Homeமாறவர்மமாறவர்மன் : 8 -10.

மாறவர்மன் : 8 -10.

 

                                 அத்தியாயம் 8

அரண்மனையில் தளபதிகளில் இருவரும் இளஞ்செழியனும் முன்னால்
செல்ல‌வீர விக்ரமன் தன் பராக்ரம படையுடன் கம்பீரமாய் வழுவூரை நோக்கி
கிளம்பிவிட்டான்.. கிளம்பிய குதிரைகள் கிளப்பிய புழுதியில் அரண்மனை மங்கலாக
தெரிந்தது.. ஆக்ரோஷம் அதிலும் தெரிந்தது..அந்த சாலையின் இருமருங்கிலும் இருந்த
மரங்கள் உதிர்த்த சருகுகள் எழுப்பிய சத்தம் குடிமக்களை அச்சம்கொள்ளச் செய்தது..
நடக்கப் போவது விபரீதமா விதியா விளையாட்டா என்று தெரியாமல் வீரவிக்ரமன் வெற்றிப்
பார்வை பார்த்தவாரே குதிரை செலுத்தினான்.. அதை வெற்றுப் பார்வை பார்த்த மக்கள்
சற்று விலகி நின்றார்கள்..

பாதாளச்சிறை:
மன்னர் தனக்கு உதவப் போகும் கருணாமூர்த்தியின் வரவிற்காக காத்திருந்தார்.. அவன்
வரும் வரை அங்கு பணியில் இருந்த காவளன் கவலை கொள்ளச்செய்தான்.சில் வண்டுகள்
ரீங்காரம் அன்று ஏனோ அபத்தமாக இருந்தது..கைகள் பிசைந்த மன்னர் கண்கள் பிசகாமல்
வாயில் நோக்கி காத்திருந்தார்.

கருணாகர
மூர்த்தி.. மிகவும் அமைதியான தோற்றம்.. வீரமான புஜங்கள்.. தீரமான கண்கள்.. மேடேறிய
நெற்றி.. ஐந்தரைஅடிக்கும் சற்று அதிக உயரம்..இன்று மன்னருக்கு அவன் செய்யப் போகும்
உதவியால் அவன் உள்ளத்தின் உயரம் பல மடங்கு உயரும்..

பணி அமர்ந்தான்..
ஈட்டி ஏந்தினான். அவனுக்கு முன் நின்ற காவலாளி சென்றவுடன் ஈட்டியை சாய்த்து
வைத்துவிட்டு
,மன்னரின் சிறைக்கதவை திறந்து விட்டான்.. ஈட்டி ஏந்திய
கைகளில் இப்பொழுது தீப்பந்தம்.

மன்னா.. இன்று நம் இளவரசைத் தேடி வீரவர்மன் அரண்மனையை
விட்டு படையுடன் வெளியேறிவிட்டார்.. நல்ல சந்தர்ப்பம்”

என் பிள்ளையை கொள்ள ஒருவன் சென்றது எனக்கு நல்ல
சந்தர்ப்பமா.. கடவுளே.. எனக்கா இந்நிலை..மாறனை காப்பாற்று”

மன்னியுங்கள் மன்னா.. இளவரரின் வீரத்திற்கு முன் யாரும்
நிற்க முடியாது
, கவலைப்படாதீர்கள்”

ம்ம்.. அதோ.. அந்த கல்தான்.. உன் ஈட்டியின் கூர் முனையைக்
கொண்டு சுற்றி கீரிவிடு.. எளிதாக திறக்கலாம்..”

உத்தரவு மன்னா”.. என்று ரகசிய குரலில் சொன்ன கருணாகர
மூர்த்தி அதைவிட ரகசியமாய் செயல்பட்டான்..

சுரங்கப்பாதையின்
இருட்டு அந்த தீப்பந்தத்தையும் தாண்டி பயம் கவ்வச் செய்தது.. கருணாமூர்த்தி மிக
ஜாக்கிரதையாக மன்னரை அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.. பக்கவாட்டுச் சுவர்களின்
குழிகளில் இருந்து வெளவால்கள் ஒலி எழுப்பி பறந்த வண்ணம் இருந்தன..ஒரு விதமான் நெடி
நாசியைத் தாக்கியது. தீப்பந்த ஜுவாலை நாக்குகள் வளைந்து அலைந்து இருட்டைத்
தொலைந்து போகச் செய்த வண்ணம் இருந்தது. நடுநடுவில் தென்பட்ட எழுகங்கள் கால்களில்
இடராதவாறு தொடர்ந்தார்கள்.. நெளிந்து சென்றதால் பாம்பாக இருக்குமோ என்ற அச்சமும்
ஆங்காங்கு தோன்றி மறைந்தது. மேற்கூரை வளைந்து தலை தட்டுமோ தட்டாதோ என்ற உயரத்தில்
இருந்ததால் சற்று குனிந்தே செல்ல வேண்டுமோ என்பது போல் இருந்தது..

மன்னரின் கண்களும் கால்களும் முன்னோக்கி, கருணாமூர்த்தியின் பின் நடந்தன.. கருணாமூர்த்தியின் உதடுகள்
பிரிந்ததால் வார்த்தைகள் வெளியே விழுந்தன..

மன்னா.. பார்த்து வாருங்கள்..”

நன்றி கருணாகரா.. கவனமாக போ.. அதோ அந்த இடத்தில் ஒரு திட்டு
போல் இருக்கிறதே..அதனருகில் இருக்கும் மணல் கூட்டை உடை.. உள்ளே குறுவாள்கள்
இருக்கும்.. உபயோகப்படும் அளவிற்கு இருக்கிறதா என்று பார்..”

நன்று மன்னா.. ஒரு ஐயம்.. சிறை இருக்கும் இடத்தில் இந்த
சுரங்கப்பாதை எதற்கு வைத்தீர்கள் மன்னா.. நீங்கள் சிறை வைக்கும் கைதிளும் இது போல
தப்பி விடுவார்களே..”

ஹஹா.. நல்ல கேள்வி கேட்டாய் கருணாகரா.. இது
மிகச்சிலருக்குத்தான் தெரியும். எதிரிகளிடம் நாம் தோல்வியடையும் தருவாய்
ஏற்பட்டால் மகாராணியுடன் அரண்மனைப் பெண்டிரும் இவ்வழியே பாதாளச்சிறையை அடைந்து
விடுவார்கள்.. நாம் அவர்களைப் பற்றி கவலையின்றி தொடர்ந்து எதிர் தாக்குதல்
நடத்தலாம் அல்லவா.. அதற்காகத்தான்.”

புரிந்தது மன்னா.. இந்த பாதை அகழிகையின் வாயிலில் முடியும்
என்றீர்களே.
?

வழியில் ஒரு பெண் நடனமாடும் சிலை இருக்கும்..அந்த சிலைக்கு
பின்புறம் ஒரு வழி பிரிந்து சொல்லும்.. அது நம் அரண்மனையின் சபையில் இருக்கும்
நான்காவது தூணில் சென்று முடியும்.. அதை குறிக்கும் விதமாக மற்ற தூணில்
பொறிக்கப்பட்ட சிலைக்கும் அந்த தூணில் பாய்வது போல வடிக்கப்பட்டிருக்கும்
கருணாகரா..”

அற்புதம் மன்னா.. “

இருக்கட்டும்.. மாறவர்மனை சந்தித்து விட்டால் போதும்..
மீண்டும் அரியனை உறுதி.. பிறகு இருக்கிறது இந்த கயவர்களுக்கு.. உலகின் ஒட்டுமொத்த
தண்டனைகளும் மொத்தமாய் வழங்கப்படும் அந்த தளபதிக்கு..”

ஆம் மன்னா..சற்று ஜாக்கிரதையாக வாருங்கள்..கீழே ஏதேதோ
தட்டுப்படுகின்றன..”

அதே வேளையில்
அகழிகை வாயிலில் இரண்டு வீரர்கள்..

என்ன குருபரா.. நம் தளபதி மாறவர்மனை சிறைபிட்டிக்க
சென்றுள்ளாரே.. என்ன நடக்கும்
?”

நம் கூட்டத்திற்கு நல்ல காலம்தான் இனி.. ராஜகுரு வகுத்த
திட்டப்படி வீரவிக்ரமன் செயல்படுகிறார்.. அது சரி.. நம்மை இங்கு ஏன் நிறுத்தி
வைத்திருக்கிறார் ராஜ குரு என்று தெரியுமா..உனக்கு
?”

மிக முக்கிய மான இடம் என்பதால் நம்பிக்கையான நீங்கள் அங்கே
அசையாமல் இருங்கள் என்று கூறினார்.. எதற்கு என்று தெரியவில்லையே”

அடே மூடா.. இதோ.. இந்த கற்சிலை இருக்கிறதே.. இதற்கு
பின்னால் இருக்கும் அந்த வளைந்த சிலை தெரிகிறது பார்.. அது சிலை இல்லை.. கதவு..”

கதவா.ஆ??”

ஆம், பாதாளச்சிறை வரை செல்லும் மிக ரகசிய பாதை அது..
இப்பொழுது புரிகிறதா..
?”

ம்ம்..புரிகிறது புரிகிறது”

டங்ங்” என்று எழுந்த சத்தம் அவர்கள் பேச்சை நிறுத்தச்
செய்தது…

வழுவூர்..

மாறரே.. திட்டம் செயல்படுத்தும் நேரம் நெருங்கி விட்டது..
நம் திட்டப்படி நீங்கள் வேலவர் வீட்டில் பதுங்கிக் கொள்ளுங்கள்.. நானும் கருப்பும்
நம் திட்டப்படி செயலாற்றுகிறோம்..”

வீரணா.. எந்த தருணத்திலும் பயந்து விடாதே..முதலில் பயத்தை
கொன்று விடு..எதிரியின் சாவு எளிதாகிவிடும்.. யோசிக்காமல் செயலில் இறங்காதே..
இறங்கியபின் யோசிக்காதே”

ஆகட்டும் மாறரே..வருகிறேன்”

வீரணன் போன
திசையைப் பார்த்துக் கொண்டிருந்த மாறவர்மன்.. சில நொடிகள் கழிந்தவுடன்..
சொர்ணவள்ளியின் வசிப்பிடம் நோக்கி விரைந்தான்..வீடடைந்ததும் வேலவர் அணைத்து
அரவணைத்தார்..பின் அறையில் அமர வைத்தார்..

புலியின் கண்கள்
மானைத் தேடின..

வேலவர்
விடைபெற்று சென்ற பின் அறையை நோட்டமிட்டான் மாறவர்மன்.. எங்கு பதுங்கினால் பாய்வது
சுலபம் என்று பார்த்துக் கொண்டிருந்தான்..

மன்னர் மன்னர் எங்கள் குடிலுக்கு வந்தது நாங்கள் செய்த
புண்ணியம்”

சொர்ணவள்ளியின்
குரல் காதுகளில் புகுந்து இதயம் நிறைத்தது..

உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் பேதையே..”

குருதி பார்க்கும் வாள் எதற்கு குறுமல்லிகையைத் தேடப்போகிறதாம்?? “

மல்லிகையைச் சிவக்கச் செய்யத்தான்..” என்றவாரே அவளின்
இடையை பற்றி இழுத்தான்..

வெட்கத்தில் அந்த மல்லிகை சிவக்கத்தான் செய்தது…

என்ன இது மாறவர்மரே.. விடுங்கள்.. என்னை காணவில்லை என்று
தந்தை வந்துவிடுவார்..இப்படி இடையை பற்றி இருக்கிறீர்களே”

உன் மீதான பற்றின் பற்றில் பற்றிய பற்றடி இது
பெண்ணே..!”

பற்றற்ற வாழ்வா?..இந்த பற்றினால்
என் இடைமேகலை அற்றுப் போகும் இரவா
?..விடுங்கள்..பயமாக
இருக்கிறது”

அவ்வளவு எளிதில் தப்ப முடியாது பெண்ணே.. தமிழர்களின்
விருந்தோம்பல் தெரியாத பெண்ணாக இருக்கிறாயே..”

உங்களுக்குகாண சேவைகளை செய்துவிட்டு சென்ற என் தந்தையை
அழைக்கிறேன்.. அவரிடமே தங்கள் குறையை கூறுங்கள்..”

அதோ மஞ்சம்.. என்னை வா வா என்றழைக்கிறது.. துஞ்சுவதற்கா..
கொஞ்சுவதற்கா..மஞ்சம்..ஐயத்தை அரு அழகே”

ம்.. கெஞ்சுவதற்கு.. ஆளை விடுங்கள்.. எதிரிகள் சூழ்ந்த
வாழ்வில் இத்தனை காதல் எங்கிருந்து வருகிறது உங்கள் இதயத்திற்கு
?”

எனக்கு எதிரிகள் இல்லாத வாழ்க்கையும் பிடிக்காது.. எதிரில்
நீ இல்லாத வாழ்க்கையும் பிடிக்காது..”

ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் வார்த்தை விளையாட்டை..வாய்
விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே நான் சென்று விடவேண்டும்..”

செல்.. ஒற்றை காதல் சொல் உதிர்த்து செல்..”

என்னவாயிற்று என் தலைவனுக்கு இன்று.. அமைதியான உறக்கம்
தழுவட்டும்..உங்கள் இமைகளுக்குள் நான் இருப்பேன்.. “

கீழே ஏதோ சிறு
சத்தம் கேட்டவுடன் சொர்ணவள்ளியை விலகினான்.. விலகினாள்..எரிமலை போன்றவன்
இளகினான்.. இரவின் அடர்த்தியில் காதலின் அடர்த் தீ யில் மஞ்சம் அடைந்தான்..
உறக்கம் கண்களின் தஞ்சம் அடைந்தது..

                                            அத்தியாயம் 9

அரண்மனை: அகழிகை
வாயில்:

சத்தம் வந்த திசை
நோக்கி சென்ற வீரர்கள்.. சற்று கலவரத்துடன் இங்கும் அங்கும் தேடிப்பார்த்தார்கள்..
காற்றின் ஜிவ்விப்பு தவிர வேறு எதுவும் தென்படவில்லை.. என்றாலும் பாதாளச் சுரங்கப்
பாதையின் வாயில் முன் மிகவும் ஜாக்கிரதையாக நின்று கொண்டார்கள்..

சுரங்கப்பாதையின்
உள்ளே..

என்ன கருணாகரா..
இப்படி அவசரப்படல் வீரனுக்கு அழகல்ல.. வாயிலில் நிச்சயம் யாரேனும் காவலுக்கு
இருப்பார்கள்..சற்று பொருத்து.. இருந்து.. சத்தம் வராமல் அந்த கல்லை நகட்ட
வேண்டும்..”

மன்னிக்க வேண்டும் அரசே.. சற்று கடினமாக இருக்கிறது..அதனால்தான்..

வெகு நாட்களாக உபயோகப்படாமல் இருக்கிறதல்லவா.. அதனால்தானோ
என்னவோ”.. தப்பியயுடன் செப்பனிட வேண்டும்.”

அரசே.. தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்..சற்று இதை
பிடியுங்கள்.. நான் இந்த உடை கல்லை வத்து நெம்பி திறக்க முயற்சிக்கிறேன்..”

ம்ம்.. ” என்ற ஓசை எழுப்பிய மன்னர் அந்த வார்த்தைக்கான
அர்த்தத்தை செய்து கொண்டிருந்தார்.

தன் புஜபலம்
அனைத்தயும் பிரயோகித்த கருணாமூர்த்தி மூச்சை இழுத்துப் பிடித்து நெம்பினான்..கல்
நெகிழ்ந்தது..இன்னும் நெம்பினான்.. அசைந்து கொடுத்தது..

மன்னர் அவனைக் கை
அமர்த்தினார்..

என்ன அரசே.. ஆகிவிட்டது.. இன்னும் சற்று நாழிகையில்
திறந்துவிடும்..”

தெரியும்.. அதனால் தான் நிறுத்தச் சொன்னேன்.. திறக்கும்
பொழுது யாரேனும் வாயிலில் இருந்தால் மாட்டிக் கொள்வோம்.. ஆதலால்..”

ஆத..லா..ல்..”

கற்கதவை திறப்பதை விட அதை அப்படியே தள்ளி உருட்டி
விடுவோம்.. மின்னலென வெளியேற வேண்டும்.. மனித மனம் எப்பொழுதும் ஒரு பொருள்
உருண்டோடினால் முதலில் அதன்பின்னே தான் செல்லும்..ஆனால் அதன்பின் சுதாரிப்பதற்குள்
நாம் குறுவாளை இயக்க வேண்டும்.. இப்பொழுது தெரிகிறதா.. எதற்கு அந்த வாட்கள்
மண்கூட்டில் மறைத்து வைக்கப்படிருக்கிறது என்று..”

தெளிவாக புரிந்தது அரசே.. இந்த சூழலிலும் உங்கள் மதிநுட்பம்
வியக்க வைக்கிறது அரசே..”

மதியை சரியான சூழலில் நுட்பமாக பயன்படுத்தாவிட்டால்.. அது
மதிநுட்பமாகாது கருணாகாரா..”

சரியாகச்சொன்னீர்கள் அரசே.. சரி.. தயாராகுங்கள்..
செயல்படுத்துவோம்..”

கிழச்சிங்கம்
என்றழைக்கப்பட்ட ராஜா தன் கிழபலத்தை முடிந்த மட்டும் பிரயோகித்தார்..கண்களுக்கு
ஏது வயது.. என்பது போல வெறித்தனமாக பார்வையாலேயே அக் கண்களும் தள்ளியது..

கருணாகர
மூர்த்தியின் புஜம் “ஜம்” என்று இருந்ததால் அந்த அளவு கடினம் ஏதும்
இல்லாமல் நினைத்தபடி.. தள்ளினார்கள்..அந்த கல்லும் பெருத்த சத்தத்துடன் உருண்டு
ஓடியது..

இரண்டு வீரர்கள்
கற்கதவு உருண்ட இடத்தை நோக்கினார்கள்.. வாளோடு..

மன்னரும்
கருணாமூர்த்தியும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மின்னலென வெளியே பாய்ந்து
மறைந்து கொண்டார்கள்.. திகைத்து திரும்பிய வீரர்கள் இப்பொழுதுவாயிலைநெருங்கிக்கொண்டிருந்தார்கள்..

கருணாகரமூர்த்தி
தன் குறுவாளை பிடித்தவிதத்தை பார்த்த மன்னருக்கு நம்பிக்கை துளிர்விட்டது.. மன்னர்
ஒரு கல்லை எடுத்து பாதளச் சுரங்கத்திற்குள் எறிந்தார்.. கல் உருண்ட சத்தம் கேட்டு
இருவரில் ஒருவன் உள்ளே எட்டிப்பார்க்கவும் கருணாகரமூர்த்தி அவன் கழுத்தில் வாளை
இறக்கினான்.இறந்தான்.ஆவேசம் கொண்டவனாய் அடுத்தவன் மேல் பாய்ந்த கருணாகரன் அவனது
விலாவில் தன் குறுவாளை பாய்ச்சினான்.

மடிந்த
இருவீரர்களையும் அந்த வாயிலினுள் இழுத்துப் போட்டபின்
, மன்னரை மிகவும் ஜாக்கிரதையாக கைப்பிடித்து அழைத்துச்
சென்றான்.அகழிகையின் பக்கவாட்டில் கம்பீரமாய் நிமிர்ந்திருந்த மதில் சுவரின்
அடியில் அந்த இரண்டு உருவங்கள் அடிமேல் அடிவைத்து முன்னேறின. நீண்டு தொடர்ந்த
நிழல்கள் சுவரின் மேல் படிந்து தொடர்ந்தது..

***

வழுவூர் செல்லும்
வழியில் தளபதியின் கூடாரம்:

நிமிர்ந்த வேம்பின்
அருகில் மிகவும் கவனுத்துடன் வேயப்பட்ட கூடாரம்.நடுவில் மூங்கில் நடப்பட்டு
,அதன் உச்சியில் இருந்து பிரிந்த கூரை வட்ட வடிவில் இறங்கி
இருந்தது.ஆங்காங்கே முட்டுக்கொடுத்து
,கட்டி
இழுக்கப்பட்ட லாவகத்தில் ஒரு கட்டிடக் கலையின் நுணுக்கம் புலப்பட்டது. சுற்றிலும்
ஈட்டி ஏந்திய வீரர்கள்.. குதிரைகள் மர நிழலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன..
அருகருகே வேயப்பட்ட வைக்கோல் படைப்புகள் அம்பாரமாய் உயர்ந்து
, அந்த பிரதேசத்தின் வளமைக்கு கட்டியம் கூறியது.

இரவின்
ஆரம்பத்தில் இருந்த அவ்விடத்தில் நிலவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக்
கொண்டிருந்தது.

நிலவுதான் எத்தனை
அழகு.. கயவர்க்கும்
,கள்வர்க்கும்,காதலர்க்கும்
பொதுவாய் காய்ந்து மெதுவாய் நகரும் சுந்தரச் சந்திரன்..

சந்திர
வெளிச்சமும் தீப்பந்த ஒளியும் மீறி அடந்து கிடந்த இருட்டின் நடுவில் படர்ந்து
இருந்த கூடாரத்திற்குள் கூடி இருந்தது வீரவிக்ரமனும் அவன் தளபதிகளும்.

தளபதி
வீரவிக்ரமனும் இளஞ்செழியனும் இன்னபிற தளபதிகளும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்..

ஒரு ஆழ்ந்த
நித்திரைக்குப் பின் எழுந்த வீரவிக்ரமன் ஒரு யவ்வணமான நிலையில் அமர்ந்திருந்தபடி
கேட்டான்..

என்ன இளஞ்செழியா.. மாறவர்மனின் மரணம் நெருங்குகிறதே என்று
வருத்தமாய் இருக்கிறாய் போலத் தோன்றுகிறதே..உன் வாடிய முகத்தைப்
பார்த்தால்..”

மரணம் நெருங்குவது என்னமோ சரிதான் மன்னா..ஆனால்..”

ஆனால் ?”

ஒன்றும் இல்லை அரசே.. பயணக்களைப்பு.. அதனால்தான்.. “

அவனைப் பிடித்துவிட்டால் போதும்.. என் ராஜ்ஜியம்
தான்..”

அதை ஆமோதிப்பதாய்
ஒரு தளபதி..”இப்பொழுதே தங்கள் ராஜ்ஜியம் தானே மன்னா..இன்னும் சில தினங்களில்
மாறவர்மனின் முடிவு உறுதி..”

ஆம் அரசே.. வழுவூரை நெருங்க நெருங்க அவனின் முடிவு
ஆரம்பமாகிறது”

நன்றாகச் சொன்னீர்கள் வீரர்களே.. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..
உதயத்திற்குள் புறப்பட்டாக வேண்டும்”

நிலா இப்பொழுது
நடுவானையும் கடந்து மேகத்தில் மறைந்து
,மிதந்து தவழ்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிக்கொண்டிருந்தது.. மாறவர்மனை நினைத்துக் கவலை
கொண்டதனால் ஆங்காங்கே கவலை ரேகைகள் நிலவிலும் தெரிந்தன…

இரவும், வேப்ப மரமும் பேசிக்கொண்டதில் எழுந்த சப்தம் அந்த நிலவு வரை
கேட்டது..

                     பொழுது புலரும்பொழுதே விழித்தான்
வீரவிக்ரமன்
. அந்த
வெட்டவெளியின் விளிம்பில் வட்டவடிவச் சூரியன் குருதிக் குழம்பாய் வழியத் துவங்கி
இருந்தான்.வீரவிக்ரமனின் அசைவிற்கு காத்திருந்த மற்ற தளபதிகள் புறப்படத்
தயாரானார்கள்.. இளஞ்செழியனும்தான்.

மன்னா நல்லுறக்கம் என நம்புகிறேன்”

ம்ம்.. சற்று அசந்து விட்டேன்.. என்றாலும் நினைவு தப்பாத
நித்திரைதான்.. இரவு முழுதும் சிந்தனையினூடேதான் இருந்தேன்.. யாமத்தில்
உறங்கிப்போயிருப்பேன்..”

அப்படி என்ன சிந்தை மன்னா ?.. நெருங்கி
விட்டோமே..”

இல்லை இளஞ்செழியா.. அவ்வளவு எளிதில் மாறவர்மனை நெருங்க
முடியாது.. ஏதோ தவறாகப்படுகிறது..”

அச்சமாய் உணர்கிறீர்களா அரசே?”

அச்சமா?” என்ற வீரவிக்ரமன்
இளஞ்செழியனின் கழுத்தில் வாளை வைத்து..

இந்த வாள் முதலில் மாறவர்மனின் குருதி குடிக்கக்
காத்திருக்கிறது..வீணாய் அதன் விரதத்தை முடித்துவிடாதே..”

மன்னிக்க வேண்டும் அரசே.. நான் கூறவந்..தது..”

அவனைப் பேச
வேண்டாம் எனக்கை அமர்த்திய வீரவிக்ரமன்சடுதியில் தயாரானான்.கூடாரம் இருந்த இடம்
வெற்றிடம் ஆனது.குதிரைகள் எழுப்பிய சத்தத்தில் பறவைகள் அலமந்தன.அவைகளின் கிரீச்
ஒலிகள் காற்றில் மிதந்தது..காற்றும் மிதந்தது.

                                                அத்தியாயம் 10

வேலவர் வீடு..

அதிகாலைவேளையின்
இன்பம் துய்க்க
, தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தாள் சொர்ணவள்ளி.அலர்ந்த
மல்லிகைகளும் மலர்ந்த மகரந்தங்களும் எழுப்பிய வாசம் சுவாசத்தை சுத்தம் செய்து
கொண்டிருந்தது.அவளின் பாத அடிகளுக்கு ஏற்ப புற்கள் மடிந்து எழுந்தன..கைகள்
செடிகளிலும் கண்கள் மலர்களிலும் இருந்தாலும் மனம் மட்டும் இன்னும் துயில்
கொண்டிருக்கும் மாறவர்மனைச் சுற்றிக் கொண்டிருந்தது..காதல்..

மின்னலாய்த்
தோன்றி மழையாய் பொழியும் காதல்.வானையும் மண்ணையும் மலரையும் ரசிக்கச்செய்யும்
காதல்.மனதில் சிறு கீற்றாய் கிளறி பின் வற்றா ஊற்றாய் கிளம்பும் காதல்.துணையின்
நினைவுகளோடே நொடிப்பொழுதுகளையும் யவ்வணமாய் வாழ்விக்கும் காதல். நங்கைகளின்
கொங்கைகளையும் நாயகர்களின் கண்களையும் துடிக்கச் செய்யும் காதல்..பிரிந்தால்
துடிதுடிக்கச்செய்யும் காதல்..

அந்த காதலின்
தீரத்திலும் மாறவர்மனைச் சந்தித்த நினைவுகளின் ஈரத்திலும் காலைவேளையின்
ரம்மியத்திலும் நகர்ந்த பொழுதுகளில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தாள்
சொர்ணவள்ளி..

தந்தை வேலவரின்
காலடி ஓசைக் கேட்டு.. நிகழ்விற்கு வந்தவள் நிமிடத்தில் வீட்டிற்குள் சென்று
விட்டாள்.சென்றவள் அனிச்சையாய் மாறவர்மன் படுத்திருந்த மஞ்சத்தை ஆசையாய்
பார்த்தாள்..அங்கே..

மாறவர்மனைக் காணவில்லை…

சொர்ணவள்ளியின்
நெஞ்சம் நிறைத்தவன் துஞ்சி இருந்த மஞ்சத்தில் எஞ்சி இருந்தது வெறும் வெறுமை மட்டுமே.

அங்கு அவன்
இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது
வள்ளிக்கு. அதைவிட அதிகமாய்
, என்னாவாகியிருக்கும்
என்ற பதட்டம். இங்குமங்கும் அலமந்து தேடியவள்
, அறையின்
வலதுமூலையில் இருந்த தேக்குத்தூணில் சோர்ந்து சாய்ந்தாள். தூணின் பின்புறமிருந்து
வந்த கைகள் அவளின் இடையைத் தூணோடணைத்தது. திடுக்கிட்டு திரும்பியவள்
, அது மாறவர்மனின் கைகள் எனக் கனப்பொழுதில் உணர்ந்ததும், விழிவழி கசிந்த நீர்த்துளி அவள் வலி சொல்லும் மொழியானது.

இனி இப்படி விளையாடாதீர்கள்

என்று அவன்
திடமான மார்பில் இடித்தாள்
,நெற்றியைக் கொண்டு. உத்தரவு மகாராணிஎன்று கூறிக்கொண்டே பதிலுக்கு இடித்தான் நெற்றியினாலேயே.
தேக்குத்தூண் ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தது.

****
முன்னாள் தளபதியும் இன்னாள் மன்னனுமான வீரவிக்ரமனின் குதிரை
எல்லோருக்கும் முன்னால் பறந்தது. அவனின் கையசைவிற்கொப்ப நின்றது. பின்னால் வந்த
படையும். அது வழுவூருக்கு மிக அருகில் இருக்கும் கிராமம்.அங்கிருந்து
7 யோசனைகளில் வழுவூர்.

என்ன வீரர்களே, தயாரா?” கர்ஜித்தான் வீரவிக்ரமன்.

தயார் மன்னா. நம் திட்டப்படி இளஞ்செழியன் இப்பொழுது
செயல்படவேண்டும் மன்னா
என்று ஒரு வீரன் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அவன்
கைகள் வாளின் கைப்பிடியை இருக்கியது.மாறவர்மனை அருகில் பார்க்கப்போகும் பயத்தில்.

இளஞ்செழியா, சொல். செல்லும்
வழி சொல்.கொல்லும் வழி சொல்
”.

உத்தரவு மன்னா, நாம் வழுவூரை
நெருங்கிவிட்டோம். அங்குதான் மாறவர்மன் இருப்பதாக வந்த செய்தி உண்மையாய் இருப்பின்
முடிவு உறுதி…
என்று நிறுத்தி அவனுக்குஎன்று முடித்தான்.

ம். அதற்குத்தானே இத்தனை நாட்கள் காத்திருக்கிறேன். அவன்
எங்கு பதுங்கியிருப்பதாய்ச் சொன்னாய்
?”

இல்லை மன்னா, அது எனக்குத்
தெரியாது. ஆனால் வழுவூரைப் பொருத்தவரை
, நான் முன்பே கூறியது
போல்
, வணிகர் வேலவர் என்பவர் மிகவும் முக்கியஸ்தர். அவரின்
உதவியை நாடினால் வெற்றியை நாட்டலாம்.

தகவல் போயிறுக்கிறது வேலவருக்கு. கவலைப் படாதே இளஞ்செழியா.. நாம் அவரின் வீட்டிற்குத்தான் போகிறோம். ஆனாலும்…

என்ன மன்னா ஐயம்?”

ஏதோ ஒன்று என்னைத் தடுக்கிறது. வேலவர் வீட்டிற்கு
போவதற்குப் பதில் அவரை மைதானத்திற்கு வரவழைக்கலாமா என்ற எண்ணமும் ஓடுகிறது செழியா

மாறவர்மன்
மற்றும் இளஞ்செழியனின் திட்டத்தின் முதல்கட்டமே வீரவிக்ரமனை வேலவர் வீட்டிற்குள்
அழைத்துப் போவதுதான்.எனவே
,

மன்னா நீங்கள் கூறுவதும் சரியாகத்தான் படுகிறது. என்றாலும்
வேலவரின் வீட்டிற்குப் போவதே உசிதமாகப் படுகிறது. வெளியே சந்திக்கும்பொழுது
மாறவர்மனுக்கு தகவல் போய் தப்பித்து விட்டால்
?”

இளஞ்செழியா, மிகக் கூர்மையாக
சிந்திக்கிறாய்
,உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. மாறவர்மனின்
நண்பனாகிப் போனாய்
, இல்லை என்றால் என் தளபதி நீ தான்

மன்னா, மாறவர்மனே இல்லை
என்றாகப் போகிறான்
, இன்னும் என்ன இல்லை என்றால்.. அவன் முடிவுக்குப் பின்
அதைப் பற்றி முடிவெடுங்கள்

ம். சரி திட்டப்படி நானும் நீயும் மதிவதணரும் வேலவர்
வீட்டிற்குள் செல்லும் பொழுது
, வெளியே இருக்கும்
வீரர்கள் வாளேந்தி தயார் நிலையில் இருக்க வேண்டும். வேலவரின் வீட்டைப் பற்றி
ஒற்றன் கூறியது நினைவில் இருக்கிறது என்று நம்புகிறேன் வீரர்களே..

காத்திருக்கிறோம் மன்னா..

ஆம்.. மாறவர்மனும் காத்திருக்கிறான் மன்னா…என மனதில் சொல்லிக்கொண்டான் இளஞ்செழியன்.இதழ் ஓரத்தில் ஓடிய
நகையில் வீரவிக்ரமனை வீழ்த்தும் சூத்திரம் வகுத்த பெருமிதம் மிதந்தது.

அப்பொழுது, அவர்களை நோக்கி புயலென வந்த ஒற்றன் ஒருவன், ஆசுவாசப்படுத்திக் கொள்ளாமல் தாங்கி வந்த தகவலைச்
சொன்னான்…

மன்னா.. சிறையில் இருந்து மன்னர் ராஜா வீரவிக்ரம குலசேகர
தொண்டைமான் தப்பி விட்டார்
”..

**

                                               

வேலவர் வீடு:
மயான அமைதியில் இருந்தது. மயானத்தில் யாரும் இருப்பதில்லை என்பதனால் மயான அமைதி
என்று கூறப்படுகிறதா அல்லது எவ்வளவு ஆடினாலும்
,மரணத்திற்குப்
பின் மயானத்தில் அமைதியாய்த்தான் துயிலமுடியும் என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா
என்று சிந்தனையை வேலவரின் உதடுகள் பிரிந்து உடைத்தது.

மாறவர்மரே.. இளஞ்செழியனிடம் வந்த தகவல் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்
?”

உங்களின் கருத்தைக் கூறுங்கள் வேலவரே

உங்களுக்கு எதிரான சதி சற்று கவலை அளிக்கிறது. உங்களை
அழிக்கவேண்டும் என வீரவிக்ரமன் போராடிக்கொண்டிருக்கிறான்.வருத்தமாயிருக்கிறது.

வேலவரே.. பண்பாட்டையும், கலையையும்
அன்றாடம் கற்றுக்கொண்டே இருப்பதில் நான் ஒரு நிரந்தரமாணவன்..அதனாலயே நான் என்றும்
நிரந்தரமானவன்.கவலைப் படாதீர்கள்

நல்லது மாறவர்மரே, நீங்கள் நம்
திட்டப்படி இங்கேயே பதுங்கி இருங்கள். வீரவிக்ரமன் இங்கு வரும் நாளை எதிர்நோக்கி
காத்திருப்போம்.

அப்படியே ஆகட்டும் வேலவரே.தந்தை சிறையில் இருந்து
தப்பித்ததும் ஆறுதலான செய்தி.வீரணனை அதுகுறித்த பணியில் அமர்த்தி இருக்கிறேன்.

ஆம் இளவரசே.. நல்ல செய்திதான் அதுவும். நான் சற்று வெளியில்
சென்று விட்டு வருகிறேன்.நீங்கள் ஓய்வெடுங்கள்

வேலவர் விலகினார்
அவ்விடத்தினின்று. ஒரு தந்தையின் அருகாமை விலகியதைப் போன்று உணர்ந்தான் மாறவர்மன்.
தன் மீது பெரியவர்கள் கொண்ட அக்கறையை எண்ணி மானசீக நன்றிகளை இதயத்தில் துவங்கி
கண்களின் வழி வெளிவிட்டான் இரு துளிகளால்…

வேலவர் வணிகர்
என்பதனால் அவரின் வீட்டில் அடுக்கிவைக்கப்பட்ட ஏலக்காய்
,கிராம்பு,அத்தர் என
பொருட்களின் கலவைகளால் நறுமணம் கமழ்ந்தது. ரம்மியமாய் இருந்தது சூழல். வெறுமையை
அந்த மணம் நிறைத்தது.அடுத்தகணம் அவன் மனம் சொர்ணவள்ளியை நினைத்தது.

எங்கு போனாள்? என்று கண்களை சுழற்றினான். இரண்டாவது சுழற்றலின் முடிவில்
எதிர்பட்டாள்.கண்களால் ஏதோ புதிர் போட்டாள்.

என்ன வள்ளி.. சைகைகள் பலமாக இருக்கிறதே.. புருவ நெளிப்பின்
அர்த்தமும் கண்ணசைவும் புதிராக இருக்கிறதே..புதிதாயும்

ஆஹஹா.மாறவர்மருக்கு தெரியாததா? நம்பிவிட்டேன்

இல்லை சொர்ணவள்ளி.. சற்று கவலையாய் இருக்கிறது எந்தையை
எண்ணி..

எல்லாம் சரியாகிவிடும் நானிருக்கிறேன்,நானுமிருக்கிறேன்.

நானிருக்கிறேன் என்று கூறும் நாவின் சொற்கள் இனிக்கிறது
சொர்ணவள்ளி

வஞ்சி என்னை கொஞ்ச வேண்டாம் தாங்கள்,ஆனால் சற்று நேரமாவது எனக்காக..
என்று சொர்ணவள்ளி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மாறவர்மனின்
பின்னால் இருந்து சரேல் என்று வந்த ஈட்டியை கவனித்தவள் இமைப் பொழுதில் மாறவர்மனை
இடபக்கமாக தள்ளிவிட்டாள். ஈட்டி சுவரை சேதப்படுத்தி அதன் முனையையும்
சேதப்படுத்திக் கொண்டது.

ஒரு நொடியில்
சுதாரித்த மாறவர்மன் ஈட்டி வந்த திசை நோக்கி பார்த்தான்.வெற்றிடம்.

தக்க தருணத்தில் காத்ததற்கு நன்றி சொர்ணா..

என் வாழ்வே உங்களுக்காகத் தானே மாறவர்மரே.. நன்றி சொல்லி
நடைபிணமாக்காதீர்கள் என்னை

அவள் சொல்லிக்
கொண்டிருக்கும் பொழுதே மார்போடணைத்தான்.அவனின் ஆனந்தக் கண்ணீர் அவள் தலை நனைத்ததை
அவளறியாள்.

                                                அத்தியாயம் 11

வீரவிக்ரமன்
மிகுந்த சிந்தனை வயப்பட்டிருந்தான்.அந்த இடம் ஒரு மைதானம் போல இருந்தது. சுற்றி
இருந்த மரங்களின் அடர்த்தியையும் மீறி சூரியக் கிரணங்கள் தம் பணிகளைச் செவ்வனே
செய்துகொண்டிருந்தன.

சாம்பல் நிற
மண்ணினைச் சுற்றி வீரவிக்ரமனின் ஆட்கள். ஆங்காங்கே தருவின் நிழலில் குதிரைகள்
இளைப்பாறிக்கொண்டிருந்தன. என்றாலும் கால்களை முன்னும் பின்னும் இயக்கியவாரே
இருந்தபடியால் புழுதி அவ்விடத்தை நிறைத்திருந்தது.

எங்கோ தொலைவில்
இருந்து வந்த ஓநாயின் சத்தம் அங்கு சன்னமான குரலில் வந்தடைந்தது. பறவைகள் புதிய
மக்களின் வருகையை கீச்சுக் குரலில் அலறி
,அலமந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருந்தன.

எந்த ஒலியையும்
காதில் வாங்கா வீரவிக்ரமன் தன் அடிவயிற்றில் இருந்து கர்ஜித்தான்.

அங்கே கிழவன் தப்பி விட்டான்.இங்கே குமரன் பதுங்கி
கொண்டுள்ளான். வாள் செங்குருதி பார்க்கத் துடிக்கிறது.ஆள் அகப்பட்டால் என்
வாளுக்கு வழிமுறைகள் தெரியாது…

மன்னா..சற்று ஆவேசம் தணியுங்கள். வெற்றி நமதே. மன்னர்
தப்பித்து எங்கு போய்விடப் போகிறார்
?”

தன் இடது காலை
குனிந்து பேசிக்கொண்டிருந்த அந்த வீரனின் நெஞ்சில் இறக்கினான் வீரவிக்ரமன்..நிலை
தடுமாறி விழுந்த வீரனை பார்த்து சினத்தினூடே கதறினான்..

கிழவனை இன்னமும் மன்னர் என்றா விளிக்கிறாய்?”

வீரவிக்ரமனின்
ஆவேசக் குரலால் பதற்றமடைந்த பறவைகள் சிறகுகளை படபடத்து மரங்களை விட்டு மொத்தமாய்
வெளியேறின. சூரியனும் நடுவானுக்கு நகர்ந்து தன் உக்கிரத்தை கூட்டத் தொடங்கி
இருந்தான்.

இளஞ்செழியனின் காதுநுனிகளில் பயரேகை சிவந்தது.

அப்போது..

அங்கு வேலவர் வந்து சேர்ந்தார். நடை
சற்று தளர்ந்திருந்தது
. தன்
வெண் தாடியை நீவிவிட்டுக்கொண்டே வீரவிக்ரமனின் அருகில் வந்தார்
.

தயங்கி, பின்னர்
குனிந்து வணக்கம் தெரிவித்தார்
.

அவரிடம் நெருங்கிய வீரவிக்ரமன் தன் புருவங்களைக் குறுக்கி,

வேலவரே, நலமா, காலம் உங்களை சற்றே அதிகமாக
உருகுழைத்து வெண்பசை பூசிவிட்டது போலவே

என்று கேட்கவும்,

தள.” என்று கூற எத்தனித்து, நிறுத்தி, ”அரசே, கிராமப்புரங்களில் சுபிட்சம்
சற்றுக் குறைவுதான்
. வானம்
கைவிரித்துவிடுகிறது
, கடவுளர்கள்
போலவே
.. வயதும் ஆகிறதுதானேஎன
சிரித்தார்
, வேலவர்.

வீரவிக்ரமன் கண் அசைக்கவும் ஒரு நாற்காலி போடப்பட்டது.

அதன் முனையில் தயங்கி அமர்ந்த வேலவர், “அழைத்ததன் நோக்கம் அரசே,”

ஒரு
சிறு உதவி தேவைப்படுகிறது வேலவரே

அவன் முகத்தை சற்று உற்றுப் பார்த்த வேலவர்

இந்த
எளியவன் தங்களுக்கு எவ்வகையில் உதவிட முடியும்
? உத்தரவிடுங்கள், செய்வேன் அல்லது மடிவேன் அரசே. புதிய ஆட்சியில் எமக்கு
சுபிட்சம் கிடைத்தால் போதும்
, அது
தங்களால்தான் முடியும்

மீசையை முறுக்கிய வீரவிக்ரமன்,

அதற்காகத்தான்
வேலவரே
.. எல்லாவற்றையும் அழித்து, புதிதாய்
படைக்கும் பணியில் இருக்கிறேன்
. அதில்
மாறவர்மன் என்ற சிற்றெறும்பு தப்பியோடிவிட்டது
. அவன் இவ்வூரில்
சுற்றிக்கொண்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்
. சரி வேலவர் இருக்கும் இடம்தானே
என எதைப்பற்றியும் ஆலோசிக்காமல் வந்துவிட்டேன்
. என்ன செய்யலாம், சொல்லுங்கள்

வேலவர் ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவர், அவனை நோக்கி

அரசே, என் மகள் சொர்ணவள்ளியும்
என்னோடு வந்திருக்கிறாள்
. அவள்
ஏதோ ஓர் இளைஞன் அவளிடம் வம்பு செய்ததாகக் கூறிய நினைவு
. அழைக்கவா?

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் கண் அசைத்ததும் வீரர்கள் சொர்ணவள்ளியை
கூடாரத்திற்குள்ளே அழைத்துவந்தார்கள்
.

ஒரு கணம் மூர்ச்சையானதுபோல் அவள் மார்க்கச்சையைப் பார்த்துக்கொண்டிருந்தான்
வீரவிக்ரமன்
.

வேலவரே
நாம் உறவுமுறையாகும் சந்தர்ப்பம் நெருங்கி வருகிறது
, தயாராகிக்கொள்ளுங்கள்

வேலவர் புரியாமல் பார்க்க,

ம், இவ்வளவு காலம் இந்த மன்னனின்
பார்வையில் படாமல் இங்கு என்ன செய்துகொண்டிருந்தாய் சொர்ணா
?, சரி சொல், யார் அவன்?”

வீரவிக்ரமனின் கண்கள் அவள் உடல்மேதே இருக்க, மனம் முழுக்க அவளை அடைவதில்
சுழன்றுகொண்டிருந்தது
.

திடீரென வீரவிக்ரமனைச் சுற்றி இருந்த வீரர்கள் பதற்றமடைந்து ஈட்டியை எடுத்து
ஓடத் துவங்கினார்கள்
.

சொர்ணவள்ளியின் காளைமாடு அந்த மைதானத்திற்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திக்
கொண்டிருந்தது
.

சொர்ணவள்ளி கொஞ்சும் குரலில் மன்னா, அது நம் மாடுதான். கொன்றுவிடாதீர்கள்

ஒருநொடி வீரவிக்ரமன் அவளின் குரலின் அணுக்கத்தில் அலமந்தான். “வீரர்களே கொன்றுவிடாதீர்கள்
துரத்துங்கள்
என
மாட்டை எட்டிப்பார்த்துக்கொண்டே குரல் கொடுத்தான்
.

அப்போது,

வேலவர், தான்
அமர இடப்பட்ட நாற்காலியின் கைப்பிடியை உடைத்து
, சரேலென வீரவிக்ரமனின் கழுத்தில்
பாய்ச்சினார்
. பீறிட்டு, கூடாரக் கூரையில் சிதறியது
குருதி
.

ஒரு கணம் அனைவரும் ஸ்தம்பித்து நிமிர,

வேலவர் தம் வெண் தாடியை பிய்த்து எறிய, “மாறவர்மாஎன்று அழைத்தணைத்தான்
இளஞ்செழியன்
.

வீரணன், இளஞ்செழியன்
மற்றும் அவர்களது ஆட்கள் வீரவிக்ரமனின் சொற்பமான விசுவாசிகளை கொன்றுவிடாமல்
சிறைபிடித்தார்கள்
.

விசுவாசம்
என்றால் என்னவென்று உங்களுக்கு உணர்த்தாமல் மரணமெனும் விடுதலையைக்
கொடுத்துவிடமாட்டேன் வஞ்சகர்களே

என்று மாறவர்மன் சொல்ல, அவர்கள்
பிணைக்கப்பட்டார்கள்
.

**

அரண்மணை.

அரியணையில் சொர்ணவள்ளி வீற்றிருந்தாள்.

வேலவர் மன்னர் அருகில் நின்றிருந்தார்.

இளஞ்செழியன் வீரணன் கருணாகரமூர்த்தி எனத் தன் தளபதிகள் புடைசூழ வந்த மாறவர்மன்
சொர்ணவள்ளிக்கு அருகில் அமர
, மதுர
நாட்டின் மன்னனாக முடிசூடும் விழா கோலகலமாக அரங்கேறியது
.

மக்களின் கோஷம் வான் பிளந்தது.

வாழ்க மன்னர் மாறவர்மன்!!!

***

                           முற்றும்.


2008ல் எழுதப்பட்ட குறுநாவல்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி