கும். பள்ளிக்கூடம் போவோர், அவர்களின் பெற்றோர் என காலை தின்பண்டம் அங்கே நாகம்மாள் கைப்பக்குவம்தான். அவ்வளவு ருசியாக இருக்கும். ஒருநாள் கூட அந்தத் தாம்பாளத்தில் எதுவும் எஞ்சியதில்லை. அப்படி ஒன்றிரண்டு மிஞ்சினாலும் என்னைப் போன்ற, கண்ணில் படும் கடக்கும் ஆட்களைக் கூப்பிட்டுக் கையில் திணித்துவிட்டுப் போவாள்.

சிறு பண்டத் துகள்கள் கீழே விழுமாறு அந்த த் தட்டை நங் என தரையில் தட்ட, அது சற்று ரீங்காரம் போல் நங்ங் என அதிர்ந்து எழுப்பும் ஒலிதான் அவளின் திருப்தி. அத்தோடு அன்றைக்காண அடுப்புக் கடை முடிந்தது. சந்து வழியே உரசிக்கொண்டு போய் வீட்டை அடைந்ததும் காத்தாயக்காவுடன் சேர்ந்து கொண்டு, தம் அன்றாடத்தை ஆரம்பிப்பாள்.

இராட்டை சுற்றுவதுதான் இருவரின் முக்கிய அன்றாடம். 

ராட்டை என்றதும், காந்தி, சிறிதாக அழகாக கையில் வைத்து பதவிசாக சுழற்றும் புகைப்படம் நினைவிற்கு வருகிறதா? ஆனால் அதுவல்ல இது.

இது சற்று பெரிய, சைக்கிள் சக்கரம் போன்ற ராட்டை.  சைக்கிள் விம்மை ஒருபக்கம் பொருத்தி, இடதுகைப் பக்கம் சிறிதாக நூற்கும் எந்திரம் அது. அதை நூற்கண்டுகளில் நூற்கும்போது வலது கை வேக வேகமாச் சுற்றச் சுற்ற இடதுகையால் நூலைக் கொண்டு செலுத்தவேண்டும். ஒவ்வொரு நூற்கண்டாக சல் சல் என சுழலும். இடது கை ஆட்காட்டி விரலும் பெருவிரலும் நூல் கிழித்த அடையாளத்தோடு காய்த்துப் போயிருக்கும், ராட்டை சுற்றுவோருக்கு.

மற்றவர்களைப் போல் நாகம்மாளும் காத்தாயக்காவும் ஒரே தறிக் கம்பெனிக்கோ ஒரே முதலாளிக்கோ வேலை செய்யமாட்டார்கள்.

நான்கைந்து கம்பெனிக்காரர்கள் போட்டுபோகும் சரக்கை சுத்தமாக சுழற்றி அடுக்கிக் கொடுத்துவிடுவார்கள்.  

காத்தாயக்கா ராட்டையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க அந்த ஜில்லாவிலேயே யாரும் இல்லை என்பது ஊரில் அனைவரும் அறிந்த ஒன்று. 

ஆனால், நாகம்மாளுக்கும் காத்தாயக்காவிற்கும் என்ன உறவு என ஊரில் எவருக்கும் தெரியாது என்பதே உண்மை. எல்லாமே அரசல் புரசல் கதைகள் தான்.

நாகம்மாள் சிறுவயதில் காரியாபட்டியில் இருந்து கையில் அப்பம், சுய்யம் பணியாரம் என எடுத்துக்கொண்டு நடந்தே இந்த ஊருக்கு வந்துவிட்டாள் என்றும், அப்படியே இங்கேயே இந்த மாரியம்மன் கோயில் சந்தில் தங்கிவிட்டாள் என்றும் சொல்வார்கள். நேரில் பார்த்த சாட்சிகள் இன்னும் உயிரோடு இருப்பதால் இது உண்மைதான்.

ஆனால் நடுவில் சிலகாலம் நாகம்மாள் ஊரில் தட்டுப்படவில்லை என்றும் திரும்பி வரும்பொழுது உடன் ஒரு சிறுமியை அழைத்து வந்தாள் என்றும் அது மகளா, தங்கையா, யார் எனத் தெரியவில்லை போன்ற பேச்சுகள் குழாயடியில் ஒரு தினுசாக நடக்கும் என்றால், டீக்கடையில் அதற்குள் இருக்கும் ஆபாச சாத்தியங்கள் அனைத்தும் அலசப்படும்.

நான் சற்று பெரியவனாக ஆகி, மதுரைக்குள் படிக்கப் போகும்பொழுதெல்லாம் காத்தாயி, காத்தாயக்கா என ஊரில் அழைக்கப்பட ஆரம்பித்திருந்தாள். தளதளவென இருப்பதாகவும், நிச்சயமாக நாகம்மாள் மகளாக இருக்க வாய்ப்பில்லை என்றும் முருகேசன் டீயை சுழற்றிக் கொண்டே சொல்லச் சொல்ல நானும் சீனியும் கேட்டுக் கேட்காதது போல் காதுகளைக் குவித்து வைத்திருப்போம். 

“நாகம்மால்லாம் கல்யாணமே கட்டலையப்பா நீ ஒருபக்கம்”

என குண்டு கோவிந்தன் வேட்டியை கழட்டி ஒரு உதறு உதறிக் கட்டிக்கொண்டே சொல்ல, சூடுபிடித்தது. 

“நாங்கனாப்ள என்னத்த சொல்றோம், நானும் அதத்தானப்பா சொல்றேன், என்ன இருந்தாலும் பிள்ள பெத்த ஒடம்புக்கும் கல்யாணம் ஆகாத ஒடம்புக்கும் வித்தியாசம் தெரியாதா, நாங்க பாக்காததா”

முருகேசன் தன்னை கோவிந்தனை விட அனுபவசாலி எனக் காட்டிக்கொள்ளும் விதமாக இன்னும் நிறைய நுட்பமான விவரணைகளை ஆரம்பித்திருந்தார். இப்படி அடிக்கடி அந்நாட்களில் எங்காவது ஓரிடத்தில் இதுபோன்ற பேச்சுகளில் நாகம்மாளும் காத்தாயக்காவும் அடிபடுவார்கள்.

சீனிதான் ஒருமுறை சொன்னான். ஊரில் சில வீடுகளில், இரண்டு ஆண்கள் மட்டுமே காலங்காலமாக இருப்பார்கள். போலவே இரண்டு பெண்கள் மட்டுமே. காலம் அப்படி ஆக்கிவிடும். ஒன்று மற்றவர்கள் வெளியூர் போய்விடுவார்கள் அல்லது வரிசை தப்பி இறந்து போய்விடுவார்கள். 

அப்படித்தான் நாகம்மாளும் காத்தாயக்காவும், இரண்டு பெண்கள் வாழும் வீடு என ஆகிவிட்டிருந்தது. 

காத்தாயக்கா பத்து பண்ணிரண்டு வயதாக இருக்கும்போது, சந்திற்கு அருகில் இருக்கும் மாரியம்மன் கோயிலில் ஏதேனும் விசேஷம் நடந்து கொட்டடிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் கொஞ்சமாக ஆடத் துவங்கி, சற்று நேரத்தில் எல்லாம் சாமி இறங்கிவிடும். அரைமணிநேரத்திற்குள் ஆட்டம் ஆடி கல் மண் என கண்மண் தெரியாமல் விழுந்து எழுவாள், உடலெல்லாம் அடிபட்டிருக்கும். 

பிறகு வயதுக்கு வந்த பிறகும் அது தொடர்ந்தது. அவளின் வாளிப்பான உடல்வாகைப் பார்க்கவேண்டி சிலர் வேண்டுமென்றே கொட்டு கும்மாளம் என மதிய வேளைகளில் அடித்து, அவளை சாமியாடவிடும் சங்கடங்கள் நிகழத் துவங்கின. 

நாட்கள் போகப் போகத் தெருவில் கட்டிடங்கள் பெரிதாகி, கோயில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. சந்து இன்னமும் குறுகிப் போய்விட்டது.

                                பெருங்குடிக்குள் நுழையும்போதே, குழாயில் சீர்காழியின் குரல் கிழிந்துகொண்டிருந்தது. என் தோளைப் பற்றிக்கொண்டிருந்த நாகம்மாள், வண்டியை நிறுத்தச் சொன்னாள்.

நேராக மைக் செட் அருகில் போய் நிறுத்தினேன். நிறுத்தும் முன்னரே பின் சீட்டில் இருந்து தாவி இறங்கிய நாகம்மா அங்கும் இங்குமாய் தேடினாள்.

நான் நேராக மைக் செட் அருகே சென்று விசாரித்தேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த டீ மாஸ்டர்,

“தம்பி, மேல வாய்யா”

என கையால் அழைக்க, சென்றேன்

“என்னா வெவரம் வேணும்”

“இல்..ல. இங்கன”

என என்ன சொல்வது என யோசிக்கும்போதே கொட்டு அடிக்கும் சத்தம் லேசாக கேட்டது. அதாவது கொட்டடிக்கும் முன் தயார் செய்யும் டேக்கா சத்தம். டொட் டொட் என. 

நாகம்மாளும் நானும் ஒரே நேரத்தில் அந்த சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினோம்.

நாங்கள் போவதற்குள் சத்தம் அதிகரிக்க அதிகரிக்க, தூரத்தில் இருந்தே காத்தாயக்காவின் மஞ்சள் சேலை கண்ணில் பட ஆரம்பித்தது. 

காத்தயாக்கா முறுக்கேறி ஆடிக்கொண்டிருந்தாள். அவள் ஆட்டத்தைக் கூட்டும் விதமாக அடி பின்னிக் கொண்டிருந்தார்கள் கொட்டுக்காரர்கள். 

நாகம்மாள் “அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சிருச்சா, மாரியாத்தா நான் என்ன பண்ணுவேன்” என வாயில் அடித்துக்கொண்டு, எப்படியாவது ஆட்டத்தை நிறுத்தவேண்டும் என கொட்டடிப்பவர்களை நிறுத்தச் சொல்லி மன்றாடினாள். அவர்களின் அனுபவமும் வயதும் அதிகம் என்பதால் கண்களை மூடிக் கொண்டு தம் கொட்டில் மும்முரமாய் இருந்தார்கள் இருவரும். 

அருகில் கடையில் இருந்த ஒரு பெண் என்னிடம் வந்து,

“தெரிஞ்சவங்களா? காலைல இருந்து ஆடிக்கிட்டே கெடக்கு இந்தம்மா, சேல ஒருபக்கம் போகுது, மூஞ்சில்லாம் இழுக்குது. இங்க இருக்குற ஆளுக வேணும்னே இந்த கொட்டடிக்கிற ஆட்களுக்கு காசக்குடுத்து அடிக்க விடுறாய்ங்க” 

நான் சட்டென வண்டியை முறுக்கி கொட்டடிப்பவரின் நடுவே ப்ரேக் பிடிக்காதுபோல் போய் மோதி நிறுத்தினேன். சத்தம் சட்டென குறைந்து, மழை பேய்ந்து ஓய்ந்தது போல் ஆனது.

காத்தாயக்காவின் சிவந்த மேனியெங்கும் பச்சை நரம்புகள் புடைத்துக்கொள்ள மிகவும் பலகீனமாக இருந்தாள்.

நாகம்மாள் அவளை அணைத்து, கன்னத்தில் தட்டிக்கொண்டே நடக்க வண்டியை உருட்டிக்கொண்டே பின்னால் நடந்தேன்.

“மாரியாத்தா எறங்குது காளியாத்தா எறங்குதுனு இந்தப்புள்ள ஒடம்பு பாரு, எப்பிடி ஆகிருச்சு”

உடலில் ஊற்றிய நீரும், மஞ்சள் சேலையும், வியர்வையும் கலந்து ஒருவிதமான உணர்வைத் தந்தது.

எதுவும் புரியாமல் நடந்து கொண்டிருந்தாள் காத்தாயக்கா.

நாகம்மாள், காத்தாயக்காவின் கையைத் தூக்கி விரல்களைப் பார்த்தாள். இராட்டை சுற்றிய விரல்களில் நூல் வெட்டிய இடத்தில் இருந்து ரத்தமும் நீரும் சேர்ந்து பிசுபிசுப்பாக வழிந்தது.

“பேசாம காரியாபட்டிலப் போயி இவ சொந்தக்காரங்களத் தேடி, கல்யாணம் கட்டிக் கொடுத்துரலாமான்னு பாக்குறேன், ஆனா இப்பிடி சாமியாடியாப் போனவள அங்க யாரு சேத்துப்பா”

நாகம்மாள் புலம்ப ஆரம்பித்தாள்.

“ஏம்மா, ஊர்ல சாமியாடாமலா இருக்காங்க? ஏன் நம்ம ரேஷன்கட கோட்டையோட சம்சாரம் ஆடாத ஆட்டமா.. காளியம்மா மாரியம்மானு எல்லா சாமியும் ரங்கு ரக்கர ரங்கு ரக்கரனு ஆடலயா..சாமி எல்லார் மேலயும் தானம்மா வருது, அதுக்காண்டி கல்யாணம் பண்ணாமயா இருக்காங்க, பிள்ள பெக்காமத்தான் கெடக்காங்களா”

நாகம்மாள் ஒன்றும் சொல்லாமல் காத்தாயக்காவைப் பிடித்துக்கொண்டு முன்னால் நடந்தாள். ஆட்டோ ஸ்டாண்டை நோக்கிப் போய்க்கொண்டிருதோம்.

என்ன நினைத்தாளோ, சட்டென திரும்பி, “ராட்ட சுத்துறம்ல ராட்ட, அதுக்கு எந்த நூல் எந்த கலருல்லாம் தெரியாது, ஆனா இங்குட்டு இத்தினிக்காண்டி விரல் இருக்கே அது சரியா இழுக்காட்டி வெட்டிவிட்ரும்”

என நாகம்மாளின் விரலைக் காட்டினாள்.

ஏதோ புலம்புகிறாள் என்று நினைத்தேன். அதைவிட முக்கியமாய், எங்கிருந்தோ மிளகாய்ப்பொடி அரைபடும் ரைஸ்மில் வாசம் காற்றில் மிதந்து வர, அப்பாவின் நினைப்பு வந்து பயத்தை ஏற்படுத்தியது. திட்டு உறுதி எனத் தோன்ற, 

“சரி ஆட்டோல வந்துருவீங்கல்ல, காசு கீசு எதுவும்?”

எனக் கேட்க, நாகம்மாள் சரி என்பதுபோல் தலையாட்டினாள்.

அவளின் குழப்பம் பார்த்து, அருகில் போய் பணம் கொடுத்தேன்.

அதை மறுத்துவிட்டு,

“கொள்ளக்காலம் ஆகிப்போச்சு, இந்தப் புள்ள அனாதையா எங்கூர்ல அழுதுகிட்டே நின்னுச்சு.. யாரு என்னான்னு கேட்டா,  ஏதாச்சும் சர்ச்சுல போய் விட்ருங்க, சாமுவேலய்யா அனாதையா விட்டுட்டுப் போய்ட்டாருன்னாங்க ஆசையா இருக்கவும் நானே கூட்டிட்டு வந்துட்டேன்.. தப்பாகிப்போச்சு ப்ச்ச்”

கிளம்பும் மும்முரத்தில் அசட்டையாகக் கேட்டுக்கொண்டிருந்த நான் நிமிர்ந்தேன்.

“நான் என்ன கெனாவா கண்டேன், இப்பிடி மேரியாத்தா ஒடம்புக்குள்ள மாரியம்மா எறங்குவான்னு, அதுகளுக்கு எல்லாமே ஒன்னுதான்”

என நாகம்மாள் வானம் நோக்கி நீட்டியபொழுது, ஆட்காட்டி விரலில் இராட்டைசுற்றிய காய்ப்பு உடைபட்டு ரத்தம் கசிந்தது

*.

ஓவியம் : கித்தான் @vidhaanam 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி