HomeUncategorizedதண்ணீர் விட்டா வளர்த்தோம் ...

தண்ணீர் விட்டா வளர்த்தோம் …

 தலைப்பைப் பார்த்து, நரம்புகள் புடைக்கப்புடைக்க கிளர்ந்து எழுதப்போகும் சுதந்திர தினப் பதிவு என நினைத்துவிட வேண்டாம்.

அதன்பொருட்டு கிடைத்த, ‘மூனு நாள் லீவு என்ன பண்ணலாம்’ எனும் மிகச் சாதாரணமான வாக்கியம் எப்படித்தன் அகடுமுகடுகளைக் காட்டிய வாழ்வியல் தர்சனம் தான் இப்பதிவு.

வழக்கம்போல வாரத்தைக் கடந்துகொண்டிருந்தாலும், அந்த ‘லாங் வீக் எண்ட்’ எனும் பதத்தை நோக்கி நகர்வதை மனம் அறிந்தே இருந்தது.

யோசித்துப்பார்த்தால், அவ்வப்போது இப்படி ஏதேனும் ஒரு சிறிய எதிர்பார்ப்பையோ, நிகழ்வையோ நோக்கி நம் நாட்களை நகர்த்தும்பொழுது வாழ்வு அர்த்தப்படுகிறது என்பதையெல்லாம் தாண்டி, நாட்களை வெட்டியாய் நகர்த்துவதில் இருக்கும் குற்றவுணர்வு சற்று குறைகிறது போல் இருக்கும். இப்படியான நோக்கல்கள் பல்வேறு வகைப்படும், ஊருக்குப் போவது, விக்ரம் பட ரிலீஸ், பொன்னியின் செல்வன் வரப்போகுது, தீவாளி.. என நோக்கங்களை நோக்கி காலம் முழுக்க நம் நாட்களை நகர்த்துவதில் தான் வாழ்வின் சூட்சமம் பொதிந்து கிடக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன என ஒரு வரியைச் சேர்த்துவிட்டால் இவ்வாக்கியம் முழுமை பெறுவது போல் இருக்கிறதே என்பதால் ஆராய்ச்சியை சேர்த்தேன்.

அப்படித்தான் ஆகஸ்த்து மாதம் பிறந்தவுடனேயே சுதந்திரமும் பிறந்து விட்டிருந்தது மனதில். திங்கட்கிழம, அப்ப லாங் வீக்கெண்ட் என உள்ளேயிருந்து வந்த குரல் முதல்வாரத்தை உந்தித்தள்ளிவிட்டது.

சரி, விசயத்திற்கு வருவோம். வந்தது வெள்ளிக்கிழமை மாலை. 

சென்னைக்கு மிக அருகில் தொடங்கி, அருகில் வந்து, சரி வீட்லயே இருக்கலாம் என மிக மிக அருகில் இருந்த கடற்கரைக்குப் போவது என முடிவானதும் தடாம்முடாம் என எதையோ தூக்கி எறிந்தான் மகன், டெய்லி போறதுதான, லீவுக்கும் அங்கயேவா என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக அம்மையார் தன் குறிப்பையும் பிசைந்து உருட்டி உணர்த்தினார்.

சனி.  என்பதோர் ஆகுபெயர் போல அக்கிழமை விடிந்தது. விடுமுறை நாளின் விடியல் அசாத்திய உற்சாகத்தைக் கொடுத்து, வழக்கமாக தூங்கும் தூக்கத்தையும் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குமே அப்படி எழுப்பி விட,  முதல்முறையாக அதிகாலையில் எழுந்து என்ன செய்வதென்று தெரியாமல் கிச்சனுக்குள் நுழைந்தே… சட்டென வெளியே வந்துவிட்டேன். ஒருநொடி உறுதிபடுத்திக்கொண்டு மீண்டும் லேசாக எட்டிப்பார்த்தால் இரண்டு முயல்குட்டிகள் ஓடின. லேசான இருட்டு என்பதால் கலர் மங்கித் தெரிந்ததோ என யோசித்துக் கொண்டிருக்கும்போதே “என்னத்த உருட்டிட்டு இருக்க, தூங்காம’ எனும் ஓசை.

“ஏதோ சவுண்டு வந்துச்சுல்ல”

“எலி..ரெண்டு வாரமா இருக்கு, முன்னபின்ன கிச்சன் பக்கம் வந்தா த்தான தெரியும்” வழக்காம இதுபோன்ற கையெறி குண்டுகள் மாலையில் தான் எறியப்படும். காலையிலேயே வீசப்படுகிறதே என யோசிப்பதை விட பெரிய யோசனையாக முயல் சைஸில் இருந்தனவே என்பதுதான். 

சட்டென சகல எச்சரிக்கை உணர்வும் தூண்டப்பட, ஒரு முறை கிச்சனைப் பார்த்ததும் புரிந்துபோயிற்று. மூலையில் முன்பு எப்போதோ, புத்தகங்கள் வைக்க என்று வாங்கிய இரும்பு ரேக் ஒன்று ஒய்யாரமாய் நிற்க, அதன் உயரத்தின் விளிம்பில் பெரிய பெரிய அட்டைப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

நான் பார்ப்பதைப் பார்த்ததும் விபரீதத்தை உணர்ந்த அம்மையார், “பேசாம விட்ரு. அடுத்த வாரம் ஆள கூட்டி வர்றேன் சொல்லிருக்காங்க சித்ராக்கா”

“இதுக்கெதுக்கு ஆளு”

கேட்டுக்கொண்டே அந்த ரேக்கை ஆட்டிப்பார்த்தேன். அல்லது ஆட்டிக்கொண்டே கேட்டேன். லேசாக ஆட்டம் கண்டது போல்தான் இருந்தது.

இதுபோன்ற வேலைகள் எல்லாம் வெகு எளிதானவையே. என்ன சற்று மேல்நோக்கிய நான்கைந்து நொடிகள் பார்க்கும்போது பின்கழுத்து லேசாக வலிக்கிறது. லேசாகத்தான். நேரம் போகப்போகத்தான் கடுமையாக வலிக்கத் துவங்கும் என்பது அப்போது புரியாதது வா.சூ.(வாழ்வியல் சூட்சமம் எனக்கொள்க)  

பெட்டியை இறக்கியதுதான் தாமதம். எலிக்குட்டிகள், தாய்க்கிழவியெலிகள், குமரியெலிகள் என ஒரு பட்டாளம்.

வந்த பயத்தை கோவமாக மாற்றி, “எத்தன தடவ சொல்றது இப்பிடி அடசல வீட்ல வைக்காத” என பதற்ற மொழியில் அதட்டி எகிறி..படபடவென வந்தது.

“அதான் சொல்றேன்ல ஆளக்கூட்டி வர்றேன்னு சொல்லிருக்காங்க”

சொல்லிய சொற்கள் காதில் விழவில்லை என்றாலும் என் நிலை உணர்ந்து நீட்டிய கையில் இருந்த தண்ணீர் பாட்டில் அமிர்தமாக இருந்தது அந்நொடியில். 

கொஞ்சம் ஆசுவாசம் அடைவதற்குள், எலிகள் திசைக்கொன்றாய் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டன. வெறும் அட்டைப்பெட்டியை எட்டிப்பார்த்திருக்கிறீர்களா? நம்மைப்பார்த்து சிரிப்பது போலவே இருக்கும்.

“அதுபாட்ல இருந்துச்சு, சத்தம் இல்லாம தூக்கிப் போட்ருக்கலாம்”

இந்த கையெறி குண்டு சற்று  இறுக்கமாகக் கட்டப்பட்ட ஒன்று எனப் புரிந்தாலும் எதிர்த்து சமர் புரியும் நோக்கில் எதிரியை வீழ்த்தும் அந்த “அடைசல்” அஸ்திரத்தை பிரயோகித்துக்கொண்டே, தேவையற்ற பொருட்களை எல்லாம் எடுத்து அட்டைப்பெட்டியில் போட்டு ஒரே தள்ளாக காலை வைத்து தள்ள நினைத்து, முடியாது என்பதை இரண்டாவது முயற்சியில் கண்டறிந்து, குனிந்து தள்ளுவதற்குள் நாக்கும் தள்ளி.. சரி விடுங்கள், தள்ளியாகிவிட்டது.

காஃபியைப் போட்டு தான் மட்டும் குடித்துக்கொண்டிருந்த அம்மையாரை நான் கோவமாகப் பார்த்தேன்.  பரிதாபப்பட்டார். என் லோட்டாவில் அருளினார்.

குடித்ததும் மீண்டும் தெம்பு. கையோடு பழைய பொருட்களை எடுத்துப்போகும் முக்குக் கடை முருகேசனை (மு க்கு மு) அழைத்துவந்து அள்ளிப்போகச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அம்மாட்ட கேட்டுட்டீங்கல்ல சார்.. எல்லாத்தையுமா?”

அவர் அனுபவம் போல. அதாவது உலகம் முழுக்க பெண்கள் தான் இந்த அடைசலை ஏறக்கட்ட சம்மதம் தெரிவிக்க வேண்டும் போல..அந்த உரிமை ஆண்களுக்கு இல்லை.. சரி அது வேறு ஒரு விவாதம், தனியாக எழுதுவோம்.

கேட்டுக்கொண்டிருக்கும்போதே, உள்ளே இருந்து எட்டிப்பார்த்து,

“போன தடவ பேப்பர் கம்மியா எடுத்துருக்கீங்க..”

“ஒரே ரேட்டுதாம்மா.. “

அப்படி இப்படி எனப் பேசி நூற்றி அம்பது ரூபாய் கொடுத்தார் மு.மு.

நாம்தான் கொடுக்க வேண்டும் இந்த அடைசலை அள்ளிப்போக என நினைத்திருந்தேன். நல்லவேளை, நூற்றி ஐம்பது ரூபாய் லாபம்.

ஏதோ சாதித்துவிட்ட உணர்வில், கிச்சன் இப்போது காலியாக, ஸ்பேசியாக இருக்கிறதல்லவா வல்லவா என நானே நான்கைந்துமுறை சொல்லிக்காட்டி, வெறுமை வேறு வெற்றிடம் வேறு எனும் இலக்கிய தர்சனங்களை யோசித்துக்கொண்டே குளித்து, சாப்பாடு ரெடியா எனக்க் கேட்கும் போது கொஞ்சம் அதட்டல் தொனி இருந்தது என் குரலில். கிச்சன் சரி செய்திருக்கிறேன் அல்லவா.

மூனு நாள் லீவில் முதல் நாள் இப்படி மிகவும் அதென்னது ப்ரொடிக்டிவ் என்பார்களே அப்பிடியாக கழிந்து கொண்டிருந்தது. கார்கி படம் ஓடி முடிய. நாளும் சுபம்.

ஞாயிறு என் மண்டையில் தான் விடிந்தது. ஆம். உலுக்கி எழுப்பினார். கிச்சன் சரிசெய்த அலுப்பில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். மீண்டும் உலுக்கல்.

“நேத்து எல்லாத்தையும் தூக்கிப் போட்டியா, இந்தப் பக்கம் ரெண்டு சின்ன வெள்ளித்தட்டு வச்சுருந்தேன் அதையும் தூக்கிப் போட்டுட்டயா”

விபரீதம் புரிந்தாலும் உடனடியாக எதிர்வினை புரியக்கூடாது என்பதுதான் இத்தனை வருட வா.சூ.

அதை பிரயோகித்து, “அதெல்லாம் தொடலயே, அங்கதான் இருக்கும் நல்லா பாரு”

 “நீ வந்து இப்பவே எடுத்துக்குடு”

அதாகப்பட்டது மக்களே, அடைசலாக இருக்கிறது, வீட்டை சரியாக வைக்கவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, விட்டுவிட்டால் ஒன்றும் பாதகம் இல்லை. அதை சரி செய்கிறேன் என இறங்கினால், பெண்களால் கிஞ்சித்தும் அதை ஏற்கமுடிவதில்லை. பத்துகிலோ தங்கம் இருந்துச்சு இங்க இப்ப காணம் ரேஞ்சில் ஆரம்பித்து, கடுகு ரெண்ட மருந்துக்கு காய வச்சிருந்தேன் அதையும் தூக்கிப் போட்டுட்டயா வரை நம்மை அந்தளசிந்தள ஆக்கி, கொஞ்சம் கொன்சமாக டெம்ப்போ ஏறிக்கொண்டே போய் இறுதியில் வெள்ளிக்கும் நார்மல் தட்டுக்கும் கூட வித்தியாசம் தெரியாம அப்பிடி என்ன திமிர்த்தனம் என குற்றவுணர்வில் தள்ளி..

சரி ஆனது ஆச்சு.. அங்கதான் இருக்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வரும் பாருங்கள் காலதிகால அஸிதிரம்

“அது எங்கம்மா ஆசையா குடுத்தது” – இதில் அந்த  ‘ஆசையா’ என்பதுதான் விஷம் தோய்ந்த கத்தி. ஒரே சொருகு ஒரே திருகு ரகம். 

”இரு இரு..அழுவாத ஒடனே”

நான் ஏன் அழப்போறேன் இப்ப அந்த தட்டு மட்டும் வரல”

உடனே சட்டையை மாட்டிக்கொண்டு முக்குக் கடைக்குப் போனால், இழுத்து மூடி இருந்தது.

பெரிய பெரிய எழுத்தில் மொபைல் நம்பர் எழுதிப்போட்டிருந்தார் மு.மு.

அழைத்தால் எடுக்கவில்லை. ஞாயிறு, காலை எட்டு மணி தான் ஆகிறது. வாழ்வில் ஒரு நாள் கூட இந்தப் பக்கம் இப்படி ஒரு கடை இருக்கிறது, இத்தனை மணிக்கு திறக்கப்படும் என நின்று பார்த்த தில்லை. இன்று இப்படி நின்று கொண்டிருக்கிறோம்..இதுதான் வாழ்க்கை.. என்றெல்லம யோசித்தால் ரொம்பக் கேவலமாக இருக்கும் எனப்பட்டது.

அழைப்பு வர, “அஞ்சாவது தெருல.. நேத்து கூட அட்டப்பெட்டி”

“அலோ, டெய்லி ஆயிரம் அட்டப்பெட்டி எடுக்குறோம், இப்ப என்ன வேணும்”

ஒருவேளை என்னைப் பார்த்தால் ஆள் தெரியும், இப்படி பேசமாட்டார் என சமாதனம் அடைந்து, “கடைக்கு எப்ப வருவீங்க?”

“எதுக்கு?”

ஆள் தெரிந்தால்.. சரி விடுங்கள் “இல்ல, அதுல ஒரு முக்கியமான பொருள்”

“சார், இதே வேலையாப்போச்சு.. பத்துமணிக்கா வருவேன்”

பத்துமணி வரை இவளை சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் இருக்கவே இருக்கிறது கடல் என போனால், ஒரே சுதந்திரதினக் கொண்டாட்டாங்கள். எங்கு பார்த்தாலும் கூட்டம். 

“அடடா நீங்களா சார்” எனும் சொற்கள், அதானப் பார்த்தேன் எனும் ஆசுவாசம் ஏற்படுத்த

“இல்ல, அதுல ரெண்டு வெள்ளித்தட்டு”

“அட நீங்க வேற, எலிப்புழுக்க தான் எடைக்கு எடை இருந்துச்சு”

என சொல்லிக்கொண்டே அட்டைப்பெட்டியை கவிழ்த்த, பண்டங்கள் சிதறி விழுந்தன.

அவரே இரண்டு சிறிய தட்டுகளை எடுக்க

“கருப்படிச்சு கெடக்கு”

“இதா வெள்ளி”

”ஆமா சார்”

சரி என வாங்கிக்கொண்டு கிளம்ப, “முருகேசா எங்க போற, எங்கய்யா போற” என வடிவேலு கேப்பாரே அதே குரலில் முருகேசன் என்னைக் கேட்க,

புரிந்து கொண்டு, நூறு ரூபாயைக் கொடுக்க, “வெள்ளி விக்கிற வெலைக்கு”

இன்னொரு ரூறு ரூபாய்.

நல்லவேளை ஐம்பது ரூபாய்தான் நட்டம் என சட்டென கணக்குப் போட்டேன். சரிதானே !

வீட்டில் வந்து சரேலென அந்த தட்டுகளைத் தூக்கிப் போட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் ஒரே சத்தம்.

என்னவென்று எட்டிப்பார்த்தால் மகனை திட்டிக்கொண்டிருந்தார்.

“கேட்டுட்டுத்தான கொடுக்கனும், நீ பாட்ல எடுத்துக் குடுத்தா, ஒரு ஆள வச்சு சாமளிக்கிறதே பெருசா இருக்கு, நீயும் அந்தாளு மாதிரியே ஆரம்பிச்சா”

ரைட்டு. என முணுமுணுத்துக்கொண்டே போக, என்னைப் பார்த்ததும் ஏதோ அவனுக்காக முழு சப்போர்ட்டும் கிடைத்துவிட்ட நிம்மதியில் என்னிடம் வந்தான். இன்னும் சில ஆண்டுகளில் அவனுக்குப் புரிந்துவிடும், இவரே பாவம் எனும் வா.சூ,

விசயம் என்னவென்றால், தரையின் அழுக்கைத் துடைக்கும் மாப் குச்சியைக் காணவில்லை.

“எங்கடா தூக்கிப் போட்ட”

“பக்கத்து வீட்டு அங்கிள் ஏதாச்சும் குச்சி இருக்கான்னு கேட்டாருப்பா, அதான்”

வரும்போதே கவனித்திருந்தேன். இத எங்கயோ பார்த்திருக்கிறோமே என.

பக்கத்துவீட்டில் கொடி பறந்து கொண்டிருந்தது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…ஒரே கண்ணீர்தானப்பா எங்கும் என்பதே தர்சனம் அல்லது வா.சூ. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி