Homeகட்டுரைகள்பஃறுளி: பெண்ணெனும் பெருவெளி

பஃறுளி: பெண்ணெனும் பெருவெளி

  • எழுத்தாளர் சுப்பிரமணி இரமேஷ்

புறநானூற்றில் (பா.9) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டி நெட்டிமையார் பாடிய பாடலில் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’ என்றொரு வரி இடம்பெற்றுள்ளது. ‘வடிவேல் எறிந்த வான்பகைபொறாது / பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் / குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பஃறுளி ஆறு பற்றி எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் பஃறுளி ஆறு ஓடிய நிலத்தைப் பற்றிக் ‘கபாடபுரம்’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். பஃறுளி ஆறு கடல்கோளால் அழிந்துபோனதாக இளங்கோவடிகள் கூறுவது தவறு; இன்றைய பறளி ஆறுதான் பஃறுளி ஆறு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மா.அரங்கநாதன் ‘பறளியாற்று மாந்தர்’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். பஃறுளி ஆறு தொன்ம மதிப்புடையது. இந்த ஆறு கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றைச் சுற்றிப் பல்வேறு தொன்மக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. நெட்டிமையார், இளங்கோவடிகள், புதுமைப்பித்தன், மா.அரங்கநாதன் உள்ளிட்டோரைத் தொடர்ந்து எழுத்தாளர் நர்சிம் இந்தத் தொன்மப் பெயரைப் பயன்படுத்தி ‘பஃறுளி’ என்றொரு நாவல் எழுதியுள்ளார்.

                        ஃறுளி எனும் பெயர் ஒரு குறியீடாக இந்நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலின் கதைக்களம் மதுரை. பஃறுளி ஆற்றைப் போன்று மதுரை நகரமும் ஈராயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றை உடைய தொன்ம நிலம். கண்ணகியின் அறத்தை நேரில் பார்த்த நிலம் மதுரை. இதுவொரு பெண் பதி. இந்த வரலாறுகளையெல்லாம் இப்புனைவு தன் பின்புலமாகக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் கோவலன், கண்ணகி மற்றும் மாதவி. அதேபோல மாயக்கண்ணன், கோமதி, மாதவன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் வழியாகத்தான் ‘பஃறுளி’ நாவல் சொல்லப்படுகிறது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையிலான மண வாழ்க்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியவள் மாதவி. அதேபோன்று மாயக்கண்ணனுக்கும் கோமதிக்கும் இடையில் மன உடைவை உண்டாக்குபவன் மாதவன். நர்சிம் இதனைத் திட்டமிட்டு எழுதினாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவரது மனம் ஒரு கூட்டு நனவிலியால் ஆனது. அவர் மதுரையைச் சார்ந்த எழுத்தாளர். மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தொடர்ந்து தம் கதைகளில் எழுதி வருகிறார். அதனால் சிலப்பதிகாரத்தின் தொன்மம் இந்நாவலிலும் ஊடாடியுள்ளது. இரு பிரதிகளுக்கும் இடையில் பெரிய அளவில் ஒற்றுமை இருப்பதை விரிவாக விவாதிக்க முடியும்.

                       பி.ஆர்.ராஜமைய்யர், சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா ஆகியோரது படைப்புகளில் மதுரையின் நிலப்பரப்பு முக்கியப் பங்கு வகித்தது. அவர்களுக்குப்பின்மதுரை நில மக்களின் வாழ்க்கையை நர்சிம் கதைகளில்தான் படித்தேன். நர்சிம் தம் படைப்புகளுக்குக் காத்திரமான பொருண்மைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அவருக்குள் செயல்படும் மென்மையும் பகடியும் கலந்த மொழி, அந்தக் காத்திரமான பொருண்மைகளின்மீது வெகுசனத் தன்மையைக் கொண்டு வந்து விடுகிறது. இந்த நாவலும் மாயக்கண்ணன் – கோமதி ஆகிய இருவருக்கு இடையிலான வாழ்க்கையைத்தான் பேசுகிறது. இருவரும் பள்ளி ஆசிரியர்கள். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒரே பள்ளியில் பணியாற்றுகிறார்கள். உதவித் தலைமை ஆசிரியர் பொறுப்பு தனக்குக் கிடைக்கும் என மாயக்கண்ணன் எண்ணிக்கொண்டிருந்த சூழ்நிலையில், அந்த இடத்திற்கு மாதவன் வந்துவிடுகிறான். மாயக்கண்ணனின் இருப்பு விரிசலடைகிறது. அதுவரை சக ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கிடைத்துவந்த மரியாதை குறைவதாக உணர்கிறான். மாதவன், தனக்குக் கிடைத்த பொறுப்பின் அடிப்படையில் சில அதிகாரங்களை இயல்பாகப் பெறுகிறான். இது மாயக்கண்ணனுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மாதவனின் அதிகாரம் கோமதியை வேலை வாங்குவதுவரை நீள்கிறது. பணியின் காரணமாகக் கோமதியும் மாதவனுடன் பழக வேண்டிய சூழல் உருவாகிறது. இது கணவன் மனைவிக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்துகிறது.

                        அளவுக்கு அதிகமான அன்பு பெரும் ஆபத்தில்தான் முடியும் என்பதை இந்நாவலும் பகிர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்து, அன்பு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது. மாயக்கண்ணன் கோமதிமீது பெருங்காதலுடன் இருக்கிறான். அவள் தனக்கு மட்டுமேயானவள் என்று நினைக்கிறான். இதுவும் ஒருவகையான ஆதிக்கம்தான். எந்த முடிவையும் அவனைக் கேட்டே எடுக்க வேண்டிய சூழல். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியையாக இருக்க ஆசைப்படும் கோமதிக்கு, மாயக்கண்ணனின் அளவுக்கு மீறிய காதல் பெரும் தடையாக இருக்கிறது. அவன் கோமதியை உடைமைப் பொருளாகக் கருதுகிறான். ஒரு கட்டத்தில் கோமதி தன்னை விட்டுச்சென்று விடுவாளோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. பயம் மிகுதியான சந்தேகத்தை வரவழைக்கிறது. இருவருக்கும் இடையில் விரிசல்அதிகரிக்கிறது. கோமதி சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறாள். கணவனுக்கும் பிறருக்குமான எல்லை அவளுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனால் மாதவனின் ஆளுமை காரணமாக அவனிடம் இவளுக்குச் சின்ன தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனை மாயக்கண்ணன் சரியாகக் கையாளாமல் அவளைத் தவற விடுகிறான். இந்த நவீன வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் நிகழும் இதுபோன்ற ஊடல்களை எழுதுவதில் நர்சிம் தேர்ந்தவர். இதற்கு முந்தைய அவரது நாவல்களும் இந்தப் பகுதியைச் சிறப்பாகக் கையாண்டிருக்கும்.

                      கோமதியின் அகத்தை ஒருநாள் கண்ணன் புரிந்துகொள்கிறான். ஆனால் அப்போது காலம் கடந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திர உணர்வு கட்டற்றது. அதனை அவள் செயல்படுத்த முயலும்போது யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்ற புரிதலைக் கோமதி கதாபாத்திரம் ஏற்படுத்துகிறது. திருமணமான புதிதில் புகுந்த வீட்டுக்குப் போகக்கூட அவளுக்கு வழி தெரியாது; அப்படித்தான் அவள் வளருகிறாள். அவள்தான் ஒரு கட்டத்தில் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு மாதவனுடன் கன்னியாகுமரிவரை செல்கிறாள்.

                    பஃறுளி, தோழர் லீலாவதியின் தியாகத்தையும் பொதுவுடைமை இயக்கத்தின் செயல்பாடுகளையும் கதையுடன் தொடர்ந்து பேசியிருக்கிறது. செல்வம் என்ற கதாபாத்திரத்தை நர்சிம் இதற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அடுத்து, மாயக்கண்ணனுக்கும் அவனது நண்பன் தேவராஜுக்கும் உள்ள நட்பு நாவலின் இறுதிவரை தொடர்கிறது. கோமதிக்கு அடுத்து தேவராஜ் கதாபாத்திரம் இந்நாவலில் மிக முக்கியமான கதாபாத்திரமாகப் படுகிறது. இப்படியொரு நட்பைப் பற்றிய புனைவு தமிழில் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். கோமதியே பொறாமைப்படும் அளவுக்கு மாயக்கண்ணன் – தேவராஜ் நட்பு இருக்கிறது. இந்த இரு பகுதிகளும் நாவலுடன் சேர்ந்தே பயணிக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் தொடங்கி 2018 வரை நாவல் பயணிக்கிறது. ‘பஃறுளி’ நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நாவல். நாவலை உடைத்துப் பேசுவதற்கான உள்ளீடுகளைக் கொண்டிருக்கிறது. நர்சிம் தனக்கென்று ஒரு கதைசொல்லும் பாணியை உருவாக்கி வைத்துள்ளார். அதனை இந்நாவலிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

  • எழுத்தாளர் சுப்பிரமணி இரமேஷ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி