Homeசிறுகதைகள்கண்ணாடிப் பந்து

கண்ணாடிப் பந்து

 

லைஃப்
நம்ம எல்லோருக்கும் மூணு பந்துகளைத் தந்திருக்குஅதுல ரெண்டு
ரப்பர் பந்துகள்ஒண்ணு
கண்ணாடிப் பந்து.
You know what all?” 

நான் உற்சாகமாகவும் கம்பீரமாகவும் மாதாந்தர பிராஞ்ச் மீட்டிங் நடத்தும் போதெல்லாம், பணியாளர்கள் ரொம்ப ஆர்வமாகப் பங்குபெறுவார்கள் அல்லது பங்குபெறச் செய்துவிடுவேன். நான் புத்தகங்களில் படித்த, அவதானித்த, என் பாஸிடமிருந்து கற்றுக்கொண்ட
என எல்லாவற்றையும் கலந்துகட்டி அவர்களுக்குச் சொல்லி, மோட்டிவேட் செய்வதில் கைதேர்ந்தவன் எனும் பெயர் பெற்றிருந்தேன்.

`அந்த மூன்று பந்துகள் என்னென்ன? என்பதுபோல் புருவம் உயர்த்தினேன்
எனக்கு திரே அமர்ந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்த ரம்யாவிடம். அதாவது, ரம்யா கிறிஸ்டோஃபர்.

நிறுவனங்களின் தலைமையகங்கள் மும்பை அல்லது டெல்லியில் இருப்பதால், வேலைக்குச் சேர்ந்த மாத்திரத்தில் மெயில் ஐடியை உருவாக்கும்பொருட்டு, சர்நேம் என்னும் சாதிப் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். அவர்கள் பருப்பு தமிழகத்தில் வேகாததன் விளைவு, அப்பா பெயரை மெயிலில் பெயருக்குப் பின்னால் ஏற்றிவிடுகிறார்கள்.

ரம்யாவைப் பார்த்து நான் கேட்கிறேன் என்பதை உணர, அவளுக்குச் சில நொடிகள் ஆகின. எங்கோ கற்பனையில் இருந்தவள் சுதாரித்து, எக்ஸ்கியூஸ்மி பாஸ்’’ என்றாள்.

கேள்வியை அவளிடம் மீண்டும் கேட்டுவிட்டு,
“Hope you are here?
என்றதும், அவள் பதற்றமடைந்து என்னையே பார்க்க, நான் எனக்கு வலது பக்கமாக அமர்ந்திருந்த குணாவிடம் கேட்டேன். அவன் சட்டென என் கண்களுக்குத் தப்பி, குனிந்துகொண்டான்.

இது ஒருவிதமான உத்தி. கூட்டத்தின் கவனம் நம்மை நோக்கியே இருக்கச் செய்ய வேண்டும் என்றே கேள்விகளைக் கேட்டு, மற்றவர்களையும் நம் பக்கம் திருப்பிவிடுதல்.

கண்ணாடிப் பந்துங்கிறது நம் வீடு, காதலி, மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர். மற்ற ரெண்டு ரப்பர் பந்துகள்
முறையே வேலை மற்றும் நண்பர்கள்.

ஆமோதிப்பதுபோல் நிமிர்ந்தார்கள்.

நியாயப்படி இந்த மூணு பந்துகளையும் நாம எப்படிக் கையாளணும் தெரியுமா? வலது கையில் கண்ணாடிப் பந்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கணும்; இடது கையில் ஒரு ரப்பர் பந்து. இன்னொரு ரப்பர் பந்தை இந்த இரண்டுக்கும் மேல் வயிற்றுக்கு முன்பாக வைத்து பேலன்ஸ் செய்யத்தானே வேண்டும்? அதாவது ` போல.’’

`ஆம் எனத் தலையாட்டினார்கள்.

ஆனா, நாம என்ன செய்றோம்? ரெண்டு ரப்பர் பந்துகளையும் கையில இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டு, கண்ணாடிப் பந்தை மேல வெச்சு பேலன்ஸ் பண்றோம். ரப்பர் பந்து கீழே விழுந்தா மேல வந்துரும். கொஞ்சம் லேட்டாக்கூட வரும். ஆனா, உடையாது. வேலை போனா, வேற வேலை கிடைக்கும். பந்து மேல வரும். ஃப்ரெண்ட்ஸ் போனாலும் திரும்ப வருவாங்க.வராட்டாலும் ஓகேதான். பந்து உடையப்போறது இல்லை. ஆனா, இந்த ரெண்டு ரப்பர் பந்துகளையும் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் இறுகப் பிடிச்சுக்கிட்டே இருக்குறோம்.உடையக்கூடிய கண்ணாடிப் பந்தை அப்படியே  விட்டுர்றோம். உயிரையே குடுக்கிற லவ்வர் கால் பண்ணா, கட் பண்ணிடுறோம்; வீட்டுலேர்ந்து போன் வந்தா சைலன்ட் பண்ணிடுறோம்; இல்லைன்னா,
`
வேலையில் பிஸின்னு கத்துறோம்.
am I right?

யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், எல்லோருடைய கண்களும் ஆமோதித்தன. இனி வீட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுபோல் நிமிர்ந்து, தனக்குத்தானே தலையாட்டினான் பாபு.

அதுக்காக, பாதி மீட்டிங்லேருந்து எழுந்து அம்மாவைப் பார்க்கணும்னு கிளம்புறதாய்யா பாபு என நான் சொன்னதும் சிரிப்பலை.

அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனியின் இந்த வருடத் தேவை, அதை எப்படித் திட்டமிட்டுச் செய்து முடிக்க வேண்டும் என நான் சொல்லச் சொல்ல, ஜாக்கிசான் படம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியேறும்போது சைக்கிள் ஸ்டாண்டில் சாகசம் செய்யும் விடலைகள்போல், உற்சாகமும் நம்பிக்கையுமாக வெளியேறினார்கள்.

வாட் ரம்யா மீட்டிங் போரடிச்சுதா?
You were in some other world
ஆவி பறக்கும் காபியைக் கோப்பையில் நிறைத்துக்கொண்டே நான் கேட்க, `அய்யோஇப்படி மாட்டிக் கொண்டோமே! என்பதுபோல் முகத்தை வைத்துச் சிரித்துக்கொண்டே, பாஸ் வாஸ் ஜஸ்ட் லுக்கிங் அட் யூ” என்றாள்.

சகலமும் எனக்குப் புரிந்தாலும், புரியாததுபோல் கேட்டேன்.

அப்போ ஏன் பதில் சொல்லாம முழிச்ச?

அதான் சொன்னேனே `உங்களையே பார்த்துட்டிருந்தேன்னு, என்ன ஒரு ஸ்டைலிஷ் ஸ்பீச்!

இதுக்கு நான் சிரிச்சா `லைட்டா ஏத்திவிட்ட உடனே வழியுறான்ப்பானு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லுவ. பதில் சொல்லலைன்னா, திமிர் பிடிச்சவன்னு நினைப்ப. பெட்டர், காபி குடிக்கிற மாதிரி பிஸி ஆகிடுறேன்.

நான் இப்படிச் சொல்லிச் சிரித்துவிட்டு, அங்கிருந்து நகர்வதை ரசித்துப் பார்க்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டதால், சற்று மிதந்து நகர்ந்தேன்.

ம்யா கிறிஸ்டோஃபர், எங்கள் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வேலை எனக்கு என்பதால், அதிகம் உரையாடும் வாய்ப்பு எங்களுக்கு. கறுப்புகளில் பல விதங்கள். எனினும், அனைத்துக் கறுப்புமே வசீகர வகை என்பது என் எண்ணம். ரம்யா மிடுக்கான கறுப்பு. அவள் நிறத்துக்கு ஏற்ற உடை தேர்வு, அவளை இன்னும் மிடுக்காகக் காட்டும். வேறு டிபார்ட்மென்ட் ஆள்கள்கூட ஏதேனும் சாக்கைவைத்து, அவள் இருக்கும் இடத்துக்கு அருகில் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

பந்து கதைபோல், முதல் மாத மீட்டிங்கில் நான் சொன்ன குரங்கு கதையில் இம்ப்ரெஸ் ஆகி என்னிடம், செம பாஸ்!” என்றாள். உங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸ் பிடித்திருக்கிறது’’ என சென்ற மாதம் ஏதோ ஒரு தருணத்தில் கோடிட்டாள்.

எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பதை, ஒரு துப்பறியும் நிபுணிபோல பலதரப்பட்ட கிளைக் கேள்விகளை அலுவலக மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறாள். சில கேள்விகளை நேரடியாகக் கேட்காமல் இருப்பதில் இருக்கும் லயிப்பு அற்புதமானது.  ஏன்,  எனக்கே கிறிஸ்டோஃபர் யார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டு, நேர்முகத்தேர்வுக்கு அவள் வந்தபோது கொடுத்த பயோடேட்டாவைத் தேடி எடுத்து, அப்பா பெயர் கிறிஸ்டோஃபர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் அப்படியான லயிப்பு வகையே.

ரம்யா, நாளைக்கு EOD-க்குள்ள லாஸ்ட் இயர் நம்பர்ஸ் எல்லாமே எனக்கு வேணும். ஹேவ் டு பிரசன்ட் இட்.

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிரித்தாள்.

என்னாச்சு?

நீங்க நேற்று ஹெட் ஆபீஸ் கால் பேசிட்டிருக்கும்போதே நோட் பண்ணேன். நேற்றே ரெடி பண்ணிட்டேன்.  இப்போ மெயில் பண்றேன் பாஸ்.

என்னிடமிருந்து பாராட்டு வரும் என நினைத்தாள்.

அப்போ
நான் பேசுறதை ஒட்டுக்கேட்கிறே! பேட்
வெரிபேட் என, சற்று சீரியஸாக இருப்பதுபோல் நடித்தேன்.

அவ்வளவுதான் ரம்யா கண்களில் ஈரம் படர்ந்துவிட்டது. அவளால் அந்தச் சூழலைக் கையாளத் தெரியவில்லை.

கலகலவென நான் சிரித்து, ஜஸ்ட் கிட்டிங் என்றதும்தான் அவள் முகத்தில் நிம்மதி. ஆனாலும், தலையை இட வலமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மொபைல், ஆபீஸ் மெயில், போன் ரிஸீவர் என, கைகள் அனிச்சைச் செயல்களில் இருந்தாலும், மனம் அவள் கண் கலங்கிய படிமத்திலிருந்து வெளியே வரவில்லை. கேபினிலிருந்து மெள்ள வெளியேறி, அவள் இடத்துக்குச் சென்று பைக்குள் கையைவிட்டு ஸ்டைலாக அவள் பின்னால் நின்றுகொண்டேன்.

என் பக்கம் திரும்பாமலேயே, ஃபைவ் மினிட்ஸ்ல மெயில் வில் பி செண்ட் பாஸ்”  என்றாள்.

எனக்கு மிகப்பெரிய இடியாப்பச் சிக்கல் மனநிலை. கலாய்ப்பதாக நினைத்து ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அதற்காக ரொம்பவும் இறங்கிப்போக, ஏதோ ஒன்று தடுத்தது. ஈகோ எல்லாம் இல்லை. ஆனால், ஏதோ ஒன்று. ஒருவேளை, அதுதான் ஈகோவோ?

தட்ஸ் ஓகே. ஆமா
ஜாயின் பண்ணி இவ்ளோ நாளாச்சு. ஜாயினிங் ட்ரீட் எல்லாம் இல்லையா?

அவளுக்குப் புரிந்தது  நான் இறங்கிப்போகிறேன் என்று. திரும்பி, நிமிர்ந்தாள்.

பொதுவா, புதுசா வர்றவங்களைத்தானே வெல்கம் பண்ணுவாங்க
அதானே கார்ப்பரேட் கல்ச்சர்? அவள் குரலில் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லை.

`ச்சே பாவம், நோகடித்துவிட்டேன் எனத் தோன்றியது. எத்தனை ஆயிரம் மனிதர்களை நம் கண்கள் கடக்கின்றன. எவ்வளவு நிகழ்வுகளை மனம் கடக்கிறது. ஆனால், வெகுசில மனிதர்களின் சித்திரத்தைத் தன்னுள் பிடித்து வைத்துக்கொள்கின்றன கண்கள். வெகுசில நிகழ்வுகளை மட்டும் மனம் சட்டெனக் கடந்துவிடுவதில்லை. தரதரவென இழுத்துக் கொண்டுபோய் நிறுத்துகிறது. அப்படி என் மனம் இழுத்த இழுப்புக்குத்தான் போய் ரம்யாவின் முன்னால், இல்லை
இல்லை பின்னால் இப்படி நின்றுகொண்டிருக்கிறேன். இவளை சகஜமாக்க வேண்டும் என்பதே இந்த நொடியில் என் மனதின் தலையாய கடமை.

யெஸ் சொல்லு, என்ன ட்ரீட் வேணும்? யூ நேம் இட்
யூ ஹேவ் இட்.

அவளின் வழக்கமான உற்சாகச் சிரிப்பைப் பூத்தாள்.

ஷப்ப்பா நார்மலாவே இப்படித்தான் பேசுவீங்களா? ஆனா, உங்க வேர்டிங்ஸை எல்லாம் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் ஒரு தடவ சொல்லிப்பார்த்துக்கத் தோணும்.
யூ நேம் இட்
யூ ஹேவ் இட். சூப்பர்ல!

இவளிடம் இதுதான் சிக்கல். பட்டென முகத்துக்கு நேரே பாராட்டிவிடுவாள். சர்வ நிச்சயமாக அது முகஸ்துதி அல்ல. இன்னும் எத்தனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் யுகங்கள் கடந்தாலும், பெண்ணின் மனம் இதை நினைத்துதான் பேசுகிறது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் அல்லது புரிந்துகொள்ளும் ஆப், கேட்ஜெட்ஸால்கூட கண்டுபிடிக்கவே முடியாத ஒன்றுதான். அவள் அருகே குழப்பமாக நின்றிருந்தேன்.

நம்மை மேலே இருந்து யாரோ ஒருவர் உற்று நோக்குகிறார் என்பதை உணரச் செய்துகொண்டே இருக்கும் வல்லமை வாழ்க்கைக்கு இருக்கிறது. இல்லையெனில், இதோ, இத்தனை வருடங்கள் இல்லாமல் இன்று காலையில் மனிதவளத் துறையிலிருந்து இந்தியா முழுக்க ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். அலுவலகத்தில் செய்யக்கூடியவை
கூடாதவை என. அவற்றில் முக்கிய அம்சங்களாக, பெண்களிடம் நடந்துகொள்வது குறித்தே சுற்றிச் சுற்றி நான்கு ஐந்து பாயின்ட்கள்.

ஏதேனும் ஒரு வார்த்தை கூட குறையப் பேசி, அது பிரச்னையானால் எதிர்கொள்வதில் சிக்கலாகிவிடும். நம் அலுவலக ஆண்களின் கலாசாரம் என்னவெனில், எல்லோருமே எந்தப் பெண்ணுடனாவது லன்ச்சுக்குப் போக, வெளியே போகத் துடிதுடிப்பார்கள். ஆனால், எவரேனும் அப்படி ஜோடியாகப் போய்விட்டால் அந்தக் கணமே ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியாக மாறி,
`
வாட் ஹெல் இஸ் ஹேப்பனிங்யா? எனக் கிசுகிசுப்பாகக் கித்தாப்பாக ஆரம்பித்துவிடுவார்கள்.

ரண்டு நாள்களுக்கு முன்பு, நான் மிகத் தாமதமாக அலுவலகம் வர நேர்ந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் இரண்டு முறை அழைத்து, ஏதோ உப்புப்பெறாத சந்தேகங்கள் கேட்டாள் ரம்யா. மூன்றாவது முறை வருவீங்களா?” என்றாள். 
வர மாட்டேன்’’ என நான் சொல்லிக்கொண்டே அவளைக் கடப்பதைப் பார்த்து, பொய்க்கோபமும் சிரிப்புமாக போனை வைத்தாள்.

என்னாச்சு
மிஸ்பண்ணியா என்னை?

அவள் திக்குமுக்காடியதை உள்ளூர ரசித்துக்கொண்டும்,
`
எடு செருப்ப! எனச் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தோடும் கடந்துவிட்டாலும், அதன் பிறகு, வேண்டுமென்றே சில அஃபிஷியல் கேள்விகளைக் கேட்டு,
என் முந்தைய கேள்வியை சகஜமாக எடுத்துக் கொண்டாள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதும்தான் ஆசுவாசமாக இருந்தது.

நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, என் கண் முன்னால் வேண்டுமென்றே என் பெயரை உச்சரித்து, மடலை அனுப்பும் கட்டளையை முடித்தாள்.

இளஞ்செழியன் மெயில் சென்ட்.’’

கிரேட்
உனக்கு இதுக்கே ட்ரீட் கொடுக்கணும். சொல்லு
எங்கே போகலாம்?

நான் தீவிரமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டவளாக மெலிதாகச் சிரித்து, சம் அதர் டே” என்றாள்.

அவள் சொன்ன அந்த சம் அதர் நன்னாள் அந்த வார இறுதியிலேயே வந்தது.

பெசன்ட் நகர்
கண்கள் முழுக்கக் கடல் தெரியும்வண்ணம் இருந்தது அந்த காபி ஷாப். கடல், யானை இரண்டின் முன்பும் எவ்வளவு நேரம் நிற்கச் சொன்னாலும் நின்றுவிடலாம். அப்படி அமர்ந்துதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடலின் நடுவிலிருந்து எழுந்து வருவதைப்போல கதவைத் திறந்துகொண்டு வந்தாள் ரம்யா.

ஸாரி பாஸ் செம டிராஃபிக்.

அப்சலூட்லி நோ இஷ்யூஸ். நீ இன்னும் கொஞ்சம் லேட்டாக்கூட வந்திருக்கலாம். கடல்தான் இருக்கே பார்க்கிறதுக்கு.

அப்ப நான் வேணா போகட்டா?” பொய்யாகச் சிணுங்கி, மிக அழகாகத் தெரிந்தாள்.

கைகளைத் தேய்த்துக்கொண்டு, கேப்பச்சீனோவா? எனத் தோள் குலுக்கினாள்.

சோறு கிடைச்சா திங்கலாம். இங்கே என்னடான்னா, விதவிதமா வெளங்காம வெச்சிருக்கான்” என்ற என் கொச்சை வார்த்தை களைச் சிரித்துக்கொண்டே ஆமோதித்தவளிடம் கேட்டேன், அதென்ன ரம்யா கிறிஸ்டோஃபர்? இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னாடியே உங்க அம்மா புரட்சியா?

ஆமாம். யூ நோ
எங்க அம்மாவும் அப்பாவும் செம ஜோடி. அப்பா கையிலதான் டிவி ரிமோட் இருக்கும். ஆனா, அம்மா சொல்ற சேனலை மாத்திட்டே இருப்பார். அதே மாதிரி அவருக்குப் பிடிச்ச பாட்டோ படமோ வந்தா என்ன கத்துக் கத்துவாங்க தெரியுமா அம்மா
`
அப்பாவைக் கூப்பிடுடின்னு

லவ் மேரேஜ்தான் ஒரே சொல்யூஷன்ல
சாதி, மதம் எல்லாம் கடக்கணும்னா.

நோ வே. நெவர் நெவர் பாஸ். அதோட இன்னொரு பக்கம் ரொம்பக் கொடுமையானது. என்னைக்காவது மத்தியான நேரத்துல வீட்டுக்குப் போனா, அம்மாவோட அழுத மூஞ்சியைப் பார்க்க முடியும்.  ஏதோ ஒரு மிஸ்ஸிங், ஒரு ஃபீல் இருக்கும்போல. உங்களுக்குப் புரியுற மாதிரி சொன்னேனான்னு தெரியலை.

`புரிஞ்சதா?னு கேட்கிற இடத்துல `புரியுற மாதிரி சொன்னேனா?னு கேட்கிற, அப்படின்னா நீ ஃபேஸ்புக்ல யாரோ இலக்கியவாதியை ஃபாலோ பண்ற, `விழுமியம்கிற வார்த்தை எல்லாம் தெரிஞ்சிருக்குமே?

சூழல் மறந்து சிரிக்கத் தொடங்கினாள்.

ஆமாம் பாஸ். அப்பப்ப இது மாதிரி எதையாவது படிக்கிறது உண்டு.

அப்புறம் உங்க அம்மாவோட ஏதோ இழப்பு ஃபீல், அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஒரு பெரிய மாற்றம், நெக்ஸ்ட் ஸ்டெப்னு போகும்போது சின்ன இழப்பு, ஃபீல் எல்லாம் தப்பே இல்லை. அதுக்கு மேனேஜ்மென்ட்ல `கொலாட்ரல் டேமேஜ்னு பேரு. அக்செப்ட் பண்ணிக்கலாம். தப்பே இல்லை.

இரண்டு காபி கோப்பைகளை டீப்பாய்க்கும் கோப்பைக்கும் பங்கம் வந்துவிடாதவாறு பதவிசாக வைத்துவிட்டுப் போனாள் கருஞ்சீருடை காபி டே பெண். காபியின் மேலாக க்ரீமில் ஹார்ட்டின்போல் டிசைன் செய்திருந்தார்கள். அதை உடைக்காமல் எப்படிப் பருகுவது என்ற நொடி நேரச் சிந்தனையை  உதறி  உதட்டில் பொருத்திக்கொண்டு, புருவம் உயர்த்தினேன்.

அவள், “எனக்கு உங்களைவிட உங்க குரல் ரொம்பப் பிடிக்கும்.  மீன்
நீங்க பேசுற விதம், வேர்டிங்ஸ்

என்னால் இப்போது இவளிடம் ` லவ் யூ எனச் சொல்லிவிட முடியும். சொல்வதற்கான முஸ்தீபுகளோடுதான் வந்திருக்கிறேன்.எங்கள் அலுவலகத்தில் நிறைய பெண்கள். எல்லோரிடமும் ஏதேனும் ஓர் அம்சம் கவரும். ஆனால், இவளிடம் எல்லாமும் மொத்தமாகக் குவிந்துகிடக்கின்றன. நான் சற்று நெருங்கிப் பேசினாலும் அதைவைத்து, அலுவலக வேலைகளில் அட்வான்டேஜ் எடுத்ததில்லை. எதையும் தாமதித்ததில்லை. வேலைநிமித்தமாக ஏற்படும் கோபங்களையும் டென்ஷன்களையும் அதன் இயல்பிலேயே எதிர்கொண்டுபதில் அளிப்பவள். எல்லாவற்றையும்விடவும் இவளிடம் காணப்படும் ஹ்யூமர்சென்ஸ், பெண்களிடம் அரிதாகத் தென்படும் விஷயங்களில் ஒன்று. கெக்கேபிக்கே என எதற்கெடுத்தாலும் சிரிப்பார்கள் அல்லது நகைச்சுவை என்பதே புரியாமல் விழிப்பார்கள். ஆனால், இவள் சட்டயர்களை அதற்கான மரியாதையோடு உள்வாங்கிச் சிரிப்பவள். மேல் இருந்து நம் வாழ்வை யாரோ உற்றுநோக்குகிறார்கள் என்றேனே, அது இப்போதும் நிகழ்கிறது.

நான் காதலைச் சொல்ல யத்தனித்தபோது ஆரம்பித்தாள்.

ப்ச்
ஆனா ஒண்ணு பாஸ். இதுக்கு முன்னாடி இருந்த கம்பெனிகள்ல உங்களை மாதிரி யாருமே இல்லை அல்லது என் கண்கள்ல படலை. ஒருத்தன் இருந்தான் கொஞ்சம் ஓகேயா. பேசினதுமே பட்டுன்னு `லவ் பண்றேன்னு சொல்லிட்டான். இடியட்.

நான் அனிச்சையாக மேலே பார்த்தேன். உற்றுநோக்கும் அந்தக் கடவுள் தென்படுகிறாரா?

ஏன்ப்பா
நீ செம பெர்சனாலிட்டியா இருக்க. செமயா டிரெஸ் பண்ற. லவ் பண்ணாம என்ன பண்ணுவான் என் கட்சிக்காரன்? என்றதும், காபி மூக்கில் ஏறிவிடுமோ என அஞ்சும் அளவுக்குச் சிரிக்கத் தொடங்கினாள்.

பின்னர் அமைதியாக, “அப்படி இல்லை பாஸ். அதெல்லாம் தானா நடக்கணும். இட்ஸ் லைக் ரெய்னிங். நல்லா பேசிட்டா லவ் வந்துரும்னு சொன்னா, நம்ம ஊர்ல யார்தான் பேசல சொல்லுங்க?

என்ன பதில் சொல்வது என்பதை யோசிப்பதைவிடவும், அப்படியே விட்டுவிடுவதே உத்தமமாகப்பட்டது. பணிப்பெண்ணைப் பார்த்து காற்றில் கையெழுத்திடுவதுபோல் கோடு கிழித்தேன். பில்லை எடுத்து வந்து பதவிசாக நீட்டினாள்.

ல்லவேளையாக மார்ச் மாதம் வந்தது. ஆடிட்டிங், இயர் எண்டிங் என அலுவலகம் பற்றி எரியத் தொடங்கியது. உண்மையிலேயே வேலைப்பளுவில் மூழ்கிவிட்டால், அது மற்ற பெரிய வலிகள், காதல், பிரச்னை எல்லாவற்றையும் மறக்கடித்து, நம்மை வேறு ஓர் உலகத்துக்குத் தூக்கிச் சென்றுவிடும். அப்படித்தான் ஆகிப்போனேன். சில நேரங்களில் நான் கத்தியதைப் பார்த்து, என்னை மனிதக்குரங்கு என்றுகூட ரம்யா நினைத்திருக்கக்கூடும். பேசுவதும் அரிதாகி இருந்தது. எதைத் தொட்டாலும் கேள்விகள்.
ஆடிட்டர்கள் பிறக்கும்போதே நர்ஸிடம்,
`
என்ன ஊசி போடப்பட்டது?’,
`
எத்தனை எம்.எல்.?’
எனக் கேட்கும் குழந்தைகளாகப் பிறந்திருப்பார்களோ?’’ என ஆடிட்டரிடமே கேட்டேன்.’’

சிரித்து, தன் முத்தை எதுவும் உதிர்க்கவில்லை அவர்.

ஒருவழியாக எல்லாமும் முடிந்து, நான் அனுப்பவேண்டிய வருட ஆய்வறிக்கையைத் தயார்செய்து கையெழுத்திட்டு அனுப்பச் சொல்லிக் கொடுத்ததும்தான் நிம்மதி.

மார்ச் முடிந்த களைப்பும் சரியாகத் திட்டமிட்டு டார்கெட் முடித்துவிட்ட உற்சாகமும் கலந்து, விற்பனை மற்றும் அக்கவுன்ட்ஸ் மக்களோடு ஜலக்கிரீடைக்குக் கிளம்பிவிட்டேன். பாபுவை வாகாக எனக்கு வலதுபக்கம் உட்காரவைத்துக்கொண்டேன். இடதுபக்கம் ஊறுகாய் இருந்தது. மொபைலை ஸ்விச் ஆஃப் செய்ததால் கிடைத்த தரமான நேரமும் மகிழ்ச்சியும் அந்த இரவை நுரைத்து நிறைத்தது.

றுநாள் சீக்கிரம் வந்து என் கேபினில் அமர்ந்திருந்தேன். ஏனெனில், என் உள்ளுணர்வு ஏதோ ஒன்றை நோக்கி உந்தியிருந்தது. நான் நினைத்ததுபோலவே மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்திருந்தேன். என்னிடமிருக்கும் பழக்கம், யாருக்கேனும் முக்கிய மெயில் அனுப்பினால் மறுநாள் சென்ட் மெயிலில் போய் ஒருமுறை படித்துப் பார்ப்பது. ஆய்வறிக்கையை கூரியர் செய்யச் சொன்னதால், டெஸ்க்டாப்பில் இருந்த டாக்குமென்ட்டை மேய்ந்துகொண்டிருந்தேன். பிளண்டர் மிஸ்டேக் என்பார்களே, அதைச் செய்திருந்தேன்.
`
கோடிகள்என மேலே குறிப்பில் இருந்தவற்றை எல்லாம் லகரங்களில் மாற்றிக் குழப்பியிருந்தேன். என்னிடமிருந்து இப்படி ஒரு தவற்றை, நானே செய்தேன் என்று ஒப்புக் கொண்டாலும்கூட மேலிடம் ஒப்புக்கொள்ளாது. அப்படி ஒரு நம்பிக்கை என் மேல். அதைத் தகர்ப்பது என்பது தற்கொலைக்குச் சமம். இருப்புக்கொள்ளவில்லை. எப்போதும்
9.30-
க்கு வந்துவிடும் ரம்யா, இன்று
9.35
ஆகியும் வரவில்லை. என் அத்தனை ஆற்றாமையும் அவள் மீது கோபமாகக் குவியத் தொடங்கியது.

தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டேன். எப்படியும்12
மணிக்குள் கூரியர் போய்விடும்.

மணி
10.

ரம்யா வந்து உற்சாகமாக,
குட் மாஎன்று ஆரம்பித்தவள், என் கோலம்கண்டு ஹோப் யூ ஆர் ஓகே பாஸ்? என்றாள்.

என் அதீத தன்னம்பிக்கையின் காரணமாக, நான் செய்த தவற்றை இவளிடம் ஒப்புக் கொள்ளவும் மனம் வரவில்லை. உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவளை ஏறிட்டேன்.

நேத்து உங்க மொபைல் ஸ்விச் ஆஃப்.

சரி, பார்ட்டி மூட்ல இருக்கீங்கன்னு டிஸ்டர்ப் பண்ணலை
சொல்லிக்கொண்டே கூரியரில் அனுப்பியிருக்கவேண்டிய கவரை, தன் டிராவிலிருந்து எடுத்துவந்தாள்.

ஒரு நொடி நான் பூர்ணம் விஸ்வநாதன் போல் `அம்மா பரதேவத…’
என மனதுக்குள் சொல்லிக்கொண்டே அவளைப் பார்த்தேன் சற்று மிடுக்காக.

சம்திங் ராங் பாஸ் இதுல
நம்பர்ஸ் எல்லாம் சில இடத்துல லாக்ஸ், சில இடத்துல எனச் சொல்லத் தொடங்கியவளை மறித்து, ரம்யா, ஒண்ணு பண்ணு. ஜஸ்ட் கெட்அவுட் ஆஃப் ஆபீஸ் ரைட் நவ். கார்னர் காபி டேல வெயிட் பண்ணு. ஒரு இம்பார்ட்டன்ட் விஷயம் பேசணும்.

அவள் குழப்பமாக என்னைப் பார்த்து கவரைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். நான் அந்த கவரை யாரும் பார்க்காதவண்ணம் தொட்டுக் கும்பிட்டுவிட்டுக் குப்பையில் கிழித்தெறிந்தேன்.

காரை எடுத்துக்கொண்டு அவள் முன் நின்று உள்ளே ஏறச் சொன்னதும், அதே குழப்பத்தோடு ஏறினாள்.

என்னாச்சு, எனி இஷ்யூ? உங்க முகமே சரியில்லையே!

நான் எதுவும் பேசாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். ஊர் எல்லையைத் தாண்டி, .சி.ஆர் பக்கம் பறந்தது தகரக் குதிரை.

ரம்யா, எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலை. நீ மட்டும் பார்க்காம, மத்தவங்க மாதிரி, கூரியர் குடுக்கச் சொன்னார், கவர்ல போட்டுக் குடுத்துருவோம்னு அனுப்பியிருந்தா, என் மானம் போயிருக்கும்.

பாஸ், சில்லி மேட்டர். நீங்க எவ்ளோ க்ளியரா வொர்க் பண்ணுவீங்கனு எல்லாருக்கும் தெரியும். இட்ஸ் ஜஸ்ட் என் எரர்.

அதான்
எப்பவும் தப்பு பண்றவன் தப்பு பண்ணா, குழாயில இன்னிக்கும் தண்ணி வரலைங்கிற மாதிரி க்ராஸ் பண்ணிருவாங்க. நம்பிக்கையை உடைக்கிற மாதிரி திடீர்னு தப்பு பண்ணும்போதுதான், பண்றவங்களுக்கும் சரி, ரிஸீவ் பண்றவங்களுக்கும் சரி, ஈஸியா எடுத்துக்க முடியாமல்போயிடும். ரொம்பப் பெருசா தெரியும். இப்படிப் பண்ணிட்டோமேனு நாமளும், இவனை நம்பிக் கொடுத்தோமேனு அவங்களும் யோசிக்கிற புள்ளி இருக்கே
அது கொஞ்சம் கொஞ்சமா பெருசா உருமாறிடும்.

நான் பேசப் பேச அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போ வெறும் தேங்ஸ் எல்லாம் பத்தாது. செம டிரைவ் கூட்டிப்போங்க. லாங்ங்ங்ங்ங்கா
அவள் அழுத்திய `ங்ங்ங்கள் குறைந்தபட்சம்
40
கிலோமீட்டர் என்ற அர்த்தம் கொடுத்தது. இந்த முறை மேலே இருந்து உற்றுநோக்கும் ஆள் எனக்குச் சாதகமான ஒன்றைச் செய்தார்.

எஃப்.எம்மில், `கண்மணி நீ வரக் காத்திருந்தேன்’ பாடல். அந்தப் பாடல் வரும் வரையில் இருந்த மனநிலை, முற்றாக மாறிவிட்டதுபோல் ரம்யா, அய்யோஎங்க அப்பா இந்தப் பாட்டுன்னா உயிரையே விடுவாரு என்றாள்.

ஆம்
நம்மை மறந்து உயிரையே தரும் பாடல்தான். `ஆசை தீர பேச வேண்டும் வரவா
வரவா? என்ற இடத்தில் `வரவா?வில் குழையும் யேசுதாஸ் கொடுத்த தைரியத்தில், ரம்யாவின் கையைப் பற்றி விடுவித்தேன். 

தன்னம்பிக்கை புக்ஸ் படிக்கிறவங்களே இப்படித்தான் பாஸ். கைகொடுக்கும்போதே இம்ப்ரெஸ் பண்ணுறேன்னு போட்டு அழுத்தி ச்சே! எனத் தன் கையை உதறிச் சிரித்தாள்.

மென்மையாகவும் பற்றத் தெரியும் என்பதுபோல் பற்றினேன்.

பாபு என்னை போனில் அழைத்து, ரம்யா லீவு சொன்னாங்களா சார்? என்றான்.

சொல்லிட்டுத்தான் இருக்காங்க என நான் சொன்னது, பாபுவுக்குப் புரியாது என்பது எனக்குத் தெரியும்.

அந்த டிரைவ் கொடுத்த உற்சாகத்தில், அன்று மாலை மிகச்சரியான அறிக்கையை அனுப்பிவிட்டு,
கிளம்புறேன் பாஸ்’’ என்றவளிடம்தேங்க்ஸ் என்றேன்.

நான் எப்போதும் திமிராகவும் சம்பிரதாயத்துக்கும்தான் நன்றி சொல்வேன். ஆனால், ரம்யாவிடம் இப்போது சொன்ன `தேங்க்ஸ் என் அடிமனதிலிருந்து எழுந்தது.

சென்னை அப்படி ஒரு மழையைப் பார்த்ததில்லை என்பதுபோல் ஒரு மழை நாள்.காலை
10
மணிக்கு வெளியே கும்மிருட்டு. இப்படியான நாளிலும் நாக்கை லேசாகத் துருத்திக்கொண்டு கடமையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த பாபுவின் தோளில் தொட்டு, செம க்ளைமேட்ல?” என்றேன். அவன் ஆமா சார்” எனச் சொல்லிக்கொண்டே கால்குலேட்டரை எடுத்து எதையோ செய்துகொண்டிருந்தான்.

நான் ரம்யாவைத் தேடினேன். ஜன்னல் பக்கமாக நின்று மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் பாதிப் பேர் வெளியே நிற்பதும், உள்ளேயே அரை வட்டமாக நின்று பேசுவதும் என, மழை நாளுக்கான மரியாதையைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஒரு டிரைவ் போனா சூப்பரா இருக்கும்ல? ப்ச்! ஆனா, வேலையிருக்கு” என்று சொல்லிக்கொண்டே ரம்யாவின் பக்கவாட்டில் நின்று, `குனிந்துவானம் பார்த்தேன். என் கையில் ஆவி பறக்கும் தேநீர். அதிலிருந்து எழும் இஞ்சியின் வாசம் எனக்கு மிகவும் பிடித்தது.

உங்க கார் சாவியைக் குடுங்க
நாங்க வேணா போறோம்” என்றாள் மாலினியைச் சேர்த்துக்கொண்டு.

சில கேள்விகள், பதில்களை எதிர்பார்த்துக் கேட்கப்படுவதில்லை. போலவே, சில பதில்கள் கேள்விகளுக்கானதும் இல்லை.

சிரித்துக்கொண்டே என் இடம்நோக்கி நடந்தேன். வாட்ஸ்அப் செய்தி ஒளிர்ந்தது.

இதுவரை ரம்யா எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய அனைத்துமே அலுவல் தொடர்பான செய்திகள்தான். ஆனால், இந்த முறை நோட்டிஃபிகேஷன் வரும்போதே உள்ளுணர்வு ஓர் உணர்வுக்குத் தயார்படுத்தியது.

I
kept one small box on your left.

நான் உடனே இடது பக்கம் பார்க்கவில்லை.  மாறாக, ரம்யாவைப் பார்த்தேன். எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு ஜன்னலில் மழைவானம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

இடதுபக்கம் இருந்த சிறிய அட்டைப் பெட்டியைப் பிரித்தேன். மீண்டும் வாட்ஸ்அப்.

ரப்பர் பந்தான நான், இனி” எனப் புள்ளிகள் வைத்திருந்தாள்.

பெட்டியினுள் பார்த்தேன். அழகான கண்ணாடிப்  பந்து. வலது கையில் பிடித்துக் கொண்டு,  இடது கைக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன். அரை நொடி கன்னம் சுருக்கிச் சிரித்தவள், மீண்டும் திரும்பி மழை பொழியும் வானம் பார்க்கத் தொடங்கினாள்!

 *

ஆனந்த விகடன், 

ஓவியம் : ஸ்யாம்.

2017.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி