Homeகட்டுரைகள்மதுர காதை - 1

மதுர காதை – 1

பொய்கை

இந்திரா காந்தி இறந்துவிட்டார் எனும் செய்தியை மதுரை, மீனாட்சியம்மன் கோயிலின் தெற்குகோபுரவாசலில் இருந்து நான்கு கிலோமீட்டரில் அமைந்த எங்கள் ஊருக்குள் முதலில் சொன்னது ரமணி சார் தான். முந்தைய ஆண்டில், காதுக்கு அருகில் ட்ரான்ஸிஸ்டரை வைத்துக்கொண்டு உலகக்கோப்பை முழுவதையும் தெருமுக்கில் ஒலிபரப்பியவர் அவர்தான். விவ் ரிச்சர்ட்ஸ் அடித்தப் பந்தை கபில் தேவ் எவ்வளவு தூரம் பின்னோக்கி ஓடிப்பிடித்தார் என்பதை ட்ரான்ஸிஸ்டரோடு தெருவில் ஓடிக் காட்டி உற்சாகத்தில் கத்தியவர். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சதா சர்வகாலமும் இரைந்து கொண்டே இருக்கும் செய்திகளை எங்கள் ஊருக்கு முந்தித் தருவதைத் தன்னுடைய தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தார். காதிற்குள் அழுந்திப் பதித்துக்கொண்டு ‘ப்ச்’ ‘ப்ச்’ என உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டே இருந்தார். அவருடைய வயதை ஒத்தவர்கள் முதல் சுற்றிலும் அதற்கு அடுத்த வளையத்தில் மீசை முளைத்துக்கொண்டிருந்த அண்ணன்களும் அதற்கும் அடுத்த வளையத்தில் நானும் நண்பர்களும் நின்றிருந்தோம். மற்ற நாட்களில் எங்களை ’சின்னப்பயல்கள்’ என விரட்டி விடுவார்கள். அன்று இந்திரா காந்தி இறந்துவிட்ட அதிர்ச்சியில் எங்கள் பக்கம் திரும்பவில்லை.

“பாவம்ப்பா அந்தப் பொம்பளையப் போயி இப்பிடி” என கணேசன் ஆரம்பிக்க சட்டெனக் கையை உயர்த்திய ரமணி சாரைப் பார்த்து பயந்து அமைதியாக, “சாகலயாம் ஆஸ்பத்திரில சொல்றாங்க”.

”அதான, அந்த அம்மா என்ன நம்மூரு பொம்பள மானிக்க வெறும் ரவிக்க ஜாக்கெட்டாப் போட்ருக்கும். புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் போட்ருக்கும்ய்யா” – கணேசன் அண்ணன் கொஞ்சம் நிம்மதியாகச் சொல்ல , மூர்த்தி அண்ணன் “அதெல்லாம் அந்த அம்மா டக்குனு இடுப்புல இருந்து ரிவால்வர எடுத்து போட்ருக்கும்” என்றார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரமணி சார் எல்லோரையும் பார்த்து , “இதுக்குத்தாண்டா இந்த மருதைக்குள்ளயே சுத்திக்கிட்டுக் கெடக்காம நாலு எடம் போய்ப்பாருங்கனு சொல்றது. சுட்டது மிஷின் கன்ன வச்சு. ஒரு ரவுண்ட்ல எத்தன புல்லட் வரும் தெரியுமா? ஒடம்பே சல்லடயா ஆகி இருக்கும் ப்ச்” என்றார்.

ஊருக்குள் பரபரப்பு தொற்றத் தொடங்கியது. இதே ரமணி சார் உலகக்கோப்பையை இந்தியா முதல்முறை வாங்கிய வைபவத்தை நான்கைந்து வாரங்கள் பேசிக்கொண்டே இருக்க, வீட்டில் அணத்தி ‘பாரத் டிவி’ எனும் மாயாஜாலத்தை வாங்கி வைத்திருந்தோம். ப்ரவுன் கலரில் மடங்கி  இருபக்கமும் ஓடும் கதவு. அதைத் திறந்தால் உள்ளே சற்று புடைத்த கண்ணாடியில் திரை. தொலைக்காட்சி எனும் மாயப்பெட்டி அப்போது எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில் மட்டுமே இருந்தது. பிறகு பஞ்சாயத்து போர்டில் இரவு செய்திகளும் ஒளியும் ஒளியுமும் ஓடும்.  

இதுவரை எனக்கு இந்திரா காந்திய சுட்டுவிட்டார்கள் என்பது வெறும் செய்தியாக இருந்தது. இப்போது அது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. தெருவின் முக்கில் நாங்கள் நிற்கும் இடத்திற்கு ஓடிவந்த எதிர்வீட்டு செந்தில், “ஒந் தம்பி ஒந் தம்பிக்கு.. அம்மா கூட்டியாரச் சொன்னாங்க”  என்றதும் “என்னாவம்டா அவனுக்கு” என்று வெறுப்பாகக் கேட்டுக்கொண்டே வீட்டை அடைந்தேன். தம்பி பிறந்ததில் இருந்தே ‘பெரிய பைய்யண்டா நீ, அவன் பாவம்’ எனும் சொற்களைக் கேட்டுக் கேட்டு சலித்துவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் எல்லாமே என்னைச் சுற்றித்தான் இயங்கும். இப்போது எல்லாமே தம்பிக்குத்தான்.

மதுரையில் நீங்கள் எந்த சாமியைக் கும்பிடுபவராக இருந்தாலும், குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் மொட்டை அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் நிகழவேண்டும். இது பெரும்பான்மையான மதுரை மக்களின் வழக்கம். அன்றைய நாளில் அந்தக் கூட்டத்தில் அழகர் வைகை ஆற்றின் பக்கவாட்டில் வரும்பொழுது மொட்டையடிக்கப்பட்ட குழந்தையை ஒருகையிலும் மறுகையில் சொம்பைக் கவிழ்த்தி அதில் சூடம் ஏற்றி நேரடியாக அழகருக்குக் ஆரத்தியைக்காட்டினால்தான் நிம்மதி. அதன்பிறகுதான் அவரவர் குலதெய்வ, கோயில் மொட்டைகள் நிகழ்ந்தேறும். அப்படி என் தம்பிக்கு அழகர் கோயில் மொட்டை முடிந்து, தொடர்ந்து ஏதேனும் ஒரு பங்காளி வகையில் இறப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்க பெரும் ஜடாமுடியோடு ஏழெட்டு ஆண்டுகள் சுற்றியவனுக்கு இன்றுதான் மூன்றாம் மொட்டை, அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த திருப்பறங்குன்றத்தில். அதற்குத் தாய்மாமனும் பங்காளிவகையில் இருவரும் சென்றிருக்கிறார்கள். இந்நேரத்தில் மொட்டை அடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்க வேண்டும். இன்னும் வரவில்லை என்றதும் இந்த செய்தியினால் ஏதேனும் பாதிப்போ என அம்மா அழத் தொடங்கிவிட்டாள்.

நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு கோயில் நோக்கிக் கிளம்பினோன்.

மதுரையைப் பறவைப் பார்வையாகப் பார்த்தால் நட்ட நடுவில் வீற்றிருக்கும் மீனாட்சிக் கோயிலில் இருந்து சதுர சதுரங்களாகப் பிரியும். அதாவது, தெற்கு கோபுரத்தில் இருந்து வெளிவந்தால் ‘தெற்குச் சித்திரை வீதி, அதற்கு அடுத்தச் சுற்றில் தெற்கு ஆவணி வீதி, அடுத்து மாசி, அடுத்து வெளிவீதி, இப்படி நான்கு திசைகளிலும் வடக்கு சித்திரை, வடக்காவணி என சன்ன சதுரமாகப் போய்க்கொண்டே இருக்கும் மதுரையின் அமைப்பு அப்படியே கோரிப்பாளையம், ஆரப்பாளையம், வாடிப்பட்டி, காரியாபட்டி என ஏறக்குறைய ஐம்பது கிலோமீட்டர்கள் வரையிலும் இந்த சதுர அமைப்புதான்.

அந்த மையப்புள்ளியான மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து மிகச்சரியாக ஏழெட்டு கிலோமீட்டர்களில் வயல்வெளிகள் தட்டுப்படத் தொடங்கி விடும். எங்கள் ஊரில் இருந்து திருப்பறங்குன்றம் நோக்கிச் செல்லும் அகலம் குறைந்தப் பாதையின் இருபக்கங்களிலும் பச்சைப் பசேல் என வயல்வெளிகள்தான். நடுவில் இருக்கும் பெரிய பெரிய கிணறுகளும் பம்ப் செட்டும் சொர்க்கத்திற்கு செல்லும் வழியைப் போலவே இருக்கும். மதுரையின் வெட்கையையும் வெய்யிலையும்அந்த பம்ப் செட் தடுத்தாண்டுகொள்ளும். தண்னென்று இருக்கும் அத்தொட்டி. சுற்றிலும் காற்றில் மடிந்து மடிந்து  அலையலையாய் நிமிரும் நெற்கதிர்கள் கொண்டுவரும் காற்று ஈரவுடலில் பட்டால் சிலிர்க்கும். உடலுக்கு  அவ்வளவு இதமாக இருக்கும். ‘மோட்டார் ரூம்’ என்போம்.

மொட்டைப் போட கோயிலுக்குப் போனவர்கள் என்ன ஆனார்களோ ஏது ஆனார்களோ எனும் பதற்றத்தோடு சைக்கிளை அழுத்தினாலும் மோட்டார் ரூமைக் கடக்கும்பொழுது சைக்கிளை நிறுத்தி கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்த்தேன், தண்ணீர் வருகிறதா என. சாலையில் இருந்து ஆறேழு ஏக்கர் வயல்களைத் தாண்டி இருக்கும் என்பதால் சாலையில் இருந்து பார்த்தால் தண்ணீர் அடிப்பது போல சிலசமயம் தோற்றமயக்கம் ஏற்படுத்தும். அவர்களைப் பார்த்து அழைத்துவந்து விட்டுவிட்டு பிறகு பம்ப் செட் குளியல் போடலாம்.

அப்போது எதிரே ஒரு பஜாஜ் எம்80 வர ஒதுங்கி வழிவிட்டேன். எங்களைக் கடக்கும்போது, “தம்பி வீட்டுக்குப் போயிருங்க திருப்பறங்குன்றப் பக்கம் ஒரே கலவரம் இங்க பாருங்க” என கையைக் காட்டினார், ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “என்னா ஆச்சுண்டு தெரியல த்த்டீர்னு கல்லக்கொண்டு எறியுறானுக, கோயில் பக்கம்லாம் கூட்டம் செதறி ஓடுது”.

“இந்திரா காந்திய சுட்டுட்டாய்ங்களாம்ணே”.

தலையைக் கையில் வைத்துக்கொண்டு “அய்யோ அடப்பாவமே” என்று கிளம்பினார்.

எனக்குள் பயம் பரவத் துவங்கியது. தம்பி எக்கேடு கெட்டுப்போனால் என்ன, அதுதான் கூட ஆட்கள் இருக்கிறார்களே என நினைத்தாலும் ஒரே அழுத்தாகப் போய்விட்டேன். எங்கு பார்த்தாலும் ஏதோ அடிதடி என்பதுபோலவே தென்பட்டது கூட்டம். திருப்பறங்குன்ற மலையின் அடிவாரத்தில் இருக்கும் சரவணப்பொய்கை குளத்தில் போய் நின்றேன். முடி காணிக்கை செலுத்திவிட்டு அங்குதான் குளிக்க வேண்டும். குளத்திற்கு நடுவே இருக்கும் மைய்ய மண்டபம், சிலர் மயில் மண்டபம் என்பார்கள். கரையில் இருந்து அங்கு நீந்திப்போய் அமர்ந்துவிட்டு மீண்டும் கரையை அடைவது பெரும் போட்டியாக நண்பர்களுக்குள் நிகழும். பச்சைப்பாசி படர்ந்த வண்ணத்தில் அந்த மதிய வெய்யில் தாங்கி நின்றது குளம். படிகள் எல்லாம் காய்ந்து கிடந்தன. இரண்டு மூன்று மணி நேரங்களாக யாரும் வரவில்லை என்பதை உணர்ந்து வெளியே வந்து சைக்கிளை எடுக்க நினைக்கும்பொழுது போலிஸ் வந்து லத்தியால் ஹேண்டில்பாரில் அடித்து எங்கயும் போகக்கூடாது என சொல்லிவிட்டது.

மாலை வரை அந்தக் குளக்கரையிலேயே அமர்ந்திருந்தேன், குளத்தின் நீர் மதியம் இருந்தது போல் மாலையில் இல்லை. நேரம் ஆக ஆக அதன் நிறமும் சலனமும் மாறிக்கொண்டே இருந்தது. சலனமே இல்லாமல் அப்படியே நிறுத்தி வைத்த சித்திரம் போல் இருந்த குளம் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னல் மாலையில் சன்ன அலைகளாகக் காற்றோடு இயைந்து மொத்தக் குளமும் மிக மெதுவாக ஆடியது. தம்பி தொட்டிலில் உறங்கும்பொழுது இப்படித்தான் தொட்டி மிக சன்னமாகத் தானே ஆடும். எட்டிப்பார்த்தால் சிரித்துக்கொண்டே தூங்குவான். “கனவுல நரி வந்துருக்கும்” என்பாள் அம்மா. சரவணப்பொய்கை குளம் அசங்க அசங்க தம்பியை நினைத்து அழுகை வந்தது. இருள் கவியத் தொடங்கியதும் குளம் முற்றாக வேறுமாதிரி ஆனது.  

தெருவே வெறிச்சோடி இருந்தது. சைக்கிளை ஏறி மிதித்தேன். தெரு மொத்தமும் எங்கள் வீட்டில் கூடி இருந்தது. அய்யோ என்று கத்திக்கொண்டே சைக்கிளைக் கீழோ போட்டு உள்ளே ஓடினால், கூட்டம் மொத்தமும் நடுவில் இருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அப்பிய சந்தனம் சொரசொரவென்று காய்ந்து போன மண்டையோடு என்னைப் பார்த்துச் சிரித்தான் தம்பி. கண்கள் மிக லேசாகக் கசிய அவன் தோளைத் தொட்டு மொட்டையைத் தடவினேன். அசங்கும் சரவணப்பொய்கைக் குளத்தை வருடுவதுபோல் இருந்தது, அந்தத் தொடுகை.

*

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை