காழ் கவிதைகள் குறித்து என்னிடம் முதல் உரையாடலைத் துவங்கியவர், கவிஞர் நேசமித்ரன் தான். அவருடைய பார்வைக்காக புத்தகம் அனுப்பி இருந்ததையே மறந்திருந்தேன். மதுரையில் இருந்து சென்னை நோக்கிய பயணப்பொழுதில் அழைத்தார். பயணத்தை நிறுத்தி அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தன அந்த நொடிகள். முடிக்கும் முன்னர், ‘கூட்டம் நடத்துனா சொல்லுங்க இன்னும் நிறைய பேசணும்’ என்று அவர் கூறும்பொழுது கூட, இத்தனை ஆண்டுகள் இதெல்லாம் இல்லாமலே கடந்துவிட்டோம் என்ற எண்ணத்தோடும், அவர் பேச்சு கொடுத்த மகிழ்ச்சியோடும் தான் தொடர்ந்தேன்.
பிறகு, டிஸ்கவரி வேடியப்பன் மதுரைக்கதைகள் புத்தம் குறித்துப் பேசும்பொழுதும் ஒரு கூட்டம் என்ற பேச்சு எழுந்தது.
கூட்டம் கூட்டம் என்கிறார்களே, கூட்டம் வருமா என்பதே பெரும் தயக்கமாக இருந்தது. அடுத்து, நன்றி உரை எல்லாம் பேசவேண்டுமே என்ற பயம் வந்தது. தயக்கமும் பயமும் சேர்ந்து, வேண்டாம் என வழக்கம்போல் ‘கூட்டம்’ பேச்சை விட்டுவிட்டேன்.
நேசன் மீண்டும் ஒருமுறை அழைத்து, இந்தக் கவிதைகளை அடுக்கிய விதம் இருக்கே தலைவரே என ஒரு மதியத்தில் பேசியபொழுது, சரி என முடிவெடுத்து, இப்படியான ஒரு நிகழ்வை டிஸ்கவரியில் நிகழ்த்தலாம் என முடிவு செய்தோம். இதற்கிடையில் கவிஞர் மனுஷியிடமும் கவிதை குறித்த பார்வைகள் கேட்டிருந்தேன். உடனடியாக சம்மதம் தெரிவித்திருந்தார், புத்தகம் வந்த தினங்களிலேயே. மிக அற்புதமான உரையை நிகழ்த்தினார், நன்றி மனுஷி.
நிகழ்வு குறித்து முடிவு செய்யும்பொழுதே, சிம்மக்குரல் சகி தான் தொகுக்க வேண்டும் என நினைத்தேன், அழைத்தேன். பழக்கம் இல்லை, முடியவே முடியாது என்றார். போலவே, கதைகள் குறித்த உரையாடல்களை தொடர்ந்து முன்னெடுக்கும் சேதுபாலாவை பேச அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.
“இதுல பாதி அரங்கு நிறைந்தாலே மகிழ்ச்சி” என ட்விட் செய்த நொடியில் “முழு அரங்கும் நிறையும்” என இந்த நிகழ்வை தன் இல்ல நிகழ்வுபோல கையில் எடுத்தார், நண்பர் ராமச்சந்திரன். மிக நேர்த்தியாக நண்பர்களை ஒருங்கிணைக்கும் வேலைகளைச் செய்திருக்கிறார் என்பது நிகழ்வின் நாளில் தெரிந்தது.
இராமச்சந்திரன் மற்றும் ட்விட்டர் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பெருமகிழ்ச்சியும் பேரன்பும். நளினி அவர்கள் அமைத்திருந்த பலகை, கவர்ந்தது, மிக்க நன்றி. மற்றவர்கள் பெயர்களை இங்கு தவிர்ப்பதன் காரணம், யார் பெயரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக. தனியாக ஒருமுறை விரிவாக எழுதவேண்டும்.
வந்திருந்த நண்பர்கள் அனைவருமே, இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கல எனச் சொல்லிக்கொண்டே அரங்கத்திற்குப் போனது மகிழ்ச்சியாக இருந்தது.
நன்றியுரை என பெரிதாக எதுவும் தயாரிக்கவில்லை என்றாலும், நான் பேச நினைத்தவை மற்றும் பேசியவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது என முடிவு செய்து அமர்ந்திருந்தேன்.
ஆனால், மிக நேர்த்தியாகவும் அற்புதமாகவும் தயாரித்து வந்திருந்த பேச்சாளர்கள் பேசியதால், திட்டமிட்டதை விட ஒரு மணி நேரம் அதிகமாக ஆகிவிட்டது. அப்படியும் கூட்டம் அசங்காமல் இருக்க, மதித்து,வந்திருந்த கூட்டத்தினரின் உணர்வைப் புரிந்துகொண்டு (அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மைக் முன் பேச வராத என் தயக்க,பயத்தின் ஊடே ஒப்பேற்றி) நன்றி சொல்லி முடித்தேன்.
எழுத வரும் என்பதால், தயக்கமின்றி, இதோ, எழுத்தில் நன்றியுரை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூண் அண்ணன் எழுத்தாளார்.ச.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வேடியப்பன் மதுரைக்கதைகளைக் கொடுக்க, வாசித்துவிட்டு, என்னை அழைத்து மற்ற தொகுப்புகளையும் அனுப்பித்தரச்சொன்னார். செய்தேன். கதைகளின் மொழியையும் போக்கையும் குறித்த அற்புதமான உரையை நிகழ்த்தினார்.மதுரையைப் பதியும் எண்ணத்தோடு எதிர்காலத்தில் அணுகிடாமல் இதுபோலவே இயல்பான மொழியில் தொடரவேண்டும் என அவர் சொன்ன அறிவுரை மிக முக்கியமான ஒன்று. பின்பற்றுவேன். போலவே, முதல் கதையில் பெண் வர்ணனை வந்ததைக் குறிப்பிட்டார். தவறுகள் ஆரம்பத்திலே நிகழ்ந்துவிட்டால், அதன்பிறகு மிக கவனமாக இருப்போம், அப்படித்தான் அதன்பிறகான கதைகள், எங்குமே புறத்தோற்றம் குறித்து அதிகம் தேவையற்று வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன், தொடர்வேன்.
என் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை, என் வாழ்நாள் பேறுகளில் ஒன்று.
எழுத்தாளர் சுப்பிரமணி இரமேஷ், தமிழ் இந்துவில் முதன் முதலில் என் பெயரை ஒரு பட்டியலில் எழுதி இருந்தார். அவரைத் தொடர்புகொண்டதில் தொடங்கிய நட்பு. மிளிர்மன எழில் மதி நாவலைக் குறித்து அவர் எழுதிய பார்வை தமிழ் இந்துவில் இடம்பெற்றது. போலவே, இந் நிகழ்வில் என் சிறுகதைகள் குறித்த அவருடைய அற்புதமான பார்வை. சீரியசாக எழுதக்கூடிய இடங்களில் கூட நகைச்சுவை வரிகள் வந்துவிடுகின்றன என்பதை அவர் விமர்சனமாக முன்வைத்தார். நான் பாராட்டாக எடுத்துக்கொண்டேன். எனினும் கதையின் போக்கிற்கு எது தேவையோ அதை அப்படியே எழுதிவிடும் தன்மையை மறுபரிசீலனை செய்து, மீண்டும் ஒருமுறை மாற்றி எழுதினால் சரியாக வரும் என்று தோன்றியது. செய்துபார்க்க வேண்டும். கெளரவம் என்ற சிறுகதை இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற அவருடைய ஆதங்கத்திற்கு பதில் ஒன்று மிக விரைவில் அறிவிப்பாக வரக்கூடும். திரு இரமேஷ் சுட்டிய கதைகளின் நீட்டிப்புகள் குறித்த சொற்களை குறித்துக்கொண்டேன். மிக்க நன்றி இரமேஷ் சார்.
என் முதல் சிறுகதையை பிரசுரித்ததில் துவங்கி இன்று வரை பதினைந்து வருடங்களாக நட்போடு இருக்கும் எழுத்தாளர், பத்திரகையாள்ர், ஆகச் சிறந்த கட்டுரையாளர் சுகுணா திவாகர். நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. ஓரளவு என் பெயரை பரவலாக அறியச் செய்ததில் விகடனுக்கும் சுகுணாவிற்கும் பங்கும் உண்டு. உன்னோடான உரையாடல் தொகுப்பிற்கு அவரின் முன்னுரை வரிகள் என்னளவில் மிக முக்கியமான ஒன்று. அவர் அடிக்கடி சொல்லும், கவிதைகளில் அரசியல் குறித்த பார்வைகளையும் எழுத வேண்டும் என்ற அறிவுரைக்கு பதில் சொல்லும் விதமாக என்னுடைய நாவல் பஃறுளி அமையக்கூடும். உண்மைச் சம்பவமான அரசியல் படுகொலை ஒன்றை மைய்யமாக வைத்து நிகழும் கற்பனை நாவல்.
ஒத்த அலைவரிசையில் இத்தனை ஆண்டுகளாக ஒருபோல உடன்பயணிக்கும் சுகுணாதிவாகருக்கு என் மனமார்ந்த நன்றி.
கவிதைகளை அனுப்பிய சற்றைக்கெல்லாம் முற்றாகப் படித்து, தலைப்பில் ஆரம்பித்து, பெரும்பாலான கவிதைகள் குறித்து உரையாடி, முன்னுரை எழுதிக்கொடுத்து, ஆரத்தழுவிய அண்ணன் குகை.மா.புகழேந்தி அண்ணனுக்கு என்றைக்குமான அன்புகளும் நன்றிகளும்.
நான் நினைத்தது போலவே தான் இரசித்த வரிகளை தன் பார்வையை அற்புதமாகப் பகிர்ந்து கொண்ட தம்பி சேதுபாலாவிற்கு நன்றிகள்.
நான் நினைத்ததை விட அற்புதமாக, தன் சிம்மக்குரலால் நிகழ்வைத் தொகுத்து அசத்திய நண்பர் சகி SAKI, சூழலுக்கு ஏற்ப சுழன்று நிகழ்த்துக்கொடுத்தார், என்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன். அன்பும் நன்றியும் சகி,
இறுதியாக, முதன்மையாக, என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என கலைஞர் சொல்வது போல், என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜய் சொல்வது போல் நம் ட்விட்டர் நண்பர்களுக்கென்று ஒரு வாக்கியம் யோசிக்க வேண்டும் என நினைக்கும் அளவிற்கு, இவ்வளவு கூட்டமாய், அன்பால் நிறைந்த கூட்டமாக இதை ஆக்கியதற்கு, என்றென்றும் நன்றிகள். இந்நிகழ்விற்காகவே வெளியூரில் இருந்து பயணம் செய்து வந்தவர்கள் என இந்த அன்பின் பட்டியல் பெரியது. வயதில் மூத்த ஜானகிராமன் அய்யா ஒருபக்கம் எனில், கவிஞர் அனலோன் பிரதீப்பின் மகள்,சிறுமி, தான் எழுதிய ஆங்கிலக்கவிதைகளோடு நிகழ்வு முடியும்வரை காத்திருந்தது என, அன்பினால் ஆனது நம் உலகு. நன்றிகள்.
இந்நொடி வரை எமை வழி நடத்தும் அப்பா, அவராவது ஒரு செயலைச் செய்தபிறகுதான் அதில் இருக்கும் தவறைச் சுட்டுவார்- எல்லாமே தவறு என சுட்டுவார் என்பது வேறு விசயம், ஆனால் என் மகன், எனை வழிநடத்துகிறான் என்றே சொல்லவேண்டும், இப்படி சொன்னா பூமர்னு சொல்லுவாங்கப்பா என ஆரம்பித்து எல்லா வழிகளிலும் என்னை அலர்ட் செய்துவிடுகிறான். அன்புகள்டா.
கிஃப்ட் வாங்கியதும் அதை எடுத்துவர ஒரு பையைத் தேடி எடுத்தேன். “எதாவது பேசு, எழுது ஆனா அந்த பைய்ய பத்தரமா எடுத்துட்டு வந்துரு” என சொல்லி அனுப்பிய அம்மையார், இப்படிப் பார்த்துப் பார்த்து சொல்வதால், அன்றாடம் எளிதாக இருக்கிறது எமக்கு. நன்றிகள் பள்ளித்தோழியே.
நா.முத்துக்குமாரின் தம்பியாக அறிமுகமாகி, இத்தனை வருடங்களாக இணைபிரியா நட்பாக, ரமேஷ்குமாரின் அண்ணன் நா.மு எனும் படி என் எண்ணத்தில் பதிந்து, அவரும் ஆர் சி மதிராஜ் அண்ணனும் ஆரம்பத்தில் பட்டாம்பூச்சியில் என் படைப்புகளை வெளியிட்டு, இன்று மிளிர் என்ற பெயரில் நான் பதிப்பித்தாலும் அதன் வழிமுறைகளை சொல்லி எல்லாவற்றிலும் உடன் இருப்பவர்கள். இருவருக்கும் அன்புகள்.
நிகழ்வை, தரமாக பதிவேற்றம் செய்துகொண்டிருக்கும் ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றிகள். சொற்பமான வியூஸ், இலக்கிய நிகழ்வுகள் என இருக்கிறார் என நினைக்காதீர்கள்,
ஒரு நாள் திடீரென இலக்கிய ஸ்டிங் ஆப்பரேஷன் என்ற ஒன்றை இறக்கினார் எனில் இனி நம்ம காலம் கபிலா என்பதுபோல் வியூஸ் பிய்த்துக்கொண்டு போவதுபோல் ஆகக்கூடும். காத்திருப்போம்.
மனம் நேற்று முழுதும் நண்பகல் நேரத்து மம்முட்டி போல் ஒரு தினுசாக இருந்தது.
ஆம், இதற்காகத்தானே எழுதுவது.
மிகுநிறை மனதுடன்,
அன்புகள்
நன்றிகள்.
*
எழுத்தைக் கொண்டாடி ஆளும் எமது எழுத்தாளரே… வாசம் சேர்க்கும் போதே வாளும் வீசும் வசீகர எழுத்துனது சொத்து Bossu.