இந்தக் கதையின் எழுபத்தி ஆறாவது சொல்லை மிகச்சரியாக கவனித்தீர்கள் எனில் ஒன்று புரிபடலாம். அதை விடுங்கள். சினிமாக்களில் நாயகன் மீது மிகுந்த கோபம் கொண்ட நாயகியை வழிக்குக் கொண்டுவர அல்லது கேலி செய்யும் விதமாகப் பாடலைப் பாடுவார் நாயகன். அவ்வளவு சினத்திலும் கச்சிதமாக நாயகனின் நடனத்திற்கு ஏற்ப ஆங்காங்கே நாயகியும் நடனமிடுவார் அல்லவா, அதுபோலத்தான் இருக்கிறது காலையிலிருந்து என் மனநிலை. எதன்மீதும் பற்றற்ற (இந்த சொல்லில் வரும் ற’க்களின் வரிசையடுக்கை எப்போதேனும் கவனித்திருக்கிறீர்களா!) ஆனால் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை.
”கதையா எழுதுற”
நிமிர்ந்தேன். அவ்வளவுதான் இனி மேற்கண்ட பத்தியை இதே கனத்தோடு ஒருபோதும் தொடரமுடியாது எனத் தோன்றியது.
“இல்ல இல்ல, சும்மா ‘பற்றற்ற’ ல ற வரிசையா பல் விளம்பரம் மாதிரி இருந்துச்சு, அத நவீனமா எழுதலாம்னு நெனச்சேன், நீ வந்து ஏதோ கேட்ட, ப்ச் அத விடு”
“ஓஹ், இப்ப நான் வந்து கெடுத்துவிட்டேனா, இதக் குடுக்க வந்தேன், இருமிட்டே இருக்கியேனு, விடு”
மஞ்சள்தூள் போடப்பட்டப் பால். கற்கண்டு இன்னபிற எல்லாம் சேர்த்து இருமலுக்கு இதம் என்று சொல்லப்பட்ட ஒன்று. சற்றுத் தள்ளி இருந்த லோட்டாவில் இருந்து மஞ்சளின் நெடி காற்றில் விரவத் துவங்கி இருந்தது. ஆல்பக்கோடாவின் நினைப்பு ஏனோ வந்தது. மிக சன்னமாக இருமல் வந்துவிட்டால் கூட அம்மா உடனே ’நாடார்கடைல இருந்து ஆல்பக்கோடா வாங்கிட்டு வாடா’ என அணத்தி, வாங்கி வாயில் அதக்கிக்கொள்வாள். முதல்முதலில் அந்தச் சொல்லைக் கேட்ட பொழுது பக்கோடாவின் உருவத்திற்கும் இந்த ஆல்பக்கோடாவிற்கும் துளியும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இந்தக் கதைக்கும் இந்தப் பத்திக்குமே அப்படித்தானே.
மஞ்சள் கலந்த பாலைக் குடித்தவுடன் தொண்டைக்கு சற்று இதமாக இருந்தது. கதையை பிறகு தொடரலாம், முதலில் இவளைச் சமாதானப்படுத்துவோம் என உள்ளே போனவன் டம்ளரைக் கையோடு கழுவி வைத்துவிட்டு, “இப்ப கொஞ்சம் பரவால்ல” என்றேன்.
பதில் வரவில்லை. சரி கொஞ்சம் விட்டால் சரி ஆகிவிடும், போய் எழுதுவோம் என்று நகர்ந்தேன். வந்தாள்.
“இல்ல எனக்கு ஒன்னும் புரியல, இப்ப நான் ஒரே ஒரு வார்த்த சொன்னதுல எழுதுர மூடு போயிருச்சு, அப்பிடித்தான”
“அய்ய அதெல்லாம் இல்ல, பெரிய காப்பியமா எழுதுறேன். எதுவுமே எழுத வரல, நீ வந்து பேசுனத ஒரு சாக்கா வச்சு நிப்பாட்டிட்டேன்”
சிரித்தாள். “அதச்சொல்லு”
அவளின் சிரிப்பு கணநேர குற்றவுணர்விலிருந்து விடுதலையடைந்ததன் வெளிப்பாடு. அதைவிட முக்கியம், உண்மையை ஒத்துக்கொண்டதால் எனக்குள் ஏற்பட்ட ஆசுவாசம்.
“ஏதாவது வாங்கணுமா? சும்மா வெளில போய்ட்டு வர்றேன்”
எதுவும் வேண்டாம் என்பதைப் பார்வையால் வெளிப்படுத்தினாள்.
எங்கு போவது என்று சரிவரப் புலப்படவில்லை. கால்வாக்கில் சலூனுக்குப் போய்விடலாம் எனத் தோன்றியது.
பல ஆண்டுகளாக துல்லியமாக மீசை தாடியை செதுக்கும் அன்பரசனை விட சமீபகாலங்களில் என்மீது அன்பைப்பொழியும் மனோஜின் வேலைப்பாடுகள் பிடிக்கத்துவங்கி விட்டது. ஒருபொழுதில் மனோஜ் வேலை செய்யும் நாற்காலி காலியாக இருந்தாலும், அன்புவிற்காகக் காத்திருந்து தலையைக் கொடுப்பேன். அப்போதெல்லாம் மனோஜ் லேசாகச் சிரித்துவிட்டு வெளியில் சென்று அமர்ந்துகொள்வான். ஏதோ ஓர் அவசரப்பொழுதில் மிக லேசாக ‘ட்ரிம்’ என்பதால் சரி பரவாயில்லை என மனோஜிடம் முகம் கொடுத்தால், அதுவரையில் பெறாத அனுபவத்தைக் கொடுத்தான். வயதில் மிக சிறியவன். அவ்வளவு லேசில் திருப்தியடையாமல் அவனாகவே முகத்தை இப்படியும் அப்படியும் நிமிர்த்தி கத்தரியை வைத்து இருபக்கமும் அளந்துபார்த்து என மனதில் ஒரு ‘அட’ என்று தோன்ற வைத்துவிட்டான். கிட்டத்தட்ட, அலெக்ஸ்சாண்டர்பாபு சொன்ன அந்த ‘வாய்ப்பு வரும்வரை காத்திருந்து, கிடைத்தவுடன் அத்தனை திறமையும் காட்டி அசத்திவிடவேண்டும்’ என்று மலேசியா வாசுதேவனின் திறமை குறித்துச் சொன்னதுபோல் இருந்தது மனோஜின் அந்த செய்நேர்த்தி. அதைவிட முக்கியம் அன்று நான் போன காரியம், ஜெயம்.
அன்று முதல் இன்று வரை மனோஜ் தான். “சார் இப்பல்லாம் மனோஜ் கிட்டதான் மண்டையக் குடுக்குறீங்க, கரெக்ட்டான ஆள எடுத்துருக்கேன்ல்ல சார்” என சிரித்துக்கொண்டே தன் முதலாளித்துவத்தைக் காட்டினான் அன்பு.
மனோஜ், பஞ்சாப்பும் பாகிஸ்தானும் கலக்கும் இடத்தில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னான். பூன் பண்ணுசார் என்பான். வருவதற்கு முன்பு போன் செய்தால் வேறு நபரை விடாமல் இருக்க அலைபேசியில் மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்வான். அதுதான் அந்த ’பூன் பண்ணு’
இரண்டு விசயங்களுக்காக என்னைப் பிடிக்கும் என்பான். ஒன்று அவனிடம் சிரித்துப்பேசி, கொஞ்சம் கூடுதலான டிப்ஸ் தருவது, இரண்டாவது அவன் பேசும் மொழியைப் புரிந்தது போல் அவனுக்கு பதில் முகபாவனைகளைக் காட்டுவது.
அவனுடைய ஊரை விட்டுக் கொடுக்காமல் பேசுவான். பச்சைப்பசேல் ஊர், மரியாதை மிகுந்த ஊர், கோதுமை வளம் என அடுக்குவான். ஆனால் இங்கு இருக்கும் மருத்துவ வசதிபோல் அங்கில்லை என்று சிரித்துக்கொண்டே ஒருநாள் தன் மனைவியின் புகைப்படத்தைக் காட்டினான். நிறைமாதமாக இருக்கும் புகைப்படம். இங்கு சென்னையில் இருக்கும் சுகாதார மைய்யம், அங்கிருக்கும் ஒரு செவிலியரின் கவனிப்பு என மிகுந்த மகிழ்ச்சியாகச் சொன்னான். அவனுக்குக் குழந்தை பிறந்த அன்று சலூனில் அனைவருமாகச் சேர்ந்து கொண்டாடி அவனை மகிழ்வில் ஆழ்த்தியற்கு ஒருமாத காலம் நன்றி சொன்னான்.
இன்று சுரத்தே இல்லாமல் நாற்காலியைத் தட்டிவிட்டி நிமிர்ந்தான். அவன் தட்டி அமரச்செய்யும் விதமே உற்சாகமாக இருக்கும். அமராமல் நின்றிருந்தேன். குனிந்து பார்த்தவன், நாற்காலியில் இருந்தவற்றைப் பார்த்து மீண்டும் சரியாகச் சுத்தம் செய்தான்.
அவன் விரல்களில் சுரத்தில்லை. அலைபேசியின் திரையைக் காட்டினான்.
பெரிய நரைமீசை தரையை நோக்கி நீண்டிருக்க, கசங்கிய தலைப்பாகை போல் ஒன்றை அணிந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து புகைபிடித்துக்கொண்டிருக்கும் முதியவரின் புகைப்படம்.
தனது அப்பா என்றும் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும் சொன்னான். நான் அவனை நிறுத்தச்சொல்லிவிட்டு, பயணத்திற்கு ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டதும் அழத் துவங்கிவிட்டான்.
அன்பு உடனே கோவமான குரலில் கத்தினான்.
“காலைல இருந்து இப்பிடித்தான் சார், திடீர்னு அழுவுறான், இவுரு போனா அங்க செத்துப்போய்டுவாங்களாம், அப்பிடி ராசியாம்..அதான் போகாம இருக்கானாம்”
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கும் இதுபோல சில மூடநம்பிக்கைகள் உண்டு. குறிப்பிட்ட சட்டையை அணிவது, குறிப்பிட்ட சட்டையைத் தவிர்ப்பது போன்ற சின்னஞ்சிறு மூடங்கள் தான்.
அவன் அழுது முடிக்கும்வரைக் காத்திருந்துவிட்டு ஆறுதல் சொன்னேன். அதை ஆறுதல் என்று வேறு சொல்கிறேன் பாருங்கள். ‘ஒன்றும் ஆகாது, பார்த்துக்கொள்ளலாம்’ என்றேன். ஆனால் அப்படிச் சொல்லும்பொழுதே எனக்குள் ஏதோ ஒன்று ஆகிவிடும் எனத் தோன்றியது. ஆழ்மன வக்கிரமோ உந்துதலோ அல்லது ஏதோ ஒன்று இதுபோன்ற சூழல்களில் ஆட்படுத்துகிறது மனதை.
ஏதாவது எனில் அழை என்று, அந்தக்கால டெலிபோன் ரிசீவரை சைகையால் காதில் ஒற்றி எடுத்தேன்.
குளித்த பிறகு கொஞ்சம் பரவாயில்லை என்பதுபோல் இருந்தது. சாப்பிடலாம் என்றால், தூங்கிக்கொண்டிருக்கிறாள். எடுத்துப் போட்டு சாப்பிடலாம்தான். அது எப்படி? இதற்கா இப்படி இத்தனை ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை. அங்கே ஊரில் ஏக தடபுடலாக கவனிக்க அத்தனைப் பேர் இருக்க இங்கு ஏன் தனியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றத் துவங்கிவிட்டது. பாத்திரங்களை ஒன்றோடு ஒன்று உரசி சத்தம் ஏற்படுத்திக்கொண்டே எடுத்துவைத்தேன். வராத விக்கலை செயற்கையாக ஏற்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு செயற்கையாக இருக்கும். தண்ணீர் எடுத்துக் குடித்து, உண்டு முடித்தேன். மீண்டும் எடுத்து வைக்கும்போதும் சத்தம் எழுப்பினேன். ஒருபயனும் இல்லை.
பகலில் செயற்கையான இருட்டு அடர்ந்து இறங்கி இருந்தது, அறைக்குள். திரைச்சீலைகளின் அடர்த்தியும் குளிர்சாதன சொகுசும் உறக்கத்தை வரவைக்கும் வல்லமையோடு இருந்தன. படுத்தவுடன் உறங்கிவிடலாம் என்று நினைத்தேன்.
“சாப்ட்டியா, எடுத்து வச்சியா?”
“அதெல்லாம் வச்சாச்சு, நீ தூங்கலயா?”
பதில் இல்லை. தூங்குகிறாளாம்.
அலைபேசியில் மனோஜ் தன் தந்தையின் புகைப்படத்தை ஸ்டேட்டஸில் வைத்திருந்தான். ஒவ்வொருமுறையும் எதையாவது காட்டி இதைத் தமிழில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று கேட்பான். சீப்பு, கத்தரி, நேரம் ஆகும், ஓனர் இல்லை போன்ற சொற்களை என்னிடம் பழகி இருந்தான். தன் கிராமத்தில் இருந்ததை விடவும் இங்கு இந்த சென்னையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்வான். குறிப்பாக அவனுடைய மனைவிக்கு இந்த ஊர் மிகப் பிடித்துப்போய்விட்டது என்பான். அப்படி என்ன அங்கு இல்லாதது இங்கு இருக்கிறது என்பதற்கு மிக மெல்லிய புன்னகையுடன் மூன்று வேலை சாப்பாடு என்பான். ஊருக்கு ஒருஎட்டுப் போய் அனைவரையும் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றியது.
“இப்ப தான போய்ட்டு வந்த” என்ற பதிலை எப்போதும் சொல்வாள். போகலாமா வேண்டாமா என்ற இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தால், அவளுடைய பதிலை சாக்காக வைத்துப் போவதில்லை இப்போதெல்லாம். இப்பதான போய்ட்டு வந்தோம்.
“ஊரு முன்னாடி மாதிரி இல்ல இப்பல்லாம்” நான் சொன்னதும் மகிழ்ச்சியாக பதில் வந்தது.
“ஊரெல்லாம் அப்பிடியேதான் இருக்கு, ஒனக்குப் பிடிச்ச கிறுக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு இருக்கு. நாம நெனச்ச மாதிரி இருக்குற எடத்த விட்டு நாலு பேர் என்ன நெனக்கிறான் என்ன சொல்றான்னு செய்யுற எடத்துக்கு எவனாச்சும் போவானா”
முதல்பத்திக்குள் புகுந்தது போல் இருந்தது மீண்டும். கோவித்துக்கொண்ட நாயகி, கோவத்திலும் நடன அசைவுகளை நளினமாக வெளிப்படுத்துவதுபோல் அவள் சொன்னதற்குச் சிரித்தேன்.
“நீயாவது ராசியான சட்டையப் போடுவேன்னு சொல்ற, நான்லாம் ஏதாவது முக்கியமான விசயம் நல்லபடியா நடக்கனும்னு ஆபிஸ்ல யோசிச்சுட்டு இருக்கும்போது டைல்ஸ்ல கோடு மேல கால் படாம நடக்கப் பாப்பேன், பயமா இருக்கும் எங்க கால் பட்ருமோனு”
சொல்லும்பொழுதே அந்தக் கவனமான நடையை கண்களில் கொண்டு வந்திருந்தாள்.
அவள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே, புத்தக அலமாரியில் இருந்து அந்தப் பக்கத்தைப் புரட்டிக் காட்டினேன்.
”இதெல்லாம் இன்னைக்கு நேத்து இல்ல இரெண்டாயிரம் முவ்வாயிரம் வருசமா பண்றதுதான்”
“கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப்பெறுவனேல் கூடு என்று -கூடல்
இழைப்பாள்போற் காட்டி இழையாதிருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து.
என்ற முத்தொள்ளாயிரம் பாடல்.
இரண்டு முறை வாசித்தவள் என்னைப் பார்த்தாள்.
மணல்ல வட்டம் போடுறது. கண்ண மூடிட்டு.
“புரியல”

“கண்ண மூடிட்டு வட்டத்த சரியா க்ளோஸ் பண்ணினா தன்னோட காதலனை பாத்திரலாம் நினைச்சது நடக்கும்னு நம்பிக்கை. ஆனா பாதிலயே பயம் வந்துருமாம். சரியா கனெக்ட் பண்ணாட்டி நடக்காமப் போயிருமேனு. அப்பிடியே நிறுத்திருவாளாம். அதுக்குப் பேரு கூடல் இழைத்தல்.”
”நைட்டுக்கு என்ன டின்னர்?”
”சப்பாத்தின்னு சொன்னா தோச செய்வ, எவ்ளோ பெரிய மேட்டர சொல்லிட்டு இருக்கேன், டின்னருக்கு என்னான்னு அசால்ட்டக் கேட்குற”
”இதப் போனவாரம்தான சொன்ன, இதெல்லாம் விட பெரிய விசயம் என்ன தெரியுமா? எதச் சமைக்கிறதுன்றதுதான். எங்க ஆரம்பிக்கிறதுன்னு, நீ சொல்லுவியே, ஒரு கதைய எங்க ஆரம்பிக்குறதுன்றதுதான் பெரிய சிக்கலேனு..அதுமாதிரி எதச் சமைக்கிறதுனு யோசிக்கிறது இருக்கே”
நான்கடி நடந்தவள் நின்றாள்
“என்ன சொன்ன”
“நான் ஒன்னும் சொல்லலயே”
தம்பியிடம் இருந்து அழைப்பு அடித்தது. “என்னடா இந்த வாரம் ஊருக்கு வர்றேன்னு சொன்ன”
“எங்கடா, முக்கியமான வேல இருக்கு..ப்ச்..பாப்போம்”
“என்னடா பிடிப்பே இல்லாம பேசுற, முடிச்சுட்டு வா”
வைத்துவிட்டு திரையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அருகில் வந்தவள்,
“உடனே ஊர நினைக்க ஆரம்பிக்காத, எதோ கத எழுதனும்ன.. எழுதவேண்டியதுதான”
“எழுபத்தி ஆறாவது சொல் எதுன்னு எண்ணிப்பார்த்தியா?”
குழப்பமாகப் பார்த்தாள்.
சிரித்தேன்.
’பூன்’ வரும் சத்தம் கேட்டது.
*