குளத்தைச் சுற்றிலும் அடர் இருள்.
கடும் பனி. மார்கழிப்பனி பொழிந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில்
விடிந்துவிடும். விடிந்தால் புது வருடம். அதுவும் எப்பேர்ப்பட்ட ஆண்டு, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி
தொன்னூத்தி ஒன்று. ‘தொவங்குற இடத்திலுயே முடியுது, நடுவுல இருக்குறது எதுகூட சேர்ந்தாலும்
மதிப்பில்லாம சேருற எடத்துலயே நிக்கிம். பெருசா என்னமோ நடக்கப்போகுது பாரு’ என கடவுள்
கேசவன் சொன்னது நினைவிற்கு வந்தது.
கடவுள் கேசவன் என்றதும் கேசவன் கடவுள் போன்றவர்
என்ற எண்ணம் வரக்கூடும். ஆனால், ஊரில் உள்ள அனைவரையுமே,வாங்க கடவுளே, சொல்லுங்க கடவுளே,
அப்பிடியா கடவுளே என ஓவ்வொரு வாக்கியத்தின் பின்னொட்டாக கடவுளே எனும் சொல்லை பயன்படுத்துவார்.
அதன்பொருட்டு அவரின் பெயருக்கு முன்னொட்டாக இந்தக் கடவுள் ஒட்டிக்கொண்டது. மற்றபடி
கேசவன் சராசரி சாமான்ய மனிதர் தான். ஆனால் இப்படி எண்கள், உலக அழிவு, அரசியல், கப்பல்
விமானம் இதோ இந்தக் குளம் என எல்லாவற்றைப் பற்றியும் அவருடைய கருத்தோ கோணமோ ஒன்று இருக்கும்
அது சற்று மாறுபட்டே இருக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றால்
போனவருடம் வரை, குண்டும் குழியுமாய் இருந்த இந்தக் குளக்கரை சாலையில் ஆள் நடமாட்டம்
முடிந்தவுடன் நீரைத் தெளித்து, பெரிய பெரிய எழுத்துகளால் புத்தாண்டு வாழ்த்துகள் என்பதை
கோணல்மானலாக எழுதி பக்கவாட்டில் கரும்பு பொங்கப்பானை என வரைந்து வைப்பதும், அருகே அமர
ஏதுவாக இருக்கும் சிறிய பாலத்தில் அமர்ந்துகொண்டு ஏதோ அடுத்தநாள் முதல் உலகமே மாறப்போகிறது
என்பது போல் ஆகாயம் பார்த்து மகிழ்ச்சியாக இருப்பதுமாகத்தான் இருந்தது.
சென்ற ஆண்டு முழுதும் பழனியண்ணனோடு
சுற்றியதன் விளைவு, இதோ இந்த இரவில், இந்தக் கக்குளத்தின் கரையில் நின்று கொண்டிருக்கிறேன்.
பழனியண்ணனும் அவருடைய சகாக்களும் குளத்தின் மறுகரையில் இருக்கும் கல்மண்டபத்தில் நின்று
கொண்டிருக்கிறார்கள். நிழலாகத் தெரிந்தது அவர்கள் நிற்பது.
யோசித்துப்பார்த்தால், எல்லாம்
சென்ற வருடத்தில் ஒருநாள் ஊர் மந்தையில் அதிமுக கட்சிக்கூட்டத்தில் பேச எங்கள் ஊருக்கு
நடிகர் குண்டு கல்யாணம் வரப்போகிறார் என்ற பரபரப்பில் துவங்கியது என்றே சொல்லலாம்.
ஊர் மந்தை என்பது பள்ளி,கல்லூரி
காலங்களில் வெறும் பேருந்து நிலையமாக மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு.
மந்தையில் இருக்கும் அம்மன் கோயில். அதைச் சுற்றி வந்து நிற்கும் பேருந்து. கோயிலைச்
சுற்றி மூன்று நான்கு டீக்கடைகள். கோயிலுக்கு அந்தப்பக்கம் தி மு க மன்றம், இந்தப்பக்கம்
அதிமுக கட்சி அலுவலகம். நடுவே கம்யூனிஸ்ட் படிப்பகம். அங்கே அவ்வளவாக யாரும் இருக்க
மாட்டார்கள். மன்றத்தில் காலை தினசரி நாளிதழ்களை வைத்துக்கொண்டு ஏகமாக சத்தம் கொண்டு
பேசுவார்கள். இந்தப்பக்கம் கட்சி அலுவலகத்தில் சிலர் செண்ட் வாசத்தோடு அமர்ந்திருப்பார்கள்.
நாங்கள், எங்களுக்கான இடத்தில் எங்களுக்கான பேருந்து வந்தாலும் எங்களுக்கான ஆள் வரும்வரை
நின்று பார்த்து போவதும் வருவதுமாய் இருந்தோம்.
மேலே சொன்ன மன்றம், கட்சி அலுவலகம், படிப்பகம் எல்லாம் பழனியண்ணன் உடன் சுற்றத் துவங்கியபோதுதான் கண்ணில் படத்துவங்கி இருந்தன.
எந்தக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும்
அது மந்தையில் அதே இடத்தில் தான் நடக்கும். அதே மேடையமைப்பாளார், அதே லைட் கட்டுபவர்,
அதே மைக் செட்டிங். அதே மக்கள் . அதே முகங்கள். ஆனால் கட்சிக் கொடிகளும் ஆட்களும் மட்டும்
வெவ்வேறாக மேடையில் வீற்றிருப்பார்கள். அந்த
குறிப்பிட்ட குண்டு கல்யாணம் பேசும் கூட்டம் நிகழப்போகும் இரவில் நான் வழக்கமாக வறுகடலை
வாங்கும் இடத்திற்கு போய் மாட்டிக்கொண்டேன். அதுவரை இல்லாத அளவு பஸ் ஸ்டாண்டாட்டைச்
சுற்றிலும் கூட்டம். சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போவதற்குள் ஒரு கார் வர கூட்டம் பரபரப்பாக,
தள்ளு முள்ளுக்குள் போனது. நான் சற்று சுதாரித்து சைக்கிளை வளைத்து ஓரமாக நிறுத்தும்
போதுதான் சைக்கிளின் முன் டயர் பழனியண்ணின் வேட்டியில் பட்டு லேசாக அழுக்காக்கி விட்டது.
கோவமாகத் திரும்பியவர் என்னைப் பார்த்ததும் நீ என்னடா இங்கலாம் வரமாட்டியே என அதட்டலும்
சிரிப்புமாக வழிவிட்டு தனக்கு அருகில் நிறுத்திக் கொண்டார். தன்னோடு இருந்த ஒருவரிடம்
சைக்கிளை ஓரமாக நிறுத்தச் சொல்லி வேறு கொடுத்தனுப்பினார்.
குண்டு கல்யாணம் அடித்திருந்த
செண்ட் வாசம் மந்தைக்குள் பரவப் பரவ அவ்வளவு பெரிய உடம்போடு வெகு அனாயசமாக மேடைப் படிக்கட்டுகளில்
ஏறி, மக்களைப் பார்த்து கை அசைக்க கூட்டத்திலிருந்து ஒரே ஆராவாரம். நெற்றியில் பெரிய
பொட்டும் பவுடர் அப்பிய முகமுகாக ஏதேதோ பேசினார். ஜெயலலிதாவிற்கு ஆதரவாக அவர் பேசப்
பேச பெரிய கைதட்டுகள். கக்கூஸ் கிக்கூஸ் என்றெல்லாம் ஏதோ சொல்லச் சொல்ல மக்கள் பொங்கிப்
பொங்கி சிரித்தார்கள். பழணியண்ணன் ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்துப் பார்த்து எப்பிடி
பேச்சு என்பது போல் புருவம் உயர்த்தி என்னையும் ரசிக்கச் சொல்லும் விதமாக மறைமூகமாக
அழுத்தம் கொடுத்தார்.
அதுவரை பள்ளி நண்பர்கள், கல்லூரி,
படிப்பு, தெரு நண்பர்கள், ஒன்பது மணிக்குள் வீடு என்று ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை,
முதல் முறை இப்படி அகால நேரத்தில் ஊர் மந்தையில் அரசியல் வெளிச்சம் கொண்டிருந்த நிகழ்வில்
நின்றது புதிதாக இருந்தது. கொஞ்சம் பிடித்தது போலும் இருந்தது. புதியவை எதுவென்றாலும்
முதலில் பிடிப்பது போலத்தான் இருக்கும் போல. பிடித்தது.
அதன் பின் வழக்கமான நண்பர்கள்கள்
வட்டத்தைத் தவிர்த்து மந்தையில் பழனியண்ணன் அமரும் இடத்திற்குப் போகத் துவங்கியது என்
வண்டி.
எந்தக் கட்சிக் கூட்டம் என்றாலும்
கொடிகளைக் கட்டுவதுதான் பழனியண்ணன் வேலை. அதுவரை வெகு சாதாரணமாக் கடந்த ஒன்று. மிகப்பிரம்மாண்டமாகத்
தெரிந்தது, அருகில் சென்று பார்க்கும்பொழுது.
பழனியண்ணன் வீட்டுப் பக்கவாட்டில்
எல்லாம் குச்சிகள். ரகரகமாக, வெவ்வேறு அளவுகள். வெவ்வேறு தினுசுகள். சன்னமாக, தடியாக,
சிறிதாக,நீளமாக என ஒருபக்கம். சற்றுத்தள்ளி கொடிகள். எல்லாக் கட்சிகளின் கொடிகள், விதவிதமான
அளவுகளில், துணிகளின் தரத்தில். வழுவழுப்பாக, சொரசொரப்பாக, காற்றில் வளைந்து பறப்பது
போல் என ஏகப்பட்ட சமாச்சாரங்கள், எல்லாமே கொடியும் கொடி சார்ந்துமாக. ஒரு பெரிய தொழிற்சாலை
எப்படி இயங்குமோ அப்படி இருந்தது அவருடைய அன்றாடம்.
“நாளைக்கித் தீப்பொறி மீட்டிங்யா,
எப்பிடியும் பத்து இருவது கொடியக் கிழிச்சுப்புடுவாய்ங்க, டூப்பி லைட்டைப் பக்கம் கட்டக்கூடாது
ஆமா” எனத் தன் உதவியாளருக்கு உத்தரவுகளும் அறிவுரைகளும் வழங்கிக்கொண்டிருந்தார். எனக்கு
அப்படி என்ன தீப் பறக்கும் எனப் பார்க்கும் ஆவல் உந்தத் துவங்கி இருந்தது.எல்லோரும்
ஏன் ஆளாய்ப் பறக்கிறார்கள் என்றும் தீப்பொறி பேச ஆரம்பித்த நொடியிலேயே புரிந்து போனது.
இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லை ஒரே அர்த்தம்தான். ஆபாசம் தான். அதிலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு
வேண்டுமென்றே சோடாவைக் குடிப்பது, பின்னர் வேண்டுமென்றே அந்தக் கேள்வியை கூட்டத்தினரிடம்
கேட்பது என படு கொச்சையான ஒன்று. ஆனால் சிரிப்பும் ஆர்ப்பரிப்பும் மந்தையை நிறைத்தது.
ஆனால் அந்த கூட்டத்தில் நான்
பழனியண்ணனுடன் நின்று சிரிப்பதை யாரோ வீட்டில் சொல்லிவிட, அப்பா மிகக்கடுமையாக எச்சரித்தார். சட்டென்று ஒரு
கண்காணிப்பிற்குள் புகுந்தது போல் ஆகிவிட்டது என் நிலைமை.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
பழனியண்ணன் உடன் சுற்றுவது மட்டுப்பட்டு, கடவுள் கேசவன் ஜமாவில் அமரத் துவங்கினேன்.
ஆறு மாதங்களில் வேலைக்குப் போகவேண்டும். அதற்குள் வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும் என சுற்றிக்
கொண்டிருந்தேன். கேசவன், எப்படியும் ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும். அவரைச் சுற்றிலும்
இரண்டு மூன்று ஆட்கள் உலக நியாயங்கள் எனப் போய்க்கொண்டிருந்தது அந்தக் கோயில்வீட்டுத்
திண்ணை. அது கோயிலா வீடா என்றே புரியாத, ஓடு வேய்ந்த, தாழ்வான வீடு. உள்ளே கருப்பு
இருப்பதாக சொல்வார்கள். இருட்டாக இருக்கும். பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். பெரிய
திண்ணை. சீட்டு ஒருபக்கம் ஆடிக்கொண்டிருப்பார்கள். திண்ணையின் இந்தப் பக்கமாக கடவுள்
கேசவன் வெற்றிலைக் காம்பை சுண்டிவிட்டுக்கொண்டே ஏதேனும் கதையை ஆரம்பித்துவிடுவார்.
அன்றைய பொழுது ஓடிவிடும்.
சொல்லப்போனால் இன்று நான் இங்கு
இந்தக் கற்குளத்திற்கு அருகே நிற்பதற்கும் கேசவன் தான் காரணம். எதைப் பற்றி என்ன பேச்சு
பேசினாலும் சுற்றி வளைத்து கற்குளத்தில் வந்து முடியும்.
“கற்குளம் இல்லைய்யா, கொக்குக்
குளம். நான் இந்தா இம்புட்டுக்காண்டி இருக்கும்போது குளத்துல தண்ணியே கண்ணுக்குத் தெரியாது
பார்த்துக்க. அப்பிடியே கொக்குகதான். எப்பிடியும் நூறு நூத்தம்பது கொக்குக கெடக்கும்ய்யா,
கொக்குக்குளம்னு சொல்லுவோம். அப்பிடியே கொக்குளம்னு போயி இப்ப கக்குளம்னு ஆகிருச்சு”
எனக்குள் அந்தப் படிமம் மிகப்
பிரம்மாண்டமாக உருவெடுக்கத் துவங்கியது. குளம். குளம் நிறைய நீர். அந்த நீரே தெரியாத
அளவு கொக்குகள். அவை ஒருசேரப் பறந்தால் எப்படி இருக்கும். குளத்தையே மூடி போட்டு மூடியதுபோல்
தோன்றும். கொக்கு மூடி.
கொஞ்ச நாட்களாக குளத்தில் இருந்து
சகிக்க முடியாத அளவு துர்நாற்றம் வரத் துவங்கி இருந்தது. பஞ்சாயத்துபோர்டு அலுவலகத்தில்
இருந்து ஏதேதோ பேசி, சுத்தம் செய்யும் பொருட்டு சிலபல வேலைகளைச் செய்ய ஆயத்தமானார்கள்.
அதில் ஒருபகுதியாகத்தான், குளத்திற்குள்
ஆங்காங்க நீள நீளமாக குறுக்கும் மறுக்கும் குச்சிகளை, மூங்கில்களை ஊன்றிக் கட்டும்
வேலைக்கு பழனியைப் பணித்தார்கள்.
மதியம் துவங்கி, இதோ நள்ளிரவு
வரை நீள, இழுத்த்துக் கட்டிய விளக்குகள் அறுந்து விழுந்துவிட்டன. மின்சாரம் தடைபட்டு,
இருள்.
நான் புத்தாண்டு கொண்டாட்டத்தின்
ஒருபகுதியாக பாலத்தில் அமர வந்து, பழனியண்ணன் கக்குளத்தில் வேலை செய்வது கேள்விப்பட்டு
வந்தவனை, கரையின் இந்தப்பக்கம் இருக்கும் பொருட்களைப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு அந்தப்
பக்கம் போய்விட்டார். பழகிய பழக்கம் என்று ஒன்று உண்டல்லவா. அதனால் நின்று கொண்டிருக்கிறேன்.
யாரும் பார்த்து அப்பாவிடம் சொல்லிவிடக்கூடாது என்று ஒருபக்கம் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
நல்லவேளையாக பில் கலெக்ட்டர்
சண்முகம் சைக்கிளில் வந்து, சுத்தம் செய்வதாக இருந்த வேலை இப்போதைக்கு நடைபெறாது என்றும்,நான்கைந்து
மாதங்கள் கழித்து செய்யப்போவதாகவும், அதனால் குச்சிகளை காலையில் எடுத்துவிடும்படியும்
சொல்லிவிட்டுப் போனார். சைக்கிள் தள்ளாடியது. புதுவருடக் கொண்டாட்டம்.
புதுவருடம் திட்டுகளோடுதான் விடிந்தது. பில்கலெக்ட்டர்
நேராக காலையில் அப்பாவைப் பார்த்து புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லி, நேற்று என்னைப் பார்த்ததையும்
சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் போல.
சட்டென கடவுள் கேசவன் சொன்ன தகவல்கள்
மனதிற்குள் வர, அந்த கொக்குகள் குளத்தை மூடியது போல் இருந்த படிமத்தை அப்பாவிடம் சொன்னேன்.
என்ன நினைத்தாரோ, வழக்கத்திற்கு மாறாக கலகலவெனச் சிரித்தார்.
“ஏண்டா ஒன்னு கஞ்சா குடிக்கிகளோட
சுத்துற, இல்ல இந்த மாதிரி எவனாவது கிறுக்கன் சொல்றத வாயப்பொளந்து கேட்டுக்கிட்டுஇருக்க”
சில பொழுதுகளில் நமக்கு எதிரே
இருப்பவர்கள் ஏதோ ஒன்றை சொல்லப்போகிறார்கள் எனத் தோன்றும் அல்லவா, அப்படித்தான் எனக்கும்
தோன்றியது. அப்படித்தான் நடந்தது.
“அது காவக் குளம்டா. ஊருக்கே
காவல். ஊர்ல எவனுக்கு என்ன பிரச்சனை, சிக்கல்னாலும் போய் நெக்குருகி நின்னு ஒரு சின்னக்
கல்லத் தூக்கிப் போட்டு கையெடுத்துக் கும்புட்டுட்டு வந்துட்டாப் போதும். காத்துரும்.
காவக் குளம், காக்குளம்னு வாய் வாயா மாறி இப்ப கக்குளத்துல வந்து நிக்கிது, கொக்கு
குளம் சொக்கிகுளம்னு, போடா போய் குளிச்சிட்டு வா”
ஒருவேளை தன் பிரச்சனை தீர்வதற்குக்
கற்களை மக்கள் போட்டதால் கூட கற்குளம் என்று ஆகி அது கக்குளம் என்று மருவி இருக்கக்
கூடும். எனத் தோன்றியது. குளம் எங்கிருந்து காக்கப் போகிறது,
ஆக காவல்,காத்தக் காக்குளமோ,.
கொக்குகள் இருந்த கொக்குக்குளமோ அல்ல, கற்கள் போட்டதால் கற்குளம், கக்குளம் எனும் ஆராய்ச்சி
முடிவுக்கு வந்தேன்.
மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு,
கேசவன் திண்ணைக்குப் போனேன்.
“என்னா கடவுளே, நல்லா பொடப்பா
இருக்கே, நல்ல சாப்பாடோ”
சட்டென வயிற்றை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டேன்.
தனக்கு எதிரே இருந்த முருகனிடம்
விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்.
“அதாவது கடவுளே, இந்த வருசத்த
எழுது நிய்யி, ஒன்னு ஒம்போது ஒம்போது ஒன்னு சரியா, அதத்தான் ஆரம்பிச்ச எடத்துலயே முடியுது,
அது என்ன, அது ஒன்னு, இந்த ஒம்போதாம் நம்பர் இருக்கே அதுகூட எதசேத்தாலும் சேக்குற நம்பர்
தான் வரும், சரியா, ஆக”
என என்னிடம் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் மனக்கணக்காக, ஒன்பாதம் எண்ணோடு எதைக்கூட்டினாலும் மொத்தக் கூட்டுத்தொகை அந்த எண்ணாகவே
இருப்பதை கண்டு தெளிந்தேன்.
“பெருசா என்னமோ ஆகப்போகுதப்பா
அம்புட்டுதேன் சொல்லுவேன்”
மதியத்தில் காற்று சன்னமாக ஆரம்பித்து
சற்று வேகம் எடுக்க உடல் சிலிர்த்தது. கடவுள் கேசவன் தன் உடலை இன்னும் பெரிதாக ஆட்டி
உள்ளே குனிந்து “கருப்பா, காப்பத்தப்பா கடவுளே”
என்றார்.
நான் கொஞ்சம் சிரிப்போடு, “அதான்
நம்ம ஊரு குளம் காக்குமாம்ல்ல கடவுளே.. காக்குளம் தான் கக்குளமாமுல்ல”
கேசவன் எதுவும் பதில் சொல்லாமல்
என்னை உற்றுப் பார்த்தார்.
அவர் பார்வையை என்னால் சந்திக்க
முடியாமல் போனது போன்ற உணர்வு ஏற்பட வேறு திசையில் பார்த்தேன். பார்ப்பது போல் ஓரக்கண்ணால்
அவரைப் பார்த்தேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஒரு மருந்து வாங்கிட்டு வரச்சொன்னாரு,
போய்ட்டு வந்துர்றேன் கடைய மூடிருவாப்ள செந்தியண்ணன்’ என்று சொல்லிக்கொண்டே மந்தையை
நோக்கி நடக்கத் துவங்கிவிட்டேன்.
மந்தைக்குப் போகும் வழியில்,
பழனியண்ணன் வீட்டு வாசலில் குச்சிகள், கம்புகளை சாய்த்து வைத்திருந்தார். ஈரம் இன்னும்
காய்ந்தபாடில்லை. அடியில் சகதியின் தடம் பாதி காய்ந்த நிலையில் அப்பியிருந்தன.
கடவுள் கேசவனின் அந்த மதிய நேரத்துப்
பார்வை, அந்தக் காற்று என்னை ஏதோ செய்திருந்தது என்பது அதன் பிறகு வந்த மூன்று நான்கு
மாதங்கள் நான் ஊருக்குள் அவ்வளவாக இல்லாமல் சிம்மக்கல்,பழங்காநத்தம் என கல்லூரியில்
உடன்படித்த நண்பர்களில் வீடுகளுக்கு ஏரியாக்களுக்கு எனப் போய்வந்ததிலேயே எனக்குப் புரிந்து
போனது. ஆனால் இந்த மாற்றம் குறித்தோ மிக இலேசான பயம் குறித்தோ பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் வாரத்தில் இரண்டு மூன்று
நாட்கள் மாலைகளில் கற்குளம் பக்கம் போய் நிற்பதும், யாரும் பார்க்காத பொழுது சிறிய
கற்களை வீசுவதுமாய் இருந்தேன்.
பழங்காநத்தத்தில் இருந்து பாலசரவணன்
வந்திருந்தான். சின்னத்தம்பி படம் ரிலீசாகி மூன்று வாரங்களுக்கு மேலாக ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தது.
பத்மா தியேட்டருக்குப் போவோம் என அழைத்தான்.
மந்தையில் அவனோடு டீ குடித்துக்கொண்டு
பேருந்திற்காகக் காத்திருக்கும்போது பழனியண்னன் வந்தார்.
“என்னடா பெரியமனுஷா, ஆளே காணம்
இங்கிட்டு”
“இல்லண்ணே” என இழுத்து சமாளிக்கும்
விதமாக பாலாவைக் காட்டி நண்பன் என அறிமுகப்படுத்த, அதைப் பொருட்படுத்தமால்,
“பெரிய காண்ட்ராக்ட்டு கெடச்சுருக்குடா,
ரொம்ப பெரிய காண்ட்ராக்ட்டு, இனிமேல்ட்டு காசுதான் கை நிறெய” என விரல்களால் பணத்தை
பிதுக்குவது போல் சைகை காட்டிச் சிரித்தார்.
“அடி சக்க,” என மந்தையைப் பார்த்தேன்.
நான் பார்ப்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே,
“டேலேய், இந்த ஊர்லலாம் இல்லடா,
அட மதுரைலயே இல்ல, மெட்ராஸ்ல, பெரிய காண்ட்ராக்ட்னு சொல்றேன் மந்தையப் பார்க்குற, பெரிய
பெரிய கூட்டம்லாம் வரிசையா நம்ம கம்புகதான், நாம நடுற கொடிங்க தான்.. ஒரே தோடா இருக்கும்,
வர்றியா, செயலலிதாவப் பாக்கணுமா?”
கண்களில் சோடியம் விளக்குகளின்
வெளிச்சம் அந்தப் பகலிலும் அவர் கண்களில் மிளிர்ந்தன.
பஸ் வந்து கிளம்ப முற்பட, ஓடிப்போய்
ஏறிக்கொண்டோம் நானும் பாலாவும்.
“யார்றா அந்தாளு கிறுக்கென் மாதிரி
கம்பு கொடிண்டுகிட்டு” என்ற பாலாவிடம், படம், இடைவேளை, முடிந்த பிறகு என எல்லா சந்தர்ப்பங்களிலும்
ஏதோ நானே கண்டுபிடித்த நுட்பங்கள் போல பழனியண்ணன் பற்றியும் குச்சிகள் கொடிகள் எப்படி
மேடை, அதைச்சுற்றிலும் அமைக்கிறார்கள் அதன் பின்னே எவ்வளவு பெரிய வேலைகள் நடக்கின்றன
என்பதையும் விலாவரியாக விளக்கினேன். அதில் எனக்கொரு திருப்தி இருந்தது எனக்குப் புரிந்தது.
அவனை வழியனிப்பி விட்டு மந்தையில்
இறங்கி வீட்டிற்குப் போகும்போதே பழனியண்னன் முகம் வாடிப்போய் நின்றிருந்தார். அவருக்கு
அருகே பில் கலெக்ட்டர் சண்முகம் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“ஏண்டா ஊர்ல நல்லா வேல பாக்குற
ஆளுண்டு சொன்னா, என்னமோ பிகு பண்றியே, மெட்ராஸ்ல போய் நீ நொட்டுறதெல்லாம் இருக்கட்டும்,
இது நம்ம ஊரு வேலடா,”
“இல்லண்ணே, எல்லாமே ரெடி பண்ணிட்டேன்.
இன்னைக்கு நைட்டு றாறி கெளம்புது. அதான்”
“பார்றா, இம்புட்டு நேரம் பாட்டா
பாடிக்கிட்டு இருக்கேன், போய்ட்டு இங்கன தான வரணும், ஒரு குச்சி இந்த மந்தைல ஊண்டிருவயா
அப்பிடி போய்ட்டு வந்து”
கடவுள் கேசவன் எங்கிருந்தோ வந்தவர்,
“கடவுளே, நம்ம ஊர் கொளம்ய்யா, கக்குளம், நாலஞ்சு மாசமா நடையா நடந்து சம்மதம் வாங்கிருக்கோம்னு
சொல்றாரு கலெக்ட்டரு கடவுளு, சரின்னு சொல்லுய்யா கடவுளே”
பழனியண்ணன் அரைமனதாக சம்மதித்து
தலையாட்டினார்.
“இன்னைக்கு நைட்டு, நாளைக்குப்
பகல், அம்புட்டுதான், அதுக்கு அப்பறம் நீ மெட்ராஸ்க்கு போவியோ அம்பேரிக்காவுக்குப்
போவியோ கொடிய எவன் குண்டில சொருகுவியோ ஒன்னய எவன் கேட்கப்போறா, போப்பா போயி கொளத்துல
வேலய ஆரம்பி”
சண்முகம் தான் வெற்றிபெற்றுவிட்ட
நிம்மதியில் கிளம்பினார்.
ஊரில் பாதிப்பேர் கற்குளத்திற்கு முன் நின்றிந்தோம். துர்நாற்றம்தான். ஆனாலும்
நீரை பெரிய பெரிய பம்ப்புகள் வைத்து வெளியேற்றி சாலைக்கு அந்தப்பக்கம் இருந்த வயல்வெளியில்
விட்டுக்கொண்டிருந்தார்கள்.
நீர் கொஞ்சம் கொஞ்சமாக தரைதட்டிக்கொண்டிருந்தன.
பழனியண்னன் ஊன்றிய கம்புகளைப் பிடித்துப் பிடித்து முன்னேறி, சுத்தம் செய்யும் வேலைகளை
செய்துகொண்டிருந்தார்கள்.
நீரின் அளவு குறையக் குறைய எனக்கு,
கொக்குகள் மேல் நோக்கிப் பறப்பதுபோன்ற கற்பனை. நீர் சகதி காணத் துவங்கியது. குளத்தின்
தரை தென்படத் துவங்கியதும் கூட்டம் ஓஹ் வென ஆர்ப்பரித்தது.
நான் உற்றுப் பார்க்கப் பார்க்க,
என் கால்கள் லேசாக நடுங்கின. சிறிதும் பெரிதுமாய் கற்கள் மண்ணில் புதைந்திருந்தன. குளத்திற்கு
நடுவே, தரையில் இருந்து இரண்டு அடிக்கு மேலாக சகதியில் அமிழ்ந்த ஏதோ ஒன்று தெரிய, அதைக்
கழுவினார்கள்.
சதக் புதக் என சகதியில் புதைந்து,
ஊன்றி இருந்த கம்புகளைப் பிடித்துக்கொண்டு அருகே போய்ப் பார்த்தேன்.
ஒரு கொக்கின் சிலை. கல் கொக்கு
மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட கற்சிலை.
காக்கும் என ஊர் மக்கள் போட்ட
கற்களும் குளமெங்கும் புதைந்து கிடந்தன, கொக்கின் கற்சிலையும் மைய்யமாக நின்றிருந்தது.
மருந்து அடித்தார்கள். பட் பட்டென
கம்புகளில் கட்டி இருந்த குழல்விளக்குகள் எரியத் துவங்கின. இருட்டத் துவங்கிவிட்டதை
அப்போதுதான் உணர்ந்தேன். மருந்து அடித்தார்கள். வெள்ளைத் திட்டுகள் அப்பிக் கிடந்தன.
விளக்கு வெளிச்சத்தில் வெள்ளை
மருந்து திட்டுகளோடு கொக்குச் சிலை பளீரென தெரிந்தது.
காவல் கீவல் எல்லாம் இல்லை..கொக்குகுளம்
தான் இது, கல் கொக்குக் குளம் என அப்பாவிடம் போய் சொல்லவேண்டும் எனத் துடித்தது மனம்.
கடவுள் கேசவன் மூச்சிரைக்க ஓடிவந்தார்.
“டேலேய் பழனி நல்லவேள போகலடா
நிய்யி, குண்டு வெடிச்ச்சிருச்சாம்டா மெட்ராஸ் கூட்டத்துல”
செய்தி பரவத் துவங்கி, மன்றத்தை
திகுதிகுவென நெருப்பு வைத்திருந்தது ஒரு கூட்டம். கையில் கிடைத்ததை எடுத்து எல்லாவற்றையும்
நொருக்கிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். செய்வதறியாது இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும்.
பழனியண்னன் எதுவுமே பேசாமல் குளத்தையேப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
நானும்தான்.
*
ஆனந்த விகடன்
ஓவியம் : கோ.ராமமூர்த்தி