Homeகட்டுரைகள்‘முழு வாழ்வில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத் துணுக்கு'- ச.தமிழ்ச்செல்வன்

‘முழு வாழ்வில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத் துணுக்கு’- ச.தமிழ்ச்செல்வன்

ர்சிம் எழுதிய இந்த ஒன்பது கதைகள் வாசிக்கையில் புத்துணர்ச்சி தருகின்ற கதைகளாக இருக்கின்றன. சொம்பு நீர் பூ மற்றும் விழுங்கிய கவளம் ஆகிய இரு கதைகள் மனதை கனமாக்கும் கதைகள் என்றும் பிற ஏழு கதைகளும் லேசான கதைகள் என்றும் வகைமைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தொன்மம்- கதையில் இளம் உள்ளங்களில் விதைக்கப்படும் நம்பிக்கை சார்ந்து எழுகின்ற அச்ச உணர்வு நுட்பமாக பதிவாகி இருக்கிறது. கதை முடிவில் எதைப் பார்க்கக் கூடாது என்று பயந்தார்களோ அதே கருப்பண்ணசாமி சிலைக்கு லைட் அடிப்பவனாக நண்பன்  இருப்பதைக் காட்டியிருப்பது நல்ல நகை உணர்வுடன் கூடிய நாத்திகம்.

இந்த விடலைப் பையன்களின் வாழ்க்கை நர்சிம்முக்கு நன்றாக எழுத வருகிறது. ஓவியம் என்கின்ற கதையிலே வருகின்ற கிரிக்கெட் வாழ்க்கை அந்த வயதுக்குறிய எச்சரிப்புகளோடு மனதை கொள்ளை கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

அதே வயதைச் சார்ந்த பையனுக்கு ஏற்படும் மார்பு காம்பு வலி நுரை கதையில் சொல்ல முடியாமலும் சொல்லி ஆக வேண்டியதுமான அவஸ்தை ஆண் பெண்  உறவுக்கு இடையே இயல்பாக சொல்லப்படுகிறது.

நர்சிம்மின் எல்லா சிறுகதை தொகுதிகளையும் நான் வாசித்து இருக்கிறேன். அவருடைய கதைகளின் பலம் அவற்றின் சமகாலத் தன்மை ஆகும். கொரோனா காலத்துக்குப் பிறகு நிரந்தரமாகனதாகவும் இயல்பானதாகவும் மாறிவிட்ட வீட்டிலிருந்து வேலை செய்யும் பண்பாடு குழி கதையில் விமர்சனப்பூர்வமாக அதேசமயம் இயல்பாக பதிவு பெற்று உள்ளது 

புன்கணீர் ஒரு சிறப்பான கதை காதலை கொண்டாடுகின்ற சாதி மறுப்பு மற்றும் சகல பிற்போக்கு நம்பிக்கைகள் மறுப்பு கதையாக வெகு இயல்பாக நம் மனங்களை அசைக்கிறது.

குடும்பங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ள நம் பெண்கள் பற்றிய இரு முக்கியமான கதைகளாக சொம்பு நீர் பூவையும் விழுங்கிய கவளத்தையும் நாம் பார்க்கிறோம். 

அறிஞர் தொ. பரமசிவன் அவர்கள் பதிவு செய்த சொம்பு நீர் பூ, நர்சிம் கதையில் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு கதைகளும் விஸ்தாரமாக எழுதப்பட வேண்டிய குறுநாவல்கள் என்று படுகிறது.

எழுதப்பட்ட அளவில் இவ்விருகதைகளும் முழு வாழ்வில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை துணுக்கு போல நம் சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றமாக மன நிறைவளிக்கின்ற கதைகளாக அமைந்துவிட்டன.

நூல் வெளியீட்டு விழாவில் நேரில் பங்கேற்று பேச இம்முறை வாய்க்கவில்லை. வந்திருந்தால் நிறையவே பேசி இருக்க முடியும்.

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது நர்சிம்மின் மிகப்பெரிய பலம். அவருடைய உற்சாகம் தொடரட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் நன்றி வணக்கம்

சொம்புநீர்ப்பூ விழாவில் வாசிக்கப்பட்ட, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் கட்டுரை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை