வெகுநாட்களுக்குப் பிறகு ஊருக்கு வருகிறேன், நல்ல மழைநாள். பேருந்தை விட்டு இறங்கி மழைக்கு ஒதுங்கி டீக்கடையில் நின்றேன்.
எதிரே ராணி அக்கா. மழையில் நனைந்து, கண் இமைமுடிகளில் நீர் வழிய நின்றிருந்தார். கண் எதிரே அப்படி அவ்வளவு அழகாக நின்றிருக்கும் ராணி அக்காவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்களுக்குள் தானக வந்து நின்ற உருவம் ஜெயராஜ் அண்ணன்.
“எப்படா வந்த?” ராணியக்காவின் குரலுக்கு
“இந்தா இப்பத்தான்” என என் பயணப்பையைக் காட்ட
“மழையக் கூட்டி வந்தியாக்கும்” எனச் சிரித்து வெளியே மழை குறைந்துவிட்டதா எனக் கையை நீட்டிப் பார்த்து “எப்ப போவ?” என்றவாரே சாலையைக் கடந்து போனாள்.
ஊரில் கேட்கப்படும் “எப்ப போவ” என்பது, சிலநாட்களாவது இருப்பாய் அல்லவா எனும் பொருளில், அன்பில் கேட்கப்படும் சொற்கள்தான்.
மறுநாள் அதிகாலையிலேயே வீட்டிற்கு ரகு வந்துவிட்டான்.
பரபரப்பாக எழுப்பினான். தெருவில் நான்கைந்து வீடுகள் தள்ளி இருக்கும் பாபுவின் பாட்டி
இறந்துவிட்டதாகவும் இறுதிச் சடங்கிற்குப் போகலாம் என இழுத்துப் போனான்.
“அடிக்கடி வந்து போனாத்தானய்யா பாதை எல்லாம் சரியா இருக்கும் எப்பாவது வந்துட்டு, முள்ளு கெடக்கு கல்லு கெடக்குன்னா என்ன சொல்றது, பாத்து வாங்க”
ஜெயராஜ் அண்ணன் சத்தமாகச் சொல்லிக்கொண்டே போனார்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக உடன்
போய்க்கொண்டிருந்தார்கள்.
சுடுகாட்டை நெருங்கும் இடத்தில் தான் இப்படி ‘அடிக்கடி வந்து போகவேண்டும்’ என்றார்.
எனக்கு மிக மெலிதாய் சிரிப்பு வந்தது. சூழல் கருதி அடக்கிக்கொண்டேன். ரகு மெதுவாக
அதட்டினான். “சிரிக்காதடா கிறுக்கா”.
ஜெயராஜ் அண்ணன் எப்பொழுதுமே இப்படித்தான். நான் பள்ளியில் படிக்கும்போது அவர் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்தார். அவர் கல்லூரிக்குப் போய் நாங்கள் பார்த்ததே இல்லை. எப்போதும் தெருவில் தான். கைலியைக் கட்டிக்கொண்டு, உடைந்த மட்டை ஒன்றை வைத்து, எதிர்படும் சிறுவர்களிடம் பந்தைப் போடச் சொல்லி தெருவில் கிரிக்கெட் ஆடுவார்.
மிகச்சரியாக ராணியக்கா தெருவைக் கடந்து போனதும் மட்டையை சிறுவர்களிடம் கொடுத்துவிட்டு போய்விடுவார்.
மாலை நேரங்களில் சைக்கிளில் எங்கோ போய்விடுவார். இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வருவார்.
ஒவ்வொரு மாலையிலும் அவர் எங்களைக் கடந்து சைக்கிளை ஏறி மிதித்துப்
போகும்பொழுதும் ரகு தவறாமல் சொல்வான்.
“ஒரு நாள் இந்தாளு பின்னாடி போய்ப் பாக்கணும்டா, அப்பிடி தெனைக்கும் எங்கதான் போறாப்ளனு”
எனக்கு அதில் பெரிதாக எந்த விருப்பமும் இல்லை என்பது ரகுவிற்குத் தெரியும். ஒருநாள் திடீரென ராணியக்கா வீடு இருக்கும் தெருவிற்குள் கூட்டிப் போனான். அங்கே அந்த அக்கா இருப்பதைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஏமாற்றம்.
“இந்த அக்கா இங்கதான் இருக்கு, அப்ப எங்கதாண்டா போறான் அந்தாளு”
பாட்டியின் மகன்கள் பேரன்கள் எல்லாம் சுடுகாட்டிற்குள் போய்விட,
நானும் ரகுவும் சற்றுத் தள்ளி இருந்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம்.
எங்களைப் பார்த்த ஜெயராஜ் அண்ணன் அருகே வந்தார்.
“என்னடா இவனே, இதுக்கா ஊர்ல இருந்து வந்த?”
நான் பதில் சொல்லும் முன்னரே ரகு மறுத்தான்.
“அட நீ வேறண்னே, இவென் எதேச்சையா வந்தான்.”
“அதானப்பாத்தேன்.”
என்றவர், அலைபேசியை எடுத்து ஆட்காட்டி விரலால் திரையை மேலும் கீழுமாய் ஏற்றி இறக்கிக் கொண்டே,
“அதாவது இவனே, இங்க பாரு, இது என்னாது?”
ரகு என்னிடம் அங்கிருந்து கிளம்புவோம் என சைகை செய்தான். எனக்கு ஊரில் என்ன நடக்கிறது, ஊர் மக்கள் என்னை வளர்த்த, நான் பார்த்த ஆட்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் போன்ற நினைப்பும் ஊரை விட்டு எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைப் போக்கும் விதம் அவ்வப்போது இப்படி ஊருக்கு வந்து, எதையும் எவரையும் தவிர்க்காமல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்பதால் அவனிடம்
“இர்றா” என்பது போல் நிறுத்தினேன்.
“என்னக்கென்ன வந்துச்சு இப்ப ஆரம்பிப்பான் பாரு” என்றான் ரகு.
ஜெயராஜ் அண்ணன் பார்க்கச் சொல்லிக் காட்டிய அவர் அலைபேசித் திரையை எட்டிப்பார்த்தேன்.
“இது என்னா?”
மஞ்சள் நிறத்தில் பொம்மை சிரித்தது. அருகே ஒரு கட்டைவிரல் மஞ்சள் நிறத்தில் மேலும் கீழும் ஆடி நின்றது.
“எமோஜிண்ணே”
“அது தெரியுதுறா. அது ஏன் இப்பிடி மஞ்ச மஞ்சேனு அனுப்புறான்னு நினைக்கிற?”
மொபைலை பின்னுக்கு இழுத்து மீண்டும் ஆட்காட்டி விரலால் நகர்த்தி, சட்டென முகம் மலர்ந்து நீட்டினார்.
“இதப்பாரு”
அதே பொம்மைகள். ஆனால் மஞ்சள் நிறத்தில் அல்லாமல் கருப்பும் பழுப்புமாக மாநிறத்தோல் நிறத்தில் இருந்தன.
“அரசியல். எல்லாத்துலயுமே அரசியல் இருக்கு இவனே, இது நிற அரசியல்”
என்றார் ஜெயராஜ் அண்னன்.
ரகு என்னைப் பார்த்தான். நான் அவன் பார்வையைத் தவிர்த்து, அவரைப் பார்த்தேன்.
“நம்ம ஊர், நம்ம கருப்புத் தோலத்தான் அவன் குடுக்குறான்ல, அத ஏன் போடாம, இப்பிடி மஞ்சள் கலர்ல போடணும், மாறனும்ய்யா, மாத்தனுமா இல்லியா?”
உள்ளே இருந்து மெதுவாக நகர்ந்து வந்தது கூட்டம்.
அவர்கள் எங்களைக் கடக்கும் வரை காத்திருந்து மெதுவாக பின்னால் இணைந்து கொண்டோம் நானும் ஜெயராஜ் அண்ணனும். ரகு இன்னும் சற்று பின்தங்கி மெதுவாக வந்தான்.
”சும்மா பொறந்த ஊரு, கிராமத்துலதான் நிம்மதி அது இதுன்னு இங்குட்டு வந்துரணும்னு இருக்காத இவணே, இங்கல்லாம் ஒண்ணுமே இல்ல. செரியா?”
வியப்பாக இருந்தது. மிக லேசான அதிர்ச்சி என்றும் சொல்லலாம்.
“ஏண்னே சமூக ஊடகத்துல, வாட்சப்ல எல்லாம் கிராமம்,பெறந்த ஊர்ல நிம்மதியா வாழ்றதுதான் வாழ்க்கைன்ற மாதிரி”
நான் பேசப் பேச நிறுத்தினார்.
“அதெல்லாம் அரசியல் தெரியாதவன் பேசுறதுடா. அவனவன் பொறந்து வளர்ந்த ஊர்கள்ல அதே அடையாளாத்தோட காலங்காலமா கெடக்கணும். புதுசா போற எடத்துல நீ எப்பிடி வாழ்றயோ அதுதான் அடையாளம். ஒங்களுக்கு இதெல்லாம் புரியாதுடா”
என புலம்பிக்கொண்டே சற்று வேகம் எடுத்து நடந்து பாபுவின் அப்பாவோடு கலந்து கொண்டார்.
நான் நின்று ரகுவோடு இணைந்தேன்.
“ஏண்டா அதான் சொல்றேனே, அரசியல்னு ஆரம்பிச்சானா”
“டேய் பாவம்டா மரியாதையாப் பேசுடா”
“சரி, ஆரம்பிச்சாப்ளயா?”
”ஆமா, ஆனா அந்தாளு சொல்றதும் சரியாத்தானடா இருக்கு” என்று சொன்னதற்கு ரகு பதிலேதும் சொல்லாமல் வந்தான்.
இருளை விரட்டுவது போல் மீனாட்சியம்மன் கோயில் கோபுர
வெளிச்சம் பிரகாசமாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. நானும் ரகுவும் வழக்காம சுற்றும் இடங்களில் சுற்றிவிட்டு தெற்குவாசலை அடைந்த பொழுது இரவு பத்துமணி ஆகி இருந்தது.
“ஆட்டோல போய்ருவம்டா ரகு”
“பார்றா, பஸ்சு வரும்டா, இரு”
அந்த நேரத்திலும் கஜகஜவென வெளிச்சமும் ஜன நெருக்கடியுமாகத்தான் இருந்தது.
“அது ராணியாடா”
என்றான் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஆளைப் பார்த்து.
அந்த உயரமும் வனப்பும், ஆம் ராணியக்கா தான்.
”இந்நேரத்துக்கு இங்கன என்னடா பண்றீங்க?”
அருகில் வந்து சிரித்துக்கொண்டே கேட்டார் ராணியக்கா.
நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஜெயராஜ் அண்ணனை ஏன் தேடினேன் என்றே தெரியவில்லை.
ரகு சட்டென “ஆட்டோல போய்ருவம்னியேடா, போவமா, யக்கா நீயும் வந்துரு”
அங்கிருந்து பத்து கிலோமீட்டரில் ஊருக்குள் போய்விடலாம். அவனே ஆட்டோ பேசி, மூவரும் ஏறிக்கொண்டோம். ராணியக்கா, அவன் நான் எனும் வரிசையில் அமர்ந்தோம். அல்ல. அமர்த்தினான் ரகு.
யாரும் பேசிக்கொள்ளவில்லை. ஆட்டோ ஓட்டுநர் கண்ணாடியை ராணியக்காவை நோக்கித் திருப்பி அவ்வப்போது பார்த்துக்கொண்டே வந்ததை நான் கவனித்தேன் என்பதை கவனித்தார். சிரித்தார். நான் திரும்பிக்கொண்டேன்.
பத்துப் பதினைந்து நிமிடங்களில் வந்துவிட்டது ஊர் மந்தை. இறங்கிக்கொண்டோம்.
“பாத்துப்போங்கடா, நாய்க கெடக்கும்” என்றவுடன் ரகு பட்டென
“நீ பாத்துப்போக்கா, இல்ல தொணைக்கு வரணுமா, சந்துக்குள்ள நடக்கணுமே தனியா”
ஒரு நொடி யோசித்தவள்,
“ஆமாடா, வாங்க, இருட்டா கெடக்கு”
எனக்கு சங்கடமாக இருந்தது. ரகுவிற்கு என்ன ஆனது ஏன் இப்படி என்று
யோசிக்கும்பொழுதே நடக்கத் துவங்கினோம்.
“நீ இருக்குற ஊர்ல இப்பிடி ராத்திரிலாம் பயப்படமா போக முடியுமாடா”
“அட அதெல்லாம் ஒரு பயமும் இல்லக்கா. எப்பயும் பகல் மாதிரி வெளிச்சம் தான்”
”அங்கயும் ஒரே ஆளுகளுக்குள்ளத்தான் கல்யாணம் கட்டணுமா ?”
ராணியக்காவின் கணவர், அவளுடைய முறைமாமா, கொஞ்சம் வயதான முதியவர், சந்தில்
அமர்ந்திருந்தார்.
“கெழவன் ஒக்காந்துருக்கு. இனி பயமில்லாமப் போய்ருவேன், டேங்ஸ்”
சிரித்து தலையாட்டினாள்.
என் கண்களுக்குள் ஜெயராஜ் அண்ணனின் உருவம் வந்து போனது.
அலைபேசியில் மஞ்சள் பொம்மைகளின் வண்ணங்களை மாற்றிக் கொண்டே நடந்தேன்.
*
குமுதம்
5-செப்’23
Nice😊👍
மீனாட்சி அம்மன்
ராணி அக்கா
எமோஜி🤗
அருமை சகோ 👌💐