கவிதை, நாவல், சிறுகதை என எழுதும் பன்முகம் கொண்ட எழுத்தாளர் நர்சிம். சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘சொம்புநீர்ப்பூ’. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பே வாசகர்களைக் கவரக்கூடியதாகப் பழந்தமிழ்ச் சொற்களில் இருக்கிறன. திருமணத்தின்மீது விருப்பமே இல்லாத பெண், தன் தோழியின் சூல் வயிற்றைப் பார்த்த நொடி தனக்கும் அப்படி வேண்டும் என்ற ஒரே காரணத்தால் திருமணம் செய்து கொள்கிறாள். கதையின் முடிவில், கணவன் புகைப்படத்திலும் பச்சிளங் குழந்தையுடன் தனிமையில் தோழியின் வருகையை எதிர்பார்த்து இருந்தவளுக்குத் தூக்கம் இமைகளை இணைக்க, இப்படியே இருந்தால் நல்லது என்று நினைக்கும்பொழுது குழந்தை அழத்தொடங்குகிறது. பெண்களின் எதிர்கொள்ளும் துயரங்களின் ஒரு பகுதியை இந்தக்கதை மென்மையாகச் சுட்டிக்காட்டுகிறது.
நர்சிம் இயல்பில் ஒரு கவிஞர் என்பதால், கவிதைக்குரிய பண்புகளுடன் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. பேரிளம் பெண்ணோடுக் கடலை ஒப்பிடும் அதே நேரத்தில் குழந்தையின் கொட்டாவியையும் கடலோடு ஒப்பிடும் பக்கங்களை வாசிக்கும்போது இதனை உணரலாம். தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது கதைக் களத்தைக் கொண்டுள்ளன. ‘நுரை’ சிறுகதையில் நீர்க் குமிழிகளையும் பாம்பு தீண்டியதால் வரும் நுரையினையும் ஒருசேர சிறுவனின் மனதில் காட்சிப்படுத்தியது குறும்படத்திற்கு இணையானதாக உள்ளது. ‘குழி’ சிறுகதையில் வெளிப்படும் சமகாலத் தன்மை சிறப்பாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலக வாழ்க்கையைப் பற்றியும் நவீன கால யுகத்தைப் பற்றியும் கதாப்பாத்திரங்கள் வாயிலாகவே நர்சிம் பேசியிருப்பது சிறப்பு.
– சு.தீபிகா
23/08/25 தமிழ் இந்து நாளிதழ்.
