தொன்மம்

ருப்பணசாமிக் கோயிலைச் செப்பனிடுகிறார்கள் என்ற செய்தியோடு வந்திருந்தான்
செந்தில்.
“என்ன செந்தி..விடிஞ்சும்
விடியாம வந்துருக்க, பெரிய லீவு வீணாகிறக்கூடாதுன்னா”

அவனுக்கும் ஒரு
டம்ளர் காப்பியைக் கொடுத்துக் கொண்டே அக்கா கேட்க, நான் அவனிடம் ‘சொல்லாதே’ எனக் கண்ணைக்
காட்டினேன்.

“சும்மாதான்க்கா”.

அக்கா எங்களை விட்டுத்
தள்ளிப் போகும் வரை ஆவலை அடக்கிக்கொண்டிருந்தேன்.

“என்னடா சொல்ற,
உள்ள யாரும் போகக்கூடாதுனு சொல்லுவாங்களேடா”

ஆர்வத்திலும் பயத்திலும்
கிசுகிசுப்பாக செந்திலிடம்,

“நீ போய் தெருமுக்குல
நில்லு, நான் சைக்கிளெடுத்துட்டு வர்றேன்”

அவனுக்குள்ளும்
ஆர்வம் தொற்றிக்கொண்டுவிட்டது என்பது அவன் தலையாட்டலிலும் மடமடவென எழுந்து போவதிலும்
தெரிந்தது. திண்ணையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அப்பாவிடம் இருந்து இவன் தப்ப
வேண்டும். நோண்டி நோண்டிக் கேப்பார். இவனுக்கு சாமர்த்தியம் போதாது.

நான் இப்படி பயப்படுவதன்
காரணம், இந்த விசயம் தெரிந்தால், அங்கு வேடிக்கைப் பார்க்கப் போய்விடுவேன் என வெளியே
போக விடமாட்டார்கள்.

ஒருவழியாக செந்தில்
வெளியேறி தெருமுனைக்குப் போய்விட்டான். நான் மிக இயல்பாக இருப்பதுபோல் மெதுவாக அவரைக்
கடந்..

“எங்கடா காலங்காத்தால”

கடக்கும் முன்னர்
கேட்டவர், “மேட்ச்சா இன்னைக்கு” எனக் கேட்க, நல்லவேளையாக ஆம் என்று சொல்லி அவருக்குப்
பக்கவாட்டில் சாய்த்துவைத்திருந்த மட்டையை எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்து ஒரே டக்கில்
ஏறி இரண்டே அழுத்தில் தெருமுனையை அடைந்துவிட்டேன்.

அங்கு செந்திலைச்
சுற்றி ஆட்கள். எல்லோரும் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“எங்க ஒரு உள்ளூர்க்காரனக்
காட்டிரு, இத்தாத்தண்டி மீசைய ஒருபக்கம் செரச்சுர்றேன்” – முருகேசன் வழக்கம்போல ஆவேசமாகப்
பேசிக்கொண்டிருந்தார்.

             திர்காற்று சைக்கிளை முக்க வைத்தது. ஏறி அழுத்தி, வயல்களைக் கடக்கும்போது
பக்கவாட்டில் தெரியத் துவங்கியது கருப்பணசாமி கோயிலின் சிதைந்த கோபுரமும் சிவப்பும்
வெள்ளையுமாய் சாயம்போன வெளிச்சுவரும்,

கோயிலுக்கு அப்பால்
பெரும்பொட்டல். ஆம். அந்த இடத்தின் பெயரே
‘பெரும்பொட்டல்’தான். அங்குதான் நாங்கள் விளையாடுவோம். கிரிக்கெட்டோ கபடியோ,
பொட்டலின் ஒரே நிழல் கோயிலின் பக்கவாட்டுச் சுவர்தான். சிதிலம் அடைந்த சுவர் என்பதால்
இடுப்பு அளவே இருந்தாலும் அமர்வதோ ஏறித்தாண்டுவதோ ஆபத்து, இடிந்துவிடும் என நடுவில்
இருக்கும் பெரிய விரிசல்கள் வழியாக உள்ளே சென்று, கோயிலுக்கு நேரெதிரே இருக்கும் கிணற்று
நீரில் முகம் கழுவி, நீர் அருந்துவோம். ஆனால் மிகமிகக் கவனமாக கோயிலை, கோயில் கதவின்
வழியாக உள்ளே ஒருபோதும் பாக்கமாட்டோம். பார்த்தால் கருப்பு அடித்துவிடும் எனும் கதையை
நாங்கள் முழுமையாக நம்பினோம்.

உள்ளே மிகப்பெரிய
சிலை, கையில் வாளோடு இருக்குமாம். இப்போது அந்த சிலை பாதியாக உடைபட்டு சிதைந்த நிலையில்
இருந்தாலும் கையில் இருக்கும் வாள் மட்டும் அப்படியே இருக்கிறது என்றும், ஒவ்வொரு முறையும்
அந்த வாளின் கோணம் மாறிக்கொண்டே இருப்பதாகவும் சொல்லி, உள்ளே போவதற்கு பயந்து நாப்பது
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி வைத்துவிட்டார்களாம். கோயில் என்று சொல்லப்படும் இடம்
என்னவோ மிக மிக சிறிய அளவில்தான் இருக்கும். உள்ளே கருப்பணசாமி இருப்பதாக சொல்லப்படும்
இடம் பூட்டப்பட்ட மரக்கதவு. அதிலிருந்து நான்கந்து அடி மேலே பாதி நிலையில் இருக்கும்
சிதைந்த கோபுரம். சுற்றிலும் மணற்பரப்பு. எதிரே கிணறு. உடைந்த, விரிசல்கள் கண்ட சுற்றுச்
சுவர். இவ்வளவுதான்.

எப்படியும் நாங்கள்
அடித்த பந்துகளே ஐம்பது நூறு இருக்கும். பொட்டலில் ஆடியவர்கள் தொலைத்த அத்தனையும் அங்குதான்
கிடக்க வேண்டும்.

இத்தனையாண்டுகளாக
இல்லாமல் இப்போது புதிதாக ஊருக்குள் வந்திருக்கும் அதிகாரி, எந்த விதமான பயமும் இன்றி,
உள்ளூர் ஆட்களிடம் எதையும் கேட்காமல் தன்னுடைய கடமையில் ஒன்றாக இந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார்
என்பதைத்தான் சற்று முன்னர் முருகேசன் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

செந்தில் சைக்கிளின்
பின்னால் இருந்து தாவி இறங்கி சாலையில் சரிந்து ஓடும் பாதையில் நடக்கத் தொடங்கி இருந்தான்
கோயிலை நோக்கி.  அவனுக்குப் பின்னால் சைக்கிளை
உருட்டிக்கொண்டே போனேன்.

அவ்வளவு நேரம்
இருந்த உற்சாகம் மெல்ல பதற்றமாக மாறிக்கொண்டிருந்ததை சைக்கிளை உருட்டும்போது கால்கள்
பின்னுவதில் உணர்ந்தேன்.

காலை என்பதால்
அவ்வளவாக வேடிக்கைப்பார்க்கும் கூட்டம் இல்லை. உள்ளூர் மக்கள் அவ்வளவாகத் தென்படவில்லை.

சைக்கிளை ஓரமாக
நிறுத்திவிட்டு நானும் செந்திலும் கோயிலின் முன்பக்கமாகப் போய் நின்றோம்.

இதற்கு முன்னர்
ஒருமுறை, எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இந்தக் கதவைப் பார்த்திருக்கிறேன். முகத்தைக்
கழுவிக்கொண்டு திரும்பும் போது பந்து நழுவி கோயில் பக்கமாகப் போனபோது என்னையும் மீறி
அந்தக் கதவைப் பார்த்தேன். இதோ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பார்க்கிறேன்.

எங்களுக்கு முன்னர்
பத்திற்கும் மேற்பட்ட வேலை ஆட்கள். அதில் நான்கு பெண்கள். பெண்கள் சேலையின் மேல் ஆம்பிளைச்சட்டை
அணிந்து வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

எங்கு சிமெண்ட்
கலவை,மணல் மூடைகளை அடுக்கவேண்டும், முதலில் சுற்றுச் சுவரை இடிக்கவேண்டும் போன்ற கட்டளைகளை
அதிகாரி கொடுத்துக்கொண்டிருந்தார்.

நான் செந்திலின்
தோள்மீது கை வைக்க, அவன் என்னைப் பார்த்து,

“போய்ருவமாடா”
என்றான்.

“அட இர்றா, கதவ
எப்பிடியும் ஒடச்சுத்தான் தெறப்பாங்க, உள்ள என்ன இருக்குன்னு பாத்துருவோம்.” நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது
எங்களைக் கடந்த ஒரு வேலை ஆளிடம்,

“யண்ணே உள்ள பந்துக
நிறைய கெடக்கும், எடுத்துத் தருவீங்களா” என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் ஆளப்பாரு
எனும் பொருளில் கையை நீட்டிவிட்டுப் போனார்.

“இல்லடா நீ வர்றதுக்கு
முன்னாடி முருகேசண்ணேன் சொல்லிட்டு இருந்தாரு. உள்ள செலைக்குப் பின்னாடி இருக்குற இருட்டயோ,
செலயவோ எட்டிப்பாத்தவன் எவனும் அதுக்கப்பறம் என்ன ஆனான்னே தெரியாமப் போயிருவான்னு பேச்சிருக்காம்டா”

அதெல்லாம் ஒன்றும்
இல்லை,பார்ப்போம் என நான் செந்திலுக்கு பதில் சொல்லும் முன்னரே அந்தப் பெருங்குரல்
என்னைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அப்பா.

அதுவரை இல்லாத
பயம் இப்போது மொத்தமாகக் கவ்வ, என்ன ஏதென்று புரியாமல் அவரிடம் ஓட,

“ஏண்டா எங்க போறேன்னு
சொல்லிட்டு எங்க வந்து நிக்கிற?”

ஒன்றும் சொல்லாமல்
வண்டியில் ஏறிக்கொள்ள அரைநொடியில் அந்த இடம் கண்ணில் இருந்து மறையும் வேகத்தில் கடந்தார்.

                      மாலை, திண்ணையில் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தில் சகதியும் மணலும் அப்பி
இருந்தன. செந்தில் வந்து நிறுத்திவிட்டுப் போயிருப்பான் போல. அப்பா திட்டிக்கொண்டே
வந்ததால், வீட்டிற்குள் வந்ததும் அக்காவுடன் ரைஸ் மில்லிற்குப் போய்விட்டேன். அந்த
மிளகாய்ப்பொடி வாசனை ஒருபக்கம், சல்லடையின் தடதடப்பில் தவிடு ஒருபக்கம் சூடாகக் கொட்டுவது
என பொழுது போயிருந்தது எனக்கு.

சைக்கிளைப் பார்த்ததும்
தான் கோயில் நினைப்பே வந்தது. ரைஸ்மில்லிற்குப் போகும்போது அக்கா “உள்ள இருட்டா கெடக்கும்டா,
ஒரே வவ்வாலா தொங்குமாம்,பாம்பு கொத்திருமாம்” என்று சொன்னதோடு அப்பேச்சு முடிந்திருந்தது.
கை கால்களைக் கழுவி, முகத்தைத் துடைத்துக்கொண்டு செந்திலைப் பார்க்கப் போனேன்.

“அவென் உன்னயப்
பாக்கனும்தான காலைலயே போனான், இருட்டிக்கிட்டு வருது,” செந்திலின் அம்மா இழுக்கவும்,
“நான் ரைஸ்மில்லுக்குப் போயிருந்தேன், அதான், சைக்கிள வச்சுட்டு மந்தைக்குப் போயிருப்பான்
போல” என சொல்லிவிட்டு கிளம்பினேன்.

செந்தில் அம்மா
என் பின்னாலேயே வந்து வாசலில் நிற்க அவரிடம் மந்தைக்கு என்று சொல்லிவிட்டதால் மந்தை
நோக்கி நடப்பதுபோல் பாசாங்கு செய்து, எதையோ மறந்துவிட்டதுபோல் திரும்பி என் வீட்டை
நோக்கி ஓடினேன். விலங்கிடம் இருந்து தப்பிக்க தன் குகை நோக்கி ஓடும் வேட்டைச்சமூகத்தின்
ஆள் என தனவதி டீச்சர் கரும்பலகையில் வரைந்த சித்திரம் போல் இருந்தது என் ஓட்டம்.

எனக்காகவே காத்திருப்பது
போல் வாசலில் நின்றிருந்தார் அப்பா.

“ஏண்டா கொக்குக்கு
ஒன்னே மதிங்குற மாதிரி, காலைல நான் வந்துக் கூப்புடும்போது, இல்லப்பா நான் சைக்கிள்ள
வந்தேன்னு சொல்லனுமா இல்லையா, நம்ம வீட்டு சைக்கிளாம்னு அந்த முருகேசன் வந்து குடுத்துட்டுட்டுப்
போனான்”

திடுக் என்றானது.
எனில் சைக்கிளை செந்தில் கொண்டுவரவில்லை. அதுவரையில் கொஞ்சநஞ்சமாக இருந்த பயமும் ஏதோ
ஓர் இனம்புரியாத அழுத்தமும் அழுகையாக வெடிக்கக் காத்திருந்தது. அப்பா முன்னால் அதைக்காட்டிக்கொள்லாமல்
சைக்கிளை எடுத்து “மந்தைக்கி” என சொல்லி அழுத்தினேன்.

முருகேசன் அண்ணன்
வழக்கமாக எங்கெல்லாம் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பாரோ அங்கெல்லாம் போய்ப் பார்த்தேன்.
வழக்கமாக இருக்கும் கூட்டம் கூட மந்தையில் தட்டுப்படவில்லை.

நேராக பஞ்சாயத்தாபிஸ்
போய் அதிகாரியிடம் கேட்கலாமா, காலையில் செந்தில் அவர் அருகில் தான் நின்றிருந்தான்
என நினைக்கும்போதே அழுகை வந்தது. பாவம் அவன். ஒருவேளை உள்ளே பார்த்துத் தொலைந்துவிட்டானோ!

”சார் கோயில்ல
இருக்காருய்யா, என்னா வெவரம்,அப்பா எதுவும் சொன்னாரா” என வேலு சார் ஏதோ கேட்டுக்கொண்டேப்
போக, சைக்கிளை கோயில் நோக்கி அழுத்தினேன்.

அந்தி சாய்ந்து,
இருட்டத் தொடங்கி இருந்தது. பெரும்பொட்டலுக்கு முன்னர் மினுக் மினுக் என வெளிச்சம்.

ஒருவேளை செந்தில்
கதவுக்கு அப்பால் பார்த்துவிட்டானோ, இனி அவனைக் காணவே முடியாதோ’ சைக்கிளைப் பாதையிலேயே
போட்டு கோயில் அருகே ஓடினேன்.

உள்ளே,

கதவை அறுத்து சாய்த்து
வைத்திருக்க, வேலை நடந்துகொண்டிருந்தது.

கருப்பணசாமி சிலையின்
கையில் இருந்த வாளில் ஒரு கையை வைத்து, மறு கையால் எமர்ஜென்ஸி விளக்கை ஏந்தி, வேலை
பார்ப்பவர்களுக்கு ஏதுவாக வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தான் செந்தில்.

நான் அழும் நிலையில்
இருந்ததைப் பார்த்தவன், சிரித்துக்கொண்டே

“சைக்கிள கொடுத்துவிட்டனேடா”
என்றவன் யாருக்கும் தெரியாமல் சைகையால், சிறிய பையில் பந்துகளை கட்டி வைத்திருப்பதைக்
காட்டினான்.

அவனுக்கு அருகே
ஓடிப்போய்ப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டேன்.

அவன் கையில் இருந்த
வெளிச்சக்கத்தை என்மீது ஒருமுறை பட்டு மீண்டும் உள்நோக்கிப் பாய்ந்தது.

*

குமுதம் 2024

ஓவியம் : ஷ்யாம்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி