Homeகட்டுரைகள்’ராட்டினத்தைச் சுற்றிவிடும் லாகவம்’- பழனிக்குமார்

’ராட்டினத்தைச் சுற்றிவிடும் லாகவம்’- பழனிக்குமார்

எழுத்து பிரசுரம் வெளியிட்ட நர்சிம் எழுதிய “சொம்புநீர்ப்பூ” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..

புத்தகங்களைப் படித்து வாசிப்பனுபவம் எழுதி நாட்களாகிவிட்டது. வேலைப்பளுவைத் தாண்டி சில சமயங்களில் மனமும் நேரமும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் பயணங்களைச் செரித்து சிலவற்றை எழுதி முடிக்கமுடியும். அப்படி மனமும் நேரமும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டுமென்றால் ரசனையும் உணர்வும் ஒன்றாய் லயித்துவிடவேண்டும். 

எனக்கு ஒரே மாதிரியான ஒழுங்கு செய்யப்பட்ட உணர்வுக்குவியலுக்குள் குறிப்பிட்ட மனக்காலம் தாண்டி இருந்துவிடமுடியாது. மனக் காலம் என்பது மனம் ஒரு நேரத்தில் ஓர் உணர்வில் லயித்தபடி இருந்துவிடும் HALFLIFE TIME என்று கொள்ளலாம். அதனாலேயே பெரிய அடர்த்தியான நாவல்களை நான் படித்துமுடிக்க நாட்கள் எடுத்துக்கொள்வேன். கவிதைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான். கவித்துவத்தைத் தக்கவைத்து அவற்றினூடே நின்றுவிட்டு பிறகு நகர்வது எனக்கான மனக்காலத்தை அதிகப்படுத்தும். அந்த வகையில் கட்டுரைத் தொகுப்புகளும், சிறுகதை தொகுப்புகளும் எனக்கான ஒழுங்கிற்குள் இருப்பவை. 

ஒரு விற்பனைப் பிரதிநிதியின் ஒரு மாத காலம் என்பது ஒரே சீரான வரைபடத்தைத் தந்துவிடாது. மாதக் கடைசி- இலக்கை (TARGET) நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தருணங்கள். மாதம் முதல் வாரம்,  இலக்கை முடிக்க எந்தெந்த திசைகளில் பயணிக்கலாம் என்று யோசிக்கும் தருணங்கள்.

ஒழுங்கு செய்யப்பட்ட நிரலுக்குள் மனம் எப்போதும் அந்தந்தத் தருணங்களால் மெருகேற்றப்பட்டிருக்கும். 

நர்சிம் எழுதிய ” சொம்புநீர்ப்பூ” சிறுகதைத் தொகுப்பு ஒழுங்கு செய்யமுடியாத உணர்வுகளை வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு தருணங்களில் இருந்து எல்லாம் வாரியெடுத்து ஒழுங்கு செய்ய நினைக்கும் மனத்தின் கையில் கொடுத்துவிடும்.

கதை அல்லது படைப்பின் வெற்றி என்பது , வாசகன் எந்த மன நிலையில் இருந்தாலும், அவனை வாசிக்கும் கதைக்குள் நிறுத்தி கதை மூலமாக ஓர் உலகைக் காண்பித்து அக்கதைக்கான உணர்வை அவனுக்குக் கடத்திவிடுதலாகும். “சொம்புநீர்ப்பூ” அதைச் செய்யும்.  

சிறுகதைகளும், கவிதைகளும் வாசகனுக்குக் கடத்தும் உணர்வு என்பது, தான் கண்டுணர்ந்த அல்லது கண்டுணரமுடியாத அனுபவத்தை வரிகளுக்கு இடையில் கிடக்கும் வெற்றிடத்தின் வழியே செலுத்துவதாகும்.

“சொம்புநீர்ப்பூ” சம காலத்து நிகழ்வுகளை உவமையாக்கி, அதன் மூலம் கண்டுணர்ந்த அனுபவத்தைக் காட்சிப்படுத்துகிறது. 

காஃபி பருகிவிட்டு வைத்துவிட்ட குவளையிலிருந்து நெடுநேரம் கழித்து வரும் நெடி,  ஆசை ஆசையாய் கடல் பார்த்து அலை நனைக்க நிற்கையில் அழுகிய கனகாம்பரமும் அதனுடன் முடிகளும் அலை கொண்டு சேர்க்கும் நிகழ்வு, இரவு கடற்கரையில் பொம்மைகளைக் காற்றாடி போல் வானில் மிதக்கவிட்டு அவை இறங்கும் நிகழ்வுகள் என , நர்சிம் எடுத்தாளும் நிகழ்வுகளும், உவமைகளும் சமகாலத்திற்கானவை. தற்காலத்திய வர்ணனைகள் புது வாசகன் வேகமாக ஈர்க்கும். அந்தவகையில் “சொம்புநீர்ப்பூ” மூலமாக நர்சிம் தன் இயல்பைக் தக்கவைக்கிறார்.  

வாசிப்பிற்குப் புதியதாய் வரும் ஒரு வாசகனுக்கு அவனது புரிதலுக்கான எல்லையும் தேடலும்  என்பது இலக்கியத்தரம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. அவன் முதலில் ஒரு நிகழ்வை, ஓர் உணர்வை அனுபவப்படவேண்டும். அனுபவப்படுதலில் வாசிப்பு அவனை உள் எடுத்துக்கொள்ளும். அதனை எந்தப் படைப்பாளி செய்கிறானோ, அங்கு இலக்கியத்தன்மையை வாசகன் கண்டுகொள்கிறான். 

“சொம்புநீர்ப்பூ” தொன்மம் கதையில் “செந்திலின் கையிலிருந்து வெளிச்சக்கத்தை அவனைத்தாண்டி  உள் நோக்கிப் பாய்கிறது” என்னும்போது செந்திலைத் தேடி ஓடி வந்த நண்பனாக வாசகன் இருப்பான். 

தூங்கிக்கொண்டிருக்கும் கைக்குழந்தை எழுந்துவிடக்கூடாது என்று நினைக்கும் புதிய தாய்க்கு குழந்தையைத் தொட்டும், வருடியும் தூக்கம் கலைக்கவும் ஆசை, தூங்கவிடவும் ஆசை. எந்தச் சத்தமும் வந்துவிடக்கூடாது, ஆசையாய் எதிர்பார்க்கும் பால்ய கால தோழி வரவேண்டும் ஆனால் இப்பொழுது வந்துவிடக்கூடாது என்றும் ஒரு தாயின் நிலையை உணர்வைக் கடத்திக்கொண்டே நர்சிம் அவள் வழியாக மின்விசிறியைக் காட்டுகிறார். சிறுவயதில் மின்விசிறியின் இறக்கையில் குருவியொன்று அமர்ந்து தூங்குகிறது என்று யாரையும் மின்விசிறி போட அனுமதிக்காத நினைவை அவள் வழியாக சொல்வதன் மூலம் ஒரு கேள்வி கேட்கலாம். குழந்தை தூங்குகிறது. மதிய நேரம், காய்கடைக்காரர் காய்ய்ய்ய் என்று கத்திவிட்டு குரல் தேய போய்விடுகிறார். சத்தம் எழக்கூடாது. குழந்தை தூங்கவேண்டும். விருந்தாளி வரவேண்டாம். இத்தனை பிரயத்னங்களில் நர்சிம் சிட்டுக்குருவியைக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அப்பா வந்ததும் பறந்து போக இருக்கும் குருவிக்கு இந்தக் கதையில் நர்சிம் தருவது ஒற்றை வரி மட்டுமே. ஆனாலும் சிட்டுக்குருவியின் பறத்தலை வாசகன் மனதிற்குள் கொண்டுவந்து நிறுத்துவது நர்சிம் அந்தக் கதைக்குச் செய்திருக்கும் ஒரு பூரணம். உணர்ந்தவர்களுக்கு இலக்கியத்தன்மை. 

ஒரு வாழை குலை விடுவதையும் வாழைத்தண்டின் வாசனையையும் வாழைப்பூவையும் பத்து வரிகளுக்கு வர்ணித்து வாழைப்பாலுடன் பிடுங்கப்பட்ட வாழைப்பூவைக் கையில் வைத்திருக்கும்போதே எதிர் வீட்டு ஆளின் மரணப்படுக்கைக்குள் நுழைகிறார் நர்சிம். கதையின் மத்தியில் கடலுக்குச் செல்கிறார்.  கதையைச் சொல்லும் விதம் என்பது நர்சிம்க்கு ராட்டினத்தில் ஒருவரை அமரவைத்துச் சுற்றுவதற்குச் சமம். உச்சியில் மெதுவாக ஏற்றிக்கொண்டே வருகிறார். உயரத்தைப் பிரம்மிக்கும் தருவாயில் ராட்டினம் கீழே இறங்குகிறது. வாழையை வேரோடு சாய்த்து மண்ணோடு இருக்கும் வாழைத்தண்டில் குழிபோல் தோண்டி , இலை போட்டு மூடி விட்டால், மறுநாள் சாறு இறங்கிவிடும். எடுத்துக்குடித்தால் இரைப்பைக்கு நல்லதாம். இதைச் செய்யும்போது எதிராள் இறந்துவிடும் அறிகுறிகள் தென்படுகின்றன. எதைச் சொல்கிறோம் என்பதைத் தாண்டி எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் கதையாக்கம். நர்சிம்மிற்கு ஒரு ராட்டினத்தைச் சுற்றிவிடும் லாவகமது.   

இலக்கியத்தன்மைக்குள் வாசகனை ஈர்த்தல், கதைசொல்லும் விதம் இவற்றில் ” சொம்புநீர்ப்பூ” மிதக்கிறது. 

நுரை, குழி போன்ற கதைகள் மற்ற கதைகளோடு ஒப்பிடுகையில் குறிப்பாய் நர்சிம்மின் கதையில் வருவதைப் போல, ” இவனை ஏன்டா கிரிக்கெட்டிற்கு டீம் ல் எடுத்த என்று கேட்பவனுக்கு, விடுடா, லெக் அம்பயருக்கு நிற்கட்டும்” என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

கிரிக்கெட்டிற்கு ஆள் எடுத்து மைதானத்தில் ஆடும் கதை ஒன்று இருக்கிறது. என் கல்லூரி காலத்தில் என் வீடு தாண்டி இருந்த பொட்டலுக்குள் நாங்கள் விளையாண்ட அனுபவத்தை எனக்கு மீட்டுக்கொடுத்தது. 70 80 களில் பிறந்து கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உள்ளவர்களுக்கான கதை அது. மெய் மறந்து அனுபவத்தின் வழி சிரித்துக்கொண்ட கதை அது. 

சொம்புநீர்ப்பூ” தொகுதியின் அட்டைப்பக்கத்தில் கவிஞர் நேசமித்ரன் குறிப்பிட்டது போல், பிரதேச அழகியல் மின்னும் நிலப்பரப்பிலிருந்து உன்னி உளவியல் வெளியில்  சஞ்சாரம் செய்கிறது. 

மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிப்படுத்தி அவரவர் நியாயங்களை , தருணங்களை எந்தப் பிசகலும் இன்றி, நேர்மறையாக மானுட பிரியங்களை ” சொம்புநீர்ப்பூ” ஆவணப்படுத்துகிறது. 

நர்சிம்மின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் எந்த எதிர்பார்ப்பும், நோக்கமும் இல்லாமல் செலுத்தப்படும் ஓர் எளிய அன்பிற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு, அது ஒரு போதும் கைவிடாது. தன்னை முறித்துக்கொள்ளாது. 

“சொம்புநீர்ப்பூ” மௌனமாக சுமக்கப்பட்ட உணர்வுக்கருவை உரிமையோடு பகிரும். 

பழனிக்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை