Homeசிறுகதைகள்மீனுக்குட்டி

மீனுக்குட்டி

‘எப்பிடியாச்சும் இந்த மரத்துல ஏறிப்புடணும்’

மீனுக்குட்டிக்குச் சட்டென விழிப்புத் தட்டியது. கடந்த ஒரு வாரமாக இப்படித்தான் அதிகாலை வேளைகளில் பட்டென எழுந்துவிடுகிறாள். காரணம், ஒரு வாரத்திற்கு முன்பு இந்தப் புதிய வீட்டில் குடியேறியது. புதிய இடம் என்பது காரணம் அல்ல. இந்த வீட்டின் வாசலில் இருக்கும் இந்த மரம். கிளை இலைகள் பரப்பி அப்படி அழகாக நிற்கும் மகிழமரம்.

எப்படி ஆகஸ்ட் 15ஆம் தேதியில் பிறந்துவிட்டதாலேயே தேசப்பற்று அதிகமாக இருப்பதுபோல் இருக்கிறார்களோ அப்படித்தான் மீனுக்குட்டியின் மனம், மீனுக்குட்டி என்ற பெயரின் காரணமாகவே இன்னமும் ஒரு சிறுமியின் மனநிலையில் இருப்பதாகக் கொள்ளலாம். எப்படி இந்தப்பெயர் வந்தது என இன்றுவரை எவரும் ஆராய்ந்தது இல்லை. அவள்தான் மூத்தவள். நல்ல உயரம். குட்டி என்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லாத பெண். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். ஆனாலும், இப்போதுவரை எல்லோருக்கும் மீனுக்குட்டிதான்.

எழுந்து, வாசலுக்கு வந்தாள். அதிகாலை. மிக லேசாக பனி விழுந்துகொண்டிருந்தது. எதிர்வீட்டு பானு துண்டைச் சுற்றிக்கொண்டு, கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். பானு என்றுதான் சொன்ன நினைவு மீனுவிற்கு. இன்னும் பெயர்கள் மனிதர்கள் அவளுக்குப் பிடிபடவில்லை இந்த ஒரு வாரத்தில்.

மீனுக்குட்டி நிமிர்ந்து மரத்தைப் பார்த்தாள். ஏழு எட்டு அடிவரை நடுமரம். மிகச்சிறிய பிடிமானம்தான். கால் வைப்பது கடினம். அதற்கு மேலே இரண்டு பெரிய கிளைகள். கைகளை அகல விரித்து அழைப்பதுபோல் நீண்டன. அதில் ஒரு கிளை சற்று நீண்டு வாசல் பக்கமாய் வளைந்து நின்றது. மரம் முழுக்க இலைகள். தெருவிளக்கு வெளிச்சத்தில் ஓவியம்போல் நின்றிருந்தது அந்த மரம். காற்றில் சலசலக்கும் மரத்தைவிட, நிச்சலனமாய் நிற்கும் மரங்கள் அழகு எனில், அதிகாலையின் குறைந்த வெளிச்சத்தில் பறவைகள் சடசடக்கும் மரம் பேரழகு. ஒருநாள்கூட இப்படி நின்று எந்த மரத்தையேனும் ரசித்திருக்கிறோமா என்று மீனுக்குட்டிக்குத் தோன்றிய நொடியில் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது.

“வர்றேன் வர்றேன் இரு” என அனிச்சையாக சத்தம் கொடுத்துக்கொண்டே ஓடினாள்.

‘‘ஏழு வயசாச்சு… இன்னும் அஞ்சு நிமிசம் அம்மாவக் காணம்னா அழுது ஊரக்கூட்டி அலறுறா… ஊர்ல இல்லாத அதிசயப் பிள்ள பாரு…’’ என மீனுக்குட்டியின் மாமியார் அந்த அதிகாலையிலும் தன் அன்றாடத்தைச் செவ்வனே ஆரம்பித்தாள்.

முதல் அடி - சிறுகதை

நல்லவேளை, மகள் அழுததால் உள்ளே வந்தாள். அவள் இருந்த மனநிலைக்கு, ஆள் நடமாட்டம் இல்லையென்பதால் மரத்திற்கு அருகில் சென்று தாவிடலாம் என நினைத்தி ருந்தாள். மாமியார் எழுந்து அமர்ந்திருந்ததைக் கவனிக்கவில்லை. இவள் தாவியிருந்தால், அதை மாமியார் பார்த்திருந்தால் அவ்வளவுதான் என நினைத்தாள்.

சிணுங்கிய மகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே, அருகில் கால்களைப் பரப்பித் தூங்கிக்கொண்டிருந்த சின்னவனைப் பார்த்தாள். வாயிலிருந்து விரலை எடுத்துவிட்டாள். அவன் மீண்டும் படக்கென வாயில் நுழைத்துக் கொண்டான்.

“கீத்தா கீத்தா” எனச் சன்னமாக முணுமுணுத்தாள். `ம்ம்’ கொட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்தாள் கீதா.

மகளின் கால்களைப் பிடித்துவிட்டாள்.


மீனுக்குட்டியின் தம்பி பூமிநாதன் இப்படித்தான் அவளைப் பார்த்தவுடனே கால்களை நீட்டுவான்.

“யக்கா பிடிச்சுவிடு.”

“இப்ப மட்டும் அக்கா நொக்கா.”

“ஏ ப்ளீஸ் பிள்ள, டஸ்டர்லாம் கொண்டாந்தேன்ல, நிய்யி மிஸ்ஸுகிட்ட குடுத்துப் பீத்துனல்ல.”

“சரி நீட்டு.”

பூமியின் கால்களைப் பிடித்துவிடும்போதுதான் அந்த ஆசையை முதன்முதலில் சொன்னாள் மீனு.

“டெலேய் வாடக சைக்கிள் எடுத்தாரியா எனக்கு.”

காலை விருட்டென்று பின்னுக்கு இழுத்தவன் படக்கென எழுந்தான்.

“லூசா பிடிச்சிருக்கு ஒனக்கு, தொலிய பிச்சுப்புடுவாரு அப்பா.”

“பொட்டலுக்குப் போய்ருவம்டா பூமி… டேய் ஒருதடக்க ஓட்டிப்பாக்குறண்டா அக்கா.”

“வேணி ஓட்டுச்சாக்கும்.”

மீனு அமைதியாக இருக்க, அதுதான் காரணம் என அறிந்த பூமி, சம்மதித்தான். பக்கத்து வீட்டு வேணியின் முன் தன் அக்காளும் சைக்கிள் ஓட்டிக்காட்ட வேண்டும் என ஏனோ அவனுக்குத் தோன்றியது.

திட்டப்படி, முதலில் பூமி கிளம்பினான். கொஞ்சம் இடைவெளி விட்டு மீனுக்குட்டி தொடர்ந்தாள்.

ஊருணிக்கு முன்பு இருந்த மரத்தடியில் கொட்டகையைப் போட்டு மூன்று குட்டி சைக்கிள்கள், ஒரு அரை சைக்கிள் ஒரு பெரிய சைக்கிள் என ஐந்து சைக்கிள்களை வைத்து ஆகப்பெரிய தொழிலதிபர்போல் பிச்சமுத்து அய்யா எந்நேரமும் ஏதேனும் ஒரு சைக்கிளைத் தலைகீழாகக் திருப்பிப்போட்டுப் பேன் பார்த்துக்கொண்டிருப்பார். என்ன செய்கிறாரோ இல்லையோ, அந்த எண்ணெய் விடும் டப்பாவின் கூர் முனையை செயின் மீது காட்டி டப் டப்பென சத்தம் எழுப்பிக்கொண்டே இருப்பார்.

“என்னடா?”

“சைக்கிள்.”

“எட்டணா இருக்கா?”

பூமி கையில் பொதித்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தைத் திறந்து காட்டினான்.

வாங்கித்தொலைக்க மாட்டார். சைக்கிளை விடும்போதுதான் கணக்குப் பார்த்து வாங்குவார். சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தையும் மீறி அந்த நாணயத்தைப் பாதுகாப்பது பெரும்பாடு.

“பள்ளியோடம் இல்லையா இன்னிக்கு?”

“லீவு.”

இந்தக் கிளைக் கேள்விகள் எல்லாம் அவர் எழுந்துகொள்ளும் முஸ்தீபுகளுக்கு இடையில் இடைவெளியை அடைக்கத்தான். எழுந்து அவர் வீட்டின் முன் இருந்த மரப்பலகைக்குள் கையை விட்டு அந்த நோட்டை எடுத்தார்.

பெயர், நேரம் எல்லாம் எழுதி, “பாத்துக்கப்பா” என, சுவரில் மாட்டப் பட்டிருக்கும் கடிகாரத்தைக் காட்டுவார். அவர் கல்யாணப் புகைப்படம் அங்கும் இங்குமாய் வெட்டி ஒட்டி வைக்கப்பட்ட கடிகாரம்.

மீனுக்குட்டியும் வந்து சேர, “அட்றா சக்க, சைக்கிளி பழகுறீகளோ அக்கா” என அவள் மூக்கைத் தொடவர, அவள் பின்னுக்கு நகர்ந்து, “ஆமா தாத்தா” என பூமியைப் பார்த்து சைகை காட்ட,

“ரெண்டுகால் சைக்கிளா, வேணாம்பிள்ள, மூணுகால் எடுப்போம், பஸ் சைக்கிள்” என ஸ்டியரிங் வைத்த சைக்கிளைக் காட்டினான்.

“டேய், ரெண்டுகால் சைக்கிள் ஓட்டிப்பழகணும்டான்னா இவனொருத்தன்.”

மீனுக்குட்டிக்குள் ஆர்வம் புகத்தொடங்கியது.

பூமி, டக் அடித்துக்கொண்டே முன்னால் போய் ஏறி ஓட்டிக்கொண்டு போக, பொட்டலை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ப் பின் தொடர்ந்தாள்.

எப்படியும் இன்று முதுகைச் சாய்க்காமல், ஒருபக்கமாய் ஒதுங்காமல், வேணிபோல் ஓட்டிவிடவேண்டும் சைக்கிளை என்று தீர்மானமாக நினைத்துக்கொண்டே பொட்டலுக்குள் இறங்கினாள்.

“சீக்கரம் வருவியா, எம்புட்டு நேரம், அய்யா எப்பிடி சல்ல்ல்லுனு ஓட்டுனனா… ஒத்தைக்கைய விட்டு.”

“போடா பொய் சொல்லி, ஒத்தக்கைய எங்க விட்ட?”

பூமிக்குச் சுருக்கெனக் கோபம் வர, உடனே சைக்கிளை டக் அடிக்கத் தொடங்கினான். சற்று தூரம் போய் ஏறித் திரும்ப வரும்போது ஒரு கையை விட எத்தனித்தவன் தடுமாறி விழ, மீனு அவனை நோக்கி ஓடினாள்.

“கல்லுல ஏத்திட்டேன்க்கா, இல்லாட்டி ஒத்தக்கைய விட்டு ஓட்டுவேன்” கையை மடக்கி லேசாகச் சிராய்த்து பசும்ரத்தம் புள்ளிகள்போல் துளித்த இடத்தில் எச்சில் வைத்துத் துடைத்தான்.

சைக்கிளை எடுத்து, முன் பக்கமாய் நின்று ஹேண்டில்பாரை நேராக்கினான். அப்படிச் செய்யவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். வேணியின் அண்ணன் அடிக்கடி சைக்கிள் பாரை இப்படிச் சரி செய்வதைப் பார்த்திருக்கிறான்.

“என்னா நேரா வந்து ஒக்காருர, டக் அடிச்சு ஏறுபிள்ள.”

மீனுக்குட்டிக்கு ஜிவ்வென்றானது.

முதல் அடி - சிறுகதை

“பாவாடை தடுக்கும்டா, நீ டவுசர் போட்ருக்க.”

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது, டக்கடி.”

“வேணாம்டா, ப்ளீஸ்டா” எனச் சொல்லிக்கொண்டே அங்கு கிடந்த ஒரு கல்லைப் பார்த்தவள், சைக்கிளை அங்கு உருட்டிக்கொண்டு போய் ஏறி அமரத் தயாரானாள்.

பூமி சீட்டைப் பிடித்துக்கொண்டு “முதுக நெரா வைல்ல’’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சரட்டென மிதிக்க, பள்ளத்திற்கு ஏற்ப, சைக்கிள் சல்லென உருண்டது.

பூமி கத்திக்கொண்டே ஓடினான்.

“ஏ எங்கக்கா சைக்கிள் ஓட்டிருச்சே, ஏய்ய் எங்கக்கா சைக்கிள் ஓட்டிருச்சே!”

மீனுக்குட்டிக்கு றெக்கை முளைத்ததுபோல் இருந்தது. எப்படியும் பத்தடி ஓட்டிவிட்டதாக நினைத்து, தம்பியைப் பெருமையாகத் திரும்பிப்பார்த்தாள்.

ஒரே போடு அவள் முதுகில். அம்மா.

பூமி ரோட்டில் ஏறி ஓடிக்கொண்டிருந்தான்.

“எத்தாம்மொக்க வேலைய பண்ற பொட்டக்கழுத. எங்கடா ஆளக்காணமேண்டு பாத்தா, இங்க வந்து பயலுக மாதிரி கூத்தடிக்கிறவ…”

பேசிக்கொண்டே இன்னும் இரண்டு அடிகள். சைக்கிள் ஹேண்டிலை இறுகப் பிடித்துக்கொண்டாள் மீனுக்குட்டி.

விசயம் கேள்விப்பட்டு அப்பா வந்திருந்தார். பின்னால் பூமி பதுங்கி நின்றான்.

ஏதும் சொல்லாமல் சைக்கிளை வாங்கிக்கொண்டு, “போத்தா போ, இங்குட்டுல்லாம் தனியா வரக்கூடாது, ஊர் கெடக்குற கெடப்புல நீ வேற’’ என முணுமுணுத்துக்கொண்டே சைக்கிளை பூமியின் பக்கம் மாற்றிவிட, அவன் அந்தச் சூழலில் இறுக்கம் மறந்து, டக் டக் என ஒருபக்கமாய் சைக்கிளைச் சாய்த்து ஏறி ஓட்டிப்போனான். அப்பா முன் சைக்கிள் ஓட்டிப்போவது ஒருவிதப் புது உணர்வாய் இருந்ததை அவன் வாயெல்லாம் பல்லாக, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனது உறுதி செய்தது.


கீதாவும் சின்னவனும் எழுந்து டி.வி பார்த்துக்கொண்டிருக்க, மீனுக்குட்டியின் கணவன் பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“என்னா எந்நேரமும் மந்திரிச்சு விட்ட கணக்காவே இருக்க, புது வீடு பிடிக்கலயா?”

உடனே அவனுடைய அம்மா “அப்பிடிக்கேளு, எந்நெரமும் வெளில குடுகுடுன்னு போறா, நிமிந்து மானத்தப்பாக்குறா, மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டே வர்றா.”

மீனுக்குட்டிக்குச் சிரிப்பு வந்தது. “அட, வீட்டுக்கு என்ன, சூப்பரா இருக்கு, சுத்தி எதுவும் செடி நடலாமாண்டு பாத்தேன், அதுக்கு இம்புட்டு.”

என நகர்ந்தவளை, “நடுவம் நடுவம்” என்று முறைத்துக்கொண்டே கிளம்பினான்.

“ஏண்டா மருதக்குள்ள போனா இம்புட்டு சுண்ணாம்பு வாங்கியாடா, கலர் சுண்ணாம்பு.”

என காலியான டப்பாவைக் காட்டினாள்.

முதல் அடி - சிறுகதை

“ஏங் இதெல்லாம் முக்குக் கடைலயே வாங்க மாட்டிகளோ” என சடவுச் சத்தம் கொடுத்துக்கொண்டே வெளியேறினான்.

சமையல் முடித்து பிள்ளைகளுக்கு ஊட்டியதும், மாமியார்க்கு வைத்தவள், அந்தப் பகல் பொழுதின் வெறுமையை வெளியே எட்டிப் பார்த்தாள்.

இரண்டு பக்கமும் தலையைத் திருப்பிப் பார்க்க, தெருவில் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை.

உச்சிக்கிளைகளில் வாங்கிய வெயிலை அப்படியே தடுத்துக்கொண்டு, நிழல் பரப்பிக்கொண்டு நின்றது மகிழமரம். காற்றுக்கு லேசாக இலைகள் அசைந்துகொடுத்தன. இன்னும் பிரிக்காத சாமான் மூட்டைகளில் ஒன்றை எடுத்து மரத்தின் பக்கவாட்டில் போட்டால் ஏறிவிடலாம் என நினைத்தாள்.

எதிர்வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வந்தவன், இவள் நிற்பதைப் பார்த்து, மீண்டும் உள்ளே போய்விட்டு வந்தான். சட்டையை மாற்றியிருந்தான். சிரித்தான்.

“புதுசா வந்திருக்கீகளா?”

`ஆம்’ எனத் தலையாட்டிவிட்டு, அவன் போவதற்காக ஒரு நொடி காத்திருந்தாள். அவன் வீட்டு வாசலில் இருந்த ஏதோ ஒன்றை இழுத்துப் போட்டு ஏதோ ஒன்றைப் பண்ணும் வேலையில் இறங்கினான். புரிந்துகொண்டு உள்ளே திரும்பினாள். ஆளே இல்லாம இருந்துச்சு, ‘ஏறியிருக்கலாம், முண்டப்பய சைட் அடிக்கிறானாம்… ஆளப்பாரு’ என முணுமுணுத்துக்கொண்டே போனாள்.

“ஒன்னய பாக்கவா அவென் வந்தான்?”

பூமியின் குரலில் இருந்த உக்கிரத்தைப் பார்த்து சற்று பயந்தவள்,

“டேய் கத்தாதடா, அப்பா காதுல கேட்டா அப்புறம் டியூஷன் வேணாம்டுருவாரு.”

“அதெல்லாம் விடு, அவென் அங்கன எதுக்கு வந்து நின்னான்? வேணி சொல்லுச்சு எங்கிட்ட.”

மீனுக்குட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,“டேய் பத்தாப்போட நிறுத்து வேண்டவர்ட்ட கெஞ்சிக்கூத்தாடி காலேஜ் வரைக்கும் வந்துட்டேன், ஏண்டா எழவக் கூட்டுற, அவென் யார் என்னான்னே தெரியாது.”

“பொய் சொல்லாது மீனுக்குட்டி, சிரிச்சியாம்ல?”

அவ்வளவுதான், அதுவரை அடக்கிவைத்திருந்த ஆற்றாமை கங்காய் வெளிப்பட்டது.

“சிரிச்சனா, எவென் சொன்னது? ஆனா இனிமே சிரிப்பேன், போ.”

பூமிக்கு ஒரு நொடி என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை. பெண் சட்டென ஆமோதித்து ஆவதைப் பார் எனச் சொல்லி விட்டால் அவ்வளவுதான், எதிர்வினையாக என்ன செய்துவிடமுடியும்? குழப்பமாகவும் பயந்தும் நின்றான்.

“யக்கா, அவென் பெரிய ஏழ்ர…”

“டேய் யார்னே தெரியாதுடான்றேன்,”

“அப்புறம் எதுக்கு அங்க நின்ன?”

“அந்த ஒத்தமரத்துல ஏற முடியுமாண்டு வேணி கேட்டா, நானும் டெய்லி பஸ்ல போகும்போது பாப்பேன்… சரி, ஏறலாம்னு நின்னோம்.”

பூமி அதிர்ந்தான்.

பாவாடை தாவணியோடு அவள் அந்த மரத்தில் ஏறுவதை அவனால் கற்பனை செய்துபார்க்கவே முடியவில்லை.

“எப்பிடி ஏறுவ” என அவள் உடையை மேலும் கீழும் பார்த்துக் கேட்டான்.

“எப்பிடியோ… வேணியும் முடியவே முடியாதுன்னு சொன்னா, ஆனா ஏறிப்புடுவேண்டா, நீ மட்டும் அங்க வரலைன்னா இன்னிக்கு ஏறியிருப்பேன்.”

பூமிக்கு அவளை ஓங்கி ஓர் அறை விடவேண்டும் போல் இருந்தது.

“பொம்பளப்பிள்ள மாதிரியா பேசுற? பாவாட தாவணியப்போட்டுக்கிட்டு 

மரம் ஏறுவியோ, இரு அம்மா வரட்டும்.”


“அம்மா... ம்ம்மா…” சின்னவன் குரல் மதியத் தூக்கத்தை முடித்து வைத்தது. எழுந்து, மாமியாரிடம் சென்றவள், கீதா தன் பாட்டியோடு அமர்ந்து ஏதோ மும்முரமாய் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவள் தலையில் செல்லமாய்த் தட்டிவிட்டு, சின்னவனை இழுத்துக்கொண்டு வெளியில் வந்து மரத்தடியில் அமர்ந்தாள்.

வண்டிச்சத்தம் கேட்டதும் சிரித்தான். அப்பாவின் வண்டிச் சத்தம் என எப்படியோ அடையாளம் கண்டுகொள்கிறான் எனச் சிரித்தாள்.

அப்பாவைப் பார்த்ததும் தாவினான்.

“ரவுண்டடிப்பமா ரவுண்டு” என அவனை வாங்கி பெட்ரோல் டாங்க்கில் அமரவைத்து ரவுண்டு போனான். “டீ போட்டு வையி” என்றான் வண்டியைத் திருப்பும் முன்.


“அது சரிடியம்மா, நான் வரல இந்த வில்லங்கத்துக்கு” வேணி ஒரேடியாய் மறுத்தாள்.

மீனுக்குட்டிக்கு ஏமாற்றமாய் இருந்தது. அப்பா, தம்பி, வேணியின் அண்ணன் என எல்லோரும் தினமும் இரண்டு முறை அதைப்பற்றி அவ்வளவு பெருமையடித்துக்கொள்கிறார்களே அப்படி என்ன அதில் இருக்கிறது எனப் பார்ப்போம் என வேணியிடம், “நம்மளும் மந்த டீக்கடைல மசாலா டீ குடிப்பமா, அந்த கிளாஸ்ல” என்று கேட்டதிலிருந்து வேணி வெடுக் வெடுக்கென இவளைத் திட்டிக்கொண்டிருக்கிறாள்.

“கல்யாணத்துக்கு பாத்துக்கிட்டுக் கெடக்காரு ஒங்கப்பா, எனக்குப் பரிசம் போட்டுட்டாய்ங்க, மந்தைல மசாலா டீ குடிச்சா விடிஞ்சுரும்டீ யம்மா, வேணும்டா தூக்குபனில பூமிய விட்டு வாங்கி வரச்சொல்லிக் குடிப்போம்.”

“அட போடி, அங்க, கடை வாசல்ல நின்னு, அந்தக் கண்ணாடி டம்ளர்ல குடிப்பம்ன்னா…”

அப்படி இப்படி எனப் பேசி வேணியை ஒருவழியாக சம்மதிக்க வைத்து, மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகும் நாளில், பஸ் ஏறும் முன் டீக்கடையில் நின்றுவிட்டாள். வேணிக்கும் ஆசைதான். கடைக்குக் கொஞ்சம் முன்னரே பஸ்ஸிற்கு நிற்பது போல் நின்றுகொண்டார்கள். போக வேண்டிய பேருந்துகள் வரிசையாக வந்தன, காலியாகவும். விட்டுவிட்டு தக்க தருணத்திற்காகக் காத்திருந்தார்கள்.

யாரும் இல்லாத நேரம் போய் `ரெண்டு டீண்ணே’ எனச் சொல்லிக் குடிப்பது என்பதே திட்டம்.

ஒருவழியாகக் கூட்டம் நழுவி, மாஸ்டர் மட்டும் கடையில் இருக்க, இருவரும் கடையை நோக்கிப் போனார்கள். “மசாலா டீன்னு சொல்லணும்டீ” எனக் கிசுகிசுத்தாள் வேணியிடம். “நீயே சொல்லு.”

கடை முன் நிற்கவும் எங்கிருந்தோ தபதபவென ஒருவன் ஓடிவந்து டீக்கடை முன்னர் மோதி நிற்க, அவனை விரட்டிக்கொண்டு வந்தவர்கள் அவன் மேல் விழுந்து இழுக்க, கெட்ட கெட்ட வார்த்தைகளாய்த் திட்டத் தொடங்கி, அடித்தார்கள்.

“தண்ணிய போட்டா பெரிய வெண்ணெயாடா நிய்யி, எந்தூர்ரா” என ஏதேதோ சொற்கள். வேணி ஓடிப்போய் பஸ் ஸ்டாண்டில் நின்றுவிட்டாள். மீனுக்குட்டி பரிதாபமாய் அவளை நோக்கி நடந்தாள்.


இஞ்சி வாசம் காற்றில் மிதக்க, “கும்முனு இருக்கும்டா ஒங்கம்மா போடுற டீ” எனச் சொல்லிக்கொண்டே குடித்தான். “ஆமா, சீமைல்ல இல்லாத டீ” என மாமியார் சிரிக்க, அவளுக்கும் சிரிப்பு வந்தது. “நல்லா சொல்லுங்க, எந்நேரமும் அது நல்லாருக்கு இது நொல்லையாருக்குன்னு என்னத்தயாச்சும் சொல்றாரு.”

“அட சொல்லட்டும்டீ, எங்கிட்டல்லாம் நல்லா இல்லைன்னுதான் சொல்லுவானுங்க… நல்லா இருந்தா வாயையும் அதையும் மூடிக்கிட்டுப் போயிருங்க. சொல்லட்டும்…சொல்லட்டும்.”

ராகமாய் இழுத்துப் பாட ஆரம்பித்தாள் கிழவி.

இருள் நிதானமாய்ப் படரப்படர இரவு வந்துவிட்டிருந்தது. நீள நீளமாய் நிழல்கள் ஊடாட, மரத்திற்கு மேலே நிலா மிக மெதுவாய் நங்கூரம் போல் நகர்ந்துகொண்டிருந்தது. காற்றுக்கு அசைந்த மரத்தின் கிளைகள் மீனுக்குட்டியை வா என்று அழைப்பதுபோல் பட்டது. தெருவில் எல்லோரும் அங்கங்கே நின்றும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மீனுக்குட்டியின் மனம் கணக்குப் போட்டது. எப்படியாவது தாவிவிட்டால், அதோ, அந்தச் சிறிய கொப்பில் கால் வைத்துவிடலாம். அங்கிருந்து இதோ இந்தப் பிசின் வைத்த சிறிய மேட்டில் இன்னொரு காலடி வைத்தால் கிளையைப் பிடித்துவிடலாம். ஏறி, கிளைமீது அமர்ந்து கீழே பார்க்க வேண்டும். நினைக்கும்போதே ஜிவ்வென்று ஆனது.

முதல் அடி - சிறுகதை

“எம்புட்டு நேரமா கூப்புடுது எங்கம்மா” ஏப்பம் விட்டுக்கொண்டே வெளியே வந்தவன், சொல்ல,

“ப்ச்” என எழுந்து போனாள்.

“கீதாப்பிள்ள எங்க?”

“ஆமா இந்நேரம் வரைக்கும் முழிச்சிருக்குமா?”

“அதுவும் சர்த்தான், பொம்பளப்பிள்ள தூங்கட்டும், நீ வாடா சிங்காக்குட்டி” என மகனைத் தூக்கி, மேல் நோக்கி வீச அவன் சிரித்து, சிணுங்கினான்.

உலுக்கினாள் மாமியார். “ஏய் மீனுக்குட்டி, எந்திரி, எந்திரிடி, ஐயய்யோ…”

அவளின் அலறல் தூக்கிவாரிப்போட்டது மீனுக்குட்டியை. நல்ல தூக்கம் தூங்கியிருந்தி ருக்கிறாள், மணி ஏழு ஆகிவிட்டிருந்தது.

வாசலில் கூட்டம். குழப்பமான சத்தம். சட்டெனத் திரும்பி, கணவனைப் பார்த்தாள். காணவில்லை. சின்னவன் தூங்கிக் கொண்டிருந்தான். 

மீனுக்குட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ கலவரம் என மனம் அலறியது. மாமியார் வாசலை நோக்கி ஓடினாள்.

சிலபொழுது இப்படித்தான். ஏதோ மிகப்பெரிய அசம்பாவிதம் எனத் தெரிந்தும், ஓரிரு நிமிடம் எதுவும் செய்யாமல் வாங்கப்போகும் அதிர்ச்சியைத் தாங்குவதற்குத் தயார் ஆகும் மனம். அமர்ந்திருந்தவள், பயமும் பதற்றமுமாக எழுந்து வாசல் நோக்கி ஓடினாள்.

எல்லோரும் மரத்தையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, விசும்பலும் அழுகையுமாக கீதா மரக்கிளையில் நின்றிருந்தாள். அவள் கால்கள் 

நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தன.

“பொம்பளப்பிள்ளை பண்ற காரியமா, எப்பிடிய்யா ஏறுனா?’’

“அட அந்த வண்டில காலடி வச்சு ஏறி அப்பிடியே தாவிருச்சு போலப்பா, பாவம் எறங்கத் தெரியாம முழிக்கிது, தாவு பாப்பா” எனக் கைகளை அவளுக்கு நேராக நீட்டினார்கள்.

அழுதுகொண்டே நின்ற கீதா, அம்மா வெளியே வந்ததும் பயந்துபோய்ப் பார்த்தாள், உதடுகள் விம்ம.

மீனுக்குட்டி கண்களில் நீர்வழிய புறங்கையால் துடைத்துக்கொண்டே, மகளைப் பார்த்துச் சிரித்தாள்.

மீனுக்குட்டி சிரிப்பதைப் பார்த்த கீதா, அழுகையின் ஊடே, அம்மாவைப் பார்த்து மிக மெலிதாய்ச் சிரித்தாள்.

*

ஆனந்த விகடன் ( முதல் அடி என்ற தலைப்பில்)

2021

ஓவியம் : அரஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி