காழ்

ம் !. 

எப்புகாரும் அற்ற வாழ்க்கை எமது என்று சொல்வதைக் கண்டு, வாழ்க்கைக்கும்
எமக்கும் எப்போதும் ஒரு போட்டி நடந்தேறிக்கொண்டே இருக்கும். அதாவது, எளிதில்
அல்லது தானாய் நடந்தேறும் எந்த நிகழ்வும் அதன்பாட்டில் நடவாது. சமீபத்திய
உதாரணம், நான் சென்ற நாளில் மட்டும் ஊட்டியில் வெய்யில் பிளந்தது. நாங்கள்
தனியாகவாவது வந்திருப்போம் என வீட்டில் கேஸை என் மேல் எழுதியதில் எவ்வித அநியாயமும்
இல்லை. இதுகாறும் நிகழ்ந்த நிரல்களின் லட்சணங்கள் அப்படி.

நிற்க,

சென்ற ஆண்டு இறந்த காலத்தின் நிலம் என கவிதைத்தொகுப்பின்
தலைப்பெல்லாம் வைத்து 60 கவிதைகளைத் தெரிவுசெய்து, ஏதோ ஒரு
போதாமை அல்லது சரியான தொகுப்பாய் அமையவில்லை எனும் எண்ணம் என அனைத்தும் கலந்து, அப்படியே
விட்டுவிட்டேன்.

அதன்பிறகு அவ்வப்பொழுது எழுதிவந்த கவிதைகள், கவிதைகள்
மாதிரியானைவை என எல்லாமுமாய் சேர்ந்து, 250 க்கும் மேல் எண்ணிக்கையில்
வந்துவிழ, போன முறை அறுபது கவிதையெல்லாம் ஒரு தொகுப்பா என விட்ட மனது, அடேயப்பா
இத்தனை பக்கங்களா, இது பலகுட்டி போட்ட கதை என அப்படியே விட்டுவிட்டேன்.

அப்படி எப்படி விடமுடியும்? என பச்சைப்பசேல் சூழல் கொண்ட மலையாளப்படம்
பார்த்த ஒரு மதியப்பொழுதில் தோன்ற, முருங்கையில் ஏறியது மனம். நல்ல வாசிப்பாளி
என நான் நம்பும் ஆட்களிடம் அனுப்பி, வாசிக்கும்பொழுது
சொத்தைக் கடலைகள் அகப்பட்டால் நீக்கிக் கொடுங்கள் என ஒரு வழியாக எண்ணிக்கைகளைக் குறைத்து, லே அவுட்டிற்காக, அழைத்தேன்.

“ஹலோ என்னய்யா டிசம்பரா?”

மதிராஜ் அண்ணன். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அய்யனார்
கம்மா என்ற முதல் தொகுப்பின், என் முதல் அட்டையை வடிவமைத்தவர். மிரட்சியாக
அமர்ந்திருந்த என்னிடம், எது காட்டினாலும் ஓக்கே ஓக்கேனுலாம் சொல்லக்கூடாது, ஏதாவது கருத்து
சொல்லணும், அப்பத்தான் அட்டை நல்லா வரும்” என ஒண்ணாப்பு
வாத்தியார் ரேஞ்சில் அதட்டினார் அப்போது. இப்போதும் அதே அதட்டல்
உருட்டல் தான், அதே மதிராஜ் அண்ணன் தான்.

“ஆமாண்ணா, எப்ப வரலாம்ணு சொல்லுங்க”

“200 பக்கம்த்துக்கு மேல இருக்கும் போல, நாவலா”

 “கவிதைண்ணா”

“என்னாது, அட எவன்ய்யா இவ்ளோ
பக்கம் கவிதைலாம் படிக்கப்போறான், பேசாம மூணா போட்ருவமா?”

“சரிண்ணா”

“எது சொன்னாலும் சரின்னுலாம் சொல்லக்கூடாது”

“சரிண்ணா, நாளைக்கு வந்துரவா?”

“நர்சிம், ஒருதடவ பார்த்துட்டு
அடிக்கிறேன்”

எனக்கு இருந்த அரைமனது இப்போது கால் ஆனது. அதன் பிறகு
காழ் ஆகும் வரை ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொண்டது தனிக்கதை.

மறுநாளே அழைத்தார். அவர் குரலில்
அவ்வளவு உற்சாகம்

“யோவ் நல்லா இருக்கே, வந்துரு”

ஆர்.சி மதிராஜ் அண்ணன், இப்போதைய 2k
kids சொல்லும் பிடித்ததையே தொழிலாகச் செய்வது வாழ்வது போன்ற இத்தியாதிகளை இருபது
முப்பது வருடங்களாகச் செய்து வருபவர்.

ஆம், இயல்பில் மதிராஜ், கவிஞர். வீட்டின் ஓர் ஓரத்தில், ஒரு கணிணி, அதில் அட்டை
மற்றும் புத்தக வடிவமைப்பு என உற்சாகமாகவும் ஈடுபாட்டோடும் திளைப்பவர், இத்தனை ஆண்டுகளாக அதே வேகம் அதே உற்சாகம். வியப்புதான். பிடித்தங்களைத் தொழிலாகச் செய்யும் பொழுது ஏற்படும் நேர்த்தி அது.

தமிழின் பெரும்பான்மையான முக்கிய, பிரபலமானவர்களின்
புத்தகங்களின் வடிவமைப்பு அண்ணன் செய்தவைதான்.

சரி, காழ்க்கு வருவோம்.

ஒவ்வொரு கவிதையாக, வரிவரியாக
பார்த்துக்கொண்டே, வேண்டாதவற்றை நீக்கிக்கொண்டே, நன்றாக இருப்பதை
லயித்துக்கொண்டே என அந்த நாள், கவிதைகளால் நிரம்பிய நாள் என்றானது.

நாள் முடியவில்லை.

“செம்மய்யா, சரி முன்னுரை அனுப்பு”

“அண்ணா, இதுக்கு மேல யார்ட்ட போய் கேட்குறது. சும்மா அப்பிடியே
வரட்டும். பின் அட்டைக்கு மட்டும்..”

“ஒன் போட்டோவ போட்றணுமா?”

அமைதியாக இருந்த நொடிகளில் மதியண்ணன் அழைத்தது கவிஞர் குகை
மா புகழேந்தி அண்ணனை.

“அனுப்புங்க மதி, பாக்குறேன்”

இதற்கு நடுவே, “கிணறு இருக்கும்
வீடுகள், இறந்த காலத்தின் நிலம்’ என்ற இரண்டு
தலைப்புகள் வைத்து அனுப்பி இருந்தேன் அல்லவா, அதிலும்
எனக்கு சுத்தமாக உடன்பாடில்லாமலே இருந்தது. சென்ற ஆண்டு
தொகுப்பாக ஆகாததற்கு இந்த இ.கா.நிலம் தலைப்பும் ஒரு காரணம் என இப்போது தோன்றுகிறது. மனம் ஒப்பினால்தானே
முழுதாய் முடியும்.

ஆக, இரண்டு முழு நாட்கள் தலைப்பைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன். குறுந்தொகையில்
இருந்து ஒரு சொல்லை எடுத்தாளலாம் என்று யோசித்திருந்தேன். ஆனால், ஏனோ, எப்படியோ
கனி, காழில் கனி என்ற குறளின் சொல் என் மூளையைப் பற்றி இருந்தது.

காழ்

எனும் தலைப்பையும் சேர்த்து அனுப்பி இருந்தேன்.

அதை மட்டுமே மதிராஜ் தேர்வு செய்து பெரிதுபடுத்தி வைத்திருந்தார்.

கவிதைகளைப் படித்த புகழ் அண்ணன், தலைப்பு
குறித்து வெகுநேரம் பேசினார். கவிதைகள் குறித்த அவரின் முன்னுரை, அவ்வளவு
உற்சாகத்தை அளித்தது.

நாங்கள் மூவரும் இறுதிக்கட்ட வேலைகளை முடித்த நொடியில், இது முக்கியாமன
தொகுப்பு, ஆகவே, கெட்டி அட்டையோடு கொண்டு வருவோம், நம்ம மிளிர்தான
என்றார்கள்.

முகப்பு ஓவியமாக அமைந்ததால், பின் அட்டையில்
படிப்பகத்தான் வரைந்து கொடுத்திருந்த ஓவியத்தை பயன்படுத்திப் பார்த்தோம். அப்படிப்
பொருந்திப்போனது அட்டையோடு.

சரி என அனைத்தும் முடித்து அச்சிற்கு அனுப்பி வைத்து, இதோ இன்று
இத்தனை நாட்கள் கழித்துதான் கையில் வந்து சேர்ந்தது.

கெட்டி அட்டையை வெட்டும் மிஷின் பழுதாகிவிட்டதால் (ஊட்டி, வெய்யில்) இந்தத் தாமதம்
என அச்சகத்தில் இருந்து காரணம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

இப்பிடி ஆனதே இல்ல சார், ஏன்னே தெரில, மிஷின் இப்பிடி
ஆகிருச்சு”

 “பரவால்லங்க, காரணம் எனக்குத்
தெரியும்” எனும் வழக்கமான மைண்ட் வாய்ஸ் தான் என்னுள் சுழன்றது.

இடையில் காமன் ஃபோல்க்ஸ் தம் வாடிக்கையாளர்களைக் காக்க வைக்க
விருப்பமில்லை என சொன்னதால், முதலில் வந்த சில ஆர்டர்கள் மட்டும் சாதாரண அட்டையோடு நேரடியாக
காமன் ஃபோல்க்ஸில் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. 

காத்திருந்த, பதற்றமாய் இருந்த, தாமதத்தால்
ஏற்பட்ட கோவமாய் இருந்த என அத்தனை இருந்தவைகளும் இல்லாமல் போகச் செய்தது இந்த மை வாசம். அவ்வளவு நேர்த்தியான புத்தகமாக கையில்
வந்து சேர்ந்த இந்நொடியில், நிறைகின்றது மனம்.

எப்போதெல்லாம் சலிப்பாக உணர்கிறேனோ, அப்போதெல்லாம்
இப்படி, இது போன்ற முன்னுரைகள், மதிராஜ்
அண்ணன் போன்றோரின் சொற்கள், தொகுப்புக் குறித்த செய்திக்கு வரும் வாழ்த்துகள், அன்புகள், எல்லாவற்றிற்கும்
மேலாக, அன்றலர்ந்த மலர் போல், இன்று பிறந்த
சிசுவைப் போல், மை வாசம் கமழக் கமழ, கையில் நிகழும்
இப் புத்தகம், உற்சாகத்தை கொண்டு வந்துவிடுகிறது.

காழ், என் புத்தகங்கள் வரிசையில் மிக முக்கியமான ஒரு தொகுப்பாக
அமையக் கூடும்

என எழுதும் போதே, பஃறுளி எனும்
சொல் சிரிக்கிறது.

புத்தகக்காட்சியில், வாசகசாலை அரங்கில் ‘காழ்’ தொகுப்பு கிடைக்கும்.

ஆன் லைனில் வாங்க, காமன் ஃபோல்க்ஸ்
தளத்தில் கிடைக்கும். : ஆன்லைனில் வாங்க 

புத்தாண்டு வாழ்த்துகள். புத்தக்காட்சியில் சந்திப்போம். 

அதன்பிறகு, பஃறுளியில் சந்திப்போம். 

நிறைந்த மனதுடன்

நர்சிம்.

 02/01/2023

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி