Homeசிறுகதைகள்அன்று பிறந்த குழந்தை

அன்று பிறந்த குழந்தை

வனுக்கு அங்கே போக விருப்பமில்லை. பொதுவாக புத்தாண்டு
கொண்டாட்டங்களில் இருந்து அவன் விடுபட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இம்முறை ஒரு சிறிய
வெறுமையோடு தான் ஆண்டின் இறுதி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

மகிழ்ச்சிக்குத்தான் காரணம் தேவைப்படுகிறது, இந்த மனங்களுக்கு.
ஆனால், வெறுமைக்கும் சோகத்திற்கும் ஏதோ ஓர் இனம்புரியாத பயத்திற்கும் எந்தக் காரணமும்
தேவைப்படுவதில்லை. அப்படித்தான் ஓர் இனம் புரியாத சிறு கலக்கம் அவனுக்குள். அதை தவிர்த்து
மகிழ்ச்சியாக இருக்கும் பொருட்டு ஆண்டின் இறுதி நாள் இரவில் அந்த உயர்மட்ட ஆட்கள் கூடும்
‘க்ளப்’பிற்கு போக முடிவெடுத்திருந்தான்.

போகும் வழி எங்கும் வெளிச்சத் தோரணங்கள். க்ளப்பின் வாசலிலேயே
இந்திரவிழா போன்ற ஏற்பாடுகள் தென்பட்டன. சென்னையின் அத்தனைப் பணக்காரர்களும் கூடும்
இடம்போல் இருந்தது, அவ்வளவு வெளிச்சம்.

உள்ளே, புல்தரை மீது கம்பளிகள் விரித்து, வட்ட வட்டமாய் மேசைகளில்
அமர்ந்திருந்தார்கள். அனைவரின் உடலும் ஆடிக்கொண்டே இருந்தன. அவர்களுக்கு எதிரே மேடையில்
உச்ச ஸ்ததியில் பாடல்கள்.

இசை மட்டும் இல்லாமல் போயிருந்தால் கொண்டாட்டங்கள், கொண்டாட்டங்களாக
இருந்திருக்காது என்று தோன்றியது அவனுக்கு. அவனை அழைத்த நண்பர்கள் அமர்ந்திருந்த வட்டமேசையை
அடைந்தவுடன், ஹோவெனக் கத்தினார்கள். ஒரு சிறு கத்தல் தான் அங்கு தேவை. அதன் எதிரொலியாக
எல்லாப்பக்கமும் ஹோவெனும் சத்தம் எழுந்து அடங்கியது. இப்படி நிறைய முறை சத்தங்கள் எழுந்து
அமிழ்ந்து கொண்டிருந்தது.

அங்கிருக்கும் ஒவ்வொரு மனமும் 12 மணியை நோக்கிக் குவிந்து
இருந்தது.

இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது புத்தாண்டு பிறக்க.

அவன், சுற்றிலும் பார்க்கத் துவங்கினான். நூற்றாண்டு காலப்
பழமையான ஒயின் என நண்பர் அவனுக்கு எதிரே வைக்க, உள்ளே இருக்கும் திரவத்தை விட அதைத்
தாங்கி இருந்த கோப்பை அவனுக்குள் ஒரு பரசவத்தை ஏற்படுத்தியது. அகண்டு விரிந்த மேற்பாகம்
குவிந்து இறங்கி ஒற்றையாக மெல்லிய கைப்பிடியென முடியும் கோப்பை. அதை விரல்களில் நாகரீகமாய்
பிடித்துப் பார்த்தான். தாமரைப் பூவின் தண்டில் பிடித்து அதன் மொட்டு ஆரம்பிக்கும்
அடிப்பாகத்தை மூன்று விரல்களால் தாங்குவது போல் பிடித்தான்.

’தக்கத் தய்ய தய்யா’ என்ற பாடலை மேடையில் பாடத்துவங்கிய நொடியில்
அதுவரை அடக்கிவைத்திருந்த உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாய் சிலபல பெண்கள் மேடைக்கு
அருகில் சென்று ஆடத்துவங்கியதும் கலைகட்டத் துவங்கியது.

நண்பர்கள் கோப்பைகளை ‘மீண்டும்நிறைத்தல்’ நிமித்தம் பானம்
தேடி அங்கங்கு சென்று வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

அவன் பொறுமையாக நூற்றாண்டு திராட்சையின் திரவ வடிவத்தை ருசித்துக்கொண்டே
கவனித்தான். அவனுடைய மேசைக்கு அருகில் ஒரு பாட்டி. அப்படிச் சொன்னால் நிச்சயமாக கோவித்துக்
கொள்வார். மிக உயர்தர டீ-ஷர்ட், அதில், கொசகொசவென எழுத்துருக்கள், ஏதோ ஆங்கில சொற்கள்.
கைகளை மேடையில் ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தவரின் பார்வை அவனைக் கடக்கையில் ஒரு புன்னகையோடு
நிற்க, அவனுக்கு ஒரு கணம் எப்படி அதை எதிர்கொள்வதெனத் தெரியாமல் தடுமாறி பின் பதிலுக்குப்
புன்னகைத்தான். இப்போது அந்தப் பாட்டி, கையில் இருந்த மதுக்கிண்ணத்தை உயர்த்தி அவனை
நோக்கிக் காட்ட, அவன் தடுமாறினான். தம்ம்மாரே தம்ம்ம்ம்ம் என மேடைப் பெண் உற்சாகத்தை
ஏற்றும் பொருட்டு  ‘கமான் எவ்ரிபடி’ என்பது
போல் கத்தினாள்.

அந்த சூழலுக்குள் ஓரளவு போய்விட்டிருந்தது அவன் மனம். பாடலுக்கு
ஏற்ப அவன் கால்கள் மேசைக்கு அடியில் ஆடிக்கொண்டிருந்தன. அவனுக்குப் பக்கவாட்டில் இருந்து
ஒவ்வொருவராக மேடை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர்.

அவனுடைய நண்பர்கள் வருவதும் பின் ஏதேனும் காரணத்திற்காக மறு
மூலைக்குப் போவதுமாய் இருந்தார்கள். எல்லோருக்குள்ளும் ஓர் உற்சாகம். அவனுக்கும் இப்போது
ஒருவித உற்சாக மனநிலை.

நிமிர்ந்து பார்த்தவன் திடுக்கிட்டான். பாட்டியைக் காணவில்லை.
அவ்வளவு பெண்கள் அத்தனை கவர்ச்சிகள் சிரிப்புகள் என இருக்க அவனுக்கு ஏனோ அந்தப் பாட்டியின்
உடை,செயல்பாடுகள்,சிரிப்பு என எந்த வகையிலோ ஒரு பிடித்தம். சுற்றும் முற்றும் தேடினான்.
கூட்டம் இப்பொழுது உற்சாகத்தின் அடுத்தபடியில் ஏறி இருந்தது. ஒரே கூச்சல். ஆட்டமா தேரோட்டமா
பாடல் தான் காரணம். உடனடியாக அவன் மனம் ஒருநொடி பாடகி ஸ்வர்ணலதாவை நினைத்தது. சோகம்
தாக்கியது. ஆனால் இளையராஜாவின் இடியிசைகள் இடையிசைகள் மீண்டும் அவனை மீட்டுக் கொண்டுவந்தது.

பார்த்துவிட்டான். அவனுக்குள் சிரிப்பும் வியப்பும் கலந்து
பார்த்துக்கொண்டிருந்தான். ஆம், கூட்டத்தின் நடுவே பாட்டி நடனமாடத் துவங்க, அந்த திடீர்
ஓவெனும் குரல் அவருடைய ஆட்டத்திற்காகத்தான் என புரிந்தது. மிக நேர்த்தியாகவும் மிக
ஆக்ரோஷமாகவும் ஆடிவர், பாடல் முடிந்ததும் தன் மேசைக்கு வந்து எதையோ தேடுவது போல் பார்க்க,
அவனையும் அறியாமல் அவன் பாட்டியின் அருகே சென்று தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தான்.

இதைத்தான்.. என்பதுபோல் வாங்கிப் பருகினார். அவனைப் பார்த்து
சிரித்தார். அருகே அமர்ச் சொல்லிக்கொண்டே அமர்ந்தார். அமர்ந்தான்.

 “நல்லா ஆடினீங்க”

மிகக்கவனமாக ஆண்ட்டி,பாட்டி போன்ற பின்னொட்டுகளைத் தவிர்த்தான்.

எப்படி வாட்சப் செய்திகளில் பொம்மைகள் இல்லாமல் அனுப்புவது
வேறு ஒரு பொருளைக் கொடுக்கிறதோ அப்படி உணர்ந்தான். இதில் எல்லாம் வெறுமை வரும் என்று
எவராது எதிர்பார்த்திருப்பார்களா எனத் தோன்றியது.

 “அட, சும்மா சொல்லாத,
அங்க பார் எவ்ளோ பொண்ணுங்க எப்பிடி ஆடுறாங்கன்னு, அதுதான் டான்ஸ்”

அவனுக்கு இரண்டு ஆச்சர்யங்கள். முதல் முறையிலேயே ஒருமையில்
அவனை விளித்தது. இரண்டாவது அவர் சொன்னபிறகுதான் அவன் கவனம் அந்தப் பெண்கள் மீதே போனது.
அதுவரை இந்தப் பாட்டியை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பது.

”ஆனா, இவங்க எல்லாத்தையும் விட அதிகமா நான் ப்ராக்டீஸ் பண்ணிருக்கேன்,
அதான் நல்லா இருந்துருக்கும்”

சிரித்துக்கொண்டே சொன்னார். கோப்பை ஒருமுறை மேசையிலிருந்து
மேலெறி மீண்டும் இடத்தை அடைந்தது.

“ஓ, நீங்க டான்ஸரா? டான்ஸ் டீச்சர்?”

கையில் இருக்கும் மதுக்கிண்ணம் சிந்திவிடாதவாரு சிரித்தார்.
ஏதோ தவறாகக் கேட்டுவிட்டான் என்பதுபோல் இருந்தது அந்தச் சிரிப்பு.

அவன் குழப்பமாகப் பார்த்தான்.

“முப்பது வருசம் இருக்கும். கல்யாணம் ஆன புதுசுல நார்த்ல
இருந்தோம், அப்பறம் கொஞ்ச வருசம் கல்கத்தால கூட இருந்தோம்.. எல்லா வருச நியூ இயர்க்கும்
போய்ருவோம். எங்க இருந்தாலும் அவருக்கு இப்பிடி ஒரு க்ளப், இப்பிடி ஒரு ஹேப்பினஸ்,
ஒரு கூட்டம் கிடைச்சிரும். ப்ச் இந்த வருசம் தான்..அவர் இல்லாம. இப்பதான் நாலஞ்சு மாசம்
முன்னால”

அவனுக்கு உடனே புரிந்தது. எத்தனை வருடக் கொண்டாட்டங்கள்,
ஆட்டங்கள், பாட்டங்கள். அதனால்தான் இவ்வளவு எளிதாக, இவ்வளவு நளினமாக, இவ்வளவு ஆக்ரோஷமாக
இந்த வயதிலும் ஆட முடிகிறது பாட்டிக்கு என நினைத்தான்.

அதுவரை மிக நாகரீகமாக, மெலிதாக உதட்டில் ஒற்றி எடுத்துக்கொண்டிருந்த

மதுக்கிண்ணத்தை இறுகப் பற்றி இப்போது ஆக்ரோஷமாக ஒரே மூச்சில் குடித்தார். அவனுக்கு
மிக லேசான பயம் வந்தது. பாடல்களை வேறு நிறுத்தி இருந்தார்கள், பத்து நிமிட ஓய்விற்காக.

“மிஸ்ஸிங் ஹிம். மிஸ்ஸிங் மை ஓல்ட் மேன்..இதெல்லாம் பாத்திருக்கணும்
அவரு”

அவனால் புரிந்து கொள்ளமுடிந்தது. எத்தனை வருடங்கள் கூடவே
வாழ்ந்தவர். அதுவும் இவ்வளவு மாடர்னாக,  ‘மேட்
ஃபார் ஈச் அதர்’ போன்றதொரு வாழ்வு எனத் தோன்றியது.

மேடையில் “ஜோடி எல்லாரும் வாங்க” என்றதும் “ஒரிஜினல் ஜோடி
மட்டுமா என கூட்டத்தில் ஒருவர் கேட்க கூட்டம் ஓஹ்ஹ்வென உற்சாகக் குரல் எழுப்ப, உப்புக்
கருவாடு ஊறவச்ச சோறு பாடல் துள்ளல் இசையாக ஆரம்பிக்க இளம் கணவன் மனைவிகள் ஆடத்துவங்கினார்கள்.

அவனுக்கு பாட்டியும் தாத்தாவும் இத்தனையாண்டுகள் இப்படி ஆடி
இருப்பார்கள் எனும் நினைப்பே மகிழ்ச்சியை வரவழைத்தது.

இப்படித்தானே ஆடி இருப்பீர்கள் எனக் கேட்டான்.

அவன் குடிக்க வைத்திருந்த கோப்பையை எடுத்து சட்டென கவிழ்த்துக்
குடித்து,

“அந்தக் கெழவனுக்கு நான் டீ-ஷட்ர்ட் போட்டாலே பிடிக்காது,
ஆடவா விடுவான். முப்பது வருசமா மனசுலயே ஆடி ஆடி ப்ராக்டிஷ் பண்ணது.. எப்பிடி இருந்தது
ஆட்டம்”

சொல்லிக் கண் அடித்தார்.

கவுண்ட் டன் ஆரம்பிக்க,

அவன் கையைப் பிடித்து ”வா” என அழைத்து இழுத்துப் போனார்.

 போகப் போக, கமலுடைய
புல்லட் சத்தம் அதிகரிக்கத் துவங்கியது.

ஆடிக்கொண்டிருந்த பாட்டியிடம், அவ்வளவு கூச்சலுக்கு இடையே
கத்தினான்.

“நெஜமாவே இதுதான் புது வருசம் ஒங்களுக்கு”

அதைக் கூட காதில் வாங்காமல் கைகளை உயர்த்தி ஆடிக்கொண்டிருந்தார்.

 ‘I’m a New born
baby’ என்று அச்சிடப்பட்ட டி ஷர்ட் காற்றில் ஆடிப் பறந்தது.

*

குமுதம்

ஜனவரி’24

 

                                    

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி