”நீ ஏழு நாளுக்கு முன்னாடி வர்றேன்னு சொன்னப்பவே தெரியும்டா இப்பிடித்தான் ஏதாவது சொல்லுவன்னு”
அப்பாதான். அதே சவுண்டுதான். ஆனால் இம்முறை அந்தக் குரலில் கோவத்தைவிடவும் தீபாவளிக்கு வீட்டில் இல்லாமல் எப்படி எனும் ஏக்கமே அதிகம் இருந்தது. அல்லது அப்படி இருந்ததாகப்பட்டது. மொத்தக் கோவத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்த மொபைல் மீது காட்டினார். “இந்த எழவக் குடுத்து உங்கள எல்லாம் அடிமைப் படுத்தி வச்சுருக்கானுக. திடீர் திடீர்னு அங்க வா இங்கவானு திங்கும்போதும் பேழும்போதும் போனு போனு”. கிட்டத்தட்ட சீமான் பிள்ளைகள் சொல்லும் அந்நிய அடிமை கைக்கூலி வகை ஏற்ற இறக்கங்கள்.
விசயம் என்னவெனில், பத்தாம் தேதி வாக்கில் போகத் திட்டமிட்டிருந்த கம்போடிய பயணம் சிலபல சூழல் காரணமாக தீபாவளிக்கு முதல் நாளே கிளம்ப வேண்டியிருக்கிறது என மொபைலில் வந்த தாக்கலால் தான் இந்த தாக்குதல்கள். இயல்பு நிலைக்கு வந்து, பரபரப்புகள் அடங்கி, மதுரை சென்னை விமானம், அன்றைய இரவு சென்னையில் இருந்து கம்போடியா என சடுதியில் சட்சட்டென எல்லாம் தயார்.
இரண்டு பேர். நானும் நண்பரும். நண்பனும் என்பதே சரி.
சென்னை விமான நிலையத்தில் நான்கு நாட்களுக்கான பெட்டியை உருட்டும்போதே ஒரு பெண், “சார் பேக்கிங் பண்ணணுமா? கம்ப்ளீட்டா பக்காவா இருக்கும்” எனும் உருட்டல் ஆரம்பமானது. நாலு சட்ட மூணு ஜட்டிக்கு எதுக்குப் பக்கா பேக்கிங் என மனம் முணுமுணுக்க, அதை அவர் உணர்ந்திருக்கக்கூடும் என்பதுபோல் சிரித்து அடுத்தப் பெட்டியைப் பார்க்கப் போய்விட்டார்.
சிரிப்பு பத்து நிமிடங்களுக்குத்தான். வரிசையில் நின்று நம்ம லக்கேஜ்க்கு எதுக்கு பேக்கிங் என்ற ஜோக்கை சொல்லி சிரித்துக்கொண்டே போய்..அதாவது ஜாலியான ட்ரிப் என மனதளவில் தீர்மானித்து இப்படி எடுத்ததெற்கெல்லாம் சிரித்துக்கொண்டே போய் நின்றால்,
“கம்போடியாவா? அங்க எதுக்கு சார்?”
“கோயில், அங்கோர் வாட் ஒரு டீட்டெய்ல்க்கு”
“ஒண்ணு பண்ணுங்க, அங்க போய் சொல்லுங்க” என ஒரு மூலையைக் காட்டிவிட்டு சத்தமாக “நெக்ஸ்ட்” என்றார்.
அவ்வளவுதான். என்ன ஏதென்று எதுவும் புரியாமல் ஒருவிதப் பதற்றத்தைக் கொடுத்துவிட்டது அந்த அதிகாரக் குரல்.
அவர் கைகாட்டிய இடத்தில் வரிசையில் நின்றிருந்தவரை “ஏன்ய்யா வெள்நாடு போற ஆனா அங்க யாரப் பாக்கப்போற எங்க போகப்போறனு எதுவும் தெரிலன்ற” என ஒரு விடலைப்பையனைக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு முரட்டு அதிகாரி. நல்லவேளையாக அவருக்கு அருகில் இருந்த பதுமையக்கா, “எஸ்” என கேட்க, ஆங்கிலத்தில் எங்குபோகிறோம் எதற்குப் போகிறோம் என்றைக்குத் திரும்பி வருகிறோம் என்று சொன்னதும், எதுவும் கேட்காமல் ஓக்கே என போர்டிங் பாஸில் எழுதிக்கொடுத்துவிட்டு, “கம்போடியாவில் ஆறு நாட்கள் என்ன செய்யப்போகிறீர்கள்” என்று கேட்டார். பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதால் நாங்களும் சொல்லவில்லை.
சென்னையில் இருந்து இரவு 12 மணிக்குத்தன அத்திக்கில் போகும் விமானங்கள் கிளம்புகின்றன. ஒரு ஆளுக்கு, போய்வர ‘ரவுண்ட் ட்ரிப்பிற்கு’ ரவுண்டாக 70 ஆயிரங்கள் வரை ஆகிறது. சென்னையில் 12 மணிக்கு கிளம்பும் விமானம், கொஞ்சம் ஒயின், பாடாவதி பன்பட்டர் இத்தியாதிகளுடன் அதிகாலை ஆறு மணிக்கு பாங்காக்கில் இறக்கி விட, அங்கிருந்து கனெக்ட்டிங் ஃப்ளைட் மூலம் கம்போடியா ஒரு மணிநேரத்தில், சென்னை மதுரை தூரத்தில் என்று நினைத்தால், கம்போடியா விமான நிலையமும் மதுரை விமானநிலையம் போல்தான் இருந்தது.
On Arrival Visa என்றாலும் சென்னையில் இருந்தே படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டால், பாங்காங்கில் இறங்கி கம்போடியா விமானத்திற்குக் காத்திருக்கும் பொழுதில், விஸா அங்கீகரிக்கப்பட்டது எனும் தகவல் அலைபேசியில் வந்துவிடும்.
இமிக்ரேசன் ஏக கெடுபிடிபோல் காட்சியளிக்க, கையில் இருந்த அலைபேசித் திரையில் நீ எங்கள் நாட்டிற்குள் வரலாம் எனும் சிட்டையைத் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு நீட்டினால், ஸ்கேன் செய்து, புருவம் உயர்த்தி புன்னகைத்து வெல்கம் என்கிறார்கள்.
கம்போடியாவில் இரண்டு விமான நிலையங்கள். முதன்மையான பெரிய தலைநகரம் என்பது ‘போனம் பெந்த் (Phnom Penh)’. மற்றொன்று ‘சியாம் ரீப்’ (Siem Reap, Angkor).
நாங்கள் போய் இறங்கியது சியாம் ரீப் விமான நிலையம். இந்த நகரத்தில் தான் உலகப்புகழ்பெற்ற அங்கோர்வாட் கோயில் உள்ளது. இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையே ஆறு மணி நேரப் பயணம் என்பதால், அங்கோர் வாட் கோயிலுக்குப் போவதென்றால் இந்த சியாம் ரீப் விமான நிலையத்திற்கு செல்வதே சரி.
விமான நிலையத்தில் இருந்து சியாம் ரீப் நகரம் சரியாக ஒரு மணி நேரம். அங்கே விமான நிலையத்தில் 40 டாலர்களில் இருந்து 70 டாலர்கள் வரை வண்டிகள் கிடைக்கின்றன.
டாலர் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது அந்த ஊரின் பொருளாதார நிலைதான். நமக்கு ஒரு டாலர் என்பது , 84 ரூபாய் எனில் கம்போடியாவில் Riel மதிப்பில் 4000. ஆம் அதளபாதாளத்தில் கிடக்கிறது அவர்களின் பொருளாதாரம்.
இப்படிச் சொல்லலாம். கையில் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய், ஒரு இலச்சம் டாலர் எடுத்துப் போய்விட்டால் விக்ரம் படத்தில்(பழைய விக்ரம்) வரும் ஏஞ்சோடி மஞ்சக்குருவி ஊர்,தேசம் என அங்கே சுகிர்தராஜா சத்தியராஜ் அல்லது அம்ஜத்கான் வாழ்க்கை வாழ்ந்துவிடலாம்.
சியம் ரீப் நகரம் என்பது நம்முடைய பாண்டிச்சேரியின் பிரதான (அதே நாலு நல்ல தெரு) தெருக்கள் போல் இருக்கின்றன. நகரின் நடுவே இருக்கும் தெருவில் முக்கிய ஆடம்பர விடுதிகளான, அமன்சாரா ஹோட்டல்(ஒரு நாளைக்கு ஒரு லட்ச இந்தியப்பணம்), Raffle, (400+$) என சில ஆடம்பர உயர்தர நட்சத்திர ஹோட்டல்கள். அதே தெருவில் மிக நல்ல ஹோட்டலான Angkor Century Resort & Spa. சல்லிசாக 55$ தான் ஒரு நாளைக்கு. காலை உணவுடன்.
அந்த ஸ்பா என்ற சொல் உங்களுக்குள் எவ்வகையான உற்சாகத்தைக் கொடுத்ததோ அதே அளவுதான் எங்களுக்கும். போய் உடைமாற்றிக்கொண்டு நேராகக் கைப்பையைத்தூக்கிக் கொண்டு,( அதில் பாஸ்போர்ட் மற்றும் 3000$ பணம், இதை கையிலேயே வைத்திருக்க வேண்டும் என்றார்கள்) போய், ஸ்பா என்றதும், ரிஷப்சன் முதல் அங்கு தென்பட்ட அத்தனைப் பெண்கள் ஆண்கள் அனைவரும் அவ்வளவு மரியாதையாக முப்பது பாகை குனிந்து சிரித்து கைகூப்பி வணக்கம் வைத்துதான் பதில் சொல்கிறார்கள். பதில் சொன்னபிறகும் வணக்கம் வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் அல்லது மூன்று சொற்கள். அவ்வளவுதான். அதன்பிறகு அலைபேசியில் கூகுள் ட்ரான்ஸ்லேட்ட்ரை ஆன் செய்து அவர்கள் காதில் வைத்தால், சிரித்து அதுவா என உடனே மீண்டும் ஒரு வணக்கம் மற்றும் நமக்கான பதில்.
ஸ்பா என்றதும் கையக்காட்டிய திசையில் பெரிய பலகை அம்புக்குறி போட்டு அழைத்துப்போனது. போகும் வழியில் நீச்சல் குளம் வேறு. நண்பன், வந்து குளிப்போம் என்றான், ஆர்வமிகுதியில். நல்ல வெய்யில் சுரீர் என்று அடித்தது.
நீண்ட புல்வெளி மெத் மெத் என்று இருக்கிறதா என செருப்பை ஒருமுறை கழட்டி பாதம் தோய்த்து அனுபவித்து ஸ்பா நோக்கி நடந்தோம்.
புல்வெளி ஓரத்தில் நீச்சல் குளத்திற்கு அந்தப்பக்கமாக இருந்த கட்டிடம். அமைதியாக இருந்தது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை, அல்லது யாருமே இல்லை. நல்லவேளை நல்ல ப்ரைவஸி என்று நினைக்கும்போது நண்பன், “ஃப்ளைட் சீட்டு சரி இல்லல்ல, அதான், மொத்தமா ஃபுல் பாடி எடுத்துருவோம் என்ன சொல்ற” என்று வாயெல்லாம் பல்லாக ஆரம்பிக்க சுற்றும் முற்றும் பார்த்தோம்.
யாரும் இல்லை. நீண்ட வராண்டா போன்ற வளாகம். இந்தப்பக்கமாக மூடிய அறைகள். வளாகத்தில் ட்ரெட் மில், இன்னபிற ஜிம் உபகரணங்கள்.
நீச்சல் குளப்பக்கமாக கூட்டிக்கொண்டிருந்த பணியாளாரிடம் போய் ஸ்பா என்றதும் மீண்டும் வளாகத்தை நோக்கிக் கைகாட்டி கும்பிட்டார்.
நல்லவேளையாக அங்கு சுற்றலில் இருந்த மேலாளரிடம் ஸ்பா என கேட்க, குனிந்து நிமிர்ந்து என மரியாதைகளைக் காட்ட நண்பன் பொறுமை இழக்கத் துவங்க, அவர் பின்னால் நடந்தோம். ஆட்கள் கொஞ்சம் சராசரிக்கும் குள்ளம் என்பதால் காலுக்குள் வந்து இடறுகிறார்கள். நாம் சற்றுப் பின்னால் தள்ளி நடக்க வேண்டும். நடந்தோம். நேராகப் போய் அந்த ஜிம் உபகரணத்தின் முன் நின்று விளக்குகளைப் போட்டு மீண்டும் குனிந்தார்.
ஆம். அந்த ஊரில் ஸ்பா என்றால் ஜிம் போல. அவர் மீண்டும் குனிந்து நிமிர்ந்து போகும்வரை அசையாமல் நின்றுவிட்டு திடுதிடுவென அறைக்குப் போய் கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.
“என்னய்யா இப்பிடி ஆகிப்போச்சே” என்றான். இர்றா பாப்போம்.
மாலை, சில்லென்று இருந்தது வெளியே. நினைத்த மாத்திரத்தில் மழை பொழிகிறது.
நம்ம ஊர் ஆட்டோ போல் அங்கே ’டுக்டுக்’ என்ற வண்டி. அதாவது பல்சர் இன்னபிற வண்டிகளின் பின் சீட்டில் இருந்து பெரிய ஷேர் ஆட்டோ சீட்டுகளை இணைத்து வெல்டிங் வைத்து அதை அதிகாரப்பூர்வ டுக்டுக் என்று நகரம் முழுக்க ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இந்த டுக் டுக் தான். நான்கு டாலர் என்பார்கள்.ஆனால் ஒரு டாலர் தான். இது இரண்டாம் நாள் தான் தெரிந்தது.
சியம் ரீப்பின் நடு செண்ட்டரில் இருக்கும் வீதியில் நான்கைந்து வங்கிகள், ஏடி எம்கள், அதில் உள்ளூர் பணமும் கூடவே டாலர்களும் வருகின்றன. விமானத்தில் 3000$ தான் எடுத்துப் போகமுடியும் என்ற விதி இருப்பதால், ட்ராவல் கார்டில் பணத்தை ஏற்றிக்கொண்டு போக வேண்டும். ஆனால் பெரிதாக செலவே ஆகாத நகரம் அது.
முக்கியத் தெருவில் நடந்தே முடித்துவிடும் அளவுதான். சுத்தமான சாலைகள். அங்கிருந்து போக வேண்டிய இடம், பப் ஸ்ட்ரீட் (Pub Street). மாலையில் கூட்டம் கூடத் துவங்கி, பெங்களூர் எம் ஜி ரோடுபோல் அந்த வீதி முழுதும் சுற்றுலாப் பயணிகள் நிறைகிறார்கள். பாண்டி பஜார் போன்ற தெரு. நான்கு முக்கியமான பப் கள். மாலை ஆறுமணியில் இருந்து பாட்டும் ஆட்டமும் என அலறவிடுகிறார்கள். ஒரு டாலருக்கு உள்ளூர் ’அங்கோர் பீர்’, பத்து டாலருக்கு மாலை முழுவதும் அங்கேயே கழிக்கலாம். களிநடனங்கள் புரியலாம்.
அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் தாய்லாந்து, பாங்காக்கில் கிடைக்கும் எந்தவித தொழில்முறை இத்தியாதிகள் எதுவும் இந்த தேசத்தில் இல்லை. மிகவும் கடுமையான நடவடிக்கை என்பதால், வீதி முழுக்க இருக்கும் கேளிக்கைக் கூட்டம், மற்றும் மசாஜ் பார்லர்கள் அனைத்துமே எந்தவித கூடுதல் இன்பங்களுக்கு இடமில்லை. ஒரே ஒரு டாலரில் கால்வலி தீர மசாஜ். சொல்லப்போனால் எங்கு திரும்பினாலும் ஆஸ்பத்திரி கட்டில்கள் போல் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் கால்களை நீட்டி வெளிநாட்டுக்காரர்கள் படுத்திருக்க ஒருடாலருக்கு கால் அழுத்திவிடும் தொழில்தான் முக்கியமான ஒன்றாகத் தென்பட்டன. எங்குகாணினும் கால்செண்ட்டர்கள் தான். அந்த இரவு நேரத்தின் கேளிக்கை சத்தங்களுக்கு நடுவே திடகாத்திரமான இளைஞர்கள் உங்கள் அருகே வந்து டுக் டுக் வண்டி வேண்டுமா என வண்டியை ஆக்ஸிலேட்டர் முறுக்கும் சைகையால் கேட்கிறார்கள். வேண்டாம் என்றதும் டக் டக் வேண்டுமா என்கிறார்கள் சைகையில். இரண்டிற்கும் வேண்டாம் என்று தலையை எவ்வளவு வேகமாக ஆட்டமுடியுமோ அவ்வளவு வேகமாக ஆட்டிவிட்டால், நலம்.
பாதங்களில் இருக்கும் அழுக்கைக் கடிக்கும் மீன்கடி ஸ்பாவும் அதிகம் தென்பட்டன. என்னவொன்று, நம்மூரில் இருக்கும் மீன்கள் போல் அளவில் சிறியதாக இல்லை. பெரிய பெரிய மீன்கள். ஷார்ட்ஸ் போட்டு உட்கார்ந்து அழுக்கைக் கடிக்கட்டும் என கண்ணயர்ந்தால் ஆபத்தாக முடியக்கூடிய அபாயம் இருக்கும் அளவு பெருமீன்கள்.
மிக ரசித்து சுவைத்தது, அங்கு தென்பட்ட ஐஸ்க்ரீம்களை. குறிப்பாக தேங்காய் ஐஸ். அற்புதச் சுவையோடு இருந்தது.
பப் ஸ்ட்ரீட்டின் பக்கவாட்டில் திரும்பி அடுத்த தெருவிற்குள் நுழைந்தால், ஷாப்பிங்.
அவர்கள் நாட்டின் மிகமுக்கிய சுற்றுலாத்தளங்களான அங்கோர் வாட் கோயில் கோபுரங்கள், கட்டிடங்கள் போன்றவற்றின் சிறிய அளவிலான படங்கள், சிலைகள் என வீதி முழுக்க வைத்து விற்பனை செய்கிறார்கள். பதினைந்து டாலர்கள் என்பது அதிகமான பொருள் என்றறிக. கால்குலேட்டரைக் கையில் வைத்து 30, 15 என அழுத்தி அழுத்தி விலையைக் காட்டுகிறார்கள். கடைசியாக 3 டாலரில் சிறிய பொருட்கள், சற்று பெரிய சிலைகள் எல்லாம் 40$.
அதிகாலை நான்கு மணிக்கு சூரிய உதயம் எனும் வைபவம். அங்கிருந்து அங்கோர் வாட் கோயில் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் மூன்று கோயில்கள். இதற்கு நுழைவுக் கட்டணமாக நபருக்கு 37 $.
நம் தாஜ்மஹாலின் முகப்பில் நீண்ட தூரம் நடக்கும் இடம் இருக்கும். அதைப்போலவே உள்ளே நுழைந்து, நடக்க வேண்டும். எதிரே சற்று தூரத்தில் தெரியும் கட்டிடம்தான் கோயில். அந்த சற்று என்பது நடக்க நடக்க நீண்டுகொண்டே போகும்.
ஒருநொடியில் புகைப்படம் என எல்லா சுற்றுலாத்தளங்களில் தென்படும் கூட்டம் இங்கேயும் அளவிற்கு அதிகமாகவே தென்பட்டார்கள். அவர்களில் ஒருவர் எங்களை நோக்கி, இண்டியாவா என்று கேட்டு, பாகுபலி என்றார். வியப்பாக இருந்தது. ஏன் அப்படிக் கேட்டார் என உடனே புரிந்தது.
பாகுபலியில் வரும் கட்டிடங்கள், உயரமான பீடங்கள் எல்லாம் அங்கோர் வாட் மாடல் போல் தெரிந்தன.
இருபக்கமும் சிதிலமடைந்த சுவர்கள், அதில் பெரிய பெரிய மலைப்பாம்புகளின் உடலும் ஐந்துதலை நாகம் படம் எடுத்து நிற்கும் சிலைகளும் முகப்பில் வரவேற்க, படிப்படியாக நீள்கிறது கோயில்.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவு நடந்த பிறகு வரும் முக்கியக் கட்டடம் செங்குத்தான படிகளோடு ஏறுகிறது. கர்பிணிப் பெண்கள் வயதானவர்களுக்கு அனுமதி இல்லை.
.
ஒருவழியாக ஏறி, ஆசுவாசமடைந்து உள்ளே போனால் திருமலைநாயக்கர் மஹாலின் உட்புறம் போல் ஆஹ் வென விரிகிறது, உயரத்தில் இருந்து மொத்த நகரமும் தெரிகிறது. ஏனெனில் அங்கே அந்த கோபுரத்தைத் தாண்டி எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது எனும் விதி இருக்கிறது என்றார்கள்.
உள்ளே புத்தர் சிலை, அனந்தசயனபுத்தர் என்றார்கள். பூசாரியோ பண்டிட்களோ கிடையாது. அங்கிருக்கும் பழங்குடியினர் வந்து படிகளுக்கு அருகே அமர்ந்து, புத்தரை வழிபடுகிறார்கள். ஊதுபத்தி கொளுத்துவதுதான் அதிக விசேஷம் போல.
சற்றுத்தள்ளி, பக்கவாட்டில் இருபது அடியில் விஷ்ணு சிலை. அது விஷ்ணுவா புத்தரா எனும் ஆராய்ச்சிதான் அதிக அளவில் அங்கே நடைபெறும் எனும் அளவிற்கு இருக்கிறது
முன்பு தங்கத்தில் இருந்த விஷ்ணு விக்ரகத்தைக் கொள்ளையடித்துப் போய்விட்டார்கள் என்றும் இப்போது இருக்கும் சிலைகளில் பெரும்பகுதிகள் சிதைக்கப்பட்டும் காணக்கிடைக்கின்றன.
குரு திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடும் இடம் போல் இருந்தது அந்த உயரத்தில் இருந்த வெட்டவெளி. அப்படத்தில் வருவதுபோலவே திடீரென மழை பொழிந்தது.
நடந்து ஏறி வந்து அலுப்பெல்லாம் அந்த மழை போக்கிவிட்டிருந்தது. ஆம். அந்தக் கரிய சுவர்களை மழை நனைத்தது, அந்த இடத்திற்கு வேறு ஓர் அழகியலைக் கொண்டுவந்திருந்தது.
நிறைய இத்தாலியர்கள்,ரஷ்யப்பெண்கள் கையில் கேமிராவோடு ஒவ்வொரு இடத்தையும் பதிந்து கொண்டே இருக்கிறார்கள்.
இனி நடக்கலாம் என ஓய்வை முடித்துக்கொண்டு கால்கள் தயாரானதும் மிக மெதுவாகவும் பாதுகாப்பாகவும் இறங்க வேண்டி இருந்தது அந்த சரிந்த செங்குத்துப் படிகளில் இருந்து.
அங்கிருந்து நான்கைந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பயோன் எனும் இடம், கோயில்கள் போல் இருக்கும் சுவர்கள், கட்டிடங்கள் சிதிலம் அடைந்த நிலையில் ஆனால் பார்க்க அழகாக இருக்கின்றன.
ஒரு நாள் முழுக்க ஆகிறது இந்த மூன்று நான்கு இடங்களில் சுற்ற. இளநீர் காய்களை ஐஸ்பெட்டியில் வைத்து, சுடச்சுட வெட்டி ஜில்லென்று தருகிறார்கள். நம்ம ஊரில் இன்னமும் இந்த ஐடியா வரவில்லை. இயற்கையான இளநீர், குளிர்பானக் குளுமையோடு கிடைக்கிறது இந்த ஐஸ்கட்டிகளுக்கு நடுவில் பொதிந்து வைக்கப்பட்ட இளநீர்காய்கள் மூலம்.
நகரம் முழுக்கவே, தங்கும் விடுதிகளில் சாலைகளில் என தென்படும் சிலைகளின் கரம் சிரம் என ஏதேனும் ஒன்று சிதைக்கப்பட்டிருக்க, அப்படியே அந்த சிதைந்தநிலையிலேயே பராமரிக்கிறார்கள்.
சியம் ரீப்ல் இந்திய உணவங்கள் இருக்கின்றன. குறிப்பாக, பப் ஸ்ட்ரீட்டில் இருக்கும் கறி கிங். அதன் முதலாளி, ஆம், நீங்கள் நினைப்பது போல் பாலக்காட்டு நாயர். மதுரைக்காரர் போல் தமிழ் பேசுகிறார். பெரிய விஸ்தாரமான தூண்களுக்கு மத்தியில், ஹோட்டல், நல்ல கவனிப்பு. நாங்கள் இருந்த நாட்களில் பெரும்பான்மைப் பொழுது அங்கே போய் அமர்ந்து கொண்டோம். கொரொனாக் காலத்தில் வேறு ஏதோ ஒன்றிற்காக சென்றவர், அங்கு நிலவும் சூழலைப் பார்த்து, மிகக்குறைவான விலைக்கு (அவர்கள் மதிப்பில் அது அதிகம்) லீசுக்கு வாங்கி, இப்போது இரண்டு ஹோட்டல்களுக்கு அதிபதி என்றார். நண்பன் என்னைப் பார்த்த பார்வைக்குப் பொருள், நம்மளும் அப்பிடியே இங்கன ஒரு.. அட ஏண்டா என நான் பதிலுக்குப் பார்த்தேன்.
நிறைய இந்தியர்கள் வந்துகொண்டே இருந்தார்கள் அந்த உணவகத்திற்கு. குறிப்பாக நாகர்கோயில்,கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அதிகம் வருகிறார்கள் என்றார்.
சியம் ரீப்பில் இருந்து 70-80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவன் கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று என்றார்கள்.
ஒருவழியாக நான்கு நாட்களும் பப் ஸ்டீட், கறிகிங் உணவகம், அங்கோர்வாட் கோயில், என சுற்றிவிட்டு, மாலை நான்கு மணிக்கு விமான நிலையம் அடைந்தால், உள்ளே தங்கம் போல் மின்னும் நான்குமுக பிரம்மா சிலை பிரம்மாண்டமாக வரவேற்றது. அல்லது விடை கொடுக்கத் தயாராக இருந்தது.
அங்கிருந்து ஒருமணிநேரத்தில் பாங்காங் வந்தால், வார இறுதியை முடித்துக்கொண்டு மசாஜ் செண்ட்டரில் அமர்ந்திருக்கும் நினைவிலேயே கால்களை நீட்டி நம்மூர் இளைஞர்கள் பாங்காங் விமானநிலையம் முழுக்க அமர்ந்திருந்தார்கள், களைத்துப் போய்.
இரவு 12 மணிக்கு டான் என இறங்கியது சென்னையில். வாழ்க்கை வட்டம் என்பதுபோல் நாங்கள்கிளம்பிய அதே பண்ணிரண்டு மணிக்கான விமானத்திற்கு எங்களைப்போலவே தயாராக அமர்ந்திருந்தது ஒரு கூட்டம் கண்ணாடிக்கு அந்தப்பக்கம்.
வெளியே வரலாம் என்று நினைத்த நொடியில் வந்து, “கம்போடியாவா” என மீண்டும் அதே கேள்வி, உள்ளே அழைத்துப் போனார்கள். பெட்டியைத் திறக்கச் சொன்னார்கள்.
இவ்ளோ பெரிய சிலையா? என்ன விசயம் என்றார்கள்.
அது கம்போடிய மன்னன், ஜெயவர்மன், மிகுந்த அதிகாரம் கொண்ட மன்னராக,கொமர் பேரரசின் அரசராக இருந்தவர், பெளத்த மதத்தை முதலில் தழுவி, அந்நாட்டில் பரப்பிய அரசர் என அங்கே எங்களோடு சுற்றிய ஓட்டுநர் வாங்கச் சொல்லி, வாங்கி வந்த சிலையைப் பற்றி சொல்ல, சந்தேகமாகப் பார்த்தார் அதிகாரி. “நான் அப்பப்ப எழுதுவேன் சார், அந்த ஊரப் பத்தி, இந்த சிலைகள் பத்திலாம் நாவல் எழுதனும்னு” என இழுத்து நம்ம ட்விட்டர் பக்கத்தைக் காட்ட எத்தனிக்கும்போதே,
போங்க சார், என்றார்.
கம்போடியா என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் அதிகாரிகள் ஏன் இவ்வளவு கடுமையையும் கெடுபிடியையும் காட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை.
கம்போடிய அரசு இந்தியாவைத் தொடர்புகொண்டு இந்த கோயில்கள், தளங்கள்,என சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். தாய்லாந்து, வியட்நாம்,கம்போடியா என மூன்று நாடுகள் கொண்ட பேக்கேஜ் பயணங்களை அதிகப்படுத்தலாம். ஏனெனில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான நல்ல பயண அனுபவங்களைத் தரக்கூடிய நாடு, இந்த கம்போடியா.
ஆம், ஒரு நபருக்கு, சென்னையில் இருந்து போய்வர விமானச் செலவு, இந்திய மதிப்பில் 70 ஆயிரம், அங்கு தங்க ஒரு நாளைக்கு 4 ஆயிரம் , உணவு இன்னபிற கேளிக்கைகளுக்கு மொத்தமாகவே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்தான்( 10 டாலர்கள் தான்) ஆகிறது.
3000 டாலர்கள் வைத்திருந்தால் நீங்கள் கம்போடியாவில் நான்கு நாட்கள் ராஜவாழ்க்கை வாழ்ந்துவிட்டு வரலாம்.
*
Wow ரைட்டர் 😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👏👏👏👏👏
பயணக் கட்டுரை என்றால்
இப்படி இருக்கனும்.
அப்பா திட்டு வேற லெவல்
இதே மாதிரி என்ன
எங்க அம்மா திட்டுவாங்க🤣🤣🤣🤣
செல்பேசி கமெண்ட் அப்படியே அச்சு அசலாக இருக்கு.
நிறைய இடத்தில் குபீர் சிரிப்பு வந்திடுச்சு.
அருமையா பட்ஜெட் முதற்க் கொண்டு
நம்ம அரசுகளுக்கு ஆலோசனை வரை
மாஸ் பண்ணிட்டீங்க.
அயல்நாட்டுல இருந்து
கம்போடியா பயணம் பார்க்கும் போது
அதிக விலை என்று யோசிச்சேன்.
பார்ப்போம்
ஆசைக்கு அளவேது என்பது போல
நிறைய நாடுகள் என் பயண லிஸ்டில்
சேகரித்து வைத்து இருக்கேன்.
உங்க கட்டுரை அதை இன்னும்
ஊக்குவிக்கும் வேலையை செய்து.
ரைட்டருக்கு பாராட்டும்
வாழ்த்தும் 😍👌💐👏
பயணக்கட்டுரை அருமை சார். வாழ்த்துக்கள்!
செம்ம ண்ணா. கம்போடியாவிற்கு நேரில் சென்று வந்ததை போன்ற அனுபவத்தை தருகிறது இவ்வாசிப்பு😍😍😍
சிதிலங்களின் அழகியல்…❤️
கட்டுரைத் தலைப்பு மிக அருமை.
எழுத்து நடை மிக இனிமை. படித்து முடித்தவுடன் என்னடா இது டக்குன்னு முடிஞ்சிடிச்சு என்ற உணர்வு. வசீகரமான, மிக சிறப்பான நடை. புத்தரின் கருக்கொண்ட அங்கோவார்ட் புதினம் விரைவில் நிகழட்டும்.
வாழ்த்துகள்….💐💐💐