Homeகட்டுரைகள்பஃறுளியும் சிலப்பதிகாரமும்.

பஃறுளியும் சிலப்பதிகாரமும்.

நான் பலமுறை இட்டிருக்கும் பதிவுதான்.. இன்னொருவர்பால் ஈர்ப்பு என்பது இயல்பு, இயற்கை. அது திருமணத்திற்கு முன்பு மட்டும்தான் இருக்க வேண்டும் திருமணத்திற்குப் பின்பெல்லாம் இருக்கக்கூடாது என்று நினைப்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம். உடன் இருப்பவர் அதாவது அவரது கணவன்/மனைவி அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதில்தான் அவர்களது வாழ்வின் சூட்சமம் அடங்கியுள்ளது. 

தன்னை விட வயது குறைவானப் பெண்ணைத்தான் திருமணம் செய்கிறான் ஆண். ஏன் ? வயது குறைவாக இருந்தால் தன்னை விட அனுபவமும் புத்திசாலித்தனமும் மெச்சூரிட்டியும் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் ஆணுக்கு. எல்லாவிதத்திலும் தான்தான் அவளை வழிநடத்துபவனாக இருக்க வேண்டும் எனும் உயரிய எண்ணம், அதாவது “ஈகோ!” 

வயதில் குறைவாக இருக்கும் தன் மனைவி கொஞ்சம் மெச்சூர்டாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவளாக இருந்தால், அவன் தன்மீதான நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறான். அதிலும் அவனது முதல் சிந்தனையே, படுக்கையில் தன்னால் அவளைத் திருப்திப்படுத்த முடிகிறதா என்பதாகத்தான் இருக்கிறது. திருப்தியாகத்தான் இருக்கிறேன் என்பதை அவள் ஏதோவொரு விதத்தில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். படுக்கையில் அவளைத் திருப்திப்படுத்திவிட்டால் அவளது பார்வை வேறுபக்கம் செல்லாது எனும் எண்ணம்… (இதை எழுதும்போதே எனக்கு சிரிப்பு வருகிறது 🙂 )

அவ்வாறான ஒரு கதாபாத்திரம்தான் மாயக்கண்ணன் ! நர்சிம்-ன் .. “பஃறுளி” நாவலின் நாயகன்.

ராஜசுந்தரராஜன் சார் இந்த நாவலைப் பற்றி என்னிடம் பேசியபோது, இந்த நாவலை வாசிக்கும்போது சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும் என்றார். 

இரு செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். நாயகனான மாயக்கண்ணனின் திருமண விழாவை நர்சிம் எழுத்தில் விவரித்திருந்த விதம், அற்புதம் ! 

சிலப்பதிகாரத்தில் கோவலன் – கண்ணகி திருமண ஏற்பாட்டை இவ்வாறு விவரித்திருப்பார் இளங்கோவடிகள்…

“முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;

முரை எழுந்தன பணிலம்; வெண்குடை

அரசு எழுந்ததொர்படி எழுந்தன;

அகலுள் மங்கல அணி எழுந்தது.

மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து, 

நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,

வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 

சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!”

பஃறுளியிலும் இதைப்போன்றதொரு வர்ணனையைக் கொடுத்திருக்கிறார் நர்சிம். 

மாயக்கண்ணன், நாவலின் நாயகன் ! மனைவி கோமதி. இன்னொரு கதாபாத்திரம் மாதவன். 

சிலப்பதிகாரத்தில் மாதவியின்பால் ஈர்ப்புக்கொண்டு கோவலன் சென்றபோது கண்ணகி நடந்து கொண்ட விதம். அதுவே இதில் மனைவி இன்னொருவன்பால் ஈர்ப்புக்கொள்ளும் போது கணவனான மாயக்கண்ணனின் மனநிலையை வெகுதுல்லியமாக நமக்குக் கடத்தியிருக்கிறார் நர்சிம். அற்புதமான எழுத்து. 

ஒருவரது தேடல் அதன் முடிவை எட்டும் வரை, அதாவது அதன் எல்லையைக் காணும் வரை பொறுமை காத்திருந்தால் அந்தத் தேடல் முடிந்து அவர்கள் மீண்டும் அவர்களின் திருமண உறவிற்கே திரும்பிவிடுவார்கள். திருமண உறவில் உடன் இருப்பவர்களுக்கு அதற்கான புரிதல் இருந்தால் போதும். 

அன்று கண்ணகிக்கு இருந்த புரிதல் இன்று மாயக்கண்ணனுக்கு இருக்கிறதா ????

  • சசிகலா.

https://www.facebook.com/share/1E76qRB8fC

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை