ஊஞ்சலுக்கு முன்பாகத் தொங்கும் கயிற்றின் முனையில் பிடிக்க ஏதுவாக முடிச்சிடப்பட்டு இருக்கும். காலங்காலமாக அக்கயிறைப் பிடித்து இழுத்து ஆடிய உள்ளங்கைகளின் வியர்வையும் அழுக்கும் கலந்து களிம்பேறி இறுகிப்போயிருக்கும் அந்த முடிச்சு முனை. பக்கவாட்டில் இருக்கும் தூணில் மோதிவிடாதவாறு வெகு சாதுர்யமாய் அசுர வேகத்தில் ஊஞ்சலை இயக்குவதில் யார் கில்லாடி என்பதுதான் எங்களுக்குள் நிகழும் போட்டியே. முதல் உந்துதலுக்கு மட்டும் காலை கீழே ஊன்றி உந்தித் தள்ளியபிறகு, கயிறு முனைமுடிச்சைப் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல வேகமெடுத்தால் ஊஞ்சல் அப்படியேப் பறக்கத் துவங்கிவிடும்.
அவ்வளவு பெரிய வீடு என்பதால் எங்களின் ஊஞ்சல் ஆட்டத்திற்கு ஒருபோதும் எந்தத் தடையும் ஏற்பட்டதேயில்லை. எவரேனும் நடையில் இருந்து கூடத்தைக் கடக்க நேர்ந்தால் ஊஞ்சல் சங்கிலிகளின் ‘க்ரீச்’ க்ரீச்’ என்ற சத்தம் எழுப்பும் பயத்தில் “பாத்து, பாத்து” எனக் குரல் கொடுத்துக் கொண்டே கடப்பார்கள். அந்த நடைபாதையை இடிக்கும் அளவிற்கு வராதபடிதான் கவனமான கணக்கெடுப்பில் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருக்கும்.
ஊஞ்சல் பின்னோக்கிப் போய் அங்கிருக்கும் சுவரில் தட்டித் தட்டி தழும்பு போல கோடு ஏற்படுத்தி இருக்கும். அந்தக் கோட்டை விட சற்று மேலேத் தட்டி கோடு ஏற்படுத்தி விடவேண்டும் என உள்ளூர ஒரு வெறி எங்கள் அனைவருக்குமே இருந்தது எனலாம். ஊஞ்சல் பின்னோக்கிப் போகும் வேகத்தில் கயிற்றை முன்னோக்கித் தூரத் தள்ளிவிட்டு கயிறும் ஊஞ்சலும் ஒருசேர கலக்கும் இடத்தில் மிகச்சரியாகக் கயிறைப் பிடிப்பது, கயிறைப் பிடிப்பது என்றால் மிகத்துல்லியமாக முடிச்சைப் பிடிப்பது, அப்படிப் பிடித்தபிறகு எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே லயத்தில் இயங்குவது என்பது போன்ற போட்டிகள் எங்களுக்குள் நிகழும். ஒருவர் ஆட பக்கவாட்டில் மற்றவர்கள் நின்று ஊஞ்சலின் லயத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறதா, கால் ஊன்றி நிறுத்தும்பொழுது ஆட்டம் காண்கிறதா என்பதைக் கவனிப்பார்கள். ஒரே லயத்தில் அதிகமுறை கயிறைப் பிடித்து விட்டு அதே வேகத்தில் முன்னும் பின்னுமாய் ஏறி இறங்குபவர்கள் வெற்றியாளர்கள். ஆர்வக்கோளாறில் கயிற்றைத் தவறான கோணத்தில் இழுத்தால் முடிந்தது கதை. பக்கவாட்டில் இருக்கும் தூணில் லேசாகப் பட்டாலே தாறுமாறாக ஊஞ்சல் இடவலமாக ஆட்டம் கண்டு சுவரில் இடித்து என அமர்ந்திருப்பவருக்கு மரணபயத்தை ஏற்படுத்தி விடும்.
எப்படியும் ஐந்தடி நீளம் இருக்கும். ஒன்று ஒன்றரை அடி அகலத்தில் மிகக் கனமான பலகையால் செய்யப்பட்டது அந்த ஊஞ்சல். நான்கு முனைகளிலும் பூண் போட்டு, சங்கிலிகள் ஏகமாய்க் கிளர்ந்து ஏறி உத்திரத்தில் இருக்கும் கம்பி வளையங்களில் கச்சிதமாய் அமர்ந்திருக்கும். ஊஞ்சல் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் அந்த எஃகு எவ்வளவு உயர்தரம் என்றும் அத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் கொஞ்சமும் துருப்பிடிக்காத அதன் தன்மை குறித்தும் பேச்சுகள் எழும்.
வருடம் முழுதும் சன்னமாய் எரியும் தீபச்சுடர் லேசான அசங்கலோடு மிளிர்வதுபோல்தான் ஊஞ்சல் மிக மிக மெதுவாக அத்தையோ, அக்காவோ, எப்போதேனும் அம்மாவோ மதிய உறக்கத்திற்குப் பயன்படுத்தி மிக லேசான அசங்களில் உறங்குவார்கள். பெரும்பாலும் என்னுடையப் புத்தகப்பை வைக்கும் இடமாகத்தான் ஊஞ்சல் இருக்கும். ஊஞ்சலின் பக்கவாட்டில் நின்று பையில் இருந்து எதையாவது எடுப்பதும் வைப்பதுமாய் இருப்பேன். காலையில் பள்ளிக்குக் கிளம்புகையில் இடுப்பை வைத்து லேசாகத் தட்டுவேன். அது அசைந்து கொடுத்து மீண்டும் என்னைத் தட்டும் முன் அங்கிருந்து நகர்ந்துவிடுவது வாடிக்கை. அது வாடிக்கை என்பதை விட ஒருவித ராசி பார்த்தல். ஆம். என்றோ ஒரு நாள் எதேச்சையாக அப்பிடிச் செய்துவிட்டு போன அன்று நான் பெரிதும் பயந்த பத்மா டீச்சர் வீட்டுக்கணக்கு எழுதாமல் போனதற்கு ஒன்றும் சொல்லாமல் சிரித்து விட்டுவிட, அங்கிருந்து இரண்டு மூன்று வருடங்களாக அந்த ‘இடுப்பால் ஊஞ்சலைத் தட்டிவிடும் ராசி பார்த்தலைப்’ பள்ளி இறுதி வரையிலும் தொடர்ந்திருக்கிறேன்.
பத்மா டீச்சர் என்றதும் இதுவும் நினைவுக்கு வருகிறது. எனக்கு இருக்கும் வினோத வியாதியை செண்பகத்திடம் சொல்ல, அவள்தான் அந்த உத்தியைக் கற்றுக்கொடுத்தாள். வகுப்பு நடக்கும்பொழுது ஏதேனும் ஒன்றிற்கு சிரிப்பு வருவது போல் இருந்தாலே எனக்கு சிரிப்பு அடக்கமாட்டாமல் வந்துவிடும். ஓரிரு முறை டீச்சரிடம் அழுத்தமான கிள்ளு வாங்கி இருக்கிறேன். பழுத்துவிடும். செண்பகம் சொன்னதுபோல், யாரேனும் நமக்கு வேண்டியவர்கள் இறந்து போய்விட்டதாக நினைத்துக்கொண்டால், அந்த நிகழ்வை கண் முன் கொண்டுவந்தால் சிரிப்பு வராது என்றாள். அப்படியும் சிரிப்பை அடக்க முடியவில்லை எனில் மூச்சு விடுவதை சில நொடிகள் சட்டென்று நிறுத்திவிட்டால் போதும் என்றாள். அந்த இறப்பு விசயம் மேலும் சிரிப்பைத்தான் வரவழைத்தது. ஆனால் மூச்சை இழுத்துப் பிடித்ததும் சிரிப்பு அடங்கத் துவங்கியது. செண்பகத்திடம் சொன்னதற்கு வழக்கம் போல் சிரித்தாள். “அப்பிடி என்னடா சாவ நெனச்சாக்கூட சிரிப்பு வருமோ ஒனக்கு” என தலையில் தட்டினாள்.
செண்பகம் என்றாலே ஊஞ்சல் தான். ஊஞ்சலுக்கு சீசன் எனில் அது முழு ஆண்டு விடுமுறை மாதங்கள் தான். விடுமுறை விட்ட வாரத்திலேயே எதிர்வீட்டிற்கு, ஊரில் இருந்து செண்பகம் வந்துவிடுவாள். எங்கள் தெருவில் இருக்கும் கோபால், மது என அனைவருமே செண்பகம் வந்தபிறகு ஒன்று கூடத் துவங்குவார்கள். ”நம்ம ஊர்ல இல்லாதப் பள்ளியோடமா” என நான் கேட்பதற்கு “எங்கப்பாட்ட போயி நல்லா சொல்லு” என்பாள்.
அந்த வருடத்தில் செண்பகத்தின் ஊஞ்சல் ஆட்டம் வெகு ஆக்ரோஷமாக இருந்தது போல் தோன்றியது. கோபாலும் மதுவும் ஆமோதித்தார்கள். அந்த வருடத்திற்கு முன் வருடம் தான் ’ஓட்டப்பல்லு சங்கரா ஒருவீட்டுக்கும் போகாத, அப்பம் வாங்கித் திங்காத அடிபெத்துச் சாகாத’ என செண்பகம் தெரு நண்பர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கேலி செய்த காரணத்தினால் அவர்கள் உள்ளே வந்து ஊஞ்சல் விளையாடிட முடியாத வண்ணம் நடுக்கதவை இழுத்து மூடி விட்டிருந்தேன். அவர்கள் அனைவரும் திண்ணையில் நின்று ‘இனிமேல் கேலி பண்ண மாட்டோம்டா’ எனக் கெஞ்சியும் நான் கதவைத் திறக்கவில்லை. அதனால் அந்த ஆண்டு விடுமுறை முழுக்க செண்பகம் எங்கள் வீட்டிற்கு வரவில்லை. முதலில் நான் வென்று விட்டதாக நினைத்தாலும் இரண்டு மூன்று நாட்களிலேயே எனக்கு என்னவோ போல் இருந்தது. கோபாலைத் தேடிப் போய் ஊஞ்சல் ஆட அழைத்ததற்கு செண்பகம் வந்தால் வருகிறேன் என்றான். எதிர் வீடுதான் என்றாலும் அவள் தட்டுப்படவேயில்லை. இத்தனைக்கும் திண்ணையில் அமர்ந்து முடிந்துபோன வகுப்பின் புத்தகங்களை வரிசையாக வைத்து அட்டையில் தாடி மீசை வரைவது அடுத்த ஆண்டிற்கான புத்தகங்கள் இரண்டு இரண்டாகச் சேர்த்து பைண்டிங் செய்வது என பசையும் கசகசப்புமாக அமர்ந்து, கண்ணை எதிர்வீடு நோக்கியே நோட்டமிட்டாலும் அவள் தென்படவில்லை.
அதன்பிறகு வந்த ஆண்டில்தான் செண்பகம் ஏகப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தி இருந்தாள். கயிறைப் பிடித்துப் பிடித்து விடும் ஆட்டம், பின்னால் சுவரில் தட்டினால் ’அவுட்’ என மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் போட்டிகளாக நடத்தினாள். நாங்கள் அனைவரும் ஆடி முடித்ததும் இறுதியாகத்தான் அவள் ஆடுவாள். முதலில் வலது காலை மட்டும் தரையில் ஊன்றி மெதுவாக உந்துவாள். பின்னர் இரண்டு கால்களையும் வைத்து வேகம் கூட்டி, கயிறைப் பிடித்து அதிவேகமாக ஆடத்துவங்குவாள். எங்களுக்குள் பயம் தொற்றிக்கொள்ளும். எதிரே எங்கோ இருக்கும் சுவரை காலால் தொட எத்தனிப்பாள். அவள் பாவாடை திருவிழாவில் சப்பரத்தை சுற்றிலும் கட்டப்பட்டப் பட்டுத்துணி காற்றில் அலைபாய்வது போல் பாயும். ரிப்பனின் நுனியை வாயில் கவ்விக்கொண்டு வேகத்தை அதிகரிப்பாள். ஆடும் வேகத்தில் அவள் சட்டைப்பொத்தான்கள் தெறித்துவிடும் அளவு சட்டை உடம்போடு ஒட்டி ஒட்டி விலகும்.
”ஊஞ்சல்னா அவ்ளோ பிடிக்குமா ஒனக்கு” என்ற கேள்விக்கு “யாருக்குத்தான் பிடிக்காதுடா” என்ற அவளுடைய பதிலும் அந்தச் சிரிப்பும் அவ்வப்பொழுது ஊஞ்சலைப் பார்க்கையில் நினைவிற்கு வரும். கல்லூரி நண்பர்கள்,தோழிகள் வீட்டிற்கு வந்து ஊஞ்சலைப் பார்த்த நொடியில் லேசான வியப்பும் ஆனந்தமுமாக அமர்ந்து மெதுவாக அசைத்துவிட்டு எழுந்துவிடுவார்கள். நானுமே ஊஞ்சலை அசைக்காமல் அமர்வதை வாடிக்கையாக்கி பல வருடங்கள் ஆகின்றன. நடுவே அக்கா குழந்தைப்பேறு காலங்களில் ஊஞ்சலைத் தாண்டி அறைக்குப் போவது இடைஞ்சலாக இருக்கிறது எனக் கழட்டி, சுவரில் சாய்த்து வைத்திருந்தோம். அந்த சில மாதங்களில் அந்த இடமே வேறு ஒருவருடைய வீடு போல் தெரிந்தது எனக்கு. சங்கிலிகளை நான்காக மடித்து மேலே தொங்கவிட்டது ஏதோ போல் துக்கம் ஏற்படுத்தியது. அக்கா கிளம்பிய அன்று மதியமே சங்கிலிகளை விடுவித்து ஊஞ்சலை மாட்டிய நாளில் ஊஞ்சல் லேசாகக் குதித்து எனக்கு நன்றி சொன்னதுபோல் தோன்றியது. சங்கிலிகள் கட்டுண்டு இறுக்கமாக இருந்த உணர்வில் இருந்து தளர்ந்து தாராளமாய் கை கால்களை நீட்டிக்கொண்டது போன்ற ஆசுவாத்தோடு இருப்பதாகத் தோன்றியது.
அதன்பிறகு வந்த வருடங்களில் ஊஞ்சல் கொஞ்சம் சின்னதாக ஆனதுபோல் தோன்றியது. இப்போது தெருவில் இருக்கும் சிறுவர் சிறுமிகள் யாரும் ஊஞ்சல் ஊஞ்சல் என வந்து அப்பாவிடம் திட்டு வாங்குவதில்லை. அக்கா சொன்னதுபோல் யாரும் யார் வீட்டிற்கும் போய் விளையாடுவதுமில்லையாம்.
சென்ற வருடம் செண்பகத்தின் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தபொழுது நாங்கள் அனைவரும் போனோம். கோபால் மட்டும் வரமறுத்துவிட்டான். திருமணம் முடித்து திரும்பி வரும்போது மது சொல்லித்தான் அவனுடைய ஒருதலைக் காதல் எனக்குத் தெரிந்தது.
“ஏண்டா எத்தன தடவ கூப்புடுறது, என்னைக்கும் இல்லாத திருநாளா இப்பிடி ஊஞ்சல் ஆடிக்கிட்டு”
அம்மா கையில் வைத்திருக்கும் காஃபி கொட்டிவிடக்கூடாது என ஊஞ்சல் நிற்கும் வரை அருகில் வராமல் சத்தமாகப் பேசினாள்.
“காலைல இருந்து ரெண்டு தடவ வந்துட்டுப் போய்ட்டா செண்பகம். நீ மாடில இருந்து இன்னும் எறங்கலயானு” சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வெளியே போய்த் திண்ணையில் நின்று செண்பகத்தை நோக்கி அம்மா சத்தம் கொடுப்பது மெலிதாகக் கேட்டது.
அதிகாலையில் எதிர்வீட்டு வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டு அந்த மசி இருட்டில் செண்பகமும் அவள் கணவனும் உள்ளே செல்வதைப் பார்த்து, தூங்காமல் படுத்திருந்ததில் இருந்தே மனம் ஊஞ்சல் ஆடத் துவங்கி இருந்தது. அம்மா செண்பகத்தை அழைத்துக்கொண்டு உள்ளே வரும் நடை அடிகள் கேட்டன. ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வு, ஊஞ்சலில் இருந்து எழுந்து கொள்வதற்குள் வந்துவிட்டாள். ஆடும் ஊஞ்சலை கையை வைத்து நிதானப்படுத்தி நிலைகொள்ளச் செய்தேன்.
அவளைப் பார்த்துச் சிரித்து ஊஞ்சலில் அமரச் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டு ஊஞ்சல் கயிற்றின் பிடியில் இருந்த முடிச்சை இறுகப் பிடித்து அதில் தன் மொத்த எடையையும் தாங்கக்கொடுத்து லேசாக ஆடிக்கொண்டே சிரித்தாள். முடிச்சின் வழுவழுப்பை உள்ளங்கையில் ஏந்தி இருகைகளாலும் தாங்கினாள். அம்மா அவளுக்குப் பிடித்த காஃபியை எடுத்து வந்து கொடுத்ததும் வாங்கிக்கொண்டே அம்மாவோடு உள்ளே போய்விட்டாள்.
போகும்முன் முடிச்சை ஏந்தி உந்தி தூக்கிப்போட்டுப் போனாள். கயிறு தாவித் தாவி ஆடி அதன் நிலையை அடைந்தது. அப்போதே அவளுக்குத் தெரியும் போல. அன்று மாலை அவளை அப்படிக் கிடத்தி வைப்பார்கள் என்று. எதிர்வீட்டின் உத்தரக்கட்டை அவ்வளவு உறுதியான ஒன்றல்ல. ஆனாலும் அவள் எடை ஒன்றும் அவ்வளவு கனம் இல்லை போல. யார் யாரோ ஏதேதோ சொல்லி அரற்றிக் கொண்டிருந்தார்கள். ’அவன் சரியில்ல வேணாம் கொடுக்காதனு சொன்னேனே’ என தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள் செண்பகம்மா.
காற்றுக்கு மிக சன்னமாக அசைந்து கொடுத்தது அவள் முடிச்சிட்டக் கயிறு.
*
ஊஞ்சல் கயிற்றின் முடிச்சு போல ஒரு இறுக்கமான, ஊஞ்சற்பலகை போன்ற கனமான, உத்திரக் கயிறு போல தாக்(ங்)கும் கதை.
முடிச்சின் முகம் இவ்வாறாகும் என ஒரு போதும் எண்ணத் தோன்றவில்லை.
வருத்தங்கள் அண்ணா 💔😈
ஊஞ்சல் ஆடுவது போன்ற அழகான உணர்வை கொடுத்து…
சிறுபிள்ளை கையில் சாக்லேட்டை கொடுத்து பிடிங்கிய மனநிலை 💔