‘சரி போகட்டும், இப்படித்தானே நாயகன் படத்தில் ஒரு பாடலைக் கூட SPB பாடவில்லை’ என்ற நினைப்போடு எழுந்தார் சால்ட்ரிங் சரவணன் அண்ணன்.
இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விற்கும் எஸ்பிபியை துணைக்கிழுத்துக் கொள்வார். துணைக்கிழுத்துக் கொள்வது என்றால் மற்றவர்களைப் போல் சோகப்பாடல், சூழ்நிலைப் பாடல்கள் எல்லாம் இல்லை, எஸ்பிபியின் வாழ்வில் நிகழ்ந்தவற்றைத் தன் சூழலுக்குப் பொறுத்தி சமாதானமோ சந்தோஷமோ அடைந்துகொள்வது சால்ட்ரிங் அண்ணனின் அன்றாடம்.
எதோ ச’ வுக்கு ச என்பதால் சால்ட்ரிங் சரவணன் என நினைத்துவிடாதீர்கள். எப்படி அவர் வாய் சதா ஏதேனும் எஸ்பிபி பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருக்குமோ அப்படித்தான் அவர் கைகள் எப்போதும் சால்ட்ரிங் கம்பியுடனே இருக்கும்.
ஊரில் ரிப்பேராகும் அனைத்து ரேடியோ டேப்பிரிக்கார்டர்களின் ஒரே புகலிடம் பாபு எலக்ட்ரிக்கல்ஸ்தான். எந்த நோய் என்றாலும் இரண்டு பச்சை இரண்டு சிகப்பு மாத்திரைகளைத் தந்து அனுப்பும் குருசாமி டாக்டரைப் போல், எந்த ரிப்பேராக இருந்தாலும் உடனே சால்ட்ரிங்கை எடுத்து விடுவார் சரவணன் அண்ணன். அறுவை சிகிச்சைக்கு கத்தியைக் கையில் வாங்கும் ஒரு மருத்துவரின் லாகவம் இருக்கும் அவர் அந்த சால்ட்ரிங்கை கையில் எடுக்கும்போது.
சமீபமாக நான் அவருக்கு மிக நெருக்கமான நண்பன். சமீபம் என்றால், சில வருடங்களுக்கு முன்பு, படிப்பு முடித்து முதன் முதலில் வேலைக்கு சேர்ந்த நாளில், நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த அன்றிலிருந்து. பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் கூடுவதுதான் எங்களுக்குப் பார்ட்டி. தினமும் கூடும் இடம்தான் என்றாலும் பார்ட்டி என்றால் அன்றைய செலவு பார்ட்டிக்காரனுடையது. ஏதோ பேசி சிரித்துக்கொண்டும், வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது இனி வாழ்க்கையில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் தான் முதன்முதலில் கண்ணில் பட்டாள், நாளந்தா. காதலில் கண்டதும் காதல் என்று ஒரு வகை உண்டு என்பார்கள் அல்லவா, நம்பாதீர்கள். இந்த உலகில் ஈடேறிய அத்துணைக் காதல்களும் கண்டதும் காதல் தான். ஆம். அந்த முதல் நொடியில் ஒரு அட எனும் சிறு மின்னல் தோன்றி மறையும். அந்த மறைவு ஒரேடியாக மறைந்துபோனால் கடந்து போய்விடும். அப்படி அல்லாமல் சீரியல் பல்புகள் போல் மனதில் மினுங்கிக்கொண்டே இருந்தால், அந்த மின்னல் யார் எவர் எனத் தேடிப்போய் பேசிப் பழகி காதலாய் முகிழ்ந்திருக்கும். அந்த பேசிப் பழகி என்பதற்கு முன்னர் தேடிப்போய் என்ற நிகழ்வு ஏற்படக் காரணம் அந்த கண்டதும் தோன்றிய அட’ என்ற காரணாத்தினால் தான்.
அப்படியான கண்டதும் காதல்வயப்பட்ட நான், பார்ட்டியை சட்டென முடித்துக்கொண்டு நண்பர்களை அனுப்பிவிட்டு ரகுவின் தோளைத் தொட்டதும் வண்டியை எடுத்திருந்தான்.
“நாளந்தாடா அந்தப்பிள்ள பேரு”
ரகுவின் இரண்டு தோள்களையும் நான் அழுத்த அவன் வண்டியை அப்படியே நிறுத்தினான். அந்த டிவிஎஸ் 50 அப்படியே சடக்கென்று முறுக்கொண்டு நிற்க,
“என்னாடா?”
“என்ன பேருடா இது?”
”அதுவா, அவங்கப்பென் காமராஜர் யுனிவர்சிட்டில வேல பார்க்குறாருல்ல, அதான். போய் இந்தப் பேரப்பத்தி கேட்டுப்பாரு அந்தாள்ட்ட, ஒரு நாள் முழுக்கப் பொளந்துகட்டுவான்”
அவன் பதிலுக்குக் காத்திருக்கவில்லை நான். கண்டதும் காதல் இப்போது கேட்டதும் காதல் நிலையை அடைந்திருந்தது. ஆம், பெயரைக் கேட்டதும் மொத்தமாக முடிவெடுத்தெருந்தேன்.
“செம பேருல்ல மாப்ள”
ரகு என் மனம் அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணையை ஊற்றிக்கொண்டே வந்தான். அவன் அவளுடைய தெருவில் போய் வண்டியை நிறுத்தும் போது, திகுதிகுவென பற்றி எரியத் துவங்கி இருந்தது மனது.
“நம்ம சால்ட்ரிங் அண்ணன் வீட்டுக்கு எதுத்த வீடுதான். வா”
இதே ஊர்தான் நானும். ஆனால் இந்த ரகுவிற்கு தெரிந்த எதுவும் எனக்குத் தெரியவில்லை. சரி இவன் தெரிந்து வைத்ததையெல்லாம் வைத்துக்கொண்டு எதைக் கிழித்தான் என்றும் உடனே தோன்றியது. ஆகாதது போகதது எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பான். நடு இரவில் மதுரையில் எந்த மளிகைக் கடை திறந்து இருக்கும், எங்கு பெட்ரோல் இரவில் கூட கிடைக்கும், போன்ற விபரங்களை எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், இவன் மனதில் குறித்து வைத்து அதைத் தேவையான சந்தர்ப்பத்தில் அமல்படுத்துவான். ஒருமுறை தெருவில் ஒரு அகாலமரணம். வெளியூரில் இருந்து சொந்தங்கள் வரவேண்டும். அந்த இரவில் ஐஸ் கட்டிகள் தேவைப்பட்டபொழுது, சட்டென சிம்மக்கல் பக்கமாக அழைத்துப்போய் பாலம் பாலமாக ஐஸ் கட்டிகளை இறக்கினான்.
“அட வாடா, “ என முன்னால் சென்றவன், சால்ட்ரிங் அண்ணனின் வீட்டுமுன் நின்றான். நான் அவனுக்குப் பக்கவாட்டில் நின்று எதிர்வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாண்டில் இருந்து வந்தவள் நேராக உள்ளேப் போய்விட்டாள் போல, சப்ஜாடாக ஆள் அரவமே இல்லை அந்தப்பக்கம்.
“என்னா ரெகு இந்தப்பக்கம்?”
சால்ட்ரிங் அண்ணன் முகத்தில் ஒருவித குழப்பம். இதே ஊர்தான். ஆனால் இவர் வீடு இதுதான் என இப்போதுதான் தெரியும்.. கொஞ்சம் பருமனான உடல்வாகு. கைலியைத் தூக்கி மடக்கிக் கட்ட முயற்சி செய்துகொண்டே இருந்தார் எங்களுடன் பேசும்போது. நானும் ரகுவும் பள்ளியில் படிக்கும்போது இவரும் மூர்த்தியண்ணனும் கல்லூரி போக பஸ் ஸ்டாண்டில் நிற்பார்கள். அடேயப்பா என்ன சத்தம், என்ன சிரிப்பு. அந்த உற்சாகம் இப்போது இல்லை என்பதுபோல் பட்டது எனக்கு.
“இல்லண்ணே, எங்கப்பா அந்த ட்ரான்ஸிஸ்டர் குடுத்தாருல்ல, அதான்”
“ஆமா”
“அதான்”
“என்னாடா அதான் அதான்ங்குற, மறுபடியும் ஒக்குட்டுத் தரணுமா? கண்டென்சர மாத்தித்தானடா தந்தேன்”
ரகு உடனே சுதாரித்துவிட்டான். அப்பா வாங்கிப்போய்விட்டார். இவன் அந்தக்காரணத்தை வைத்து என் காதலுக்கு உதவும் பொருட்டு இங்கு இழுத்துவந்திருக்கான். சற்று பருமனாகத் தெரிந்தவர் இப்போது முற்றாக படுபயங்க பருமனாத் தெரிந்தார் எனக்கு. ஒரு அடி விட்டார் என்றால் இரண்டாம் நாளே வேலைக்கு லீவு சொல்லமுடியாதே என்றெல்லாம் யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன.
“ஆமாண்ணே, ஆனா முந்திமாதிரி இல்லாம லேசா இரெச்சல் சவுண்டு ஒண்ணு கேட்குதுண்ணே, அதான் என்னாவா இருக்கும் இல்ல புதுசு கிதுசு வாங்கிருவமாண்டு கேட்க வந்தேன்ணே”
“புதுசுல்லாம் வேணாம்டா, இரெச்சலும் ஒரு சத்தம் தானடா, கேட்டா என்னாவாம்” என சிரித்தவர்,
எங்கே நீ எங்கே கண்ணீர் வழிகிறதே கண்ணே
என்ற வரிகளை சன்னமாகப் பாடினார். பின்னர் ஒரு கெட்ட வார்த்தையைப் பிரயோகித்து, நீ எவன வேணா புதுசா கூட்டிவா”
என்றதும் எனக்கு கிர்ர்ரடித்தது, ஆனால் நல்லவேளையாக அது என்னை இல்லை ஏ ஆர் ரஹ்மானை என்று அடுத்த வரியில் புரிந்து கொஞ்சம் ஆசுவாசமானது.
‘எப்பிடி வேணாலும் புதுசா போடு, ஆனா தலைவன் குரல் அப்பவும் புத்தம் புதுசா இருக்கும், கண்ணுக்க்க்க்க்க்க்க்குள் நீதான்ன்ன்ன்ன்”
நான் ரகுவை என்னடா இதெல்லாம் எனப்துபோல் பார்த்தேன். ரகு சிரித்துக்கொண்டே பின்னால் பார்க்கச் சொன்னான்.
நாளந்தா, உடை மாற்றி இருந்தாள். இன்னும் அழகாகத் தெரிந்தாள். அழகு எல்லாம் என்ன அழகு காதல் என்பது அழகைப் பார்த்து வருவதில்லை என்பார்கள், நம்பாதீர்கள். அங்கே நான் அன்று தேடிப்போய் நின்றது, அவளின் திருத்தமான அந்த முகத்திற்காகத்தான். எங்களைப் பார்த்தவள், சற்று முன் பஸ் ஸ்டாண்டில் பார்த்தோமே என்ற குழப்பம் சேர்த்து மீண்டும் பார்த்தாள். நான் சின்னஞ் சிறு சிரிப்பைக் காட்டினேன். ஒருவேளை பதிலுக்கு வேறு விதமாக ஏதேனும் ஏடாகூடம் ஆனால் அது சிரிப்பில்லை எதிர்வெய்யிலுக்கு முகத்தைச் சுருக்கினேன் என்று சொன்னால் நம்பும்படியான ஒரு நேக்குப்போக்கான சிரிப்பு அது.
நினைத்தது போலவே முறைத்தாள் அல்லது இன்னும் குழப்பமாகப் பார்த்தாள்.
“என்னா நாளு”
சரவணன் அண்ணன் அவளைப்பார்த்துக் கேட்க
“டிவில மறுபடியும் கோடு கோடா வருதுண்ணே”
“ரெண்டு தட்டு தட்டுப்பா”
நாளந்தா என்னை முறைத்துகொண்டேதான் அவரிடம் பேசினாள். அல்லது அப்படித் தோன்றியது. பயம் எல்லாம் இல்லை. தோன்றியதைச் சொல்கிறேன்.
ரகு மொத்தமகா அவள் பக்கம் திரும்பி,
“என்னா டிவி, தட்டுனா மொத்தமா போயிரும் பாத்துக்கோங்க” என்றான். ரகுவின் இந்த தைரியம் எனக்கு வரவே வராது. எவ்வளவு எளிதாகப் பேசுகிறான் எல்லார் இடத்திலும், அட அதுவும் அந்தப் பெண்ணிடமே.
நாளந்தா பதில் சொல்லாமல் பட்டென திரும்பி உள்ளே போய்விட்டாள். மீண்டும் அந்தப் பிரதேசம் சப்ஜாடாக வெறிச்சோடியது.
சால்ட்ரிங் அண்ணனுக்கு இப்போது கொஞ்சம் புரிபடத்துவங்கியது.
“டேலேய் எங்க வந்து என்னடா பண்றீங்க, போ, காலைல கடைக்கி வா.. நீ மொதா கெளம்பு”
அந்த கெளம்பு சொல்லை அவர் முடிக்கும் முன்னரே நான் கிடுகிடுவென நடந்து ரகுவின் வண்டியை அடைந்திருந்தேன். அவன் இன்னமும் அவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இருவரும் எதிர்வீட்டைப் பார்த்துப் பார்த்து பேசுவது போல் இருந்தது. எதைப் பேசித்தொலைக்கிறானோ, இதெல்லாம் தேவையா, சற்று முன்னர்தான் டீக்கடையில், இனி பொறுப்பாக இருக்க வேண்டும், அப்பாவிற்கு ஒரு கடிகாரம் வாங்க வேண்டும். அவர் என்ன காரணித்தானோ கட்டுவதில்லை. முதல் சம்பளத்தில் வாங்கிக்கொடுத்த கட்ட வைக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்தோமே, இப்படி இங்கு வந்து தேவுடு காக்கிறோமே என்று தோன்றியது.
“என்னாவாம்டா”
“வா வா சொல்றேன்”
அவன் பேச்சில் திமிர் தெரிந்தது. அதாவது நண்பணுக்காக ஏதோ நல்லதுசெய்துவிட்ட நட்பின் ஆணவம்.
”சொல்லித்தொலைடா “
“இல்ல இவனே, இந்த மாதிரிண்ணே இதுக்காகத்தான்னு ஓப்பனா சொல்ட்டோம்னு வைய்யி, ஹெல்ப் பண்ணுவாப்ள இல்ல, அட அப்பிடி இல்லாட்டின்னா, டேய் இனிமே இங்குட்டு வராதீங்கடான்னாச்சும் சொல்லுவாப்ள இல்ல”
எனக்கு அடிவயிற்றில் ஒருசிறிய சங்கடம் சட்டென சூழ்ந்தது. பீதியின் முதல் படி.
“என்னத்தடா சொன்ன, அது யாரு என்னான்னே தெரியாது, அதுக்குள்ளயும் ஒளறிட்டயா, அந்த ஆளு பார்வையே சரியில்ல. அவரு குரலும் பாட்டும் ஆளும் மண்டையும்”
என் பயம் இப்படி வெவ்வேறு பரிணாமங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்க, ரகு வண்டியை ஓட்டியாவறே திரும்பி என்னைப் பார்த்து சிரித்தான்.
“ஓஹ் இதானா விசயம், நாளைக்கி கடைக்கி வாங்கடா பேசும்ட்டு சொல்ட்டாப்ளடா”
இழந்த அத்தனையும் சட்டென திரும்பக் கிடைத்த பூரிப்பில் ரகுவின் வயிற்றுப்பக்கம் கையைக் கொடுத்து அவனை இறுக்கிணேன். அவன் லேசாக பின்னால் சாய்ந்து தன் தோளால் என் முகத்தைத் தாங்கினான்.
அப்படி இப்படி என இதோ, இப்போது இத்தன வருடங்களில் நானும் சால்ட்ரிங் அண்ணனும் மிக நெருக்கம் அண்ணனின் புண்ணியத்தில்.நானும் நாளந்தாவும் அதைவிட நெருக்கம். ஆம். காதலிக்கிறோம்.காதல் போக மிச்ச நேரத்தில் நேராக கடைக்கு வந்துவிடுவது. பெரும்பாலும் எஸ்பிபி வாழ்வில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றி பேச்சின் திசை போகும். நாளந்தாவில் முடியும்.
நடு நடுவே அவருடைய காதல் கதையைச் சொல்வார். சோகம்தான். ஆனால் கேட்கும்போது சோகமாக இருக்காது, சிரித்துக் கொள்வோம். ஆனால் வீட்டிற்குப் போகும்போது மனதில் ஒரு பாரம் குடிகொண்டிருக்கும். அவரின் அதே சொற்கள் மீண்டும் கேட்கும், ஆனால் வலி புரிபடும்.
“சரி போறாடா இவனே, எஸ்பிபியும் குண்டுதான, என்னிக்காச்சும் என்னா இப்பிடி குண்டா இருக்காப்ளனு நெனச்சுருப்பமா? யானைய குண்டுன்னு எவனாச்சும் பார்க்குறானா? யான முகத்த பத்து நிமிசம் உத்துப்பாத்துருக்கியா? அம்புட்டும் கரைஞ்சு அந்த மொகம் மட்டும்தான்ய்யா மைண்ட்ல நிக்கிம், போறா விடு, ஆமா குண்டா இருந்தா இப்ப என்னாவாம்”
யானை முகத்தை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆசை வந்து என்னை ஆட்டி வைத்தப் பாவம் என அவர் சன்னமாக ஹம் செய்த வரியை அவர் குரலை மறக்க மீண்டும் ஒரு முறை அப்பாட்டை எஸ்பிபி குரலில் கேட்டால்தான் நிம்மதி என்றும் தோன்றும்.
ஆனாலும் அண்ணனுக்கு காதல் என்றால் என்னவென்று புரியவில்லை எனத் தோன்றும். இனக்கவர்ச்சியைத் தாண்டி வர, தோற்றப்பொலிவு ஒரு காரணிதானே. அழகின் அளவீடுகள் வேண்டுமானல் ஆள் ஆளுக்கு மாறுபடலாம். ஆனால் அழகு என்ற ஒன்றின் அடிப்படையான கட்டுமானம் அவசியம் அல்லவா.
அதை அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக புரியவைத்து உடற்பயிற்சி, உணவுக்கட்டுபாடு என்றெல்லாம் பேசுவேன். பழுதுபார்த்துக்கொண்டிருக்கும் ரேடியோ மீது தன் இயலாமையை கோவத்தைக் காட்டுவார். பொசுக்கிய இடத்திலேயே பொசுக்கி பொசுக்கி எடுப்பார். நான் மெதுவாக அமைதியாவேன்.
முதல் சம்பளத்தில் அப்பாவிற்கு வாட்ச் என்ற ஆர்வத்தைப் போலத்தான் ஒவ்வொரு முறையும் நாளந்தாவைப் பார்க்கும்பொழுதும் ஏதேனும் ஒன்றை வாங்கிப் போகும் ஆர்வமும். சர்வோதயாவிற்கு வரச்சொல்லி புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம்.
“நாளைக்கி சால்ட்ரிங்க்கு பொறந்த நாளு” என்றதற்கு
”ம்ம்” என்றாள்
“என்ன ம்ம்ம் கொட்டுற, நம்ம இப்ப இப்பிடி சுத்துறம்னா அந்த அண்ணன் தான..”
“ஆமா அதுவும் சரிதான்” என்றாள்.
“ஓஹோ, அப்ப சால்ட்ரிங் என்னயப்பத்தி சொல்லாட்டி ஒனக்கு நான் யாரோ தானா..”
“அய்ய, அன்னிக்கு எதுக்கு அவசர அவசரமா ட்ரெஸ் மாத்திட்டு வெளில ஓடி வந்து டிவி ரிப்பேரு கீவி ரிப்பேருன்னு நின்னாங்களாம்”
“பார்றா .. அப்பறம் எதுக்கு அந்த மொற மொறச்ச”
“அப்பறம் யாரு என்னான்னு தெரியாம இளிப்பாங்களா”
“சரி இப்பவாச்சும் சொல்லு அன்னிக்கு ஏன் ட்ரெஸ் மாத்திட்டு ஓடிவந்தியாம்?”
நாளந்தா எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்தாள். எல்லாமும் சொல்லின அவள் கண்கள்.
அந்த நிமிடத்தை உறையச் செய்யக் கட்டளை இட்டது மூளை. கீழ்படிந்தது மனம்.
“அழகா இருக்கம்னு திமிரா இருக்காத நாளு”
சிரித்தவள் மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டாள். இதுவரை நிறைய முறை கேட்டிருக்கிறாள்.
“நெஜமாவே அன்னிக்கு டீக்கடைல நின்னு பாத்தியே, அப்பிடி என்னத்தடா என் மொகத்துல கண்ட?”
ஒவ்வொருமுறையும் அதே பதில்தான். ஆனாலும் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கும்போல, கேட்கும்போது.
“நீச்சல்கொளத்துல குளிச்சிட்டு இருக்கும்போது மழை பேஞ்சா எப்பிடி இருக்கும் தெரியுமா? அப்பிடி இருந்த,கருப்புலயே நீ ஒரு புது தினுசு”
“நல்லவேள கருப்பா இருந்தாலும் கலையா இருக்கன்னு சொல்லிருந்தா இப்பிடியே பஸ் ஏறி இருப்பேன். அதென்னா கருப்பா இருந்தலும்னு..” வழக்கம்போல முறைத்துக்கொண்டே சொன்னாள்.
தெரியும்ல்ல ஒன்னயப்பத்தி”
என்ற என் பதிலைக் கேட்டும் கேட்காதது போல் டவுன்ஹால் ரோட்டின்
கூட்ட த்திற்குள் நுழைந்தாள்.
டவுன்ஹால் ரோட்டிற்குள் நுழையும்போதே, “பேசாம அந்தாளுக்குப் புது சால்ட்ரிங் வாங்கித் தந்துருவமா”
நான் சிரித்துக்கொண்டேதான் சொன்னேன். ஆனால் நாளந்தா உடனே ஆமோதித்தாள். விரல்லாம் சுட்டு சுட்டு போயிருக்கு அண்ணனுக்கு. பேசாம அதே வாங்கிரு, அப்பிடியே சுடுதண்ணிக்கி தெனைக்கும் அம்மாவோட சண்ட, ஒரு ஹீட்டர் வாங்கிக்குடுடா”
சால்ட்ரிங், ஹீட்டர், அம்சவல்லி என நாள் கழிந்தது.
இன்று பிறந்தநாள். புதிய சால்ட்ரிங் ராடு இருக்கும் அட்டைப்பெட்டியோடு அவ்வளவு மகிழ்ச்சியாக வந்து எழுப்பியபோதுதான் அந்த ஆரம்ப நாயகன் படம் குறித்த பேச்சை ஆரம்பித்திருந்தார்.
“கரெக்ட்டுதான இவனே, நாயகன் என்னா மாதிரியான படம். யோசிச்சுப்பாரு, சுந்தரி கண்ணால் மானிக்க ஒரு லட்டுப் பாட்ட பாடி இருக்கணும்ல நம்மாளு. ஆனா எங்கயாச்சும் ஒரு எடத்துல நீ ஒரு காதல் சங்கீதம் பாட்டு எனக்காண்டியே அளவெடுத்து தச்ச சட்டன்னு சொல்லிருப்பாரா? அந்தமாதிரிதான வாழ்க்க. நம்மளச் சுத்தி நடக்குற எல்லா நல்லதுலயும் நாம இருக்க முடியாதுல்ல”
“கரெக்ட்டுதாண்ணே”
“ஒனக்கு ஒன்னு தெரியுமா? ஆந்தரால ஒரு ஸ்கூல்ல ஏதோ பாட்டுப் போட்டியாம், நல்லா பாடுன பசங்க மூணுபேத்த செலக்ட் பண்ணிருக்கானுங்க. ஆனா நடுவரா இருந்த ஒரு அம்மா அந்த இன்னொரு பையன் நல்லா பாடுனானே ஏன் அவனுக்கு ப்ரைஸ் இல்ல. அவனுக்கு குடுக்காட்டி நான் இந்த நிகழ்ச்சில இருந்து விலகிக்கிறேன்னு சொல்லிருச்சாம்”
நான் அந்த சால்ட்ரிங் டப்பாவை மும்முரமாகப் பிரித்து வெளியே எடுத்து அவரிடம் நீட்டிக்கொண்டே அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு புதிய வாளை கையில் வாங்கிப்பார்க்கும் அரசனைப்போல் அந்த சால்ட்ரிங் ராடை இருகைகளால் வாங்கிப் பார்த்தார்.
“எத்தன எத்தன இதுகள சேர்த்துவச்சுருக்கும் என் சால்ட்ரிங்..ல்ல”
“அட ஆமாண்ணே”
“சரி இதவிடு, அன்னிக்கு அப்பிடிச் சொன்ன அம்மா யார் தெரியுமா? ஜானகியம்மா, அந்தப் பய யார் தெரியுமா?”
எல்லாம் தெரியும். உலகிற்கே தெரியும். ஆனால் அதைச் சொல்லி அவரின் இந்த உற்சாக ஊற்றை தடை செய்ய விரும்பாமல்
“யார்ணே”
“அப்பிடிக்கேளு, நம்ம எஸ்பிபி தாண்டா அந்த பய, இப்பச் சொல்லு, எவன் எப்பிடித் தடுத்தாலும் எவனாலயும் எதையும் இங்க நிப்பாட்ட முடியாதுல்ல”
இப்போது அவர் கவனம் முழுக்க புது சால்ட்ரிங் பக்கம் போய்விட்டுருந்தது.
போலவே என் மனம் முழுக்க முதல்முறையாக அவருடைய சோகம் தீர்க்க, முன்னாள் காதலியான மகேஷ்வரி அக்காவிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது.
ஏனெனில் அவர் என்றைக்கும் இல்லாமல் இவ்வளவு சோகமாக இப்படிப் பேசக் காரணம்,மகேஷ்வரி இன்று வாழ்த்து சொல்லவில்லை என்பதே.
ஏதேனும் ஒன்றைச் செய்யவேண்டும் இணைத்துவைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அது விபரீத ஆசை என்பது அதன்பிறகுதான் புரிந்தது.
ஆம், இரண்டு வாரமாக நானும் ரகுவும் திட்டம் போட்டு, சால்ட்ரிங் அண்ணனின் காதலியை தனியாகப் பார்த்துப் பேசி, அண்ணனின் அருமை பெருமைகளை உணர்த்தலாம் என்று முடிவெடுத்தோம். ரகு முதலில் தயங்கினான். அவனே தயங்கியபொழுது நான் யோசித்திருக்க வேண்டும். நாளந்தா நான் எனும் எங்கள் காதல் என் கண்ணை மறைத்திருந்தது.
மகேஷ்வரியின் வீட்டில் இருந்து வந்து என்னை மிரட்டினார்கள். பாவம் சால்ட்ரிங் அண்ணனை அடித்திருப்பார்கள் போல.
“ஏண்டா ஆனானப்பட்ட இளையராஜவும் எஸ்பிபியுமே சண்ட போட்டு பிரிஞ்சாங்களேடா, இதெல்லாம் ஒரு பிரிவு இதுக்கு நீ தூதுவேற, லூசாடா நீங்க?” என திட்டுகிறாரா புலம்புகிறாரா எனத் தெரியாமல் குழப்பமாக வருந்தினார்.
இதுஒரு பக்கம் எனில், ஒருவழியாக வீட்டில் பேசிப்பேசி கைகூடியது, இன்னும் சில மாதங்களில் எனக்கும் நாளந்தாவிற்கும் கல்யாணம்.
மிகுந்த மிதப்போடு எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அன்றாடம் சால்ட்ரிங் அண்ணன் கடையில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிடுவது சமீப அன்றாடம்.
ரகு வேண்டுமென்றே எலக்ட்ரிகல்ஸ்க்கு வந்து அவரிடம் மட்டும் தன் ட்ரான்ஸிஸ்ட்டர் குறித்து ஏதோ கேட்பது போல் கேட்டுவிட்டு என் பக்கமே திரும்பாமல் வேண்டுமென்றே முகத்தைத் திருப்பிக்கொண்டு போவான். போகும் முன்
“பாத்துண்ணே, திடீர்னு ஆள் அட்ரஸே இல்லாம ஓடிருவானுக, நாம அப்பறம் செவத்தப் பாத்துதான் பேசணும்”
“அடேயப்பா பாத்து கோவப்படுடா பயமா இருக்கு, கல்யாணாச் சோத்துக்கு வந்துதான ஆகணும்”
என்ற என் நக்கலான கத்தலுக்கு பதில் சொல்லாமல் போவான். ஆனால் அவன் சிரித்துக்கொண்டே போவது என் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரியும்.
பத்து நாட்களுக்கு முன்னர் அப்படி அவர் கடையில் அமர்ந்திருக்கும்பொழுதுதான் அது நிகழ்ந்தது.
அவர் வழக்கமான லயிப்புடன் சால்ட்ரிங்கை உசுப்பி, அதன் முனையை பக்கத்தில் இருக்கும் திடதிரவ பசையில் தொட்டுத் தொட்டு ஸ்க் ஸ்க் என சூட்டுடன் எதையோ பொறுத்திக்கொண்டிருந்தார். மிக சன்னமாக ஒரு வாசம். பொசுங்கும் வாசம் நன்றாக இருந்தது.
நானும் லயித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான், நிழலாடியது கடையில். நிழல் சடசடவென பெரும் நிஜமாக என் மீது மோதியது.
கடைக்கு வெளியே இருந்து ஓடிவந்தவன் என் முதுகில் ஓங்கி அடித்துத் தள்ள நான் நிலைதடுமாறி சால்ட்ர்ங் அண்ணன் மீது விழுந்தேன். அண்ணன் மேல் அல்ல, அவர் கையில் இருந்த சால்ட்ரிங் மேலேயே விழுந்தேன்.
முகம். என் முகத்தின் ஒருபக்கத்தை சால்ட்ரிங் ராட்டின் சூடு கிழித்துபொசுக்கி விட்டது. முகத்தின் ஒரு பகுதி, நல்லவேளையாக கண்கள் தப்பின. ஆனால் என் முகத்தை இனி நானே கண்ணாடியில் பார்க்க முடியாது என்பது போல்.
அதாவது ஊரிலிருந்து வந்திருக்கிறான் மகேஷ்வரியின் கடைசித் தம்பி. விசயம் கேள்விப்பட்டு அவன் பங்கிற்கு அவனும் அவரையும் என்னையும் இரண்டு அடி அடித்தால்தான் அவன் பிறந்த வம்சத்திற்குப் பெருமை என ஏதோ வீரவசனம் பேசி தேடி வந்திருக்கிறான் போல.
போகட்டும்.
“அத்தன வருசம் எத்தன எத்தன அம்சமான லட்டு லட்டான பாட்டுகளப் பாடிருப்பாரு, ஆனா டப்புனு புதுசா வந்த தங்கத்தாமரை பாட்டுக்கு தேசிய விருது கிடைச்சுச்சுல்ல.. அப்படித்தான்ய்யா எனக்கு இவங்க”
என பாடல்கள் மீது மோகம் கொண்ட, அடிக்கடி டேப்ரிக்கார்ட் பழுதாகி அதன்மூலம் இப்போது காதலாக முகிழ்த்த லெட்சுமி அக்காவை அறிமுகப்படுத்தினார்.
என் முகத்தின் கோரமான புண்ணை, வடுவைப் பார்த்துத் தயங்கினார் லெட்சுமி அக்கா. போகும் வழியில் அண்ணன் என் முகம் சிதைந்த கதையைச் சொல்லிக்கொண்டே போகக் கூடும். என் திருமணத்திற்கு வரும்போது அந்த அக்காவிற்கு என் முகம் பழகிப்போயிருக்கும்.
ஆம்.
முகம் இப்படி ஆனதும் நான் உட்பட அனைவருமே இத் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்தபொழுது, நாளந்தா சொன்னாளாம்
”நான் என்ன அவன் மொகத்தப் பார்த்தா லவ் பண்ணேன்”
*
ஆனந்த விகடன்
காதலர் தின சிறப்பிதழ்-2023ல் காதல் நெருப்பு என்ற தலைப்பில் வந்த சிறுகதை.
ஓவியம் :பாலகிருஷ்ணன்