பிடரி

ங்கள் காதலருக்காக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

இதற்காகத்தான் இங்கெல்லாம் வரக்கூடாது என்று மூன்றாவது முறையாக நினைத்தேன்.

நன்கு குளிரூட்டப்பட்ட உயர்தர ஏழுநட்சத்திர விடுதியின் அலுவல் நிமித்தக் கூடுகையறை அது. மிதமிஞ்சிய குளிர் ஒருபுறம், அடுத்து நம்மை நோக்கி ஏதேனும் கேள்வி எழுப்பப்படுமோ எனும் அச்சம் அல்லது ஒருவித தயக்கம், சரியாகச் சொல்லப்போனால் கூச்சம் ஒருபுறம் என எல்லாம் சேர்ந்து கொண்ட நிலையில் அமர்ந்திருந்தேன்.

வெகு இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் நாட்களில் இப்படித்தான் திடீர் திடீர் என்று ஏதேனும் ஒன்று உள்நுழைந்துவிடுகிறது. புதிதாக வந்த மேலாளர், தான் வாங்கிய அனுபவங்களை இங்கே வந்து புதிதாக தனக்குக் கீழ் இருப்பவர்களுக்கு அருளும் வைபவம் தான் இதுபோன்றவை.  பெற்ற என்று சொல்லாமல்  ‘வாங்கிய’ என்கிறானே என்று நினைக்கிறீர்களா, ’அடி’ என்பதை பெற்ற என்பதைவிடவும் வாங்கிய என்று எழுதுவதில்தானே மொழி அமைதி கிடைக்கும்.

அதாவது எங்களுக்கெல்லாம் தயக்கமின்றி பேச, கைகுலுக்க, அலுவலகத்தையே புரட்டிப்போட்டு முன்னேற்றும் திட்டங்களை மேலதிகாரிகளுடன் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ள, சொல்லப்போனால் இது என்னுடைய அலுவலகம் எனும் ’டேக்கிங் ஓனர்ஷிப்’ வகைகளை சொல்லிக்கொடுக்கும் ‘ஒர்க்‌ஷாப்’.

’ஒர்க்‌ஷாப்களில் ஒப்பேத்துவது எப்படி’ எனும் ஒர்க்‌ஷாப் ஒன்றை நடத்தினால் உலகின் பெரும்பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறக்கூடும் என்ற நினைப்பு வந்த பொழுது சிரிப்பும் வந்தது. ஆனால் சிரிப்போ அல்லது இன்னபிற கரம் சிரம் புறம் நீட்டலோ கூடாது. ஏனெனில் அப்படிச் செய்யும்பொழுது அங்கே தொண்டைகிழிய பேசிக்கொண்டிருக்கும் ஆளின் கவனம் நம்மீது பட்டு அடுத்தக் கேள்வியை நம்மிடம் கேட்டு பலிகடா ஆக்கப்படுவோம். பேருந்துநிலையத்தில் என்ன கூட்டம் என வேடிக்கைப் பார்க்கப் போய், எல்லோரும் அமைதியாக இருக்கும் இடத்தில் இது என்ன என்று கேட்பவரை குறிவைத்து கையில் பல்பொடியைக் கொட்டி ‘தேய்த்துப் பாருங்கள் சார் பாம்பு கொத்தியது போல் நுரைவரும்’ என வேடிக்கை மனிதர் ஆக்கிவிடுவார்கள் அல்லவா, அதற்கு சற்றும் சளைத்ததல்ல இந்தக் கூடுகைகள்.

இத்தனையும் சிந்தித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ என் முகம் சற்று வேறுவிதமாகப் பட்டிருக்க வேண்டும் போல. அந்தப் பெண் என்னை நோக்கிக் கையைக்காட்டி சிரித்தாள். உடனே பக்கவாட்டில் இருந்து ஒலிவாங்கியை ஓடிவந்து கொடுத்தார் சிப்பந்தி.

”யுவர் டர்ன்”.  

அனுதினமும் அலுவலகத்தில் பார்த்து நட்பாகச் சிரிக்கும் என் சகாக்கள் என்னை ஏதோ ஏலியன் போல் பார்த்து, ஏளனமாகச் சிரிக்க ஆயத்தமானர்கள். என் கண்கள் அனிச்சையாக இவளைத் தேடின. எனக்கு நேர் எதிரில் இருந்த வட்டமேசையில் அமர்ந்து, கண்களால் “என்ன சொல்லுறனு பாக்குறேன்” என்பதுபோல் பார்த்தாள். அதன்பாட்டில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு, நாம் பார்க்கும்போது மட்டும் அதிகமாகச் சுடர்வது போல் சுடர்ந்தாள்.

”அலுவக மேம்பாட்டு நிமித்தம் நடத்தப்படும் கூட்டத்தில் இந்தக் கேள்வி எதற்கு என்று தெரிந்துகொள்ளலாமா?”

ஆம் மிகத் தீர்க்கமான குரலில் கேட்டேன். அதைவிட தீர்க்கமான குரலில் பதில் வந்தது. ’சம்பந்தம் இருக்கிறது, அது இந்த நாளின் இறுதியில் தெரியும்”

எதற்கெடுத்தாலும் பயிற்சிப்பட்டறைகளில் இதை ஒன்றை சொல்லிவிடுவார்கள்.  நாளின் இறுதியில் நீங்கள் புதிய மனிதராக ஆகிவிடுவீர்கள். சொல்லப்போனால் கூடுகை முடித்த நொடியில் ஓடோடிப் போய் உலகின் அத்தனை நிர்பந்தங்களும் நீங்கிவிட்டதாக போகும் சிறுநீர்கழித்தலின் சுகம் ஒன்றுதான் அந்த நாளின் இறுதியில் கிடைக்கும் பலன்.

”ஒரு பழைய நீதிக்கதை இருக்கிறது. சிங்கம் ஒன்று ஒரு பெண் மீது மையல் கொண்டதாம். போய் அவர்கள் வீட்டில் பெண் கேட்க, அவர்களும் ‘ஒனக்கென்னப்பா சிங்கம், ஆனா முடியும் நகமும் பல்லும் எம் மகள நீ ஆசையாக் கொஞ்சும் போது கீறி உயிருக்கே ஆபத்து ஆகிருமேனு பாக்குறோம்” என்றதும் “அட இவ்வளவுதான” என அனைத்தையும் மழித்து, அகற்றி, பற்களை உடைத்துக்கொண்டு வந்து, “என் காதலிக்காக இதைக்கூடவா செய்யமாட்டேன்” என்றதாம். அந்தப் பெண் உட்பட அனைவரும் ஏளனமாகச் சிரித்து, போய் பாரு உன் மொகரைய என விரட்டி விட்டார்களாம்”

எனச் சொல்லி, நிறுத்தி, நீரை எடுத்துப் பருகிவிட்டு, “ஆகவே, காதலுக்காக அல்லது பிறருக்காக நம் தனித்தன்மையை, நம் இயல்பை இழக்காமல் இருந்தாலே போதும்”

என முடித்தேன். கேள்வி கேட்டவர் உட்பட அனைவரும் கைதட்டியதில் அரங்கம் அதிர்ந்தது. வெற்றிக்களிப்பில் கண்ணோடு கண் நோக்கொக்கலாம் எனப் பார்த்தால், எரிப்பது போல் பார்த்தாள். மீண்டும் கொஞ்சம் நீர் அருந்த வேண்டும் போல் இருந்தது. அதுவரை எப்போது முடியும் என்று நினைத்தவன், ’அய்யயோ முடிந்தவுடன் வந்து ஏதேனும் கேப்பாளே’ எனும் பயம் ஏற்படத் துவங்கியது.

ஆரம்பத்தில் மூன்றாவது முறை என்று சொன்னதை கவனித்தவர்களுக்கு மட்டும், முதல் முறை “இன்று என்ன வண்ண சட்டையில் வரப்போகிறாய் எனும் கேள்வியும் இந்த வண்ணத்தில் தான் வரவேண்டும் எனும் பதில் சொன்ன பொழுதிலும் தோன்றியது. ஏனெனில் அவ்வண்ணச் சட்டை அயர்ன் பண்ணாமல் போட்டது போட்டவண்ணமே கிடந்ததால்.  இரண்டாவது முறை, நான் அமரவேண்டிய வட்ட மேசையில் பெண்கள் இருக்கக் கூடாது, குறிப்பாக கீர்த்தனா இருக்கவே கூடாது எனும் கட்டளைப்பொழுதில்.

நான் சொன்ன பதிலை மேலாண்மை முடிச்சுகளோடு இழுத்துப் போட்டு கட்டி முடித்து, இந்த நாள் எப்படிப் போனது என பத்துவித கேள்விகள் அடங்கிய தாளைக் கொடுத்து பதில் வாங்கிப் போனார்கள்.

வளைக் காணவில்லை. வியர்வைத் துளிகள் என் நெற்றியில் அரும்பின. குளிரில் அதுவரை சில்லிட்டிருந்த உள்ளங்கையை வைத்துத் தேய்த்துக்கொண்டு அந்த மிக நீண்ட அறையில் இருந்த அவ்வளவு பெரிய கதவைத் திறந்துகொண்டு வெளியேறினேன். பெண்கள் நிற்கும் பகுதியில் எட்டிப்பார்த்தேன். ம்ஹூம் எங்கும் இல்லை. கீர்த்தனா என்ன என்பதுபோல் சைகையால் சிரித்துக்கொண்டே கேட்க, “அம்மா தாயே சும்மா இரும்மா” என பூர்ணம் விஸ்வநாதன் குரல் உள்ளிருந்து அனிச்சையாக எழுந்தது.

அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவளும்தான்.

புதிய மேலாளர் வந்து என் கரம் பற்றிக் குலுக்கினார்.

 ”தட் வாஸ் நைஷ் ஒன்”

’எல்லாம் உன்னாலதாண்டா’- மனக்குரல் ஓலமிட, அவரிடம் இருந்து விலகி வெளியேறினேன். அழைத்துக்கொண்டே இருந்தேன். இப்போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆம், போர்.

சமீப நாட்களாக எனக்கும் இவளுக்கும் இப்படிச் சின்னஞ்சிறு சண்டைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காதல். காதல் முகிழ்த்தத் தருணம் எல்லாம் வெகு இயல்பாக நிகழ்ந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை இருவரும். இப்போதுவரை கூட காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டதில்லை. அது ஒரு புரிதல். அது ஒரு நிகழ்வு. அப்படியே நிகழ்ந்து கொண்ட நிகழ்வு. வியர்வை முத்துகள் மீசைபோல் படர்ந்து இருந்த ஒரு மதியத்தில் குளிர்சாதனம் சரியாக இயங்கவில்லையோ என நான் அவளுக்காக சரிசெய்த நாளில் முகிழ்த்திருக்கலாம். நான் சொன்னதும் மீசைத்துளிகளை துடைக்காமல் முறுக்கிவிடுவது போல் செய்து சிரித்தாள், ஒருவேளை அதில் கூட துவங்கி இருக்கலாம்.

வாங்க தம்பி, ரொம்ப நாள் ஆச்சு இந்தப் பக்கம் வந்து”

சிரித்து, உள்ளேப் பார்க்க, அவளைக் காணவில்லை.

“வந்து தலவலினு படுத்துட்டா, நீங்க வந்துருக்குறதப் பாத்தா சண்ட போட்டு வந்துருக்கா, அதான, காஃபி சாப்டுங்க, இருங்க”

வெளியே வந்தாள்.

“அய்யோ அம்மா சிங்கத்த எல்லாம் வீட்ல ஒக்காரவச்சுருக்க, சர்க்ஸ்ல விட்டுட்டு வாம்மா”

போடா பெரிய இவன் என்பதுபோல் அமர்ந்தாள்.

“எங்கயோ எப்பவோ படிச்சத இந்த மாதிரி மீட்டிங்ல சொல்லிவிடுறது, இதுக்குப் போயி ஏன் இவ்ளோ கோவப்படுற?”

இல்லை இல்லை என்பதுபோல் தலையாட்டினாள்.

“ஒம் மனசுல என்ன இருக்கோ அதான வரும். சார் எனக்காக எதையும் மாத்திக்க வேணாம். இன்னைக்கு கருப்பு சட்ட போட சொன்னா வெள்ளை சட்டை, கேட்டா அயர்ன் பண்ணலனு ரீசன். ஆனா உண்மையான ரீசன் சிங்கம் சிங்கமா இருக்குறது அதான. இல்ல அந்த கீர்த்தனா வெள்ளை ட்ரெஸ்ல வர்றேன்னு மொதல்லயே சொல்லி இருப்பா”

அவள் சொன்னபிறகுதான் கீர்த்தனா என்ன நிறத்தில் உடுத்தி இருந்தால் என்ற சிந்தனை போனது. ஆனாலும் அவள் உடுத்திய நிறமோ உடையோ கண்ணில் எழவில்லை.

காஃபி வரும்முன்னரே மணம் வந்தது. அந்த நொடியில் அவ்வளவு தேவையாக இருந்தது அந்த நறுமணம். அம்மா அருகில் வந்தபிறகும் இவள் சரியாக அமராமல் கால்களை கோணல்மானலாகப் போட்டு பாதி சரிந்த நிலையில் இருந்தாள்.

“ஏன் தம்பி ஊர்ல ஒங்களுக்கு வேற பொண்ணா கெடக்கல, இவளப் போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு..”

“ம்மா”

காஃபியை மேலே ஊற்றிவிடுவேன் என சைகை செய்துவிட்டுப் போனார்.

நான் அனைத்திலிருந்தும் சற்று விலகி, ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தேன். முடிக்கும் வரை எதுவும் பேசாமல் இருந்தாள்.

“எக்ஸாட்டா என்ன பிரச்சன? நான் பேசினதா, வெள்ளை சட்டையா இல்ல வேற ஏதாவது உன்ன ஹர்ட் பண்ணிட்டனா, எனக்கேத் தெரியாம?”

“ஹர்ட் லாம் பண்ணா மண்டைய ஒடச்சுருப்பேன்”

“அதான. அப்பறம் ஏன் கோவப்பட்டுட்டே இருக்க. அட கோவப்பட்டாலும் அங்க நின்னு சண்டை போடு, அதவிட்டு இப்பிடி சொல்லாம வர்றதா?”

“அதெல்லாம் ஒனக்குப் புரியாது, விடு”

நான் கிளம்புவதை உணர்ந்து அம்மா வெளியே வந்தார்.

“ஆமா, இவ சொன்னான்னு இந்தத் தெருலயே வீடு வாங்க பேசினீங்களாம், சொன்னாரு. அங்க உங்க ஊர்ல போய் இருக்குறதாதான சொன்னீங்க”

கேட்டதும், துள்ளி எழுந்து வந்தாள்.

“இப்ப சொல்லுங்க சார் சிங்கம் பிடரி கதை எல்லாம்”

தலைவலி என ஒருமுறை தலையை ஆட்டி, சிகையை சிலுப்பினாள்.

சிரித்தேன்.

*

நன்றி : குமுதம் இதழ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை