Homeமாறவர்மமாறவர்மன் : 5 - 7

மாறவர்மன் : 5 – 7

அத்தியாயம் 5

பாதாளச் சிறை..

இருட்டை
தீப்பந்தம் விரட்டி இருந்தது..

பாறாங் கற்களே
சுவர்களாய் அமைந்து அந்த இடத்தின் அபாயகரத்தை அதிகரித்துக் காட்டியது.அங்கு நிலவிய
அதீத அமைதி அதை இரட்டிப்பாக்கியது.

ஈட்டியேந்திய
வீரர்களுக்குப் பின்னால் கம்பியிட்ட கதவுகள்.. அதற்கு அப்பால்.. ராஜா வீர வர்ம
குலசேகர தொண்டைமான்.. அமர்ந்திருந்தார்..அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார். அந்த
சூழலிலும் அவர் முகம் தீர்க்கமாய் இருந்தது.வெண்தாடியை நீவிய கரங்கள் தளர்ந்து
போயிருந்தன..

“வீரர்களே.. என்ன நடக்கிறது நாட்டில்.. என் குடி மக்களின்
நிலை என்ன?”

“அரசே”.. என்று இழுத்த வீரன் காலடிச் சத்தம் கேட்டு
மெளனமானான்..காலடிச்சத்தம், சத்தங்களாக பெருகியது..

“வீரர்களே.. கிழச்சிங்கம் என்ன கர்ஜிக்கிறது?” என்றவாறே வீரவிக்ரமன் தன் சதிக்குழுவோடு சிறையை நெருங்கினான்..

“வீர விக்ரமா… கிழம் ஆனாலும் சிங்கம் சிங்கம் தான்.. என்
குட்டி குதறிகிழிக்கப்போகும் குள்ளநரி நீ என்பதை மறந்து விடாதே..”

“ம்ம்.. அந்த சிங்கக்குட்டியை கூண்டில் அடைக்கும் ஏற்பாடுகள்
நடக்கிறது கிழச்சிங்கமே..”

“நெருப்பை கூண்டில் அடைக்கப்போகிறாயா? பார்க்கத்தானே போகிறேன்..ஹ ஹா..”

“இன்னும் இந்த ஆணவம் உன்னை விட்டு அகலவில்லையா முன்னாள்
அரசனே…

யாரங்கே.. இன்று
முதல் ஒருவேளை மட்டும் உணவிடுங்கள்.. உண்டி சிறுத்தால் திமிர் குறையும்
கிழவனுக்கு..”

வீர விக்ரமனின்
காலடிச்சத்தம் அவனின் சினத்தின் அளவிற்கு ஒப்ப ஓங்கி ஒலித்தது..

மன்னரின் கண்கள்
சிரித்தது…

***

கடைவீதி..

நெற்குவியல்கள்
சிறு குன்றுகள் போல் குவித்து வைக்கப்ட்டிருந்தன‌.. மண்பாண்டங்களும்,துணிமணிகளும்,அணிகலன்களும்
அருகருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
குடி மக்கள் நீர்த்திவலைகளை தெளித்தது போல் ஆங்காங்கே நின்று
பொருட்களை பண்டமாற்றி கொண்டிருந்தார்கள்..

திடீரென அந்த
கூட்டத்திற்குள் வாள் ஏந்தி வந்த நான்கு வீரர்களின் குதிரைகள் முன்னங்கால்கள்
காற்றில் பறக்க,கனைத்த‌ கனைப்பில் அந்த கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்து
நின்றது..

நெல்மணிகளை கொத்திக் கொண்டிருந்த புறாக்கள் வட்டமடித்து,மேலே பறந்து, வசமாக அமர்ந்து
நடக்கப்போவதை வேடிக்கை பார்ப்பது போல் வரிசையாய் அமர்ந்து கொண்டன..

ஸ்தம்பித்து
நின்ற மக்களை நோக்கி அந்த வீரர்களில் ஒருவன் பேசினான்.. அல்லது கர்ஜித்தான்..

“இந்த பொருட்கள் எல்லாம் இனி எங்களின் வசம். உயிர் மீது ஆசை இருந்தால்
ஓடிவிடுங்கள்”..

என்று
கூவிக்கொண்டே வாளை சுழற்றினான்.

அப்பொழுதும்
சிலையாக நின்ற மக்களை பார்த்து சினம் கொண்ட‌ அந்த வீரர்களில் ஒருவன் தன் குதிரையில்
இருந்து தரைக்கு தாவினான். தாவியவனின் வாள் இப்பொழுது செந்நிறமாய் குருதி
சொட்டியது..”ஆ” என்ற அலறலலோடு விழுந்த வணிகனின் ஒரு கரம் இரு தரம்
துள்ளி மண்ணை செம்மண்ணாக்கியது.

கண நேரத்தில்
நிகழ்ந்துவிட்ட இந்த விபரீதத்தை உணர்ந்த மக்கள் சிதறி ஓடத் துவங்கினர்.. கூச்சலும்
கூக்குரலும் அவ்விடத்தை ஆக்ரமித்தது.பெண்கள் தம் குழந்தைகளை இறுக அணைத்தபடி
பதுங்கி ஒதுங்க முனைந்து கொண்டிருந்தார்கள்..

சிதறி ஓடிய
மக்களை “நில்லுங்கள்” என்ற குரல் நிறுத்தியது. ஒருகணம் மொத்த கூட்டமும்
குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது.. அங்கே..

கம்பீரமாய் ஒரு
உருவம்.. முகத்தை லாவகமாக துணியால் மறைத்து இருந்தாலும் கண்களின் உக்ரம் தெளிவாய்
தெரிந்தது..

கையில் வாளேந்திய
வீரர்கள் குதிரை விட்டு இறங்கினார்கள்..

“யாரடா நீ.. உயிர் மேல் ஆசை இல்லையா..”

“முட்டாள்களே.. உயிர்மேல் ஆசை இருப்பதால் தான் இங்கு
நிற்கிறேன்.. உங்கள் உயிர்கள் மேல் ஆசை இருப்பதால்..”

“ஹா ஹா.. எங்கள் உயிரை நீ பறிக்கப்போகிறாயா?? இந்நாட்டு மன்னனையும் அவன் மகனையும் சிறைபிடித்த கூட்டமடா
நாங்கள்.. கதிர்வேலா.. அவனுக்கு உன் வாள் எப்படி வேலை செய்யும் எனக்
காட்டு..”

“கதிர்வேலா” என்று அழைக்கப்பட்டவன் அந்த உருவத்தின்
அருகே சென்று வாளை சுழட்ட கைகளை உயர்த்தும் முன் அவ்வுருவம் தன் காலை மிகச்சரியாக
அவன் வயிற்றில் இறக்கியது. இந்த இடி தாக்குதலில் மிரண்டுபோன அவன் சுதாரிக்கும்
முன் தன் முதுகில் இருந்த வாளை எடுத்து வலது காலிலும் இடது கையிலும் லாவகமாக ஆனால்
மின்னலென சுழட்டியது.. கதிர்வேலனனின் மாறுகால் மாறு கை தாறுமாறாக தரையில் கிடப்பதை
பார்த்த வீரர்கள் மொத்தமாய் அந்த உருவத்தின் மீது பாய்ந்தனர்.. இதை எதிர்பார்த்த
அந்த உருவம் ஓடத்துவங்கியது.. விரட்டியபடி பின் தொடர்ந்தனர் வீரர்கள்..

உருவம் ஓடி ஒரு
பாழடைந்த கோயிலுக்குள் மறைந்தது..

அது பாழடைந்த
கோயில் என்றாலும் உள்ளே இன்னும் மிக நன்றாக இருக்கும் ஒரு கோயில்.. உள்ளே
நுழைந்தவுடன் வலதுபக்கமாக மிகப்பெரிய குளம். பச்சைப்பசேலென பாசிபடர்ந்து
இருந்தது.. ஓரங்களில் எல்லாம் புதர்கள் மண்டியிருந்தன.குளத்தைச் சுற்றி இருந்த
நடைபாதையின் இடதுபக்கம் சிறு சந்து போன்ற கல்பாதை.. இருட்டாக இருந்தது. இருபது
அடிகளில் முடியும் அந்த பாதையின் முடிவில்… .மிகப் பிரமாண்டமான பெரிய ப்ராகர
நடை.. உயரமான கூரையில் வவ்வால்களும் இன்னபிற பறவைகளும் பறந்தும் அமர்ந்தும்
இருந்தன.. இருமருங்கிலும் பெரிய பெரிய கல் தூண்கள்.. ஒவ்வொரு தூணிலும்
சிற்பங்கள்.. யாழியின் தலையில் தொடங்கி சிங்கத்தின் காலில் முடியும் சிற்பங்கள்..
மற்றொரு தூணில் இரண்டு யானைகள் தும்பிக்கைகளை கோர்த்தவாறு.. சற்று உற்று
பார்த்தால் அந்த கோர்த்த தும்பிக்கைகளில் ஒரு மந்தியின் முகம் போன்ற உருவமும்
தெரியும் வண்ணம் செதுக்கிய சிற்பக்கலை கொண்ட தூண்கள்.. தூண்களுக்கு இடையில்
இருக்கும் இருளை விளக்கி பார்த்தால் ஆங்காரமாய் காளிச்சிலை.. ஓங்காரமாய் சிவன்
நர்த்தனமாடும் சிலை.. இவைகளைத்தாண்டி மையமாக இருக்கும் வழியின் ஊடே வந்தால்
இருள்நீங்கி வெளிச்சமாய் ஒரு நடைபாதை.. மதில் சுவர்களின் கற்சிலைகள் உயிருடன்
இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் படி செதுக்கப்பட்ட அந்த பாதையின் முடிவில்
சந்நிதி.. உள்ளே.. உள்ளே..30 அடியில் மிகப்பெரிய காளி.. கையில் வஜ்ராயுதம்..
நாக்கு வெளியே நீட்டியபடி கண்களில் தெரிக்கும் கோபத்துடன், காலடியில் கிடக்கும் சிலையின் மீது ஆய்தத்தை பாய்ச்சிய
படி.. பார்க்கும் எவரும் ஒரு நொடி பயந்துவிடும் சந்நிதி.. சந்நிதியின் மேற்கே
இருக்கும் தூணின் நடுவில் படிகள்.. அந்த படிகளில் நேராக கீழிறங்கி அது செல்லும்
வழியில் சென்று எதிர்படும் படிகளில் ஏறினால்.. மீண்டும் குளத்தை வந்தடைய‌லாம்.

இந்த கோயிலின்
உள்தான் ஓடியது அந்த உருவம்.. குளத்தின் பக்கவாட்டு வழியூடே சென்று தூண்கள்
இருக்கும் ப்ராகரத்திற்குள் மறைந்தது.. பின் தொடந்து வந்த வீரர்கள் ஒருகணம்
யோசித்து பின் மெதுவாக அடியெடுத்து வைத்து தூண் ப்ராகரத்தை
அடைந்தனர்..

இப்பொழுது
இருட்டு கண்களுக்கு பழகி இருந்தது.. யாழி சிலை தூணின் பின் உருவம் அசைவது தெரிந்து, வீரர்கள் பாய்ந்தனர்.. சரேள் என பாய்ந்த வாள் வீரர்களின்
ஒருவனின் தலையை மிகத் துள்ளியமாய் துண்டித்தது.. மீதம் இருந்த நால்வரும் ஒரு கணம்
மூர்ச்சையானார்கள்.. கிசுகிசுப்பான குரலில் இவன் சாதரணமானவானக தெரியவில்லை என்று
பேசிக்கொண்டார்கள்.. இப்பொழுது முன்னைவிட ஜாக்ரதையாக கண்களை அலைபாய விட்டார்கள்..
உருவம் தட்டுப்படவில்லை.. என திரும்பிய நேரத்தில் ஒருவனின் கழுத்தில் பாய்ந்தது
குறுவாள்..

இப்பொழுது
யானைத்தூணின் பின் மறைந்தது உருவம்..கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி லாவகமாய் மூவரும்
தூணை சுற்றி வளைத்தனர்.. தூணோடு தூணாக ஒட்டி இருந்த உருவத்தின் மீது ஒரே சமயத்தில்
வாளை ஆக்ரோஷமாக பாய்ச்சினார்கள்… “ட்ங்ங்.” என்ற ஒலியுடன் சில
தீப்பொறிகள் பறந்தன.. அவர்கள் குத்தியது கற்சிலையில்.. அவர்கள் சுதாரிக்கும் முன்
கீழே இருந்து வந்த வாள் ஒருவனின் வயிற்றை கிழித்து மறைந்தது.. மீதமிருந்த வீரர்கள்
பயத்தில் ஓடத்துவங்கினார்கள்.. தூண்மண்டபத்தை விட்டு வெளிப்ராகரத்தை அடைந்து வாசல்
நோக்கி ஓடினார்கள்.. ஓடிய வீரர்கள் குளம் தொன்படுவதை பார்த்து வாசல் அடைந்த
நிம்மதியில் ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க துவங்கிய பொழுது.. குளத்தின் படிகளில்
சந்நிதியில் இருந்து வரும் பாதை வழியாக வந்த அந்த உருவம்.. இருவரையும்
நெருங்கியது.. ஒரு வீரனை தூரத்தில் இருந்தே குறுவாளை வீசிக் கொன்றது.. எஞ்சிய
மற்றவனை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த உருவம் நடுமார்பில் வாளை
பாய்ச்சிவிட்டு…

மிக நிதானமாக அந்த
கோயிலை விட்டு வெளியேறியது.

                                                     அத்தியாயம் 6

அரண்மனை..

“இளஞ்செழியனை அழைத்து வாருங்கள்..”

“உத்தரவு அரசே.. “

இளஞ்செழியன்
அழைத்துவரப்பட்டான்..

“மன்னா.. வியூகம் தயாரா.. பயணத்தை துவக்கலாமா?”

அதற்காகத்தான்
அழைத்தேன்.. நாளை மறுதினம் பயணம் தொடக்கம்..தயாராய் இரு.. இன்னும் ஒரு செய்தி
வேண்டுமே..

சொல்லுங்கள்
மன்னா..

உனக்கு வணிகர்
வேலவரை தெரியமா?

அந்த பெயரைக்கேட்ட இளஞ்செழியனின் இதயத் துடிப்பு
ஒருகணம் நின்று போனது..

வேலவர் என்ற
பெயரைக் கேட்டதும் அதிர்ந்த இளஞ்செழியன் பின் சுதாரித்து,

“இல்லையே மன்னா.. ஏன் என்ன செய்தி,ஏதாவது அபாயமா? “

“அப்படி ஒன்றும் இல்லை.. நீ கூறிய வழுவூர் கிராமத்தின் முக்கியமான
நபர்களில் ஒருவர்தான் அந்த வேலவர்.. இருக்கட்டும்! “

“மன்னா.. தங்கள் திட்டம் என்ன? ஏதோ வியூகம்
அமைக்கிறீர்கள் என்று தெரிகிறது..”

“ஹஹ ஹா.. சிங்கத்தின் பிடறில் சிக்கெடுக்க முயற்சிக்காதே
இளஞ்செழியா.. பொருத்திருந்து பார்..”

“மன்னா.. சிங்கத்தின் பிடறியே என்றாலும் சிக்கினால்
சிங்கத்திற்கு ஒரு சிக்கல் என்றால் சிக்கை விடுவிப்பது சிங்கத்தின் மீது
அன்புகொண்டவரின் கடமை அல்லவா?? “

“வார்த்தைகளில் இருக்கும் ஜாலம் செயலில் இல்லாமல் இருந்தால்
சரிதான் செழியா.. நாம் வெகு விரைவில் அங்கு செல்ல நேரிடும்.. தயாராய் இரு..”

“உத்தரவு மன்னா..”

அந்த அரண்மனையில்
அமைதி சற்று அமானுஷ்யமாய் இருந்தது.. கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட மூத்த
மந்திரிகள் தலையை குனிந்தவண்ணம் இருந்தனர்..

நீண்ட
நடைபாதையின் நெடிய நடையில் மறைந்த செழியனின் காலடி ஓசை அடங்கிய பின் ஒரு
அமைச்சர்..

“மன்னர் மன்னா.. தாங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்?.. மாறவர்மன் பிடிபடுவது இருக்கட்டும்.. மக்களின் நிலை
பற்றியும் சற்று சிந்தியுங்கள்.. ஆங்காங்கே கொள்ளையர்கள் கூட்டமாய் வலம்வருவது
குடியானவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. தாங்கள் ஏதா..”

கழுத்தில்
இருந்து பீறீட்ட குருதி நிற்க சற்று நேரம் ஆனாது.. அந்த அமைச்சரின் தலை உருளும்
திசையிலும் ரத்தம் கோடாய் தொடர்ந்தது.. மன்னன் எப்பொழுது கண்ணால் சமிக்ஞை
செய்தான்.. அந்த வீரன் எப்படி, எப்பொழுது வாளை
சுழற்றினான் என்பதெல்லாம் நொடியில் நடந்து விட்டது என்பதை உணர்ந்து சுதாரிக்க
சபைக்கு வெகு நேரம் பிடித்தது.

“என்னிடம் கேள்வி கேட்பவர்களின் நிலை என்ன என்று இப்பொழுது
தெரிந்து கொண்டீர்களா?..”

என்ற மன்னனின்
கேள்விக்கு தன்னிச்சையாய் சபையின் தலை அசைந்தது..

**

அங்கே..பெருமர நிழல் ஒன்றில்

“மாறா..எப்பொழுது வேண்டுமானாலும் அந்த வஞ்சகப் பேய் இங்கு வரலாம்.இளஞ்செழியனின்
தகவல் அதை உறுதி படுத்துகிறது.. “

“ஆம் வீரணா.. அதைப் பற்றித்தான் சிந்தித்துக்
கொண்டிருக்கிறேன்.. “

“அந்த சொர்ணவள்ளியின் தந்தைதான் வேலவர்.. அவரிடம் ஒருமுறை
நாம் விரிவாக பேசி நம் திட்டத்தை விவரிக்கலாம் என்று தோன்றுகிறது.. “

“அது குறித்தும் யோசித்தேன்.. வா.. அவர்கள் இருப்பிடம்
செல்லலாம்..”

அவன் எழுந்ததும்
தன் கடமை உணர்ந்த குதிரை தயாரானது.. அவன் நடையை வைத்தே மனநிலை அறியும் அந்த‌ குதிரை..
அதன் முதுகை ஆசையாய் தடவிக்கொடுத்து தாவி அமர்ந்த உடன்
கணைத்தது…சடுதியில் அவனை காற்றோடு பிணைத்தது.

***

வேலவர் வீடு..
அகண்ட தெருவின் மையத்தில் இருந்தது..ஓங்கியுயர்ந்த நெட்டுலிங்க மரமும் அசோக மரமும்
சலசலத்த அவ்விடத்தில் அரளிப்பூக்களும் செம்பருத்திப்பூக்களும் கலந்த வாசம்
ரம்மியமான சூழலாக அமைந்திருந்தது..
விஸ்தாரமான திண்ணை.. எழுகம் அமைத்து கட்டப்பட்ட அமந்து பேச
வாகான சாய்வுகள்.. நடை.. அதையடுத்து முற்றம்.. கல் தூண்களின் ஆதாரத்தில்
தாழ்வாரம்..சற்று உள்வாங்கி மாட்டுத் தொழுவம்.. அங்கு திமிரிக்கொண்டிருந்த
திமிழோடு இருந்த காளையின் பளபளப்பில் அவ்வீட்டின் வளமை தெரிந்தது..

தூணில் மறைவில்
சொர்ணவள்ளி..மறைந்தும் மறையாமல்.. நடுவில் வேலவர்.. தூணில் பாதி இருந்தார்..
மீசையின் அடர்த்தியில் வீரம் தெறித்தது.. கண்களில் கனிவு தெரிந்தது.
இடப்பக்கம் வீரணன்.. தூணுக்கு மார்பை காட்டியபடி
மாறவர்மன்..

அவன் மார்பில்
இருந்த விழுப்புண்களை பார்த்து காதலில் விழுந்த பெண் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்..

“இளவரசே! தங்கள் பாதம் பட என் அகம் புண்ணியம் செய்திருக்க
வேண்டும்..தங்களின் தந்தை ஒரு மாபெரும் மனிதர்.. அவருக்கு இந்த கதியை ஏற்படுத்திய
கயவர்களை ஒழிப்பது கடமை.. அதில் என்பங்கும் இருக்கப் போவது நான் செய்த
பிறவிப்பயனே”

“வேலவரே.. மிக்க நன்றி.. ஆனால் மிகுந்த கவனத்துடன் செயல்பட
வேண்டும்..”

“திட்டத்தைக் கூறுங்கள் மாறவர்மரே”

“எங்கள் திட்டப்படி இளஞ்செழியன் அந்த வஞ்சகனை இவ்வூருக்கு
அழைத்து வருவான்.. இங்கு குறிப்பிடப்படும் வணிகர் நீர் என்பதால் உம் உதவியை
நாடுவான் இந்நாள் மன்னன்..”

“ஆம்.. நீங்கள் கூறுவது சரி இளவரசே”..

” இவன் தான் வீரணன்.. பெயருக்கு ஒத்த வீரன்.. இவனும் இன்னும்
சில சகாக்களும் இந்த தெருவின் வலது கோடியில் பதுங்கி இருப்பார்கள்.. கருப்பன்
மற்றும் அவனுடைய சகாக்கள் வில்வித்தையில் வல்லவர்கள்.. அவர்கள் வீரணன் இருக்கும்
இடத்திற்கு எதிரே இருக்கும் உயர்ந்த மரங்களில் மறைந்திருப்பார்கள்..”

“ம்ம்”

“நான் உங்கள் வீட்டின் ஒரு மறைவிடத்தில் இருக்க தாங்கள் உதவ
வேண்டும்..
திட்டத்தின் உச்சம்.. தாங்கள் காளியின் பெயரைச்சொல்லி..
அந்த நயவஞ்சகனை, வஞ்சித்து இங்கு வழிபட அழைப்பது போல் வீட்டினுள்
தனியாக அழைத்து வரவேண்டும்..பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்..
கொல்கிறேன்..”

“இது சரியாக வருமா மாறவர்மரே?”
“வரும் வேலவரே.. வர வேண்டும்..”

“அப்படியே ஆகட்டும்.. இங்கு நீங்கள் நீண்ட நேரம் இருப்பதும்
ஆபத்து..”

“புரிகிறது.. வருகிறேன்.. திட்டத்தில் ஏதாவது மாற்றம்
இருப்பின் வீரணன் தங்களிடம் தெரிவிப்பான்.. நான் வருகிறேன்”

“நல்லது.. வாழ்க மன்னர் குடை”

சொர்ணவள்ளியின்
தூண்மறைவுப் பார்வையை ஊடுருவி.. புன்னகையோடு புறப்பட்டான் புரவலன்.. அப்பொழுது..
மாட்டுத்தொழுவத்தில் இருந்து யாரோ ஓடும் காலடி ஓசை கேட்டு
வேலவரும் சொர்ணவள்ளியும் ஐயத்தோடு பார்த்துக்கொண்டே அங்கு விரைந்தார்கள்…

அங்கே…

மாட்டுத்தொழுவத்தில்
நின்றிருந்த காளையின் மூக்குத்துவாரத்தில் இருந்து வந்த உஷ்ணக் காற்றும் உறுமல்
சத்தமும்,மிரண்டு உருண்ட கண்களும் அங்கு அந்நிய நடமாட்டம்
இருந்ததற்கான அச்சாரம் தெரிவித்தது.. அச்சம் ஏற்படுத்தியது வேலவருக்கு.. சற்று
வேகமாக நடந்து பின்புற வாயிலை அடைந்த வேலவர்.. சுற்றும் முற்றும் பார்வையை
படரவிட்டார்.. அங்கு படர்ந்திருந்த பாகைக் கொடி வேப்ப மர கிளையில் ஏறி பந்தலாக
இருந்தது.. அதை சற்று பயத்துடன் விலக்கினார்..விலங்கு ஒன்று
ஓடியது..காட்டுப்பன்றி… வந்தது விலங்கு என்று விளங்கியதால் அச்சம் விலகியது
வேலவரின் விழிகளில் இருந்து…

                                                         அத்தியாயம் 7

பாதாளச்சிறை..
எப்பொழுதும் போல் மெளனமாக இருந்தது.. மெளன‌த்தின் காவலாக நின்றிருந்தவனை
கம்பிகளுக்கிடையே தன் கைகளை நுழைத்து அழைத்தார் மன்னர் வீரவர்ம குலசேகர
தொண்டைமான்.. கைத் தொடலின் ஜிலீர் உணர்ந்து காவலாளி திடுக்கிட்டுத்திரும்பினான்..
அங்கு மன்னர் தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்தவாறே மார்பை பிடுத்துக்கொண்டு
நின்றிருந்தார்..

“மன்னா.. இதை பருகுங்கள்.. தங்கள் நிலையை எண்ணி மனம் மிகவும்
வேதனைப்படுகிறது.. அதைவிடக்கொடுமை நானே அதற்கு காவலுக்கு நிற்கும் கொடுமை..
இங்கிருந்து நான் தப்ப விட்டாலும் அடுத்த நுழைவாயிலில் அந்த துரோகியின்
விசுவாசிகள் உங்களை கொன்று விடுவார்கள் அரசே..அதனால்தான் மனதைக் கல்லாக்கிக்கொண்டு
இங்கு நிற்கிறேன்..”

” நன்று.. உன் பெ..ய.ர் எ..ன்ன?”

“கருணாகர மூர்த்தி.. அரசே”

“கருணாகரா.. ஒரு உதவி செய்.. நீ நிற்கும் இடத்தில் இருந்து
வடதிசையில் சரியாக 6வது அடியில் இருக்கும் கல்லை பெயர்த்தால் ஒரு அவசர
வழி செல்லும்.. யாரும் இல்லாத நேரம் நாம் இருவரும் அதன் வழியே செல்வோம்.. அவ் வழி
நேராக அரண்மனையின் அகழிகையின் வாயிலுக்கு இட்டுச் செல்லும்.. தீப்பந்தம் தாயார்
செய்து வை.. யாருக்கும் ஐயம் ஏற்படாதவாறு நடந்து கொள்..”

“சற்று பயமாக இருக்கிறது அரசே”

“பரவாயில்லை கருணாகரா.. முடிந்தால் செய்.. இல்லை என்றால்
இங்கேயே செத்து விடுகிறேன்.. என்ன.. என் மக்களை நினைத்தால்தான் இந்த உயிர் துச்சமாக
படுகிறது..”

“மன்னித்து விடுங்கள் அரசே.. குடியானவர்கள் மீது
இந்நிலையிலும் உங்களுக்கு இருக்கும் கவலை என்னை வெட்கித்தலைகுனிய வைக்கிறது..
கோழையாய் உயிருக்கு பயந்து இங்கு நின்று உயிர்வாழ்வதை விட வீரனாய் உங்களுக்கு உதவி
செய்து மரணித்தாலும் என்னை மண் மறக்காது.. மறுக்காது செய்கிறேன்.. சொல்லுங்கள்
எப்பொழுது என்று செல்வது என்று சொல்லுங்கள் அரசே”

“இன்று வேண்டாம்.. நீ தீப்பந்தம் தயாராக வைத்துக் கொள்..
வெளியே நடமாட்டம் எப்படி உள்ளது.. எந்த நாழிகை நமக்கு உகந்தது என்று நோட்டம்
விட்டு வா.. நாளை சூரிய உதிக்கும் நேரம் உகந்தது நமக்கு”

“அப்படியே ஆகட்டும் அரசே.. காலடி ஓசை கேட்கிறது.. நீங்கள்
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..”

நீண்ட
நாட்களுக்குப் பிறகு ராஜா வீரவர்ம குலசேகர தொண்டைமானின் நாசி துவாரம் நிம்மதியாய்
காற்றை உள்வாங்கி சீரான இடைவெளியில் வெளிவிட்டது.. கண்கள் துயில் கொண்டது..

***

அதே வேளையில்
மேலே அரண்மனையில்…

“வீர விக்ரமா.. உன் வீரம் கண்டு எல்லோரும்
பயப்படுகிறார்கள்.. என்றாலும் மாறவர்மனை சிறைபிடிக்க தாமதிக்கும் ஒவ்வொரு கனமும்
மிகுந்த கணமானவையே.. என்பதை உணர்ந்திருப்பாய் என்றே நம்புகிறேன்”

“ஆம் ராஜகுருவே.. நன்கு உணர்வேன்.. ஒற்றர் தலைவனை
இளஞ்செழியன் சொன்ன கிராமத்திற்கு அனுப்பி வேவுபார்க்கச்சொல்லி இருக்கிறேன்..
இன்னும் இரண்டொரு நாட்களில் நான் அங்கு சொன்று அவனை வென்று, கொன்று விடுவது உறுதி..”

“அந்த பொன்நாள்தான் நீ உண்மையிலேயே முடிசூட்டிக் கொண்டதற்கான
நன்நாள்”

“அதுவும் நன்கு அறிவேன்.. என்ன.. இந்த இளஞ்செழியனின்
கண்களில் ஏதோ குற்றம் இருப்பதாகவே படுகிறது.. அவன் நா உதிர்ப்பது அனைத்தும்
சூழ்ச்சி வார்த்தைகளோ என்ற ஐயம் ஏற்படுகிறது..அதனால் தான் சற்று
தாமதிக்கிறேன்”

“உன் வீரத்தின் மீது நம்பிக்கை வை விக்ரமா.. விஜயம்
உண்டாகட்டும்”

” நல்லது சொன்னீர்கள்.. நாளை மறுநாள் புறப்பட வேண்டியதுதான்..
என் பயணத்தின் தொடக்கம் அவன் வாழ்வின் முடிவு”

“சென்று வா.. வென்று வா..”

**

சிற்றூர்.                                                          

மாறவர்மனும்
வீரணனும் கருப்பிற்காக காத்திருந்தார்கள்.. ஊர் எல்லை அது..பகல் முடிந்து இருள்
சூழ ஆரம்பித்த பொழுதில் பறவைகள் தங்கள் இருப்பிடம் தேடி கூடடைந்த வண்ணம்
இருந்தன..புழுக்கள் கூட சிறு சிறு குழுக்களாக வலம் வந்தன..கிர்ர்ர் ஒலியும் கூ
அகவலும் ரம்மியத்தையும் மீறிஒரு வினோத சூழலை அங்கு ஏற்படுத்தி இருந்தது..

உடைவாளின்
கூர்முனையை அதைவிடக் கூர்மையாக நோக்கிய மாறவர்மன்.. அதைவிட கூரான வார்த்தைகளை
உதிர்த்தான்..

“வீரணா.. வேளை வந்து விட்டது.. வேலையும் வந்துவிட்டது..இந்த
வாளுக்கு..”

அதை ஆமோதிப்பது போல் அத்தனை பறவைகளும் ஒத்த குரலில்
கீச் கீச் என்று கத்தின..

அந்த அந்திப்
பொழுதின் ஆரம்பத்தில், பறவைகளின் குரலைவிட இனிமையான ஒரு குரல் மாறவர்மனை
நோக்கி வந்தது.

“வீரணா.. சற்று பொறு.. அவளிடம் பேசி விட்டு
வருகிறேன்..”

பத்தடி
இடைவெளியில் இருந்த மா மரத்தின் பின் மறைந்தும் மறையாமல் நின்றிருந்த சொர்ணவள்ளி
மாறவர்மனின் கால்கள் அருகில் வந்ததும் தலையை தாழ்த்தி நிலத்தைப் பார்த்தாள்..

“சொர்ணவள்ளி.. இந்தப் பொழுதில் இங்கே ஏன் வந்தாய்.. அப்படி
என்ன அவசரம்?”
“மன்னியுங்கள்.. ஆனாலும் இந்த அபலைப் பெண்ணின் நிலையை
ஒருமுறையாவது எண்ணிப் பார்த்தீர்களா? உங்களின்
வார்த்தைகளைக் கேட்காமல் இருக்க என் காதுகள் என்ன பாவம் செய்தன? இந்த திருவுருவை காணமல் என் கண்கள் இருந்தும் என்ன பயன்?”

“புரிந்து தான் பேசுகிறாயா வள்ளி? நான் ஒவ்வொரு நொடியிலும் நெருப்பில் இருப்பது போன்று
இருக்கிறேன்.. அங்கு என் தந்தை என்ன பாடு படுகிறாரோ என்று நினைக்கும் தருணங்கள்
என் வாழ்வின் திராவக‌ நிமிடங்கள்..”

“புரிகிறது.. அதற்காகத்தான் சொல்கிறேன்.. என்னிடம் சற்று
பேசி உங்கள் மனக்குமுறலை இறக்கி வையுங்கள் என்று தான் சொல்கிறேன்”

மாறவர்மன் அவள்
தாடையை பிடித்து முகத்தை திருப்பினான்..அவளின் கண்களில் வழிந்த நீரை தன் கை
விரல்களால் ஒத்தி எடுத்தான்.. அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.. சற்று தள்ளி
இருந்த திட்டில் அவளை அமரச்செய்து அருகில் அமர்ந்த மாறவர்மன்..

“என் நிலையைச் சொன்னேன்.. உன் ஆதங்கம் புரிகிறது
பொற்கொடியே.. சொல்..என்ன விசயம்?”
“விசேஷம் ஒன்றும் இல்லை இளவரசரே.. “

“யாழ் இசையின் யவ்வணத்தை ரசித்த பொழுது ஏற்படும்
இன்பத்திற்கு ஒத்த உன் குரலே விசேஷம் தானே சொர்ணவள்ளி..”

“ஆகா.. அதனால்தான் அதைக் கேட்க பிடிக்காதவர் போல்
இருக்கிறீர்களா? என்னை இந்த அந்தியில் இங்கு வர வைத்து விட்டீர்களே..?”

“இந்த பெண்களின் கோவம் பொல்லாதது என்பது சரியாகத் தான்
இருக்கிறது”

“அப்படி எத்தனை பெண்களின் கோவத்தை பார்த்திருக்கிறீர்கள்
அழகரே?”

“ஏதேது.. இன்று உன் நாக்கின் நடனத்திற்கு நான் தான் ஜதியா?”

” நடனம் தானே.. தாண்டவம் இல்லையே..”

அந்த வனம்
அவர்களின் காதல் பேச்சுக்களை ரசித்துக் கேட்டு கொண்டிருந்ததை மரங்களின் இலைகள்,மலர்களின் இதழ்கள்,படர்ந்த கொடிகள்,அடர்ந்த புதர்கள் என அனைத்து இடங்களும் லேசாக அசைந்து
தாலட்டி தெரிவித்துக் கொண்டது..

சொர்ணவள்ளி..
எப்பொழுதையும் விட இப்பொழுது சுந்தரமாய் தெரிந்தாள்..
பூவை,பாவை பருவங்கள்
கடந்த மங்கை அவள்.. ஏழு பருவங்களில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வித அழகை
வெளிப்படுத்தும் பெண்களின் வாழ்வில் மங்கைப் பருவம் தங்கப் பருவம்..அழகு தங்கும்
பருவம்..அதை ஊர்ஜிதப் படுத்தினாள் சொர்ணவள்ளி..அதுவும் காதல் வயப்பட்ட பின் அவளின்
கன்னக் கதுப்புகளின் வெட்கம் அழகைக் கூட்டிக் காட்டியது.. கண்களின் வெகுளிப்
பார்வை கடந்து அடிக்கடி துடிக்கும் இமைகளில் ரம்மியம் கூடியது..ரகசியம்
கூறியது..அவள் கைகளின் மென்மை பெண்மையின் வரமா..இல்லை மென்மையின் தன்மையே
அன்றுதான் உணர்ந்தானா என்று வியந்தான்..காதலிக்கும் முன் இருந்த முகத்தினினும்
இப்பொழுது இருக்கும் பொழிவு ஒழிவின்றி ஒளிரியது.. மாறவர்மனின் கண்களில் பட்டு
மிளிரியது..

அவளை சர்வ
ஜாக்கிரதையாக வழியனுப்பி துணைக்கு வான் நிலவையும் வீரணனையும் அனுப்பி விட்டு, அவன் திரும்பி வரும் வரை காத்திருந்தான்..மனம் மலர்ந்து
பூத்திருந்தான்

*

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி