Homeசிறுகதைகள்புன்கணீர்

புன்கணீர்

தில்லியின் டிசம்பர் குளிர் வழக்கத்தை விடவும் அதிகம் என்பெதெல்லாம்
தெரியாமல், முதல்முறையாக இந்தக் கடுங்குளிர் பற்றி அறியாமல் கல்யாணம் செய்த கையோடு வந்து
விட்டார்கள் பாலாவும் ஆனந்தியும்.

அதைவிடப் பெரிய குழப்பத்தோடுதான் அந்தக் குளிரில்  நின்றிருந்தான் பாலா. குழப்பம் அல்ல அது. பயம். அவனுக்கு
அருகில் அவனைவிட அதிக பயத்தோடும் குளிர் நடுக்கத்தோடும் நின்றிருந்தாள் ஆனந்தி.

குளிருக்கு கொஞ்சம் கதகதப்பாக இருந்தது அந்த சாலையோரக் கடை.
இருவருக்குமே வினோதமாய் இருந்தது அந்த அடுப்பு. அந்த சூடு.

மண்ணால் ஆன சிறிய குகை போல, வீட்டிற்குப் பின்னால் களிமண்ணில்
கோயில் கட்டுவார்களே அது போல இருந்தது அந்த மண் அடுப்பு முகடு.

அதற்கு உள்ளே சூடு கனன்று கொண்டிருக்க, சப்பாத்தி மாவைப்
போல் இருந்த ஒன்றை தட்டித் தட்டி வீசி பெரிதாக்கி சிறிதாக்கி ரொட்டி என அந்த மண் அடுப்பிற்குள்
இருக்கும் பக்கவாட்டு சுவர்களில் லாகவமாக, சாணியை உருட்டித் தட்டி வறட்டியைச் சுவரில்
அப்புவதுபோல் அப்பிக்கொண்டிருந்தான் அந்த வடக்கத்தி சமையல் நிபுணன்.

என்ன செய்கிறான் எனப் பார்க்கும் பொருட்டு அருகில் போன பாலா,
அந்த இளஞ்சூடு கொடுத்த கதகதப்பில் ஆனந்தியையும் அருகில் அழைத்து நிற்கவைத்துக் கொண்டான்.
அவள் கைவிரல்களப் பற்றிக் கொண்டது இன்னும் கொஞ்சம் இதமாக இருந்தது.

அருகே வானத்திற்கும் பூமிக்குமாய் எறிந்து எறிந்து வதக்கிக்
கொண்டு இருந்தான் ஒரு மிசோரம் இளைஞன். சவுமின் சவுமின் என கத்திக்கொண்டிருந்தார் ஒரு
முதியவர். எல்லோர் வாயிலும் குளிர் புகை.

“அது நூடுல்ஸ் தான” என்று கிசுகிசுப்பாய் கேட்டாள் ஆனந்தி.

இருவரும் வாடகைக்கு வீடு பார்க்க, ஜனக்புரியில் இருக்கும்
சக்கர்பூரில் வந்து, சந்துகளில் புகுந்து வீட்டைக் கண்டுபிடித்து, வீட்டு சொந்தக்காரர்
நாயர் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் எனச் சொன்னதால், காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால்,
அருகில் இருக்கும் அந்தக் கடையின் முன் நிற்கிறார்கள்.

இந்தப் பத்து நாட்களில் டெல்லி கொஞ்சமே கொஞ்சமாய்ப் பழகி
இருந்தது இருவருக்கும், அந்தக் குளிரைத் தவிர. நெஞ்சுக்கூட்டிற்குள் நேராக இறங்கும்
அளவு குளிர் இருக்கும் எனத் தெரிந்திருக்கவில்லை.

சுடச்சுட ரொட்டி, தால்மக்னி எனும் கருப்பு பாசிப்பருப்பு
கலந்து சுடச்சுட திண்பது பிடித்துப் போன ஒன்றாக இருந்தது இருவருக்கும்.

அருகே ஒரு வடக்கத்தி இளைஞன் அவன் மனைவியோடு நின்றிருந்தான்.
கிட்டத்தட்ட இவர்களைப் போலவே இளம் வயது சிறிய உடல் அமைப்பு, ஆனால் கையில் கைக்குழந்தை.

பாலா அவனைப் பார்த்து சிரிக்க,

அவன் சட்டென அருகில் வந்து அந்தக் குழந்தையைக் காட்டி, ஹிந்தியில்
ஏதோ சொல்லி அழ, பாலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அந்த இளைஞன் சொல்லச் சொல்ல குழந்தையைப்
பார்த்தாள் ஆனந்தி. குழந்தை அசைவற்று இருந்தது.

பார்சல் வாங்கிக்கொண்டிருந்த பெண், மலையாளி,

தமிழா? என்று கேட்டுவிட்டு, மலையாளத்தமிழில் விசயத்தைச் சொன்னாள்.

அதாவது, காதல் திருமணம் செய்துகொண்டு உஜ்வா என்ற அருகில்
இருக்கும் கிராமத்தில் இருந்து ஓடி வந்தவர்களாம். அப்படி இப்படி என வருடங்களை ஓட்டினாலும்
திடீரென குழந்தை வைத்தியம் பார்க்க காசு இல்லாததால் இறந்துவிடும் நிலையில் இருக்கிறது
என்றும்  எங்கே போவது ஒருவேளை இறந்தால் எப்படி
அடக்கம் செய்வது என்று கூடத்  தெரியவில்லை,
ஊரில் இன்னமும் இவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் போக முடியாது என்ற விபரங்களைச்
சொல்லிவிட்டு, கடைப்பக்கம் திரும்பி “ஜல்தி தேதோ” என்று அதட்டி, பார்சலை வாங்கிப் போய்விட்டாள்.

பாலாவிற்கு திக்கென்று ஆனது நெஞ்சம். ஆனந்தி, அந்தப் பெண்ணின்
கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தாள்.

“எவ்வளவு வேண்டும்” என சைகையில் கேட்டான். ஐம்பதா, ஐநூறா,
ஐந்து ஆயிரமா எனப் புரியாதவாறு ஐந்து விரல்களை மடக்கி மடக்கிக் காட்டினான் உஜ்வா இளைஞன்.

கையில் இருந்த பணத்தில் நூறுகள் ஐநூறுகள் என எடுத்துக் கொடுத்தான்.
அவர்கள் இருவரும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போனார்கள்.

மண் அடுப்பில் ரொட்டிகளைச் சுட்டுக்கொண்டிருந்தவன் இவர்களைப்
பார்த்து சிரித்தான்.

“ஆஜ் ஆப், ரோஜ் கஹானி ஹெய்”

ஆனந்தி பாலாவிற்கு மொழி பெயர்த்தாள்,  “இன்னைக்கு நாம மாட்டினோம், இது டெய்லி நடக்குற
கத இங்க, அப்ப ஏமாத்திட்டானாடா நம்மள, அந்தக் குழந்தைக்கு அப்ப ஒண்ணும் இல்லல்ல, சாகாதுல்ல”

பாலா இல்லை என்று இடவலமாகத் தலையாட்டிக்கொண்டே நாயர் வீடு
நோக்கி நடந்தான்.

                
டில்லி என்றதும் பெரிய பெரிய சாலைகள், வானளாவிய கட்டிடங்கள், பளபளப்புகள்
மட்டுமே இருக்கும் என்று நினைத்திருந்தார்கள் பாலாவும் ஆனந்தியும்.

ஆனால் அந்த சக்கர்பூர் என்பது ஜனக்புரியின் வலது ஓரத்தில்
பிரியும் சற்றே பெரிய சந்திற்குள் போனது. பெரிய பெரிய கற்கள் பதித்த தரை தளம் ஏற்ற
இறக்கமாகப் போக, சரியாக பதினைந்து அடிகளுக்கு ஒரு திருப்பம் வலது இடது என திரும்பித்
திரும்பிப் போகும் சந்துகளின் பக்கவாட்டில் சிறிதும் பெரிதுமாய் பாதியாக பூசிமுடிக்கப்பட்ட
வீடுகள், எல்லோருமே வாசலில் தான் அமர்ந்திருந்தார்கள்.

சற்று வெட்டவெளி போல் இருந்த இடத்தில் இரண்டு எருமை மாடுகள்.
அருகிலேயே பால் கறக்கும் இரும்பு அடுக்குகள். ஆனந்தி “இதான் டெல்லி எரும போலடா” என்றதும்
சிரிப்பு வந்தது.

அப்படியான ஒரு கிராமந்திர அமைப்புக் கொண்ட இடத்தில் அந்தக்
காலத்திலேயே இராணுவப் பணி நிமித்தம் வந்துவிட்ட நாயர், இடம்வாங்கி மூன்று மாடிகளை நெடுநெடுவன
ஒல்லியான கட்டிடமாகக் கட்டி, வாடகைக்கு விட்டிருக்கிறார்.

    வர்கள் இருவரையும்
ஏற இறங்கப் பார்த்தார்,நாயர்.பாலாவிற்கு வெடவெடப்பான தேகம். கல்லூரி இறுதி ஆண்டுவரை விதவிதமான
யோசனைகளை நண்பர்கள்,பார்ப்பவர்கள் போவோர் வருவோர் எல்லாம் சொல்லி ஒவ்வொன்றாக சளைக்காமல்
செய்தவன். ஆனாலும் ஒல்லிபாலா எனும் பெயர் அப்படியேதான் தொடர்ந்தது.

தலைகீழாய் நின்றால் மொத்த இரத்த ஓட்டமும் முகத்திற்குப் போய்
கன்னம் லேசாக வைக்கத் துவங்கும் என்ற பாஸ்கரின் ஐடியாவைப் பின்பற்றி சுமார் ஒரு மாத
காலம் அப்படி நின்று, நடுமண்டையில் வலி ஏற்பட்டதுதான் மிச்சம். கன்னம் இன்னும் கொஞ்சம்
ஒடுங்கிப் போனதுபோல் வேறு இருந்தது. ‘தலகாணி வைக்கணும்னு சொல்லாம விட்டேன் போலே’ என
எளிதாக சொல்லிப்போய்விட்டான் பாஸ்கர்.

இது ஓர் உதாரணம் தான். ஒவ்வொரு அங்கத்திற்கும் இப்படி ஒவ்வொரு
யோசனைகள். செயல்படுத்தல்கள் எனத் தொடர்ந்தன. 
இறுதியாக அவனே வெறுத்துப் போனது எனில், அது வெங்கடேஷ் அண்ணண் சொன்ன “ஒண்ணுக்க
மண்ணுல அடிச்சு அத கொழச்சுப் பூசிக்கிட்டா ஒடம்பு வைக்கும் பாலா”. நல்லவேளையாக அந்த
யோசனையை மற்ற நண்பர்களிடம் சொல்லி ‘fact check’ ல் இறங்கி, கேலி கிண்டல்களுக்கு ஆளாகி,
இத்தனை கேலிக்கு, ஒல்லிப்பிச்சான் என்ற ஒரே கேலியோடு போகும் என்று அத்தோடு கைவிட்டான்.

பிறகு வேலை கிடைத்து, ஆனந்தி கிடைத்து, ஓரளவு குண்டாக ஆகிவிட்டதாக
நினைத்தான். அவன் நினைவின் மீது விழுந்தது நாயரின் சொல்

“ஏம்ப்பா, நல்லா சாப்டமாட்டியா இப்பிடி இருந்தா எப்பிடி..”

நன்றாக கவனியுங்கள். கேள்விக்குறி இல்லை. எப்படி என நாயரின்
பார்வை ஆனந்தியின் மீது போனது. அதற்குள் ஆயிரம் பொருட்கள் பொதிந்து இருந்தன. அருகில்
இருந்த நாயரின் மனைவி தொண்டையைச் செருமினார்.

பாலா சிரித்தான். சங்கடமும், என்ன வேண்டுமானாலும் கேலி செய்துகொள்,
ஆனால் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே எனும் வேண்டுதலும் அந்த சிரிப்பில் இருந்தது.

நாயர் பகக்வாட்டில் திரும்பி, தன் மனைவியிடம் மலையாளத்தில்
சன்னமாகப் பேசினார்.

“ரொம்ப சின்ன வயசா இருக்காங்க. வீட்டுக்குத் தெரிஞ்சுதான்
கல்யாணம் பண்ணாங்களா, தமிழ்நாட்ல இருந்து இங்க எதுக்கு வரணும், பிரச்சனை ஆகிடாதா”

மனைவியிடம் சொன்னதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து பாலாவிடமும்
ஆனந்தியிடமும் பொதுவாகச் சொல்வது போல் சொன்னார்.

பாலாவிற்கு கழிவிரக்கமும் கோவமும் சேர்ந்துகொண்டது. எவ்வளவு
முயற்சி செய்தும் உடல் சற்று பருமனாக ஆகவில்லையே, இதோ இப்படி ஏச்சுக்கு ஆளாக வேண்டி
இருக்கிறதே என்று நினைத்தான்.

ஆனந்தி சிரித்துக்கொண்டே, “சார், நாங்க மேஜர். வீட்ல எல்லாம்
சொல்லிட்டுத்தான் வந்தோம். அவங்கள எப்ப வேண வரச் சொல்லிருக்கோம். உங்களுக்கு எந்த இஷ்யூவும்
வராது. எங்க கம்பெனி அட்ரஸ்ல வேணா விசாரிச்சுக்கோங்க”

சட்டென நாயரின் மனைவி எழுந்து வந்து ஆனந்தியை அணைத்துக் கொண்டு
உள்ளே கூட்டுப் போய்விட, நாயர் ஒருநொடி குழம்பி, பின் பாலாவைப் பார்த்துப் பெரிதாக
சிரித்தார்.

“அவ்ளோதான். ஆண்டி ஓக்கே, அப்போ அங்கிள் ஓக்கே”

பாலாவிற்கு நிம்மதியாக இருந்தது. ஏனெனில் கடந்த பத்து நாட்களாக
அந்த டில்லி குளிரில் அவ்வளவு அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது இந்த வீடு
பார்க்கும் படலம்.

இத்தனைக்கும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளையும்
செய்பவன் தான், காதல், கல்யாணம் வரை எல்லாமே திட்டம் என்றே தெரியாதவண்ணம் செய்த திட்டங்கள்.

த்தாம் வகுப்பு வரை இயல்பான நட்புதான் ஆனந்தியுடன் இருந்தது
அவனுக்கு.

நடுவில் இரண்டு ஆண்டுகள் கூடைப்பந்து ஆட்டத்தில் நாட்டம்
ஏற்பட்டு, அவன் ஒல்லியான தேக,உயர அமைப்பிற்கு அந்த ஆட்டம் நன்றாக வளைந்து கொடுத்ததால்,
மாவட்ட மாநில போட்டிகளுக்குப் போய்வரும் போக்குவரத்துகளில் இருந்தான்.

ரு ஞாயிறு நல் மதிய நேரத்தில், ஆனந்தியின் அம்மா பேருந்து
நிலையத்தில் இருந்து பெரிய கட்டைப்பை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவதைப்
பார்த்தவன் அதை வாங்கி சைக்கிளில் வைத்துக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தான். இது எந்த
வித திட்டமிடலும் இல்லாத நல்லெண்ண,உதவி வகைதான்.

ஆனால் உள்ளே இருந்து வந்த ஆனந்தியின் அந்தப் புதிய தோற்றம்
அவனை ஒரு நொடி அசத்தியது. ஒரு நொடிதான். சட்டென சுதாரித்தவன், வாசலிலேயே வைத்துவிட்டுப்
போகும் திட்டத்தை மாற்றி, ஆனந்தியால் தூக்க முடியாது என உள்ளே கொண்டு போய் வைத்து அருகில்
இருந்த மடக்குச் சேரில் அமர்ந்து தண்ணீர் கேட்டான்.

அவன் வலது கண் வாசல் நோக்கி அம்மாவின் வருகைக்காகவும் இடது
கண் ஆனந்தியின் நீரேந்திவரும் நடைக்காகவும் துடித்தன.

இரண்டும் ஒருசேர நிகழ,

“நல்ல வேள எங்க தண்ணி கூட குடுக்காம அனுப்பிருவாளோனு நினைச்சேன்”
என்ற அம்மாவிடம் அற்புதமாக சிரித்துப் பேசி, ஆனந்தியின் படிப்பு இன்னபிற குசலங்களை
விசாரித்து, அவளுடைய அம்மாவே, சரிப்பா கிளம்பு எனும்படி அமர்ந்துவிட்டான்.

