முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது எங்களுக்கு. முதலில் என்று துவங்கியதால் பிறகு பயம் போய்விட்டது போலும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா. அதுதான் இல்லை. அதன்பிறகு மிக மிக அதிமான பயம் பீடித்துக்கொண்டது. சொல்லப்போனால் பயம் என்றால் என்னவென்று முழுதாக உணர்த்தியது. ஆக, அந்த வாக்கியத்தில் ‘ஸ்கெட்சு’ முதலில்க்கு அல்ல, கொஞ்சம் என்ற சொல்லிற்குத்தான்.
சற்று தீவிரமான பின்நவீனத்துவக்கதை என்பதால் பிரசுரிக்கமாட்டார்கள். அதுதான் பிரசுரமாகி படித்துக்கொண்டிருக்கிறோமே என்று யோசிக்கிறீர்களா, அந்தக் கதை இந்தக் கதையைப் பற்றியது அல்ல, இந்தக்கதைக்குள் வரும் கதையைப் பற்றியது. குழப்பமாக இருப்பதற்கு நாற்பத்தி ஒன்றாவது சொல்தான் காரணம். எண்ணிவிட்டு வந்திருப்பீர்கள். சரியாகத்தான் இருக்கும்.
என் கதைகளில் வரும் ரகு, வந்து நின்றதும் சைக்கிள் பெல்லை அழுத்திவிட்டு சட்டென அந்தக் குமிழின் மீது கை வைத்தான். சத்தம் எழும் முன்னே கழுத்து நெறிபடுவது போல் கம்மியது, பெல் சத்தம். கேட்டால் அந்த சிறிய அதிர்வு கைக்கு நன்றாக இருக்கிறது என்பான்.
பயம் என்றால் என்னவென்று எங்களுக்கு உணரவைத்த அந்த சம்பவத்தின் நாயகனும் ரகுதான். பெரிய பொல்லாத உணரவைத்தல். எங்களை மாட்டிவிட்டவன் என்று சொல்வதே சரி. சரி, விசயத்திற்கு வருவோம்.
எங்கள் குழு டாப்படிக்கும் இடங்கள் முறையே மூன்று. மெடிக்கல்ஸ்,சைக்கிள் கடை, பெரியாம்பள வீட்டின் திண்ணை. இப்போது புதியதாக நான்காவது இடமாக அய்யனார் கோயில் கம்மாக்கரையில் இருக்கும் புளியமர நிழலில் சுமைதாங்கிகல் இருக்கும் இடம். சும்மா சொல்லக்கூடாது, மரத்திற்கு அடியில் போடப்பட்டிருக்கும் திட்டு போன்ற அமைப்பும், காலை வைத்துக்கொள்ள எதிரில் இருக்கும் சுமைதாங்கிக்கல்லும் அவ்வளவு வசதியாக இருந்தது. குறிப்பாக, எவ்வளவு வெய்யிலுக்கும் ஈடுகொடுக்கும் கம்மாய் நீர்பரப்பில் உரசிக்கொண்டு வந்து உடலில் வருடும் காற்று.
அந்த நான்காவது இடம் இப்பொழுது முதல் இடமாகி விட்டிருந்தது. இப்பொழுது என்றால் இப்பொழுதல்ல, ஓரிரண்டு வருடங்களாக.
ரகு, பெரிய புத்தகம் ஒன்றை வைத்திருப்பான் எப்பொழுதும். அவனும் செந்திலும் அரசாங்க வேலைக்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஊர் முழுக்க பிரசிதிபெற்ற ஒன்று. நானும் கொத்தனும் ‘வந்த மாட்டைக் கட்டுவார் இல்லை போன மாட்டைத் தேடுவார் இல்லை’ என்ற வாக்கியம் இடம்பெறும் பிராயத்தில் இருந்தோம். கொத்தனுக்கு, புளிய இலைகளை எடுத்து வாயில் வைத்து சர்ரென உறிஞ்சி பின் ஒவ்வொரு இலையாக துப்புவது போன்ற செயல்கள் எல்லாம் அத்துப்படி. எனக்கு, இதுபோன்ற எந்த ஒன்றிலும் தேர்ச்சி இல்லை. முன்பிருந்தே அப்படித்தான். பம்பரம் ஆடினால் ஆக்கர் என் கட்டைக்குத்தான் மொத்தமாய் விழும். ஐஸ் ஒன் ஆடினால் ஒருவனையும் கண்டுபிடித்து கப் ஐஸ் அடித்ததில்லை. ரகுதான் சொல்லிக்கொடுத்தான். நேராக வீட்டிற்குப் போய் சாப்பிட வேண்டும். ஒழிந்து இருக்கும் ஒவ்வொருவனாக நம்மைத் தேடிவருவான். நாம் தேடிப்போனால் கண்டுபிடிப்பது கடினம் என. அப்போதே தெரியும் இவன் அரசு வேலைக்குத்தயார் ஆவான் என.
இப்போது வரை எதிலும் பெரிய திறமை இல்லாமல், இவர்களுக்கு நடுவில் அமர்ந்து, பேசுவதைக் கேட்பதுதான் எனக்கு சுவாரஸ்யம். அட, அதுதான் எளிதாக இருந்தது.
இதோ, பார்த்தீர்களா, செந்திலை, வரும்போதே தாவி அந்த சுமைதாங்கிக் கல்லில் ஒரு காலைவைத்து சரெட்டென மரத்தின் கிளைக்குத்தாவி, புளியம் பிஞ்சுகளை உதிர்த்துவிடுகிறான் பாருங்கள். அவன் கால்கள் மிகச்சரியாக இரண்டு கிளையிகளிலும் பொதிந்து, எவ்வித பதற்றமும் இல்லாமல் நிற்கிறான். என்னால் ஏற முடியாது. அப்படியே ஏறினாலும் இந்நேரம் கால்கள் கிடுகிடுவென நடுங்கும். ஒருமுறை அப்படி நடுங்கி இருக்கிறது. கம்மாயில் குளித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தைக் காட்டிய கொத்தன், “அடிச்சுப் பாக்காதடா அப்பிடியே லாத்தலாப் பாக்குறமாதிரி பாரு” அவன் காட்டிய திசையில் பாவடையை மார்பில் கட்டிக்கொண்டு ஈரம் படர்ந்த தேகத்தோடு நீந்துவதும் எழுந்து நிற்பதுமாக இருந்த முத்துராஜன் அண்ணனின் மனைவி. நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, செந்திலும் ரகுவு சிரிக்க என்னவென்ற கொத்தன் கேட்டு பின் அவனும் சிரிக்க பிறகுதான் சிரிப்பிற்கு காரணம் என் கால் நடுக்கம் என உணர்ந்தேன். அப்படி ஒரு ஆட்டம் ஆடி இருக்கின்ற பயத்தில். ஆனால் என் கண்களில் எப்பயமும் இருந்திருக்கவில்லை அப்போது என்பதையும் கொத்தன் தான் சொன்னான்
தொம் என்று கீழே தாவினான் செந்தில். அவன் கைலி முழுக்க புளியங்காய்கள். தன்னுடைய மாடுகளை மேய்ச்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் குன்னாங்குர்ர் எங்களைப் பார்த்து , என்னத்தடா படிக்கிறீங்க என்றதற்கு, கலெக்ட்டருக்கு என்று சொன்ன ரகுவைப் பார்த்து
“ஏண்டா எதுக்கு இந்த எகத்தாளம், நான் பைத்தியம்டு நினைச்சீங்களா, பொசகெட்டப்பயலுகளா” என இன்னும் அச்சில் ஏற்ற முடியாத சொற்களை எல்லாம் சொல்லி மாட்டை ஓட்டிக்கொண்டு போனார்.
“என்னடா இது, கலெக்ட்டருக்குத்தானடா படிக்கிறோம். இப்பிடி திட்றான் பைத்தியக்காரப்பய”
“குரூப் ஒன், அது இதுன்னு சொல்லணும்டா, கலெக்ட்டருக்குன்னா அவெனுக்கு என்ன தெரியும்? நீ ஒரு இத்தபய”
“ஆமா குரூப் ஒன்னுன்னா மட்டும் அவனுக்கு அப்பிடியே கிளுகிளுன்னு புரியும்பாரு”
“அட அது என்னான்னே தெரியாம ஓஹோம்பாண்டா, ஏதோ ஒன்னுன்னு நினைச்சுக்கிட்டு போய்ட்டா இருப்பானா இல்லையா”
செந்தில் தன்னை தாசில்தாராக பாவித்து பதில் சொன்னான். அவனுடைய மாமா, தாசில்தார் என்பதைவிட முக்கியம் அவருடைய பெண்.
இப்படியாக அரசு வேலைக்கு படித்துக்கொண்டும் புளியங்காய்களைக் கடித்துக்கொண்டும் கழிந்து கொண்டிருந்த மதியங்களில்தான் அந்த பயங்கரக் கதை ஆரம்பம் ஆனது.
டாப் கூடும் நேரம் கழிந்து வெகுநேரம் ஆகியும் ரகுவைக் காணவில்லை. செந்தில் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். நானும் கொத்தனும் குளத்துப்பக்கமாக பார்த்துக்கொண்டிருந்தோம், காற்று வருகிறதா என. ரகுவைக் காணவில்லை என்பதை கொத்தன் சொன்னபிறகு, ரகுவைக் காணவில்லை என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. எங்கு போயிருப்பான்.
கொத்தன் என் கவனத்தை குளத்துப்பக்கம் குவிக்கச்சொல்லி சைகை செய்து கொண்டு இருந்தான். ஆனால் என் செவிகளில் ரகுவில் சைக்கிள் பெல் சத்தம் தான் கேட்டது. அதுவும் சாதாரணமாய் இல்லை. ஏதோ அபாயகரமான ஒன்றாகக் கேட்டது.
கொத்தன் டேய் டேய் என மிக சன்னமாக ஏதோ பெருங்காட்சியைக் கண்டுவிட்ட உணர்வில் என்னையும் துணைக்குச் சேர்க்க எத்தனித்தான். அதற்குள் ரகுவின் சைக்கிள் பாய்ந்து வந்து சுமைதாங்கிக் கல்லின் நடுமைய்யத்தில் மோதி நின்றது.
“என்னாடா ஆச்சு”
ரகுவின் முகத்தில் கலவரம்.
கையைப் பின்னால் காட்டினான். நாங்கள் பார்க்க எதுவுமே இல்லை. அந்த இடத்தை எங்கள் டாப்பாக நாங்கள் முடிவு செய்யக்காரணமே ஆள் அரவமே இருக்காது என்பதால்தான். ஊருக்குள் போக அரைக்கிலோ மீட்டர் ஆகும். அதுவரையிலும் புளியமரங்கள், திட்டுகள், முட்புதர்கள் என கம்மாயின் கரையை ஒட்டி தொடர்ந்து கொண்டிருக்கும். நிழல் மயம். குளுமை என அந்த ஊருக்கு சம்பந்தம் இல்லாத இடமாக இருக்கும்.
‘என்னாடா?”
மூவரும் அவன் சைக்கிளைச் சுற்றி அரைவட்டமாக நின்று கொண்டோம். அது அவனுக்கு சிறிய பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம் போல. மெதுவாக ஆரம்பித்தான்.
“நம்ம பழ்னி”
“பழனிக்கு என்னாடா ?”
எங்களுக்கும் பதைப்பு தொற்றியது.
பழனி பெரியாஸ்பத்திரியில் இருக்கிறான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாய் கடித்துவிட்டது என ஊசிப்போடப்போனவன், பின்னர் உடல்நிலை கொஞ்சம் சரி இல்லை என அங்கேயே இரண்டு வாரம் இருக்கச் சொல்லிவிட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் செந்திலும் நானும் போய்ப் பார்த்தோம். செந்திலின் ஆள் கோரிப்பாளையத்தில் கல்லூரி முடித்து பஸ் ஏறுவாள். ஏதோ பார்த்து பேசவேண்டும் என கைவாகனமாக என்னையும் அழைத்துப் போயிருந்தான். வரும்பொழுது அவனுடைய எம்மெயிட்டியை ஓட்டத் தருவதாக சொல்லி இருந்தான். அப்படியே பழனியையும் ஒரு எட்டு பார்த்துவந்துவிடுவோம் என்பது உபதிட்டம்.
தொடையில் நன்றாகப் பல் பதிந்து இருந்தது. அந்த இடம் கன்னிப்போய் இருந்தது. அந்த சொல் பழனியின் அம்மா சொன்னது. நன்றாக இருக்கிறதே என்று நானும் சொல்கிறேன். அந்த இடம் கன்னிப்போய் இருந்தது என்று. மற்றபடி அந்த இடம் கொதறி, ஆறிக்கொண்டிருந்தது.
தொப்புளைச் சுற்றிலும் ஊசி போடப்படுவதாக சொன்னான். சொல்லிக்கொண்டே காட்டினான். இது என்னடா தொப்புல்ல ஓட்ட இல்லாம சுவிட்சு கட்ட மாதிரி இருக்கு என்றேன். செந்தில் என்னை முறைத்தானாம். வெளியில் வந்து சொன்னான் தான் முறைத்ததாக. நான் பழனியின் தொப்புளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எங்கிருந்து இவன் முறைப்பைப் பார்ப்பது.
இவ்வளவு தூரம் உங்களுக்கு போன வாரம் நடந்தவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேனே,. இந்த இடைப்பட்ட நேரம் வரையிலுமே ரகு வாயைத் திறக்கவில்லை. அதிர்ச்சியில்தான் இருந்தான். கொத்தன் ரகுவின் கையைப் பிடித்து உலுக்கினான்.
“பழ்னிய கூட்டி வந்துட்டாய்ங்கடா, பழ்னி.. பழ்னி”
கூட்டி வந்துவிட்டார்கள் என்று சொல்கிறான் என்றால் உயிர்சேதம் இல்லை, ஆக வேறு எதுவோ பிரச்சனை என லேசாக ஆசுவாசம் அடைந்து கொண்டிருக்கும்போதே பட்டென சொல்லிவிட்டான். ஆசுவாவது வாசமாவது.
“நாய் மாதிரியே கத்துறாண்டா, தவ்வி கடிக்க வர்றான், ஓடுறான்..பயமா இருக்குடா, பாவமா இருக்குடா”
செந்தில்தான் முதலில் ஓடினான். ரகு சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போக செந்தில் ரன்னிங்கில் ஏறி அமர்ந்தான் அவன் சைக்கிள் கேரியரில்.
கொத்தனுக்கு செந்திலின் எம்மெய்ட்டி மீது ஒரு கண் என்பதால், சாவியோடு இருந்த வண்டியை உசுப்பினான்.
“ஏறுடா போவம்”
“நீ போடா, நான் நடந்து வர்றேன்”
“அட ஒலட்டமாட்டேண்டா, அன்னிக்கு வெங்கடேசன் வீட்டு நாய் குறுக்க வந்துச்சுடா அதுனாலதான ஒலட்டுனேன்”
“ஒலட்டுணியா, கொஞ்சம் போயிருந்தா கை எறங்கிருக்கும்டா, செவத்துல கொண்டுபோய் சாய்ச்சுப்புட்டு ஒலட்டுணியாம்ல ஒலட்டி”
மாடு, வாடிவாசலை விட்டு தாவி வெளியேறுவது போல் முதல் கியரைப் போட்டு தாவி சுண்டி ஒலட்டி விழத் தெரிந்து சமாளித்துப் போய்விட்டான். புகை என் முகத்தில் அடித்தது.
நான் போகவில்லை. அந்தச் சுமைதாங்கிக் கல்லில் அமர்ந்தேன். பழனி வவ் வவ் என்று கத்துவது போல் யோசித்துப்பார்த்தேன். அப்படி யோசித்துப்பார்க்க முடியவில்லை என்பதே உண்மையாக இருந்தது. ஒரு மனிதன் எப்படி நாய் போல் ஆகமுடியும். யானை முட்டினால் யானை போல் ஆகமுடியுமா, ஏதோ வீக்னஸ், சரி ஆகிவிடுவான் என்று தோன்றியது.
பயங்கரக் கதை என்று சொன்னேன் அல்லவா அது இது இல்லை. ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு பஞ்சாயத்து போர்டில் இருந்து தமுக்கு அடித்தார்கள். தெருநாய்களை பிடித்துவிடுவதாகவும், வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் ஊசி போட்டு அந்த டோக்கனை கழுத்தில் கட்ட வேண்டும் என்றும் விடாமல் கத்திக்கொண்டே போனார்கள்.
அண்ணாமலை கடையில், புத்தம் புதிதாய் நாய்க்கயிறுகள், சங்கிலி, கழுத்துப்பட்டி என வெளியில் தொங்கவிட்டிருந்தார்.
நாய் பிடிக்கும் தொரட்டியுடன் வரத்துவங்கினார்கள் ஊழியர்கள்.
நன்கு நீளமான குச்சியின் முனையில் மெல்லிய கம்பியை சுருக்கு போல் வட்டவடிவில் பிணைத்திருந்தார்கள். தெருநாயை ஏதேனும் போஸ்ட் கம்பம் பக்கமாக ஒதுக்கி அந்த சுருக்கை வைத்து ஒரே இழுப்பு, நாய் மாட்டிக்கொண்டதும் தான் அரங்கேறும் அந்த பயங்கரம். இதோ கை நடுங்குறது பாருங்கள் தட்டச்சும் போது. எழுதுவதில்லை இப்போதெல்லாம் தட்டச்சுதான்.
ஒருவர் சுருக்கைப் பிடித்துக்கொள்ள, அந்தக்குழுவின் தலைவர், மணியண்ணன் தன் கையில் இருக்கும் வலுவான உருட்டுக்கட்டையால் நாயின் நடுமண்டையில் ஒரே அடி, கண்கள் பிதுங்கிக்கொண்டு வெளியே விழும் அளவு ஒரே அடிதான். அப்படியே அள்ளி வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அடுத்த நாயை நோக்கிப் போவார்கள்.
“போங்கய்யா அந்தப்பக்கம் இதப்போய் பாத்துக்கிட்டு கருமம்” என மணியண்ணன் எங்களை நோக்கி சிரித்துகொண்டே, எப்பிடி ஒரே அடி என்பது போல் கட்டையை ஆட்டுவார்.
இந்தக் கோரமையான பயங்கரக் காட்சி கண்களில் இருந்து அகலவே இல்லை. இப்போது வரை. மனதில் இருந்து அகலப்போவதுமில்லை என்றான் செந்திலும்.
ரகுவும் செந்திலும் பஞ்சாயத்துபோர்டில் போய் தலைவரிடம் பேசினார்கள். நானும் கொத்தனும் வெளியில் இருந்தோம். மாட்டு ஆஸ்பத்திரியில் மாட்டின் பின்பக்கமாக கையை விட்டு ஏதோ பரிசோதித்துகொண்டிருந்தார். கையை எடுக்கப்போவதைப் பார்க்க ஆசையாக இருந்தது.
திடீரென உள்ளேயிருந்து சத்தம் பெரிதாக வர கொத்தன் ஓடினான். நான் எட்டிப்பார்த்தேன்.
“ஏண்டா, ஒங்க கூடத்தானடா சுத்துனான், பழனி, நாய்மாதிரி வாய்ல எல்லாம் ஒழுகி செத்தே போனானேடா.. அறிவில்ல ஒங்களுக்கு எல்லாம், கொல்லாதீங்கன்னு வர்றீங்க, போய் படிச்சு கலெக்ட்டராகி உத்தரவப் போடுங்க, கேட்குறோம் அப்ப, இப்ப எடத்தக் காலி பண்ணுங்கடா”
கொத்தன் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
பழனியின் தாய்மாமனாகத்தான் பேசினார். தலைவாரகப் பேசவில்லை என்ற கருத்துகளை செந்தில் முன்வைத்தான். ரகு, டவுனுக்குள் போய் புகார் செய்வோம் கலெக்ட்டர் ஆபிஸில் ஆள் பிடிப்போம் என்றான்.
அங்கு போனால் கலெட்டராகத்தான் போவேன் என்ற செந்திலை “இவென் ஒருத்தன்” என்றான் கொத்தன். நான் சொல்ல நினைத்தேன்.
“பாவம்டா, மட்டேர் மட்டேர்னு மண்டைலயே அடிக்கிறாய்ங்க, ஒரே அடில பொளந்துருது, நாக்கு தொங்கிருது”
ரகு சொல்லும்போதே எனக்கு வாந்தி வருவது போல் குமட்டிக்கொண்டு வந்தது.
“என்னாவாம் இப்ப” என்ற கொத்தனின் கேள்விக்கு செந்தில் உதட்டைப் பிதுக்கினான்
“ஒரு நாய் விடாம அடிச்சுக் கொன்றுவாய்ங்களாம்”
“பிடிக்கலாம்ல்ல, எதுக்கு கொல்லுறாய்ங்க”
“பிடிச்சு?”
ஆம், பிடித்து அத்தனை நாய்களையும் என்ன செய்வது, எங்கு வைப்பது? பஞ்சாயத்துபோர்டில் அவ்வளவு இடம் இல்லை.
ஏதேதோ முடிவுகள் எடுத்தோம். எதுவும் சரியாகப்படவில்லை.
சரி, இனிமேல் அப்படி பிடித்து அடிக்கும்போது அதை வேடிக்கைப் பார்க்கப் போகக்கூடாது என்று முடிவெடுத்தோம். சரியான முடிவாகப்பட்டது எங்களுக்கு. குறிப்பாக எனக்கு.
பயங்கரமான கதை என்றேன் அல்லவா அது இதற்குப் பிறகுதான். ரகுதான் வீட்டின் வெளியே நின்று கத்தினான்.
அவன் சைக்கிளின் முன்பக்கமாக அமர்ச்சொல்லி அழைத்துப்போனான்.
நாங்கள் அமரும் டாப்பில், எங்களுக்கு இடம் இல்லாதவாறு படுத்திருந்தார், மணியண்ணன்.
கால்களை அகட்டி சுமைந்தாங்கிக்கல்லில் வைத்திருந்தார்.
ரகு என்னைத் தட்டி, தலையை ஒருமுறை ஆட்டினான். சற்று மேலே பார் என்பதுபோல் இருந்த து அவன் செயல், பார்த்தேன்.
மணியண்ணின் நாக்கு மிகப்பெரியதாக வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. காளிதேவி போல் இருக்கிறது என்றான் ரகு.
மண்டையில் அடிபட்டு கண்கள் பிதுங்கிய நாயின் நாக்கு இப்படித்தான் இருந்தது என்று முணுமுணுத்தேன்.
கண்கள் பிதுங்க எங்களைப் பார்த்தார்.
பயந்து ஓடினோம் பாருங்கள்.
இன்று வரை அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்றும், டாப்அடிக்கும் இடத்திற்கு மணியண்ணன் வந்ததே இல்லை என்றும் ரகு சாதிக்கிறான்.
ஆனால் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மார்புவரை வெளியே தொங்கிக்கொண்டிருந்தது அந்த நாக்கு.
விடுங்கள் இந்த பயங்கரத்தை எழுதினால் வேலைக்காகாது என்பதால் இந்தக்கதையை கதையாகவே விட்டுவிடுவோம்.
என்ன ஒன்று, இதெல்லாம் நடந்து இருபது இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. நாய்களைப் பார்த்தால் ப்ரியமாக தலையில் தடவிக்கொடுக்கிறேன் என்றும், அதைவிட முக்கியமாய் அதன்பிறகு நாக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியே நீட்ட முயற்சி செய்கிறேன் என்றும் ஒரு பயங்கரமான கதை என்று ஆரம்பிக்கிறேன் என்றும் சொல்லி இங்கு சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.
நேற்றுகூட ரகு வந்திருந்தான். மீண்டும் நாய்ப்பிரச்சனை நாட்டில் எழுந்துள்ளது என்றும், ஆனால் அடிப்பதில்லை கொல்வதில்லை, பிடித்துக் கொண்டுதான் போகிறார்கள் என்று சொன்னான்.
அவன் அலைபேசியில் இருக்கும் புகைப்பட த்தைக் காட்டினான். ஊருக்குப் போயிருந்த போது, எங்கள் டாப்பிற்குப் போய் எடுத்த புகைப்படம். சுமைந்தாங்கிக்கல் இல்லை. பாதி புளியமரம் மஞ்சளால் பூசி இருக்க, மரத்தின் அடியில் காளிதேவி. நாக்கு நீண்டு செக்கச் சிவப்பாக. பச்சை சேலையை பாதியாக விசிறி விசிறியாக மடித்துக் கட்டி இருந்தார்கள்.
இந்தப்பக்கமாக, கொத்தன் அமரும் இடத்தில் ஒரு நாய் சுருண்டு படுத்திருந்தது.
*
நன்றி : புரவி மாத இதழ்
நவம்பர்’22