அதன் பிறகு பாலாவிற்கு ஒவ்வொருமுறையும் ஆனந்தியின் வீட்டிற்குச்
செல்ல காரணங்கள் எவர் மூலமேனும் கிடைத்தன. அல்லது உருவாக்கினான். கோயில் வரி வசூல்
செய்பவர்களோடெல்லாம் போகத் துவங்கினான். வெளியில் நிற்பதும் பிறகு தயங்கி உள்ளே போவதும்
என மெல்ல முன்னேறி ஆனந்தியம்மாவிடம் நல்ல பெயர் எடுத்தான். தப்பித் தவறியும் ஆனந்தியிடம்
அவன் பேசவே இல்லை. அவளாக ஏதேனும் பேசினாலும் ஒற்றை சொல் பதில்களில் முறித்தான்.

“அவந்தான் சரியா பேசமாட்றான்ல்ல, ஏன் அவன வம்பிழுக்குற” என
ஆனந்தியின் அம்மா அவளிடம் கடிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தன அவன் பதில்கள்.

பரிட்சை முடித்து நேராக ஆனந்தியம்மாவிடம் போய் அமர்ந்து கொண்டு
பேச்சுக் கொடுப்பது. ஆனந்தி எப்படி எழுதினாள் எனக் கேட்டு, தான் சாய்ஸ் கேள்விகளைக்
கூட விடாமல் எழுதி இருநூறுக்கு இருநூற்றி ஐம்பது வரை பதில் எழுதி இருப்பதாக சொல்லி
ஆனந்திக்குத் திட்டு வாங்கிக்கொடுத்தான்.

”அந்தப்பையன் பாரு, திங்காம தூங்காம இப்பிடி ஒடம்பு தேய படிச்சு
எழுதுறான், நீ நல்லா திமுதிமு கோயில்மாடுமாதிரி ஒடம்ப வளர்த்து, ஃபெயில் மட்டும் ஆகு
இருக்கு ஒனக்கு” என ஆனந்திக்கு எச்சரிக்கை மணி அடிக்க வைத்தான்.

தேர்வு முடிவு வந்த அன்று ஆனந்தி பாலாவிற்காகக் காத்திருந்தாள்.
அவன் அந்தப் பக்கம் போகவே இல்லை.

 “நீயே இவ்ளோ மார்க்
வாங்கிருக்கன்னா நம்ம பாலா அப்ப” என சொன்ன அம்மாவை ஏற இறங்கப் பார்த்தவள்,  “வாட்டும் அவன் ஜஸ்ட் பாஸ் பண்ணிருக்கு நாயி” என
முணுமுணுத்தாள்.

வெளியில் போகும்போதெல்லாம் அவன் சைக்கிளை வெறிகொண்டுத் தேடினாள்.

நான்கைந்து மாதங்கள் தலைமறைவு ஆகிவிட்டவன், மாநில அளவிலான
கூடைப்பந்து போட்டியில் அவன் சேர்ந்திருந்த கல்லூரி அணி வெற்றிபெற, அவன் நடுநாயகமாக
நின்றிருந்த புகைப்படம் நாளிதழில் வந்த அடுத்த நொடி எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

“ஏதாவது ஒண்ணுல நல்லா வந்தா சரிதான்” என ஈரக்கையை துடைத்துக்கொண்டே
நாளிதழை வாங்கிப் பார்த்தாள். மிகச்சரியாக பாலாவின் முகத்தில் அவள் விரலில் இருந்த
ஈரம் பட்டு முகமெல்லாம் திட்டுத்திட்டாக ஆகிவிட்டிருந்தது. வாங்கி நாளிதழை ஊதி. தன்
முகத்தைச் சுட்டிக் காட்டியவனை சிரித்துக்கொண்டே பார்த்தாள் ஆனந்தி.

அவளுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்றும், லேசாக நெஞ்சுவலி
என மருத்துவமனைக்குப் போயிருப்பதாகவும் சொல்லிவிட்டு, அம்மாவும் கிளம்பிப் போனாள்.

“என்ன சார், உடனே எங்க அம்மா பின்னாடியே ஓடுவீங்களே, இன்னைக்கு
அப்பிடியே ஒக்காந்துட்டீங்க”

ஆனந்தியின் கிண்டலை ரசித்தான்.

“ஏண்டா திருத்துனவன் பாவம் பார்த்து பாஸ் போட்ருக்கான், இங்க
வந்து எங்கம்மாட்ட எவ்ளோ பில்டப், அப்ப மட்டும் கைல கிடைச்சிருந்த..”

“என்ன பண்ணிருப்ப”

அவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகே சென்று, அவன் தலையில்
குட்டுவது போல் போனவள், அவன் நிமிர்ந்து பார்த்தவுடன் சட்டென கையை கீழே இறக்கி பின்
வாங்கினாள். சிரித்தாள்.

“சரி இப்ப சொல்லு, எங்க அம்மா முன்னாடி ஏன் சீன் போட்ட”

“சீனா?”

“நடிக்காதடா, சொல்லு”

“சொன்னா கோவிச்சுக்க மாட்டியே”

“சொல்றதப் பொறுத்துதான்”

“ஒன்னயவிட ஒங்க அம்மா..”

இப்போது மின்னல்போல் ஒருநொடியில் ஓங்கி குட்டிவிட்டாள்

”அய்ய, உன்னவிட உங்க அம்மாக்கிட்ட பழகிட்டா ஈஸியா இருக்குமேனு”

குழப்பமாகப் பார்த்தாள்,

“என்ன ஈஸியா இருக்கும்?”

“நம்ம கல்யாணம்”

மீண்டும் ஒரு குட்டு.

இந்த முறை அவனுக்கு வலி எடுக்க, தலையில் தேய்த்துக்கொண்டே
சிரித்தான்.

“ஆனா எங்கமாக்குத் தெரியாம எங்கிட்ட பேச ட்ரை பண்ணிருந்தா
உன்னப் பத்தி பெருசா எதுவும் யோசிச்சுருக்க மாட்டேன்”

சிரித்தான். “தெரியும்ல்ல”

 “உன்னயப் பத்தி பேசிப்பேசி
எங்கம்மா தான் உன் மேல ஒரு இது வர வச்சுருச்சு”

“எது வர வச்சுச்சு?”

நாக்கை கடித்துக்கொண்டாள்.

“கெளம்புடா மொதல்ல”

தன்பிறகு,அவனுடைய கூடைப்பந்தாட்ட போட்டிகள் நிமித்தம் அவன்
வெளியூர் போகும் நாட்களில் அவனுடைய இன்மை உணரத் துவங்கினாள் ஆனந்தி.

அதன்பிறகான நான்கைந்து ஆண்டுகள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்
அந்த ‘இது’ எனும் சொல் அளவில் சீராக ஓடியது அவர்களது காதல் நதி.

பாலாவிற்குப் பெரிதாக எந்த அன்றாட எதிர்பார்ப்பும் அவளிடம்
இல்லை. அவள் உடன் இணைந்து வாழ வேண்டும் என்ற ஒன்றைத் தவிர.

எந்த எதிர்பார்ப்பும்,நோக்கமும் இல்லாமல் செலுத்தப்படும்
ஓர் எளிய அன்பிற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அது ஒருபோதும் கைவிடாது. தன்னை முறித்துக்கொள்ளாது.

அப்படித்தான் பாலா-ஆனந்திக்கு இடையில் முகிழ்ந்து கொண்டே
இருந்தது. இதோ, ஆனந்தியின் அப்பாவிற்கு சம்மதமில்லை. பாலாவின் அம்மாவிற்கு சம்மதமில்லை
என இரண்டு குடும்பங்களும் பேச்சு வார்த்தையை முறித்துக்கொண்டு விட, எல்லாவற்றையும்
விட, ‘நாம்’ தான் முக்கியம் என பாலாவிடம் சொல்லிவிட்டாள்.

               பாலாவின்
டில்லி நண்பனின் தந்தையுடைய தனியார் நிறுவனத்தில், இருவருக்கும் ஒரே கிளை, தில்லி நகரம்
எனப் பேசி, இனி வாழ்க்கை இப்படித்தான் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

கரோல்பாக் லாட்ஜ்களில் குறைந்த வாடகை, பின் நண்பன் வீடு,
என இந்த இரண்டு வாரங்கள் தங்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாகப் பார்த்து, ஒரு சர்தார்ஜி சொல்லி,
தமிழர்கள் அதிகம் வாழும் ஜனக்புரியில் இருக்கும் சக்கர்பூர் பகுதியில் வந்து நாயர்
முன் அமர்ந்திருக்கிறார்கள்.

அந்த மூன்றடுக்கு மாடி வீட்டில் இரண்டாவது தளம் காலியாக,
மலையாளிகளுக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு விடும் தன் கட்டுப்பாட்டை முதல்முறையாகத்
தளர்த்தி இருக்கிறார்.

சொல்லப்போனால் அவர் தளர்த்தவில்லை. எங்கே இன்னும் இரண்டு
வரிகள் பேசினால் ஆனந்தி அழுதுவிடுவாளோ என நாயரின் மனைவி சம்மதம் தெரிவித்து உள்ளே அழைத்துப்போனதால்தான்
நாயர் சம்மதிருக்கிறார்.

                      
சேச்சி கொடுத்த ஒரு புதிய பாய், இரண்டு தலையணைகள், மற்றும் இன்னபிற பொருட்களோடு
துவங்கிய நாட்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளம் பெற்றன. நான்கு ஐந்து மாதங்கள், காலையில்
கிளம்பிப் போய்விட்டு இரவு வருவது. எதிர்படும் நாயரையும் சேச்சியையும் பார்த்து லேசாக
சிரிப்பது என கடந்தன.

நான்கு மாதங்களில், ஒரு டப்பாவில், இருவரும் சம்பளத்தைப்
போட்டு, மொத்த செலவையும் அதிலிருந்து செய்வது, எழுதி வைப்பது, வேண்டியதை வாங்குவது
என ஒவ்வொன்றாகச் செய்தான் பாலா. ஆனந்திக்கு அவனுடைய திட்டங்கள், செயல்படுத்தல்கள் எல்லாமே
முன்பை விடவும் அதிகம் பிடித்தன.

இண்டியா கேட், ஆந்திராபவன் ஊறுகாய் சோறு, செங்கோட்டை என வாரம் ஓர் இடம் எனப் போய் அலுத்து, இரண்டு முறை தாஜ்மஹாலும் போய், இவ்வளவுதான் டில்லி எனும்
மனநிலைக்கு வந்தபொழுதுதான் அந்த செய்தி வந்தது. முதல்முறை வீட்டில் இருந்து வந்த அலைபேசி
அழைப்பு என்றதும் அவ்வளவு உற்சாகமாக எடுத்தாள் ஆனந்தி.

அவளுடைய அம்மாவிற்கு நெஞ்சு வலி என்றும், மிகவும் ஆபத்தான
கட்டத்தில் இருக்கிறார் என்றும் தகவல் சொல்லிவிட்டு வைத்துவிட்டார் அப்பா.

பாலாவின் அப்பாவும் அவர் பங்கிற்கு அவனை அழைத்து இந்த விசயத்தை
சொல்லி, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனால் தான் இப்பிடி என திட்டிவிட்டு
வைத்தார்.

கையில் இருந்த பணத்தில் விமானத்தில் ஏற்றிவிட்டான் ஆனந்தியை.
முதன் முதலில் விமானத்தில் இருவரும் போக வேண்டும் என நிறைய திட்டங்கள் வைத்திருந்தான்.
ஆனால் சூழல் காரணம் அவள் தனியாகப் போகிறாள்.

”ஏண்டா ஒரு மாதிரி இருக்க, ஒண்ணும் ஆகாது எங்கம்மாவுக்கு”

“உன்னவிட உங்க அம்மாவத்தான்” என சொல்லும்போது கண்ணீர் உகத்
தயாராய் இருந்தது அவனுக்கு. ஆனால் எப்படியே அழுகையை அடக்கிவிட்டான்.

அதுவரை அடக்கிக்கொண்டிருந்த ஆனந்தி முதல்முறையாக விசும்பி
விசும்பி அழுது அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.

விமானம் வான் ஏகி வெகுநேரம் ஆகியும் அந்த பாலம் விமானநிலையத்தில்
நின்றிருந்தவன், பின்னிரவில் வீட்டுற்குப் போனான்.

படியில் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தவர்கள் பாலாவைப் பார்த்ததும்
மெளனமானார்கள்.

மூன்றாவது தளத்தில் குடியிருக்கும் மேனனும் அவர் மனைவியும்.

அவர்கள் வழிவிடும்வரை அமைதியாக நின்றான். படிஏறிப் போகும்பொழுது
மேனன் நாயரிடம் சொல்வது அவனுக்குக் கேட்டது. அல்லது கேட்கும்படி சொன்னார். மலையாளம்தான்.
ஆனால் தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.

“இவங்க சந்தோஷத்துக்கு பெத்தவங்கள சாகடிக்கிறாங்க”.

அந்த சிறிய வீட்டில், முதல் முறை ஆனந்தி இல்லாமல் நுழைகிறான்.
வெறுமை ஒரு பெரிய பாறாங்கல்லைப் போல அந்த அறை முழுவதும் நிறைந்து இருந்தது. குழாயைத்
திறந்தால் குளிர்நீர் தண்ணென்று கையில் கத்திபோல் இறங்கியது. முகத்தில் நீரை மெதுவாகப்
பூசிக்கொண்டான்.

பெரிதாக பொருட்கள் ஏதும் இல்லை அந்த அறையில் என்பதை முதன்
முறை உணர்ந்தான். பாய், அதன்மேல் போர்வை கிடந்தது. அப்படியே அமர்ந்தான். அப்படியும்
சில்லிட்ட தரையின் குளுமை அவனைத் தாக்கியது. அமர்ந்தவன் திடுக்கிட்டுப் பின் குளிர்
என்று உணர்ந்து மீண்டும் அமர்ந்தான். சுவரில் சாயும்பொழுதும் அதே ஜில்லிப்பு.

இத்தனை நாட்களில் தோன்றாத ஒன்று, இத்தனை நாட்களில் அறிந்திராத
ஒரு வெறுமை, ஓர் அச்சம். இனம்புரியாத பயம். ஆனந்தியின் அப்பாவிற்கு என்ன நேர்ந்தாலும்
அதற்கு இவன் தான் பொறுப்பு என மேனன் சொன்ன சொற்கள்.

நான்கைந்து மணி நேரங்கள் ஓடியதே தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

கதவருகே நிழலாட, நிமிர்ந்தான்.

சேச்சி.

தட்டில் ரொட்டியும் சப்ஜியும் எடுத்து வந்திருந்தாள்

வேண்டாம் என்பது போல் தலையாட்டினான்.

“காது இங்கதான இருக்கு. இங்க இல்லையே, கண்ணு இங்கதான இருக்கு
இங்க இல்லையே”

என வயிற்றைத் தொட்டுக் காட்டினாள்.

அவன் கண்களைப் பார்த்தாள்.

“அந்த மேனன் சொன்னத நெனச்சு சங்கடப்படாத, அவன் ஒரு முட்டாள்.
சொந்தத்துல, சொத்துக்காக பண்ணிட்டு, குழந்தைங்களப் பாத்தியா, பாவம்..இப்போ, டெய்லி
சண்டையப் பாத்தியா?”

பாலா அமைதியாக இருந்தான்

“இந்த மலையாளி,தமிழ், ஜாதி இதெல்லாம் இல்லாம ஆக்க, சயின்ஸோ,சம்பிரதாயமோ
ஏதாவது வழி வச்சிருக்கா, காதலத் தவிர?”

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காதல் ஒன்றைத் தவிர எளிதான, நடைமுறை
வழி வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.

”அவங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது. ஆனா அப்பிடி ஏதாவது ஆனாலும்
அது உங்களால இல்ல..சரியா”

அவனுக்கு பயமும் அழுகையும் வந்தது. 

“அப்பா இல்ல அம்மா”

என சொல்லும்போதே அழைப்பு வரப் பதறி எடுத்தான். ஆபத்தானக்
கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், நான்கைந்து நாட்கள் கழித்து வருவதாகவும் ஆனந்தி சொன்னாள்.

சாகல இல்ல என்றாள் சேச்சி சன்னமான குரலில்.

இல்லை என்று தலையாட்டினான். 

தட்டைக் கொடுத்துவிட்டு அவன் தலையில் தொட்டு வருடிவிட்டுப்
போனாள் சேச்சி.

அந்த வருடலில், அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை, அந்த உஜ்வா
இளைஞனின் கண்ணீர், அந்தக் குழந்தை முகம், ஆனந்தியின் அழுத முகம் எல்லாம் சட்சட்டென
நினைவிற்கு வர, அந்தத் தனிமை தந்த துணிவில், நெகிழ்ச்சியில்  உடைந்து அழுத்துவங்கினான், பாலா.

 *

ஆனந்த விகடன்

காதல் சிறப்பிதழ்-Feb’24 

ஓவியம் : ஸ்யாம் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி